Stalking: பெண்ணுடலின் சிக்கல் (2)


 Image result for stalking

பாலியல் பெண்களின் உடல்மொழியின் லிபி. ஆனால் உடலுறவு விழைவு இதில் பெரும்பாலும் இருப்பதில்லை.
 இந்த முரண் ஆண்களுக்கு விளங்குவதில்லை. உதாரணமாய், ஒரு வைபவத்தின் போது, வீட்டில் விருந்தில், கோயில் பிரகாரத்து வரிசையில் பட்டுப்புடவை சரசரக்க நிலவிளக்கு போல் ஜொலிக்கும் ஒரு பெண் பல ஆண்கள் கவனத்தை ஈர்க்கலாம். அவளது நகர்வும் சைகைகளும் கண்களின் பொலிவும் ஆண்களுக்கான அழைப்பை கொண்டிருப்பதாய் தோற்றம் காட்டலாம். ஆனால் உண்மையில் அப்பெண்ணுக்கு அப்போது பாலுறவு எண்ணமே இராது. அதேநேரம் பாலுணர்வைத் தூண்டும் உடலை ஒரு முக்கியமான மனுஷியாய் தன்னை அவ்விடத்தில் காட்டிக் கொள்ள அவள் பயன்படுத்துவாள். இதைப் பெண்கள் மிக மிக அநிச்சையாய் செய்கிறார்கள். ஐம்பது வயதுப் பெண் கூட தன்னை அலங்கரித்து பொற்சிலை போல் காட்டிக் கொள்ள எத்தனிப்பது இதனால் தான்.
ஒரு பெண் பாலுணர்வைத் தூண்டும்படியாய் தன்னை காட்டிக் கொள்ளும் போது பாலியல் கிளர்ச்சியை ஆணிடம் ஏற்படுத்துவது அவளது நோக்கம் அல்ல. (நூறு ஆண்கள் உள்ள கூட்டத்தில் ஒரு பெண் அப்படி செய்வது எவ்வளவு ஆபத்தானது! எந்த பெண்ணும் தன்னை பார்க்கிற ஆண்கள் எல்லாம் தன்னிடம் வர வேண்டும் என விரும்ப மாட்டாள்.)

 ஒரு பெண்ணிடம் போய் “ரொம்ப செக்ஸியாய் இருக்கிறாய்” என சொன்னாலோ அல்லது உங்களை செய்கை மூலம் அதை உணர்த்தினாலோ அவள் உங்களை வெறுத்து ஒதுக்குவாள். அது அநாகரிகம் என்பதால் மட்டுமல்ல. அவள் அதை எதிர்பார்க்கவில்லை என்பதாலும் தான். உடல் கவர்ச்சியையும் உடலுறவையும் நேரடியாய் முடிச்சிடுவது ஆண்களுக்கு மிக இயல்பாகவும் பெண்களுக்கு அதுவே அபத்தமாகவும் இருக்கிறது. இது தான் பெண்ணுடலின் அடிப்படையான சிக்கல்: உடல் கவர்ச்சியை ஆண்கள் ஒரு அழைப்பாக கருதுகிறார்கள்; பெண்ணுக்கோ அது ஒரு உரையாடல் மட்டுமே.
