வாசிப்பு பற்றி நான்கு கேள்விகள் (2) - எதுக்குமே நேரமில்லைImage result for texting at the cinema

ஏன் நேரமில்லை?
வாசிக்க நேரமில்லை என ஏன் கூறுகிறார்கள்? எனக்கே பல நாட்களில் வாசிக்க ”நேரமிருப்பதில்லை”. ஆனால் அரட்டை அடிக்க, வேலை செய்ய, படம் பார்க்க “நேரமிருக்கும்”. என்னுடைய சில நண்பர்களால் ஒரு ஐம்பது பக்க நாவலைக் கூட தொடர்ந்து படிக்க முடிவதில்லை. ஒரு அத்தியாயம் படித்து விட்டு களைத்து தூங்கி விடுவார்கள். வாசிப்புக்கான தொடர்ச்சி இங்கு தான் முக்கியமாகிறது.
நாவல் வாசிப்பில் என் அனுபவம் இப்படி. நான் ஆயிரம் பக்க நாவல் ஒன்றை படித்து முடித்தால் அடுத்து அதே போல மற்றொரு தலையணை நாவலுக்கு தயாராகி விடுவேன். முந்தின நாவலின் தொடர்ச்சியாகவே இதை பார்ப்பேன். இது ஒரு பருவம். ஆயிரக்கணக்கான பக்கங்களை சுலபத்தில் தாண்டி சென்று விடுவேன். பிறகு ஒரு இடைவேளை வரும். வேறு வகையான நூல்களை வாசிக்க துவங்குவேன். பெரிய நூல்களுக்கான பழக்கம் விட்டுப் போன பின் ஒரு புதிய ஆயிரம் பக்க நாவலுக்குள் நுழைவது சிரமமாக இருக்கும். நூறு பக்கம் படித்ததும் ஆர்வம் இழந்து விடுவேன்.

