கோபம் வராமல் இருக்க ஒரு வழி உண்டா?

 Image result for anger
ஒரு நண்பர். எண்ணெய் சட்டியில் நீர்த்துளிகள் பட்டது போல் பட்பட்டென வெடிப்பார். எப்போது கொதிப்பார், உறையில் இருந்து வாளை உருவுவார் என கணிக்க முடியாது. அது அவருக்கே தெரியாது. அவர் தூங்கி விழித்த அடுத்த நொடியே கூட படுபயங்கர கோபத்தில் கத்துவார் என அவரது மனைவி என்னிடம் தெரிவித்தார். ஆனால் ஆள் ரொம்ப சாது. இப்படி ஒரு விசித்திர காம்பினேஷன்.
 “கோபத்தை எப்பிடிங்க கட்டுப்படுத்துறது?” என அவர் என்னிடம் கேட்டார்.
“அது எனக்குத் தெரியாது. ஆனால் கோபமே வராமல் தவிர்க்க ஒரு வழி உள்ளது.”
“என்னது?”
“சின்னச் சின்ன விசயங்களை பொருட்படுத்தவே கூடாது. யோசித்துப் பார்த்தால் நாம் எப்போதும் சின்ன விசயங்களுக்காகத் தான் பயங்கரமாய் டினோசர் போல ஆர்ப்பரிப்போம். பெரிய விசயங்களை கண்டுகொள்ள மாட்டோம்.”
“சின்ன விசயமுன்னா?”
“எதுக்கெல்லாம் உங்களுக்கு கோவம் வருதோ அதெல்லாம் சின்ன விசயம் தான்.”
“இப்படி எல்லாம் குண்டக்கா மண்டக்கான்னு பேசினா எதையாவது தூக்கி அடிச்சிருவேன்.”
“உங்களுக்கு முக்கியமல்லாதவைன்னு வச்சிக்கலாம்.”
“இன்னும் தெளிவா சொல்லுங்க”

