ஹெச்.ஜி ரசூல் கூட்டம்

Image result for ஹெச்.ஜி ரசூல்

எழும்பூர் இக்ஸா மையத்தில் நடைபெற்ற ஹெச்.ஜி ரசூலின் படைப்புலகம் பற்றின கூட்டம் மனநிறைவு தருவதாய், என் பதின்வயது வாழ்நாட்கள் பற்றின நினைவேக்கத்தை கிளறுவதாய் அமைந்தது. வழக்கமான கலை இலக்கிய பெருமன்றக் கூட்டத்தைப் போன்று இதுவும் இசையுடன் துவங்கியது. எளிய கலைஞர்கள் மக்கள் இசைப்பாடலை தப்பு தட்டி பாடினார்கள். ரசூலின் கவிதையை பாடலாக்கி இசைத்தார்கள். அவர்களின் குரலும், மன எழுச்சியும், நெகிழ்வும் நமது மண்ணின் ஆன்மாவை பிரதிபலித்தன.

ஒருங்கிணைத்த முஸ்தபா அண்ணன் “இது ரசூலை புகழ்ந்துரைக்கும் கூட்டமாய் அமைக்கப்படவில்லை. இது அவரை அறிவார்ந்து அணுகி புரிந்து கொள்வதற்கான கூட்டம்” என்றார். முதலில் பேசிய முஜீப் ரஹ்மானின் பேச்சு அப்படி அருமையாக அமைந்தது. ரசூல் இஸ்லாமிய சமூக பிற்போக்குவாதிகளுடன் உரையாடி அவர்களை தன் வசம் இழுக்க எப்படி தனக்கான ஆய்வு சட்டகம் ஒன்றை உருவாக்கினார் என அவர் எடுத்துரைத்தார். என்னைத் தொடர்ந்து பேசிய அனாரின் பேச்சும், ரசூலின் கவியாளுமையை நுணுக்கமாய், மென்மையாய் எடுத்துணர்த்துவதாய் அமைந்தது.
நான் ஒரு நிமிடத்தில் 20 வருடங்களுக்கு பின்னால் சென்று ரசூல் அண்ணனிடமும் முஸ்தபா அண்ணனிடமும் தத்துபித்தென்று வாதம் செய்யும் காலத்தை என் மனத்திரையில் ஓட்டினேன். என் நம்பிக்கைகளும், கருத்துக்களும், பார்வையும் அன்றிலிருந்து இன்று வெகுவாக மாறிப் போய் விடவில்லை எனத் தோன்றியது. சற்றே நிதானமாகி, கனிவாகி இருக்கிறேன் – மற்றபடி இன்று எனது பேச்சு இரு பத்தாண்டுகளுக்கு முன்பு முஸ்தபா அண்ணனின் களஞ்சியம் கடையில் இரவில் தரையில் அமர்ந்து கடுஞ்சாயா குடித்தபடி இடம், காலத்தை மறந்து பேசியதைப் போன்றே இருந்தது.
நான் இரண்டு விசயங்களை பேசினேன். ஒன்று ரசூலின் உளவியல் சித்திரம். இன்னொன்று ஒரு சிந்தனையாளனாய் அவர் நிகழ்த்திய சாதனை.
ரசூலின் ஆளுமையை பொறுத்த மட்டில் அவரது மட்டற்ற அன்பும் கனிவும் சிலாகிக்கத்தக்கவை. நம் சூழலில் அவரைப் போல் வெகு சிலரே இருந்திருக்கிறார்கள். யாரையும் வெறுக்க முனையாத, தான் எதிர்ப்பவரையும் அணைத்து உரையாட விழைகிற அற்புதமான மனிதர் அவர். இதை ஒட்டி, லஷ்மி மணிவண்ணன், விக்கிரமாதித்யன், என்.டி ராஜ்குமார் மற்றும் நான் சேர்ந்து ஜெயமோகனை அவரது தக்கலை அலுவலகத்தில் மதிய வேளையில் சந்திக்க சென்ற அனுபவத்தைப் பற்றி இன்று பேசினேன்.
