கமலின் அரசியல் எதிர்காலம்

Image result for kamal hassan

சமீபத்தில் கமலஹாசனின் அரசியல் எதிர்காலம் பற்றி சாருஹாசன் சொன்ன கருத்துக்களை ஒட்டி ஒரு டிவி சேனலில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள். ஒரு அதிமுக பிரதிநிதி. இன்னொருவர் கமல் ஆதரவாளர். அவர் டை கட்டி, சட்டையை இன் பண்ணி டிவி திரையே பிதுங்கும் வண்ணம் அமர்ந்திருந்தார். யார் என்ன சொன்னாலும் இடையிடையே வந்து “ஊழலை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், கமல் வந்தால் ஊழல் இல்லாத சமூகம் மலரும் பார்த்திக்குங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
வெளியே நல்ல மழை.
நானும் நண்பருமாய் டீ அருந்தியபடி டீவி பார்க்கிறோம். நண்பர் வெளியே கடுமையான கமல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர். ஆனால் உள்ளுக்குள் கமல் வெறியர். சுருக்கமாக அவர் ஒரு கமலஹாசன். 

டிவியை சற்று நேரம் கவனித்த எனக்கு எனக்கு அந்த கமல் ஆதரவு பேச்சாளரின் அப்பாவியான முகம் ரொம்ப பிடித்திருந்தது. அருகில் இருந்த என் நண்பருக்கோ அவரது இந்த “ஊழல்” பிரசங்கம் ரொம்ப எரிச்சலூட்டியது. “கமல் இதுவரை ஒரு சொல்லாவது மத்திய அரசை எதிர்த்து பேசி இருக்கிறாரா?” என அவர் பொரும ஆரம்பித்தார்.
 நண்பர் கொதித்தால் அது குக்கர் விசிலடிப்பது போல. முழுக்க நிற்பது வரை பொறுக்க வேண்டும். அவர் முடித்த பின் நான் கேட்டேன் “கமல் என்னென்ன பண்ண வில்லை என்பதை ஒரு பட்டியலிடுங்களேன்?” நண்பர் இட்டார். ஆனால் அது ரொம்ப நீளமாக இருந்ததால் “சுருக்கமா சொல்லுங்க” என்றேன். அதுவே ரொம்ப நீளமாக போனது. ரொம்ப பின்னால் சென்று “ஏங்க ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது கமல் ஏன் களமிறங்கி போராடவில்லை?”
“ஆமா”
நண்பர் தொடர்ந்தார்:
 ”‘எனக்கு அனுபவம் கிடையாது. அரசியலை வெளியே இருந்து பாமரனாக பார்த்தவன், ஆகையால் எனக்கு அந்த தகுதி கிடையாது..’ கமல் இப்படியெல்லாம் கருத்து தெரிவித்தாரே தவிர அவர் அன்று காத்திரமாக என்ன செய்தார்?” என்று கேட்டார்.
 அக்கேள்வி எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டதால் டி.வியை அணைத்து விட்டு அவர் கண்களை சில நொடிகள் உற்றுப் பார்த்தேன். “ஆமா ஏன் போராடவில்லை?”என கேட்டுக் கொண்டேன்.
கமலை அரசிலுக்கு லாஞ்ச் செய்ய ஜல்லிக்கட்டு, நீட் தேவு – அனிதாவின் தற்கொலை போன்று சில கொந்தளிப்பான அரசியல் சந்தர்ப்பங்கள் அமைந்தனவே? இருந்தும் ஏன் பா.ஜ.க செய்யவில்லை? இப்படி நான் கேட்டுக் கொண்ட போது நண்பர் கொதிப்பின் உச்சத்துக்கு போனார்.
ஜல்லிக்கட்டு போரட்டத்தின் போது கமலஹாசன் கட்சி ஆரம்பித்திருந்தால், பா.ஜ.க மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக அவர் கொடி தூக்கி மக்களையும் ஒன்று திரட்டி இருந்தால் அவர் மீது யாருக்கும் ஐயம் ஏற்பட்டிருக்காது என்பது மட்டுமல்ல, பலமான மக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆதரவும் இருந்திருக்கும். ஏன் செய்யவில்லை?