“சில விசயங்கள் உங்களுக்கு ரொம்ப அவசியம். உங்களுக்கு ஆழமான மகிழ்ச்சியும் திருப்தியும் தரும் விசயங்கள். வேறு விசயங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றும் ஆகாது. உப்புமா இல்லாவிட்டால் இட்லி. ஏஸி இல்லாவிட்டால் மின்விசிறி. இவன் பாராட்டாவிட்டால் அவன் பாராட்டப் போகிறான்.”
“எனக்கு ஆவி பறக்கும் உப்புமாவை ஏஸியில் இருந்து தின்பது தான் ஆத்ம திருப்தி அளிக்கும் காரியம் என்றால்?”
“அதை மட்டும் பொருட்படுத்துங்கள். அப்போது யாராவது வந்து கமலஹாசன் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என உரை நிகழ்த்தினால் காதிலேயே வாங்கக் கூடாது.”
“அதெப்படி? எனக்கு பல விசயங்கள், அதுவும் சின்னச் சின்ன பல விசயங்கள், ரொம்ப முக்கியம். எதைத் தொட்டாலும் எனக்கு கோபம் வருகிறது.”
“ஒரு மனிதனுக்கு அப்படி ஆயிரம் விசயங்களில் நாட்டம் இருக்காது. நமக்கு ஆதாரமான விசயம் எது எனத் தெரியாததனால் தான் நமக்கு தொட்டதற்கெல்லாம் சீரியஸாக எதிர்வினையாற்றத் தோன்றுகிறது. இது என் விசயம் இல்லை, இதில் என்ன நடந்தாலும் நான் திரும்பிப் பார்க்க மாட்டேன் எனும் தெளிவும் உறுதியும் வேண்டும்.”
“எனக்குப் புரியவில்லை. அதெப்பிடி முடியுமுங்க?”
“நீங்க குடிகாரங்களை பார்த்திருக்கீங்களா? அவங்க சுலபத்தில் சின்ன விசயங்களை எல்லாம் பொருட்படுத்த மாட்டாங்க. காலை முதல் இரவு வரை குடி ஒன்றே அவர்களின் கவனமாய் இருக்கும். அதைத் தவிர உலகமே பற்றி எரிந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். குடிக்க நூறு ரூபாய் தருகிறேன் என அழைத்து அரைமணி அவர்களை விமர்சித்துப் பாருங்கள். குழைந்து சிரித்தபடியே கேட்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு தேவை என்ன என்பது பற்றி ஒரு தெளிவான பார்வை உள்ளது. உங்கள் சொற்களுக்கு மதிப்பே அளிக்க மாட்டார்கள். நூறு ரூபாய் மட்டுமே கண்ணில் தெரியும். நாம் குடிகாரர்கள் அல்லாத பட்சத்திலும் அந்த அணுகுமுறையை வரித்துக் கொள்ளலாம். எது நமக்கு போதை தருமோ அது மட்டுமே இவ்வுலகில் உள்ளது, வேறு எல்லாமே மாயை என நினையுங்கள். அப்போது எதுக்குமே கோபம் வராது.”
“மத்தவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா?”
“யார் எதைச் சொன்னாலும் சிரித்துக் கொண்டு தலையாட்டி வையுங்கள். யாரும் தப்பா எடுக்க மாட்டாங்க.”
“என் மனைவி கிட்ட காப்பியில சர்க்கரையை தூக்கலா போடாதென்னு பலதடவை சொல்லி இருக்கேன். இருந்தும் அவ கேட்கல. இன்னிக்கு காப்பியை அப்படியே தூக்கி கடாசிட்டேன். ஏன் அப்படி பண்ணினேன் பிறகு யோசிச்சு வருத்தப்பட்டேன். ஆனால் அந்த நேரம் அப்படி தோணல.”
“உங்களுக்கு காப்பியில சர்க்கரை அளவு ரொம்ப முக்கியம், அதுவே உங்கள் மகிழ்ச்சியின் ஆதாரம் என்றால் எப்படியாவது உங்கள் மனைவி அதை துல்லியமாய் தயாரிக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள். அல்லாவிட்டால் உங்கள் காப்பியை நீங்களே தயாரித்துக் கொள்வீர்கள். ஆனால் உங்களுக்கு காப்பியில் சர்க்கரை அல்ல பிரச்சனை.”
“பின்னெ?”
“உங்கள் மனைவி உங்களை பொருட்படுத்த வில்லை என நினைக்கிறீர்கள். காப்பி அதற்கு ஒரு சாக்கு.”
“அது உண்மையில்லையா?”
“இல்லை. அவர் நிச்சயம் உங்களை பொருட்படுத்துகிறார். அதனால் தான் மெனக்கெட்டு காப்பி தயாரித்துக் கொடுக்கிறார்.”
“ஆனால் அதை ஒழுங்கா போடனுமே?”
“அது ரொம்ப சின்ன விசயம். ஒழுங்கா போடனுமிங்கிறது உங்களுக்கே முக்கியமில்ல. அப்படி இருக்க அவங்க ஏன் அதை செய்யனுமுன்னு எதிர்பார்க்கிறீங்க?”
“ரொம்ப குழப்பறீங்க.”
“உங்களுக்கு எது ரொம்ப ரொம்ப முக்கியம் என்பதை கண்டுபிடித்தால் உங்கள் குழப்பமும் கோபமும் ஒரேயடியாய் மறைந்து விடும்.”
“அதெப்பிடி கண்டுபிடிக்கிறது?”
“காலையில் இருந்து இரவு வரை உங்களுக்கு எரிச்சலூட்டும் நூறு விசயங்களை பட்டியலிடுங்கள். அதில் எவை உங்களுக்கு முக்கியமல்லாதவை என டிக் இட்டுக் கொண்டே வாருங்கள். 99% கழித்து விட்டால் உங்களுக்கு ரொம்ப அவசியமான அந்த ஒன்றை கண்டுபிடிச்சிரலாம். இப்போ என்னை ஒருவர் அழைத்து நான் செய்கிற வேலையில் ஒரு தப்பு இருக்கிறதென சொல்கிறார் என வையுங்கள். உடனடியாய் எனக்கு அவர் சொல்வது நியாயம் அல்ல எனத் தோன்றும். தேவையில்லாமல் என்னை விமர்சிக்கிறார் என நினைப்பேன். உடனே கோபம் வரும். அவர் கண்ணோட்டத்தில் இருந்து விசயத்தைப் பார்க்க என்னால் உடனடியாய் முடியாது. யாராலும் முடியாது. பொதுவாக, இப்படியான சந்தர்பங்களில் கோபத்தில் இருந்து தப்பிக்க ஒரு வழியை பயன்படுத்துகிறேன். கீழ்வரும் கேள்விகளை நான் என்னையே கேட்டுக் கொள்வேன்:
சரி, நான் செய்தது தப்பு தான். ஒத்துக்கிறேன். ஆனால் அது முக்கியமான தப்பா, முக்கியமல்லாத தப்பா? முக்கியமல்லாத தப்பு. அந்த தப்பைப் பற்றி நாளைய நாளிதழில் செய்தி வராது. அதை யாரும் வரலாற்றில் பதிய மாட்டார்கள். அத்தப்பினால் என் குடும்பம் அழியாது. யார் குடும்பமும் அழியாது. அதனால் எனக்கு இன்று சோறு கிடைக்காமல் போகாது. அத்தப்பினால் என் மகிழ்ச்சிக்கு எந்த ஊறும் இல்லை. சமூகத்தின் மகிழ்ச்சிக்கும் ஊறில்லை. அத்தப்பினால் யாரும் சாகவில்லை. நானும் சாகவில்லை. அப்படி என்றால் அது முக்கியமற்ற தப்பு. உடனே ரிஜெக்ட் பொத்தானை அமுக்கி விடுவேன். ஓவர். இதன்படி இந்த உலகின் 99% தப்புகள் ரொம்ப உப்புசப்பில்லாதவை. நாம் நிறைய தப்புகள் பண்ணலாம். அதனால் ஒன்றும் ஆகாது. ஆனால் நாம் அதனால் ரொம்ப கவலைப்படுவது போல் பாவனை காட்டி ஊரை ஏமாற்ற வேண்டும். அவ்வளவு தான்.”
“சரி, நீங்க இவ்வளவு சொன்னீங்களே இதெல்லாம் சுத்த பேக்குத்தனமுன்னு நான் சொன்னால் கோபம் வராது உங்களுக்கு?”
“ம்ஹும். இவ்வளவு நேரமும் நான் தனக்குத்தானே பேசிக்கிட்டிருந்தேன்னு நினைச்சிப்பேன்.”
“அப்படீன்னா நான் உங்களுக்கு முக்கியமில்லையா?”

“நிச்சயமா இல்லை. ஆனா உங்க கிட்ட நான் சொன்ன விசயங்கள் மட்டும் எனக்கு முக்கியம்!”

Comments

Senthil Prabu said…
Ultimate!! Vera level Abilash :)
Ranjith said…
I like your writing style and straight to content!!