இதில் இன்னொரு கோணமும் உள்ளது. ஒரு பெண்ணின் இச்சையை தூண்டும் உடல் பாவனைகள் ஒரு ”உரையாடல்” எனும் போது யாருடனான அது உரையாடல் எனும் கேள்வி எழுகிறது. ஒரு பெண் யாருடன், எந்த ஆணுடன், தன் உடல் மொழியால் பேசுகிறாள்? எனது நண்பர் ஒரு சமூகவியல் பேராசிரியர். அவர் தனது சமீபத்தைய வகுப்பொன்றில் மாணவிகளிடம் மேற்சொன்ன இச்சைப் பார்வை (male gaze) பற்றி விவாதித்தார். அவரது ஒரு கேள்வி குறிப்பானது: எந்த ஆண்களின் இச்சைப் பார்வையை நீங்கள் விரும்புகிறீர்கள்? எதை விரும்பவில்லை? இதற்கு பதிலளித்த பெரும்பாலான மாணவிகள் தமக்கு பிடித்தமான ஆணின் பார்வையை ஏற்பதாகவும், மட்டமாய், ரசனையற்று ஆடையணிந்த, முரட்டுத்தனமாய் தோன்றும், சமூக ஏற்பற்ற தோற்றமுடைய ஆணின் பார்வையை ஆபாசமாய் கருதுவதாகவும் கூறினர். ஆக பெண்கள் தமது ”உரையாடலில்” தமக்கு ஏற்புடைய ஆண்கள் மட்டும் கலந்து கொள்வதையே விரும்புகிறார்கள். அது ஒரு பொது உரையாடல் அல்ல. அது ஒரு கூட்டு விவாதமோ தெருக்கூச்சலோ கட்சிக்கூட்டமோ அல்ல. அது ஒரு அந்தரங்க உரையாடல். உடல் “பொதுவெளியில்” இருந்தாலும் ஒரு பெண் தன் உடலால் ”பேசும்” போது அது “அந்தரங்க” உரையாடல் ஆகிறது. இந்த முரண்போலியும் முக்கியமானது. ஆண்களுக்கு இது நிச்சயம் குழப்பம் ஏற்படுத்துகிறது.
பெண்கள் வன்புணர்வுக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கும் ஆளாக்கப்படும் போது ஒரு கலாச்சார பாதுகாவலர் தோன்றி சொல்வார்: “அந்த பெண் ஏன் இவ்வளவு குறைவாய் ஆடையணிந்திருந்தாள். அது ஆணுக்கு விடப்பட்ட சவால் அல்லவா? அவள் ஏன் இரவில் தனியாக சென்றாள்? ஒரு ஆண் அப்போது தூண்டப்பட மாட்டானா?” இதை ஆணாதிக்க, தடித்தனமான கேள்வி என நிராகரிக்கும் முன் நாம் ஆண்களின் குழப்பத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். என்னைப் பார், ஆனால் பார்க்காதே, என்னைப் பின் தொடர்ந்து வா, ஆனால் வராதே என ஒரு பெண் முரணான சேதிகள் விடுக்கும் போது ஆண்கள் நிலைதடுமாறுகிறார்கள்.
இந்த பிரச்சனை பெங்களூர், தில்லி, மும்பை போன்ற மெட்ரோபோலிட்டன் நகரங்களில் நெருப்பாய் பரவுகிறது. சனிக்கிழமை இரவுகளில் இளம்பெண்கள் மிகக் குறைவான ஆடைகளில் பப்களிலும் கூட்டமான தெருக்களிலும் அலைபாய்கிறார்கள். நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்கு தனியாய் வீடு திரும்புகிறார்கள். பதின்பருவப் பெண்கள் தமது ஆண் நண்பர்களின் வீட்டில் இரவில் தங்குகிறார்கள் (sleepover என்படுகிறது). இது மிக மிக சமீபமாய் வந்துள்ள ஒரு பண்பாட்டு மாற்றம். பகலில் மரபான ஆடைகளிலும் இரவில் பிக்கினி போன்ற துக்கடா ஆடைகளிலும் உலவுவது பெண்களுக்கு முரண்போலி அல்ல. அது அவர்களின் இயல்பு. அவர்கள் பல உடல்களில் தம்மை வெளிப்படுத்துகிறார்கள். தமது சுயத்தை பலவிதங்களில் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கோ இப்பெண்களுக்கு என்ன தான் வேண்டும் எனப் புரியவில்லை.