நண்பர் சொன்னார், “பா.ஜ.க சார்பில் இருந்து யோசித்துப் பாருங்கள்.”
“சரி பண்ணிட்டேன். ஆனாலும் புரியலையே?”
“கமல் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருப்பார். அதை நிச்சயம் பா.ஜ.க விரும்பாது.”
“சரி பா.ஜ.கவுக்கு என்ன தான் வேண்டும்.”
“கமல் ஒரு வீட்டு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். கைக்கு அடக்கமான ஒரு கருவி போல் இருக்க வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் சட்டென கட்சியை ஆரம்பித்து வக்காளர்கள் இடையே ஒரு சிறிய கவனக் கலைப்பை செய்ய வேண்டும். குட்டையை குழப்ப வேண்டும். அதுவே பா.ஜ.கவின் விருப்பமாக இருக்கும். கமல் அப்போது அரசியலில் ஒரு பொன்சாய் மரம் போல் சரியான சைஸுக்கு வளர்வார். ஆனால் அடுத்தவர்களையும் வளர விட மாட்டார்.”
“சேச்சே கமல் அந்தளவுக்கு முட்டாளா என்ன?”
“கமல் புத்திசாலி தான். ஆனால் அவர் வசம் பணம் இல்லையே? எக்குத்தப்பாய் அவர் கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவை பெற்றாலும் யார் அவரை பைனான்ஸ் செய்வது? யார் அவருக்கு பின்னால் நின்று வளர்த்து விடுவது? மேலும் அரசியல் களத்தில் சறுக்கி அடிபட்டால் சம்பாதித்த பணமும் சினிமாவில் பெற்ற பெயரும் போய் விடுமே? அவ்வளவுக்கு ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்? கமல் ரிஸ்கே எடுக்காமல் விளையாட விரும்புகிறார். அதனால் தான் பா.ஜ.க பணிக்கும் போது அவர் கரெக்டாக லாஞ்ச் ஆவார்.”
“அதனால் அவருக்கு என்னங்க லாபம்?”
”தனக்கு ஒருவேளை மக்கள் ஆதரவு அமைந்தால் அதை அவர் ஓட்டுக்களாக மாற்ற முடியும். பா.ஜ.க கொடுக்கும் பணத்தை வாங்கி எதிர்கால சினிமா திட்டங்களுக்கு வைத்துக் கொள்ள முடியும். தோல்வி அடைந்தாலும் போனது தலைப்பாகையோடு போச்சு என்றாகி விடும். பெரிதாய் அடி விழாது.”
“வடிவேலுவுக்கு வந்த கதி இவருக்கு வராதா?”
“வராதுங்க. எப்படியும் அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சில ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க இருக்கும். அவர்களின் ஆதரவு கமலுக்கு இருப்பது வரை அவர் அதிகர உச்சாணிக் கொம்பில் இருப்பார். மேலும் ஸ்டாலின் ஒன்றும் ஜெயலலிதா அல்ல விரட்டி விரட்டி பழிவாங்க. அவர் கண்ணியமானவர். இன்னொரு விசயம் … அது ரொம்ப முக்கியம்.”
“என்ன?”
“ஒருவேளை தமிழகத்தில் அடுத்து அமையப் போகும் ஆட்சிக் கூட்டணியில் பா.ஜ.க பங்கு பெற்றால்?”
“திமுகவுடனா?”
“ஏதோ ஒரு திராவிட கட்சியுடன்”
“கேட்கவே பீதியாய் இருக்குதே”
“அப்போது கமல் ஒரு சூறாவளி போல அரசியலில் கலக்குவார்.”
“யாருக்கு எதிராக அப்போது பேசுவார்.”
“யாருக்கு எதிராகவும் பேச மாட்டார். சும்மா பேசிக் கொண்டிருப்பார்.”
“சரி கமல் கட்சியின் பெயர் என்னவாக?”

“Loading…”

Comments