ஜெயமோகனின் அலுவலகத்தில் நாங்கள் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்ட பின் லஷ்மி மணிவண்ணன் தொடர்ந்து ஜெயமோகனை கடுமையாய் தாக்கி விமர்சனங்கள் வைத்தார். சரம் சரமாய் அஸ்திரங்களை எய்தார். ஜெயமோகனும் அம்பு மழை பொழிந்தார். மணி நான்கரை. மணிவண்ணன் தன் யுத்தத்தை நிறுத்தி வைத்து தேரில் இருந்து இறங்கினார். வில்லையும் அம்புகளையும் வைத்தார். கவசத்தை கழற்றி பத்திரப்படுத்தினார். தோள்களை தழைய விட்டார். பதுங்கி பதுங்கி ஜெயமோகனை நெருங்கினார். முன்னூறு ரூபாய் கேட்டார். ஜெயமோகன் தரவே முடியாது என்றார்.
”சரி இருநூறு?”
 ”ம்ஹும்”
”அதெல்லாம் முடியாது. எனக்கு பணம் கொடுங்கள். நான் ஊருக்கு திரும்ப போக வேண்டும்.”
அவர் அரைமணி நேரம் ஜெயமோகனை நச்சரித்தார். ஜெயமோகன் தன் சட்டைப்பையை துழாவிக் காட்டினார். “பாருங்க, வெறும் பத்து ரூபாய் தான் இருக்கு. பஸ்ஸுக்கான பைசா”
“இல்லை நீங்க எப்படியாவது ஏற்பாடு பண்ணிக் கொடுங்க. நீங்க நெனச்சா முடியாதா?”
“முடியும் ஆனால் பண்ண மாட்டேன்”
நான் நினைத்தேன்: பணம் வேண்டுமென்றால் ஆரம்பத்தில் இருந்தே ஏன் வியூகம் அமைத்து, கத்தி வீசி, காயங்களை எல்லாம் ஏற்படுத்தினார்? ஏன் சூளுரைத்தார்? கொஞ்சம் அன்பாக, பணிவாக பேசியிருந்தால் ஜெயமோகனே நிச்சயம் முன்வந்து பணம் கொடுத்திருப்பாரே?
ஆனால் லஷ்மி மணிவண்ணன் அப்படியெல்லாம் யோசிக்க மாட்டார். அவர் முதலில் அடிப்பார். அடுத்து பிடுங்குவார்.
ஜெயமோகன் வெளியே போகும் முன் சொன்னார், “இப்பிடியே நேரா போனீங்கண்ணா ரசூல்னு ஒருத்தரோட வீடு வரும். அவரை இதே போல மிரட்டினீங்கண்ணா பணம் கொடுப்பார். முயன்று பாருங்கள்.”
மணிவண்ணனின் கண்களில் மின்னல் வெட்டியது. நாங்கள் ஆட்டோ எடுத்துக் கொண்டு ரசூலின் வீட்டுக்கு சென்றோம். ரசூல் எங்களை அருமையாய் உபசரித்தார். மணிவண்ணன் டீ குடித்து மிக்சர் கொறித்தபடி “ரசூல் உங்க எழுத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்குது தெரியுமா?” என ஆரம்பித்தார். அதன் பிறகு மிஷின் கன்னை எடுத்து மேலும் கீழுமாய் சுட்டார். ரசூல் மிக இனிமையாய் புன்னகைத்தபடி குண்டுகளை தாங்கிக் கொண்டார். மென்மையாய் பதிலளித்தார். “வேறு ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்று விசாரித்தார். மணிவண்ணன் கேட்குமுன்னே அவருக்கு குடிப்பதற்கும் ஊருக்கு திரும்ப செல்வதற்குமான பணத்தை அளித்தார். “போய் வாங்க” என அதே இனிமையுடன் எங்களை அனுப்பி வைத்தார். எனக்கு உண்மையில் அன்று ஒரு பக்கம் குற்றவுணர்வும் இன்னொரு பக்கம் ரசூல் மீது கோபமும் தோன்றியது. இவரால் ஏன் திரும்ப திட்ட முடியாதா? கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள முடியாதா?
