சிம்பன்ஸிகள் செய்த கொலை (2)

 Image result for primal weaponsImage result for primal weaponsImage result for primal weapons
அன்புள்ள பிரபு
நன்றி. உங்கள் எதிர்வினையும் கருத்துக்களும் மிகவும் சுவாரஸ்யமாய் இருந்தன; என்னை சிந்திக்க வைத்தன.
 ஆயுத உற்பத்தி, ஆயுத பயன்பாடு மற்றும் போருக்கு இரு காரணங்கள் சொல்கிறீர்கள். பெருங்குழுக்களாய் வாழ ஆரம்பிக்கும் மனித இனத்தின் பொருட் தேவைகள் அதிகரிக்கின்றன. வேறு குழுக்களிடம் இருந்து அடித்துப் பிடுங்க ஆயுதங்களை பயன்படுத்த துவங்குகின்றன. மனிதர்கள் “தன்னிருப்பை காட்டவும் நம்பிக்கையின் பெயராலும் பெருமையின் பெயராலும்” ஆயுதங்களை பிறர் மீது பிரயோகிக்கிறார்கள்.
எனக்கு உங்களது இரண்டு கருத்துக்களுடன் மட்டும் உடன்பாடில்லை. ஆதியில் மனிதனுக்கு ஆயுதங்களை பயன்படுத்த ஒரு நியாயமான காரணம் இருந்தது என்கிறீர்கள்: சுயபாதுகாப்பு.

