மேலாண்மை பொன்னுசாமி விடைபெற்றார்


மேலாண்மை பொன்னுசாமியை நான் என் 13ஆம் வயதில் படிக்க ஆரம்பித்தேன். அவர் கதைகளின் உக்கிரம், முறுக்கு, நேரடியாய் கோபத்தை உரக்க சொல்லும் பாணி பிடித்திருந்தது. சிலரைப் படிக்கையில் இந்த ஆள் பொய் சொல்லவில்லை எனத் தோன்றும். மேலாண்மை அப்படியானவர்.

அவரை பின்னர் புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். அதே நேர்மையுடன், பாசாங்கற்ற நேர்மையுடன், சமூக பொறுப்புணர்வுடன் பேசினார். சற்றே உடல் நலிவுற்றிருந்தார் அப்போது. ஆனால் அது குறித்த தன்னிரக்கமோ கவலையோ அற்ற மனிதனாய் தெரிந்தார்.

ஜெயமோகன் சொல்வது போல் அவர் மிக ஸ்நேகமான மனிதர். கடல் அலையைப் போல் நம்மை அவராகவே வந்து தொட்டணைத்துக் கொள்வார். அவருடன் பழகக் கிடைத்த அந்த நிமிடங்கள் மறக்க முடியாதவை. அவரது மென்மையை, சுபாவ இனிமையை பொறுத்த மட்டில் நிச்சயம் வண்ணதாசனுடன் அவரை ஒப்பிடலாம். அவரது அரசியல் உறுதியும் பிடிப்பும் அசையாத நம்பிக்கையும் பொன்னீலன், ஹெச்.ஜி ரசூல், ஹமீம் முஸ்தபா போன்ற மார்க்ஸிய நண்பர்கள், எழுத்தாளர்களை எனக்கு நினைவுபடுத்தும். இனிவரும் தலைமுறையும் அவர் எழுத்தைப் படிக்கும் என்பதில் ஐயமில்லை. அவர்கள் வழி அவர் வாழ்வார்!
ஆழ்ந்த இரங்கல்!

Comments