 இந்த “ஆர்வம்” என்பது உண்மையில் அப்புத்தகத்தின் இயல்பு சம்மந்தமானது அல்ல. நீண்ட நேரம் தொடர்ந்து மொழியில் மூழ்கும் “ஆர்வம்” இது. இந்த ”ஆர்வம்” தொற்றிக் கொண்டால் பிறகு சின்ன புத்தகங்களுக்குள் பயணிப்பது சிரமமாக இருக்கும். நிறைவு இருக்காது. கல்யாண விருந்தில் பாதி பந்தியில் எழுந்தது போல் இருக்கும்.
இப்போது தமிழில் குறுநாவல்களுக்கு ஒரு மவுசு உள்ளது. இதை ஒரு பொழுதுபோக்கு வாசிப்பு மனநிலையாக மட்டும் நான் பார்க்கவில்லை. ஏனென்றால் கல்கி, சாண்டில்யன் ஆண்ட காலத்தில் ஆயிரம் பக்க நாவல்களைக் கூட நம் வாசகர்கள் அநாயசமாக படித்து கடக்கவில்லையா? இன்றும் இந்த வாசகர்கள் புத்தக கண்காட்சியில் ”பொன்னியின் செல்வனை” வாங்க தவறுவதில்லை.
ஆக, இது வெறும் நேரம் சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. பேஸ்புக், இணையம், சினிமா என வெகுஜன ஊடகங்களில் கூட எந்த கதையையும் / விவாதத்தையும் சுருக்கமாய் கூற வேண்டும் எனும் நிர்பந்தம் தோன்றி விட்டது. இன்றைய படங்களில் நீளமான காட்சிகளோ வசனங்களோ இல்லை. பார்வையாளர்களுக்கு உடனே அலுத்து விடுகிறது. காட்சிகளை நிறைய இடைவெட்டல்களுடன் திருப்பங்களுடன் அமைக்கிறார்கள். ரொம்ப சுவாரஸ்யமான படங்களைக் கூட முழுக்க அவர்கள் கவனிப்பதில்லை. இடையிடையே ஸ்மார்ட்போனில் அரட்டை அடித்தும் முகநூலில் போஸ்ட் செய்தபடியும் தான் படத்தையும் ரசிக்கிறார்கள்.
 நான் சில வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆரின் ”ஆயிரத்தில் ஒருவன்” படத்தை சத்யம் திரையரங்கில் ஒரு மீள் திரையிடலின் போது பார்த்தேன். அப்பொது முற்றிலும் அறுபது, எழுபதுகளின் தலைமுறை பார்வையாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு காட்சி நறுக்கென, உடனுக்குடன் திருப்பம் கொண்டதாய் இருக்க வேண்டியதில்லை. அவர்களால் கொஞ்சம் ஜவ்வாய் இழுக்கும் காட்சிகளை, நாடகீயமான தழுதழுப்புகளை ரசிக்க முடிந்தது. அவர்கள் வேறொரு “காலத்தில்” இருந்தார்கள். இன்னும் துல்லியமாய் சொல்வதானால் அவர்கள் காலத்தை வேறுவிதமாய் பார்க்க பழகி இருந்தார்கள்.
இன்றைய கவனச்சிதறல் கலாச்சாரம், அதன் துரித-ரசனை மனப்பான்மை முழுக்க பழக்கத்தின் வழி ஏற்பட்டது தான் என நம்புகிறேன். ஏனென்றால் நம்மை விட அதிக தொழில்நுட்ப, உலகமயமாக்கல் தாக்கம் கொண்ட மேற்கத்திய சமூகங்களில் ஐநூறு, ஆயிரம் பக்க நாவல்கள் பரவலாய் படிக்கப்படுகின்றன. அங்குள்ள ”பெஸ்ட் செல்லர்கள்” சற்று உடல் வீங்கின நாவல்களே. இலக்கிய நாவலாசிரியர்களில் வெகுஜன பரப்பையும் ஊடுருவிய ஹருகி முராகாமி நாவல்களின் சராசரி நீளமே முன்னூற்று ஐம்பது பக்கங்கள் தாம். ஆங்கில இந்திய நாவல்களிலும் எனக்குத் தெரிந்து குறுநாவல்களே இல்லை.
 வணிக நாவல்களில் நூறு பக்கங்களில் லகுவாய் சிக்கலற்ற கதைகளை கூறுவது வெற்றி பெறும் என நிரூபித்தவர் சேத்தன் பகத். ஒரு மசாலா தோசையும் காபிக்குமான பணம் இருந்தால் இவர் நாவல்களை வாங்கி விடலாம். இதனாலே இந்தியாவின் இளைய தலைமுறை இவரை கொண்டாடியது. சேத்தன் பகத் இந்தியாவின் சமகாலத் தலைமுறையின் மனப்பழக்கத்தை சரியாய் ஊகித்து உணர்ந்தவர் எனலாம். ஆனால் இதே சேதன் பகத் அமெரிக்க வாசகர்களுக்காய் எழுதினால் கூடுதலாய் இருநூறு பக்கங்கள் எழுதுவார் என உறுதியாய் கூறுவேன்.
வாசிப்புக்கான நேரமும் குறையவில்லை; ஆர்வமும் குன்றவில்லை. ஆனால் வேறொரு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்பழக்கம் வாசிப்பில் மட்டுமல்ல செய்தி வாசிப்பு, டிவி நிகழ்ச்சித் தொகுப்பு, அன்றாட அரட்டை, சமூகமாக்கல் எங்கும் ஒரு துரித மனோபாவத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 எல்லா பழக்கங்களையும் போல் இதுவும் ஒரு கட்டத்தில் அலுத்து விடும். எல்லாவற்றையும் ”சீக்கிரம் சீக்கிரம்” என கோரும் நாம் “ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டது?” என கேட்கும் காலம் வரும். ”சீக்கிரமே” வரும்! நாம் அப்போது நேரத்தை நீட்டிக்க விரும்புவோம். இன்னும் சற்று நேரம் ஒரு விசயத்தில் ஆழ்ந்து போய் சிலாகிக்க விரும்புவோம். அதற்கான ஒரு கலாச்சார அலை தோன்ற வேண்டும். அப்போது நம் மனமும் காலத்தை சற்று நீளமானதாய் பார்க்க பழகிக் கொண்டு விடும். அப்போது நம்மால் பொறுமையான சினிமாக்களை பார்க்க முடியும். ஐநூறு பக்க நாவல்களை அநாயசமாய் படிக்க முடியும். நம் நாவலாசிரியர்கள் வருடத்திற்கு ஒரு ஆயிரம் பக்க நாவல் எழுத முனைவார்கள்.
 சரி, இதையெல்லாம் படிக்க நமக்கு நேரம் அப்போது எப்படி வாய்க்கும்? நேரம் வெளியில் இல்லை. மனதில் உள்ளது. இப்போது நாம் நேரத்தை கேப்ஸ்யூல்களாய் சுருக்கி பலவித காரியங்களில், பொழுதுபோக்குகளில் செலவழிக்கிறோம். அப்போது நாம் நேரத்தை ஒன்றாய் சேர்த்து ஒரு காரியத்தில் ஈடுபட பயன்படுத்துவோம். 
வாசிப்பை மக்களிடைய பரவலாக்க வாசிப்பின் அருமை பெருமைகளை விளக்கினாலோ, புத்தகங்களை அதிகம் புழக்கத்தில் வைத்திருந்தாலோ போதாது. வாசிப்பு உண்மையில் நடைமுறை வாழ்க்கைக்கு எந்த பயனும் அளிக்காத ஒரு பழக்கம். அந்த பழக்கத்தை பண்பாட்டின் ஒரு பகுதியாய் மக்களுக்கு ஏற்படுத்துவது தான் அதைக் காப்பாற்றும் ஒரே வழி.


Comments