சிம்பன்ஸிகள் செய்த கொலை (1)

Image result for chimpanzee violence

அன்புள்ள அபிலாஷ்,

உங்களின் யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா கட்டுரையை படித்தேன். உலகம் முழுக்க ஆயுதம் ஒரு பண்டமாக மாறியதும் ஆயுதத்துக்காக இன்று யுத்தங்கள் நிகழ்வதும் சோகமான உண்மையே. 

ஆனால் இந்த நிலை ஆதி முதல் இப்படியே தொடர்கிறதா என்று யோசிக்கும்போது, நெடுநாட்களுக்கு முன் டிஸ்கவரி சேனலில் பார்த்த ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது. ஒரு சரணாலயத்தில் இருபது சிம்பன்சி குரங்குகள் ஒரு குழுவாக வாழ்கின்றன. அந்த குழுவில் திசை மாறி வந்த ஒரு புதிய சிம்ப் சேர முயற்சிக்கிறது. இந்த புதுவரவை சில சிம்ப்கள் வெறுக்கின்றன. இந்த வெறுப்பு நாளுக்கு நாள் வளர்ந்து ஒரு கட்டத்தில் அந்த மொத்த குழுவும் அந்த புதிய சிம்ப்ஐ அடித்து உதைத்து மரத்திலிருந்து தள்ளிவிடுகின்றன. சிறிது நேரத்தில் அந்த சிம்ப் செத்துவிடுகிறது. அந்த சிம்ப்களுக்கு இது ஒரு கொலை என்று தெரிவதற்கு முன்பே அது நிகழ்த்தப்பட்டுவிட்டது. இதற்கான காரணம் ஒரு தற்காப்பு. இது என் இடம் அதன் எல்லைக்குள் வராதே, இது என் குழு இதில் சேராதே, இது என் பெண் துணை இதனை சீண்டாதே என்கின்ற தற்காப்பு. ஆயுதங்களின்றி ஒரு குழுவாக இதை செய்கின்றன.


ஆனால் இந்த தற்காப்பிலும் ஒரு ஆபத்து இருக்கிறது. இதே சிம்ப் குழுவை ஒரு சிங்கம் தாக்கினால், என்னதான் அவை தற்காத்துக்கொள்ள முயன்றாலும் ஒரு இரு இழப்புக்கள் நிகழத்தான் செய்யும். தம்மைவிட வலுவான ஒரு எதிரியிடமிருந்து காத்துக்கொள்ள ஆயுதங்கள் பயன்படுத்த துவங்கியிருக்கலாம். ஆதி மனிதனால் நெருப்பும் இதற்காகவே முதலில் பயன்படுத்தப்பட்டது. தற்காப்பிற்காக ஆயுதம் என்று இருந்த நிலை எப்பொழுது மாறியது?

சிறு குழுக்களாக இயங்கிக்கொண்டிருந்த தங்களுக்குள் சுய நிறைவு பெற்றிருந்த அதுவரை தற்காப்பிற்காக மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்திய ஆதி மனிதன் , பெருங்குழுக்களாக வளர ஆரம்பித்ததும் அவனது தேவை பெறுக ஆரம்பிக்கிறது. அதை நிறைவுசெய்ய மற்ற குழுக்களிடமிருந்து தனக்கு தேவையானதை பறிப்பதற்கு ஆயுதங்களை செய்ய ஆரம்பிக்கிறான். இந்த புள்ளியே ஆயுதத்திற்காக யுத்தம் என்கின்ற நிலையின் தொடக்கம் என்று நினைக்கிறேன்.

இந்த யுத்தம் தேவையை மையப்படுத்தி ஆரம்பித்திருந்தாலும் அதன் இன்றைய நிலை தன் சுகத்திற்காக மற்றவர் வளத்தை சுறண்டவும் தன்னிருப்பை காட்டவும் நம்பிக்கையின் பெயராலும் பெருமையின் பெயராலும் நிகழ்த்தப்படுவது ஆதி மனிதனிலிருந்து நாம் வளர்ந்திருக்கிறோமா அல்லது தேய்ந்திருக்கிறோமா என்ற ஐயத்தை எழுப்புகிறது.
நன்றி,

பிரபு 

(பிரபுவுக்கான என் பதில் அடுத்த பதிவில்)

Comments