 பதின்வயதில் ரசூலின் இந்த மென்மையான, சங்கோஜம் மிக்க, தாய்மை மிகுந்த ஆளுமை எனக்கு ரசிக்கவில்லை. அவர் உறுதியற்றவர் என நினைத்தேன். ஆனால் கடந்த இருபதாண்டுகளில் வாழ்வில் சிந்தனை நிலைப்பாடுகள், கருத்து மாறுபாடுகள் எதுவும் முக்கியமில்லை. குழந்தையாய் மனதை வைத்துக் கொள்ளுதல், கசப்புகளை நொடியில் கழற்றிப் போட்டு விட்டு பிறரை நேசிக்க முடிதல், எப்போதும் வாழ்வின் கதவுகளை அகலத் திறந்து வைத்திருந்தலே ஒரு மனிதன் அடையக் கூடிய ஆகப்பெரிய சிறப்பு எனப் படுகிறது. ரசூல் இயல்பிலேயே அப்படி கனிவு ததும்பும் மனிதராய் இருந்தது ஒரு கொடுப்பினை. வெறுப்பில் உழன்று மறைந்த பல கலைஞர்களை விடவும் அவர் மேலானவர்.
ரசூலின் கட்டுரைகளைப் படிக்கையில் அவர் ஒரு இறுக்கமான கோட்பாட்டுவாதி அல்ல என புரிகிறது. எல்லா சிந்தனைச் சட்டகங்களையும் மீறிச் செல்லவே அவர் முயல்கிறார். முரண்-எதிர்வை தாண்டின ஓர் உண்மையை அவர் நமக்கு திறந்து காட்ட முயல்கிறார். ஐ.எஸ் தீவிரவாதிகள் சவுதி மன்னர்களின் செல்வத்தை முதலீடாய் கொண்டு வன்முறையை அறுவடை செய்கிறார்கள். சவுதி மன்னர்களுக்குப் பின்னே அமெரிக்க ஏதேச்சதிகாரம் இருக்கிறது. ஆனால் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஐரோப்பிய கிறித்துவர்களை தம் எதிரிகளாய் பாவித்து அவர்களை அழித்தொழிக்கும் கொள்கையை முன்னெடுப்பதேன் என ரசூல் கேட்கிறார்.
 உலக அரசியலில் இன்று எதையும் கறுப்பு வெள்ளையாய் சுலபமாய் புரிந்து கொள்ள இயலாது; உண்மை இரண்டில் ஒவ்வொரு கால் பாவி நிற்கிறது. சென்னை வெள்ளத்தின் போது இஸ்லாமிய தொழுகைத் தலங்களை சுத்தப்படுத்தி, பாதுகாத்து இஸ்லாமியருக்கு அளித்த இந்துத்துவர்களைப் பற்றி குறிப்பிடும் ரசூல் இதே இந்துத்துவர்களை வெள்ளம் முடிந்த பின், இயல்பு வாழ்வுக்கு நாம் மீண்ட பின் இஸ்லாமியர்களின் நண்பர்கள் என எளிமையாய் எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது இவர்கள் இஸ்லாமியர்களின் நிரந்தர எதிரிகள் என்பதும் சரியாக இருக்குமா எனும் கேள்விகளை எழுப்புகிறார்.

 ஒரு சிந்தனையாளனாக இதுவே அவரது மிக முக்கிய பங்களிப்பு. எல்லா தளங்களிலும் முரண் எதிர்வை நொறுக்குகிறார் ரசூல். இருமைக்கு எதிராய் நின்று உண்மையின் பக்கமாய் நம் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு போகிறார். இஸ்லாத்தை முற்போக்கான, அரசியல் கூருணர்வு கொண்ட ஒரு வாழ்க்கைத் தேடலாய் முன்னெடுக்க விரும்பும் அவரது சொந்த சமூகத்தினருக்கும் ரசூலின் கட்டுரைகள் இருளில் வழிநடத்தும் ஒளிவிளக்காய் திகழும் என்பதில் ஐயமில்லை.

Comments