இவை சமீபமாய் பரபரப்பாக பேசப்பட்ட stalking சம்பவங்கள். (பாலியல் நோக்கத்துடன் பெண்ணை பின்தொடர்வது stalking எனப்படும் குற்றம்.) ஹரியானா பா.ஜ.க தலைவரின் மகன் விகாஸ் பராலா ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகளான வர்ணிகா என்பவரை இரவில் பின் தொடர்ந்து வந்து கடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் ஒரு பேஷன் டிஸைனர் தன் குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் நள்ளிரவில் வீடு திரும்பும் போது ஒருவன் அவர்களைப் பின் தொடர்கிறான். அவளது வீட்டு எண்ணை கண்டுபிடித்து வந்து நள்ளிரவில் கதவைத் தட்டி தண்ணீர் கேட்கிறான். அவள் அவனை நோக்கி கத்தி விரட்ட அவன் கீழே தன் காரில் போய் காத்திருக்கிறான். போலீஸுக்கு போன் செய்த பின்பே அவன் வெளியேறுகிறான். கடந்த மூன்று வருடங்களில் மட்டும் stalking சம்மந்தமாய் 18,000 வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆண் பெண் உறவில் முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடி இப்போது ஏற்பட்டிருக்கிறது.
 ஆண்களின் போதைப்பழக்கம், தடித்தனம், பாலியல் வறட்சியினால் மட்டும் இக்குற்றங்கள் நிகழவில்லை. ஏனென்றால் நன்கு படித்த, பெண்களுடன் நாகரிகமாய் பழகத் தெரிந்த ஆண்களும் கூட இக்குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். ஏற்கனவே காதலியோ மனைவியோ கொண்ட ஒரு ஆணும் இன்னொரு பெண்ணை தொந்தரவு செய்ய தயங்குவதில்லை. ஆக, பாலியல் வறட்சி மட்டும் காரணமல்ல.
சமீபத்தில் என்னிடம் ஒரு தோழி சொன்னார்: “பேருந்தில் பெண்களுக்கு சமமாய் ஆண்களும் grope செய்யப்படுகிறார்கள்”. யாரால்? அதே ஆண்களால் தான். ஓரின இயல்பு கொண்ட ஆண்கள் அல்லது அப்படி உள்ளதாய் புரிந்து கொள்ளப்படும் ஆண்கள் அவர்களால் ஈர்க்கப்படும் பிற ஆண்களால் தவறாக வருடப்பட்டும் (grope) துரத்தப்பட்டும் (stalk) தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள். ஏனெனில் இந்த ஆண்களின் உடல் ஒருவித பெண்மொழியை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட முரண்போலியான (paradoxical) பாலியல் இந்த ஆண்களிடமும் வெளிப்படுகிறது. அவர்களும் மணிக்கட்டை வளைத்தும் இடையை லேசாய் நெளித்தும் நடக்கையில் தம் உடலால் உரையாடவே விழைகிறார்கள். அது ஒரு சுயவெளிப்பாடு. அழைப்பு அல்ல. ஆனால் ஓரின விருப்பம் கொண்ட ஆண்களுக்கு இந்த உடல்மொழியும் குழப்பம் ஏற்படுத்துகிறது. இந்த ஆண்கள் பெண்களைப் போல் மெல்லியலர்கள் அல்ல. சமூக அதிகாரம் படைத்தவர்களே. பாலியல் குற்றங்கள் பெண்களை ஒடுக்குவதற்கும், சமூகவெளிகளில் புழங்கவிடாமலும் செய்வதற்குமே ஆண்களால் பிரதானமாய் நிகழ்த்தப்படுகின்றன என பெண்ணியவாதிகளில் சிலர் சொல்வது உண்மையானால் இந்த ஆண்கள் ஏன் grope செய்யப்படுகிறார்கள்?