சுயபாதுகாப்பு எப்போது தேவைப்படுகிறது? இன்னொரு மனிதனோ அவனைத் தாக்கும் போது. இன்னொரு மனிதன் ஏன் அவனைத் தாக்குகிறான்? அந்த இன்னொரு மனிதனுக்கு ஏன் ஆயுதம் தேவையாகிறது? ஆக நீங்கள் சொல்லும் காரணத்திலே கூட சுயபாதுகாப்புத் தாக்குதலுக்கு முன்பு இன்னொரு தாக்குதல் சாத்தியப்படுகிறது. ஆக, சுயபாதுகாப்பு மட்டுமே ஆயுதத்துக்கான நியாயம் அல்ல.
சரி, சுயபாதுகாப்பு என்பதை ஒருவரது உணவு, உறைவிடம், செக்ஸ் துணை ஆகியபற்றை பாதுகாப்பது என புரிந்து கொண்டோம் என்றால்? அப்போதும் கூட ஆயுதத் தாக்குதலே சுயபாதுகாப்புக்கான ஒரே தீர்வா என எனக்கு ஐயம் உள்ளது. மிருகங்கள் தம்மை இவ்விசயங்களில் பாதுகாத்துக் கொள்ள வேறு பல வழிகளை கண்டடைந்துள்ளன. அணில்கள் தான் கண்டடையும் கொட்டையை புதைத்து வைக்கும் என படித்திருக்கிறேன். காகம் பாதுகாப்பதை விட பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறது. ஆனால் தேனீக்கள் தாக்குகின்றன. ஆனால் அவை ஏன் சுலபத்தில் தெரியும்படி தம் கூட்டை கட்டுகின்றன? ஆமை, நத்தை போன்ற பிராணிகள் முழுக்க வேறொரு உபாயத்தை பயன்படுத்துகின்றன. ஆக, சுயபாதுகாப்புக்கான தாக்குதல் என்பது ஒரு கச்சிதமான பதில் அல்ல. சுயபாதுகாப்புக்கான பல உபாயங்களில் தாக்குதலும் ஒன்று என்றும், சில உயிரனங்கள் மட்டும் அவ்வழியை தேர்கின்றன என்றும் சொல்லலாம்.
 சிம்ப்களின் கதையை எடுத்துக் கொள்வோம். புது சிம்ப் தம் குழுவின் உணவையோ பெண்களை புதுக் குரங்கு நெருங்காமல் தடுக்கலாமே? இரண்டு உதை கொடுத்து வேண்டுமென்றால் விரட்டலாமே? சுயபாதுகாப்பிற்கு எவ்வளவோ வழி இருக்க ஏன் அவை அதை கீழே தள்ளி விட்டு கொல்கின்றன? சிம்பன்ஸி, மனிதன், தேனி போன்ற பிராணிகளுக்கு வன்மம் என்பது காமம், பசி போன்ற ஒரு காரணம் தேவையில்லாத உணர்வா?
நீங்கள் இன்றைய மனிதன் வன்முறையை பயன்படுத்துவதுவதற்கான காரணங்கள் அபத்தமாக உள்ளன என்கிறீர்கள்: மதத்திற்காக, தன் இருப்பை நிரூபிக்க, தன் சுயப்பெருமையை காட்ட. மதத்தின் பெயரிலான படுகொலைகள் அனைவரும் அறிந்தவையே. சைக்கோத்தனமான கொலைகளை இருப்புக்கான கொலைகள் எனலாம் (தனிமனித இருப்பு வெளிப்படாத இந்திய சமூகத்தி இவ்வகை கொலைகள் மிகக் குறைவு). மூன்றாவதாய், பெருமைக்கான கொலைகள். சமகாலத்தில் அடிக்கடி நிகழும் கௌரவக் கொலைகளை இவ்வகையில் சேர்க்கலாம். தன் மனைவியின் காதலனைக் கொல்வதையும் துரோகம் செய்த காதலியை / கணவனைக் கொல்வதையும் சேர்க்கலாம். பழிவாங்கும் பொருட்டிலான எல்லா கொலைகளும் அபத்தக் கொலைகளே.
நான் உங்களுடன் முழுக்க உடன்பட முடியாதது இந்த புள்ளியில் தான்: ஆதிமனிதனின் கொலைகள் இயல்பானவை, ஒருவிதத்தில் நியாயமானை என்றும், நாகரிக மனிதனின் கொலைகளே அபத்தமானவை, தேவையற்றவை என்று கூறுகிறீர்கள். ஆனால் நாகரிகமடையாத ஆதிமனிதனின் கொலைகள் கூட அதர்க்கமானவை என்றே நினைக்கிறேன். மானுடவியலாளர் மார்வின் ஹாரிஸ் தென்னமெரிக்க பழங்குடிகள் பழிவாங்கும் வெறியுடன் எதிரி குழுக்களின் வசிப்பிடங்களை பழியெடுத்தும் குருதி ஆறோட செய்வதை குறிப்பிடுகிறார்,
 இப்படி குழுவாக மாறத் துவங்காத ஆதி மனிதன் கூட ஒரு கொலையை நிகழ்த்த்த என்ன நியாயமான காரணம் இருந்திருக்க முடியும்? ஒரு ஆதிமனிதனின் உயிருக்கு வரப் போகும் ஆபத்து. அவன் முன் இரு வழிகள் தெரிகின்றன: (1) தன் முன் தோன்றிய உயிர்க்கொல்லி மிருகத்தைக் கொல்வது. (2) தப்பித்து ஓடுவது. இரண்டாவது வாய்ப்பு தாராளமாக கிடைத்தாலும் கூட, அது பாதுகாப்பாய் இருந்தாலும் கூட, அவன் முதல் வாய்ப்பையே நாடுவான் என நான் உறுதியாக சொல்கிறேன். ஏனெனில் பயம் தோன்றும் போது நமது உள்ளுணர்வு கொல்லும்படித் தான் நம்மைத் தூண்டுகிறது (ஒரு கொசுவைக் கூட அடிக்கத் தானே உள்ளுணர்வு சொல்கிறது! யாரும் விரட்டுவதில்லையே?).
ஆக கொல் எனும் ஆணை நமது மரபணுக்களில் வெகுகாலம் முன்பிருந்தே எழுதப்பட்டிருக்கிறது. நாம் பகுத்தறிவு படைத்தவர்கள் என்பதால் கொன்ற பின் ஒரு காரணத்தை கண்டுபிடித்து முன்வைக்கிறோம். ஆக, ஆதிமனிதனோ நாகரிக மனிதனோ இவ்விசயத்தில் ஒன்று தான் என நம்புகிறேன்.
அடுத்த சிக்கலுக்கு வருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட சிம்ப்களின் கொலை உதாரணத்தில் ஆயுதமே இல்லையே என முதலில் தோன்றலாம். ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் அங்கு ஒரு மறைமுக ஆயுதம் உள்ளது: இடம். இடமே அங்கு ஆயுதமாய் மாறுகிறது. சிம்ப்கள் கிளையில் இருந்து கிழே நோக்கும் போது கீழே புதுக் குரங்கை தள்ளி விடும் ஐடியா அவற்றுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை தள்ளி விட்டுக் கொல்ல முயன்றிருக்காது. ஆக, ஆயுதம் அவற்றுக்கு முன் முதலில் தோன்றுகின்றன. அடுத்து, கொல்லும் கற்பனை தோன்ற, இதனை அடுத்து கொலை நிகழ்கிறது.
 ஒருவேளை சிம்ப்கள் புதுக் குரங்கை தரைப்பகுதியில் வைத்து அடித்தே கொன்றிருந்தால், கைகளே ஆயுதம். இந்த புதுக் குரங்குக்கு ஒரு விசேத தற்பாதுகாப்பு ஆயுதம் உண்டு என கற்பனை செய்வோம். அதன் முதுகில் ஒரு பெரிய ஆமை ஓடு உள்ளது. யாராவது தாக்க அது சட்டென ஆமை ஓட்டுக்குள் புகுந்து மூடிக் கொள்ளும். இப்போது சிம்ப்கள் என்ன பண்ணும்? ஒருமுறை கீழே தள்ளிப் போட்டுக் கொல்ல முயலும். அம்முயற்சி தோற்றதும் அடுத்த ஆயுதத்தை எடுக்கும்: கூடி நின்று கைகளால் அடிக்க முயலும். அதுவும் தோற்க கற்களை பொறுக்கி எறியும். மூன்று ஆயுதங்களும் பயன் தராவிட்டால் அவை கொலை செய்யும் முடிவை ஒரேயடியாய் தள்ளிப் போடும், இல்லையா?

ஆக, ஆயுதம் தோன்றிய பின்னரே கொலை நிகழ்கிறது!

Comments