பா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்

Image result for பா. ராகவன்யாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகமும் அப்படியான ஒரு நாட்குறிப்பு தான். அவரது அந்த தடதடவென்ற, இந்தா பிடி இந்தா பிடி என்கிற மொழி வேறு நூலை வேகப்படுத்துகிறது. மிகச்சின்ன நூல். கிண்டிலில் தரவிறக்கி ஒரு மணிநேரத்தில் படித்து விட்டேன்.
 உணவை அவர் எப்படி பாடாய் படுத்தி இருக்கிறார், உணவு அவரை எப்படி பாடாய் படுத்தி இருக்கிறது என அவர் பேசும் இடங்களை ரசித்தேன். அதுவும் தனது கடந்த கால (பேலியோவுக்கு முன்) வாழ்க்கையை பேசும் போது ராஜ்கிரண் போன்றும், பேலியோவுக்கு பின் வாழ்வை பேசும் போது விரைப்பாய் கடுமையாய் விஜய் சேதுபதி போன்றும் தொனிக்கிறார். மனிதன் எவ்வளவு ரசித்து ரசித்து சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார் என்ற எண்ணம் தான் திரும்பத் திரும்ப தோன்றியது. வடை, பஜ்ஜி, சட்னி, ஜாமுன், லட்டு அது இது என நீண்ட பட்டியலொன்றைத் தருகிறார். எனக்கென்னவோ அவர் பேலியோ மூலம் 27 கிலோவை குறைத்ததை விட மூச்சு விடாமல் இவ்வளவு பதார்த்தங்களை அத்தனை வருடங்கள் பதம் பார்த்தது தான் ஒரு சாதனை எனத் தோன்றுகிறது. அந்த பாகுபலி பராக்கிரமங்களைப் படிக்கவே இந்த நூலை வாங்கிப் புரட்டலாம்.