ஆக பெண்மையோ ஆண்மையோ, பாலியல் அதிகாரமோ, ஒடுக்கும் விழைவோ அந்தஸ்தோ முக்கிய காரணமோ அல்ல. உடல் மொழி, அதன் இச்சை, அதன் வழி அந்நபரின் சுயவெளிப்பாடு – இது “ஆண்களுக்கு” புரியாமல் இருப்பதே சிக்கலின் மையம்.
 இங்கே ஆண்கள் என்பவர்களை நாம் உடலை ஒரு “மொழியாக” கையாளாதவர்கள், உலகை தர்க்கரீதியாய் மட்டுமே புரிந்து கொள்பவர்கள், கறுப்பு-வெள்ளையாய் யோசிப்பவர்கள் என்று மட்டுமே வரையறுக்க இயலும். மேற்சொன்ன இயல்புகள் அற்றவர்கள் ஏதோ ஒருவகையில் பெண்களே (அவர்கள் ஆணுடலில் இருந்தாலும்). உதாரணமாய், சாரு நிவேதிதாவை ஒரு பெண் எழுத்தாளர் என்றே நான் அடையாளப்படுத்துவேன்.
இவ்வாறு பார்ப்பதன் வழி மட்டுமே பெண்களையும், பெண் மனம் / மொழி கொண்ட ஆண்களையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் ஒரே வரையறைக்குள் நாம் கொண்டு வர இயலும். இதை ஒரு ஆண்-பெண் மோதலாக சுருக்காமல், பண்பாட்டு நுண்ணுரவு, அகவிரிவு சார்ந்த பிரச்சனையாக பார்க்க இயலும். (சமகால பாலின ஆய்வுகள் [gender studies] இவ்வாறாக உடலை அணுகவே நம்மை கோருகின்றன.)
பெண்ணுடல் எனும் புதிரை – அதன் பாலியல் முரண்போலியை – “ஆண்களின்” உலகம் விளங்கிக் கொள்ளும் வரை, பெண்ணுலகின் முரண்களுக்கு இடையிலான சமநிலை என்ன என உணரும் வரை, பெண்கள் அர்த்தங்களின் ஸ்திரத்தன்மையை அன்றி நிலையின்மையை, நெகிழ்வான தொடர்ச்சியையே விரும்புகிறார்கள் என அறியும் வரை … இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்!
பெண்களை புரிந்து கொள்ள ஆண்கள் நம் மொழிக்குள், அன்றாட உரையாடல்களில் புரியாமையின் கவித்துவத்தை, புதிர்களின் தூண்டுதலை, நிலையாமையின் சுதந்திரத்தை கொண்டாட கற்க வேண்டும். எதையும் புரிய முயல்வதை விட புரியாமல் இருப்பதை ஏற்க கற்க வேண்டும். என்று பெண்ணுடலை போகிற போக்கில் எடுத்துக் கொள்ள கற்கிறோமோ அன்று இந்த வன்முறை நெருப்பு அணைந்து விடும்!
அதாவது ஒரு கவிதை வாசகனாய் இருக்க வேண்டும். விமர்சகனாய் இருக்கக் கூடாது! எப்படி ஒரு கவிதை நிரந்தரமாய் ஒன்றைக் குறிக்காதோ, ஒன்றை சொல்வதாய் பாவித்து இன்னொன்றை சொல்லுமோ, ஒரு கவிதையை வைத்து எப்படி கவிஞனின் நோக்கத்தை அறிய முடியாதோ அதே போல் பெண்களைக் “காண்பதால்” அவர்கள் ஒரு ஆணின் கண்ணுக்கு “தெரிவதில்லை”. அரசியல் சரித்தன்மை கொண்ட, சதா பெண்ணியம் பேசும் சமூகம் அல்ல, மேற்சொன்ன கவித்துவ அணுகுமுறை கொண்ட சமூகமே ஆரோக்கியமானது. அதை நோக்கியே நாம் நகர வேண்டும்.

(நன்றி: உயிர்மை, செப். 2017)

Comments