வாசிப்பு பற்றி நான்கு கேள்விகள் (1) -

  Image result for reader

வாசிக்க நேரமில்லை என நிறைய பேர் சொல்வதை கேட்கிறேன். இது உண்மையா? அதற்கு முன்பு வேறு சில கேள்விகளை பரிசீலிப்போம்.
வாசிப்பின் தேவை தான் என்ன?
வாசிப்பதற்கு நேரமில்லை போன்ற பொதுவான காரணங்களை நான் நம்புவதில்லை. மிகக்கடுமையான வேலைப்பளு கொண்டவர்களும் படிக்கிறார்கள். வேலையே இல்லாமல் ஈயடிப்பவர்களும் புத்தகத்தை கையில் கொடுத்தாலும் படிப்பதில்லை. சரி ஆர்வம் தான் வாசிப்பை தீர்மானிக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு புத்தகத்தின் மீது நிறைய மையல் கொண்டு, அதை அடிக்கடி தொட்டு தடவி திறந்து பார்த்து மூடி வைத்து விடுகிறவர்களை எனக்குத் தெரியும். என்னுடைய ஒரு தோழி ஒரு ஆங்கில நாவலாசிரியரின் வெறித்தனமான ரசிகை. அவரது எந்த புது நாவல் வந்தாலும் உடனே வாங்கி வைத்து விடுவார். ஆனால் படிக்க மாட்டார்.

வாசிப்பினால் எழுத்தாளனுக்கு பயனில்லையா?
 சிலர் எழுத்தாளர்கள் படிப்பது குறைவு என்கிறார்கள். இதை நீங்கள் எஸ்.ரா, ஜெயமோகன் போன்றோரை முன்வைத்து கூற முடியாது. அவர்கள் புத்தகத்துக்கு பதில் நூலகங்களையே படிக்கிறார்கள். ஆனாலும் பொதுவாக நம் எழுத்தாளர்களின் வாசிப்பு குறைவானது என ஒரு பார்வை உள்ளது. இது ஓரளவு உண்மையும் தான்.
இதற்கு ஒரு காரணம் எழுத்தே எழுத்தாளர்களின் பெரும்பாலான நேரத்தை உண்டு விடுகிறது என்பது.
 நிறைய படிப்பது எழுத்தை மேம்படுத்தும் எனும் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை. நிறைய படிப்பதை விட சிரமமான நூல்கள் சிலவற்றை ஆழ்ந்து படித்தாலே போதும். அவை உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்பும். வாழ்க்கையில் எவ்வளவு புரியாமை அதிகமாகிறதோ அந்தளவு எழுத்தும் சிறப்பாக இருக்கும்.
 இன்னொரு விசயம் நாம் விரும்பி படித்த நூல்களைப் போல நம்மால் ஒருநாளும் எழுத முடியாது. உதாரணமாய், நான் பால்யத்தில் மிகவும் ரசித்த, இன்றும் வியக்கிற தல்ஸ்தாயின் சுவடுகளை நான் பின்பற்றவே இயலாது. அவர்களிடம் இருந்த பெற்ற பாடங்கள் ஒரு வாசகனாய், விமர்சகனாய் பயன்படும். ஆனால் எழுத்தாளனாய் அவர்களை மறந்தால் மட்டுமே நீங்கள் எழுத முடியும். இன்னொரு விசயம், நான் அதிகமாய் படித்த காலத்தில் எதுவும் எழுதவில்லை. அல்லது உருப்படியாய் எழுத முடிந்ததில்லை. அதிகமாய் எழுதத் தொடங்கிய பின் என் வாசிப்பு நிச்சயம் குறைந்து விட்டது.
வாசிப்பினால் வாழ்க்கைக்கு பயனில்லையா?