நூலின் இறுதியில் அவர் தந்துள்ள கேள்வி பதில் பகுதி ரொம்ப பயனுள்ளது. ஏன் பீன்ஸ், அவரைக்காய் சாப்பிடக் கூடாது? வேர்க்கடலை நட்ஸ் இல்லையா? ஏன் பாலை தவிர்க்க சொல்கிறார்கள்? ஏன் சில பழங்களை இந்திய பேலியோ ஆர்வலர்கள் தடை செய்கிறார்கள் என பல கேள்விகளுக்கு பதில் உள்ளது. பேலியோவில் நீங்கள் தானியங்கள், கிழங்கு வகைகள் தவிர இயற்கையாய் கிடைக்கும் பழங்கள் போன்று எதையும் தின்னலாம். ஆனால் இப்படியான சில இயற்கை உணவுகளில் கலோரிகள் அதிகம். பேலியோ பயன்பாட்டாளர்கள் எடை குறைப்பில் கவனம் செலுத்துவதால் கொழுப்பு, புரதம் மற்றும் காய்கறிகள் தவிர வேறு உணவுகளை தவிர்க்க பரிந்துரைக்கிறார்கள். பெண்களுக்கு ஏன் பேலியோவில் விரைவில் எடை இழப்பு சாத்தியப்படுவதில்லை, ஏன் முதல் சில மாதங்களில் உடனடியாய் ஏற்படும் எடை இழப்பு பின்னர் மட்டுப்படுகிறது என்கிற கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்களும் தெளிவானவை.
இந்நூல் சைவ பேலியோ உணவு பற்றியது. பா.ரா தான் உண்ணும் சைவ டயட்டை சுருக்கமாய் முடிவில் தந்துள்ளார். அது ஒரு நல்ல உணவுத் திட்டம் என எனக்குப் பட்டம். ஆனால் நாளோன்றுக்கு ஒரு முறையே உண்ணும் உணவு உண்மையில் ஆரோக்கியமானதா என எனக்குத் தெரியவில்லை. மேலும் ஒவ்வொருவரும் தமதான உணவுத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்றே நம்புகிறேன்.
இன்னொரு பக்கம், பா.ரா கூறுவது போல் பேலியோ குழுமத்தினர் பரிந்துரைக்கும் அட்டவணையை கராறாய் பின்பற்றுவது அவசியமா எனத் தெரியவில்லை. ஒவ்வொருவரது உடலும் ஒவ்வொரு வகை. என் விசயத்தில், சிக்கன் அதிக கலோரி கொண்டது எனப் படுகிறது. அதாவது, சிக்கன் எனது ரத்த சர்க்கரையை சற்று கூடுதலாய் ஏற்றுகிறது, ஆனால் பன்றிக்கறி, மாட்டுக்கறி ஆகியவை என் ரத்த சர்க்கரையை வெகுவாய் குறைக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? மீன் கூட ரத்த சர்க்கரையை சட்டென தூக்கி விடும் என்பது என் அனுபவம். இதை நான் அனுபவம் மூலம் அறிந்து கொண்டேன். ஆக நான் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் போது இதையெல்லாம் கணக்கில் கொள்வேன். யாரோ தயாரிக்கிற அட்டவணையை அப்படியே பின்பற்றினால் என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் சிக்கல் ஏற்படும்.
 பா.ரா பனீரை பிரதான உணவாய் கொள்கிறார். ஆனால் நான் வாசித்துள்ளவரை பேலியோவில் பனீரை குறைவாகவே உண்ணச் சொல்கிறார்கள். ஆனால் பா.ரா போன்று சைவப் பழக்கம் கொண்டவர்கள் வேறு எந்த புரத உணவை மாற்றாய் எடுக்க முடியும்? எதுவும் இல்லை. ஆக, அவருக்கு பனீர் தேவை தான். என் அனுபவத்தில் பனீர் ரத்த சர்க்கரையை ஏற்றி விடும். அதனால், நான் எப்போதாவது தான் பனீர் உண்கிறேன். இப்படி ஒவ்வொருவருக்கும் உடல் தேவை, கலாச்சார பின்னணி பொறுத்து பேலியோவில் சில சமரசங்கள் தேவைப்படுகின்றன. தப்பில்லை.
விருந்தின் போது எப்படி பேலியோ கற்பை காப்பது, பயணங்களின் போது ஓட்டலில் எதை வாங்கி சாப்பிடுவது போன்ற குறிப்புகளை ரசித்தேன். பயணங்களின் போது பா.ரா காய்கறி, பனீர் பதார்த்தங்களை கொண்டு சமாளிக்கிறார். அதோடு வறுத்த பாதாமும் கொண்டு போகிறார். நான் அதிகம் பழங்கள் உண்பதால் அந்த சிக்கல் இல்லை. எனக்கு ஆப்பிளும் வாழைப்பழங்களும் போதும் இரண்டு வேளை உணவை சமாளிக்க. இப்போதெல்லாம் தினமும் இவை தான் என் பிரதான உணவு. இரவு மட்டும் முட்டை அல்லது சிக்கன். அது கிடைக்காவிட்டாலும் சமாளிக்க முடியும். இதனால் பக்கத்தில் ஓட்டல் உண்டா, அங்கு கிடைக்கும் உணவின் தரம், சுவை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர்!
பேலியோவுக்குள் வந்த பின் எப்படி உணவுக்கான ஏக்கம் சட்டென மறைகிறது என பா.ரா பேசியிருக்கிறார். அது முழுக்க உண்மை. தானிய உணவுக்கு பசியை கூடுதலாய் தூண்டும், மூளைக்குள் ஒருவித போதையை ஏற்படுத்தும் தன்மை உண்டு என நினைக்கிறேன். இன்னொன்று பசி வயிற்றில் மட்டும் இல்லை, மனதிலும் தான் சமபங்கு இருக்கிறது.

பா.ராவின் நூலைப் படித்த பின் எனது பேலியோ அனுபவங்களையும் ஒரு நூலாக தொகுக்க வேண்டும் என ஆசை வருகிறது. பார்க்கலாம்! 

Comments