ஒருமுறை மனுஷ்யபுத்திரன் என்னிடம் சொன்னார் “இலக்கியம் வாழ்க்கை பற்றி கற்பிக்கும் பாடங்களை வைத்து வாழவே இயலாது. இலக்கியத்தின் அவதானிப்புகள் நடைமுறை வாழ்க்கைக்கு அப்பாலானவை.” “போரும் வாழ்வும்” நாவலில் நாம் இவ்வாழ்க்கையில் கண்ட, இனிக் காணப் போகும் எல்லாவகை மனிதர்களின் பிரதிபிம்பங்களையும் காணலாம். அந்நாவலை ஒருமுறை வாசிப்பது மொத்த வாழ்வையும் ஒரு வாரத்தில் மொத்தமாய் வாழ்வதற்கு சமம். ஆனால் அதேநேரம் நடைமுறையில் வாழ்க்கை அந்நாவலை விட பலமடங்கு சிக்கல்களும் எதிர்பாரா தன்மைகளும் கொண்டது. அந்நாவல் தான் வாழ்க்கையின் கையளவு பிரதிபலிப்பா என்றால் ஆம் என்றும் இல்லை என்றும் பதிலளிப்பேன்
அப்படி என்றால் தல்ஸ்தாய் காட்டும் வாழ்க்கை தான் என்ன? அதனால் பயனில்லை என்றால் ஏன் படிக்கிறோம்?
1)   தல்ஸ்தாய் காட்டும் உலகம் ஒரு பிரம்மாண்ட விரிவு கொண்ட சித்திரம். அது தன்னளவில் முழுமை கொண்டது. அதேநேரம் நிஜவாழ்வுடன் ஒப்பிடுகையில் முழுமையற்றது
2)   நாம் இலக்கியம் தரும் ஒரு முழுமையற்ற ஆனால் ஆழமான சித்திரத்தை தரிசிக்கவும் உள்வாங்கவும் விரும்புகிறோம். அது ஒரு மாற்று உலகம். புத்தகங்கள் வழி நடைமுறை நிஜத்துடன் சற்றும் தொடர்பில்லாத ஒரு ஆழமான மாற்று வாழ்வை வாழ ஏங்குகிறோம். மெல்ல மெல்ல ஒரு கட்டத்தில் அதுவே உண்மையான உலகம் என நம்பத் துவங்குகிறோம். அப்போது ஏன் வாசிக்கிறோம் என்ற கேள்விக்கே அர்த்தம் இல்லாமல் ஆகி விடும்.
3)   என்னைப் பொறுத்த வரையில் இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையில் மயக்கம் ஏற்பட்டு ஒன்று இன்னொன்று என நாம் நம்பத் துவங்கும் போது நாம் ஒரு கச்சிதமான வாசகனாகி விட்டோம் எனப் பொருள்.
அதனால் தான் ஒரு புத்தக உலகமே நிஜமான உலகம் என முழுக்க “குழம்பி” விட்ட வாசகன் ஒரு புத்தகம் “பைசா வசூல்” என கருதுவதில்லை. ஒரு ஏமாற்றமளிக்கும் நூலிலும் அவன் அடைய ஏதோ ஒன்று இருக்கும். அவன் நிறைய பக்கங்கள் படிக்க வேண்டும் என திட்டமிடுவதோ, படிப்பின் பயன் என்ன கேள்வி எழுப்புவதோ இல்லை. உலகமே குடிமுழுகி போனாலும் அவன் ஒரு மூலையில் இருந்து வாசித்தபடி இருப்பான்.
 உண்மையிலே எனக்கு அப்படி ஒரு நண்பர் இருந்தார். 2006இல் சென்னையை மூழ்கடித்த வெள்ளம் நினைவிருக்கும். அப்போது நான் தினத்தந்தியின் மலர் எஸ்.எம்.எஸ் எனும் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னுடைய அணி மேலாளர் ஒரு பெரும் ரசிகர். பெயர் வெங்கட். அப்போது அவர் வீட்டை முழுக்க வெள்ளம் சூழ்ந்து கொண்டது. சமையலறை சாமான்கள், குழந்தையின் புத்தகங்கள், துணிமணிகள், நாற்காலி, அலமாரி என கிடைத்தவற்றை எல்லாம் எடுத்து ஒரு நண்பர் வீட்டிற்கு சேர்த்து விட்டு இவர்கள் ஒரு அறையில் ஒடுங்கிக் கொண்டார்கள். ஊரெங்கும் மக்கள் பதறி ஓடுகிறார்கள். உணவில்லை, மின்சாரமில்லை, பாதுகாப்பில்லை, கையில் பணமில்லை. நகரத்தை விட்டு வெளியேற எந்த வழியும் இல்லை. குழந்தைக்கு பால்பொடியில்லை. அது அழுகிறது. வெங்கட்டின் வீட்டில் மனைவி தம் வீட்டை இந்நேரம் வெள்ளம் அடித்து கொண்டு போயிருக்குமே என ஒப்பாரி வைக்கிறார். அவர்களது வாழ்க்கையின் மொத்த சொத்தும் அந்த வீடு தான். வெங்கட் எந்த பதற்றமும் இன்றி ஒரு நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஒரு துப்பறியும் நாவலை படிக்கிறார். வெள்ளம் முழுக்க வடிந்து சென்னை மீளும் முன் அவர் அது போல் நான்கைந்து நாவல்களை வாசித்து முடித்திருந்தார். அதைப் பார்க்க பார்க்க அவர் மனைவிக்கு ஆத்திரம் பொங்கியபடி இருக்கிறது. ஆனால் அவரால் ஒன்றும் பண்ணமுடியவில்லை.
 நாங்கள் மீண்டும் சந்தித்த போது என் சக ஊழியர்கள் சொற்களில் இருந்து வெள்ளத்தின் பீதிமுழுக்க வடியவில்லை. மரணத்தின் விஷநாவு அவர்களை வெகுஅருகில் தொட்டுப் போயிருக்கிறது. அவர்கள் பேசி பேசி தங்கள் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஆற்றிக் கொண்டார்கள். ஆனால் வெங்கட் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியாய் அணைத்துக் கொண்டார். வெள்ளம் அவர் வீட்டை சூழ்ந்து கொண்டதைப் பற்றிக் கேட்டேன். அதைப் பற்றி சுருக்கமாய் விவரித்து விட்டு சட்டென முகம் சுடர் விட கூறினார் “நீ ஆர்தர் ஹெய்லியின் “ஹோட்டல்” படிக்க வேண்டுமே? நான் இருபதாவது தடவையாய் அதை படித்தென். அதில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பாத்திரம் அலம்பும் போது கழுவுத்தொட்டியின் ஓட்டை வழி மிகச்சின்ன ஸ்பூன்கள் தவறி கீழே சாக்கடைக்கு வந்து விடும். அத்தனையும் வெள்ளி சாமான்கள். அதனால் சாக்கடையில் இருந்து அவற்றை மீட்பதற்கு என்று ஒரு ஆளை நியமித்திருப்பார்கள். அந்த ஆள் ஓரிடத்தில் சொல்கிறான் “என்னால் இந்த ஹோட்டலுக்கு லட்சக்கணக்கில் லாபம் தெரியுமா?” உண்மையில் அந்த ஓட்டலின் மேலாளரை அவன் முக்கியமான பங்களிப்பை செய்கிறான் தான். ஹா ஹா இது எப்பிடி?”
 நான் கேட்டேன் “சார் ஊரே தண்ணியில் மூழ்கி தவிக்கும் போது நீங்க மட்டும் ஒண்ணுமே நடக்காதது போல நாவல் படிக்கிறீங்களே? உங்களுக்கு கவலை இல்லையா? குடும்பம் பற்றி பயம் இல்லையா?”
அவர் முகவாயை லேசாய் தூக்கி ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி சொன்னார் “அதனாலென்ன? இப்போது நிலைமை சீராகி விட்டது. வெள்ளம் வந்ததால் நம்ம வாழ்க்கை மாறிடுச்சா? எல்லாரும் பழைய வாழ்க்கைக்கு வந்திட்டோமே. எதுவுமே மாறாத போது அன்னிக்கு மட்டும் நான் ஏன் தலையில அடிச்சிட்டு அழுதுகிட்டு இருக்கணும்? நான் அப்போ நிகரில்லாத மகிழ்ச்சியோட இருந்தேன். அது போதுமே”
வாழ்க்கையில் துக்கத்தையும் இழப்பையும் இப்படித் தான் கையாள வேண்டும் என எனக்கு அப்போது தோன்றியது.
வெங்கட்டை போன்றவர்களுக்கு புத்தகம் வாசிப்பதற்கு என ஒரு இடம், காலம், சூழல், மனநிம்மதி எதுவும் அவசியம் இல்லை. 

Comments