Disgrace: ஜெ.எம் கூட்ஸியும் சாரு நிவேதிதாவும்

Image result for jm coetzee

கூட்ஸி தென்னாப்பிரிக்க நாவலாசிரியர். பின்காலனிய எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராக கொண்டாடப்படுகிறவர். நோபல் பரிசு (2003), புக்கர் பரிசு (1983; 1999) ஆகியன வென்றவர். ஆனால் தமிழில் அவர் வெகு பிரசித்தி அல்ல. நான் கல்லூரி மாணவனாய் இருக்கையில் ஜெயமோகன் என்னிடம் ஒரு தனிப்பட்ட உரையாடலின் போது கூட்ஸி ஒரு பொருட்படுத்தத்தக்க எழுத்தாளனே அல்ல என்றார். ஆனால் அப்போது ஆங்கில கல்விப் புலத்தில் அவர் ஒரு நட்சத்திரமாக திகழ்ந்தார். என்னுடைய (அழகிய) இளம் பேராசிரியை ஒருவர் அப்போது கூட்ஸியின் நாவல்களில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தார். அவரை படிக்கவா வேண்டாமா எனும் குழப்பம் எனக்கு ஏற்பட்டது. ஒரு சிறுபத்திரிகை வாசகனாக அவரை படிக்க வேண்டாம் என முடிவெடுத்தேன். நான் எப்போதுமே சிறுபத்திரிகை அல்லது இடைநிலை பத்திரிகைகளை ஒட்டி வாசிப்பவன். அதனால் 18 வருடங்களாக கூட்ஸியை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் சென்னை பல்கலையில் என்னுடன் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் வாசு கூட்ஸியின் பரம ரசிகர். அவர் கூட்ஸியை பற்றி பேசி பேசியே எனக்கும் ஆர்வத்தை தூண்டினார். ஒரு ரயில் பயணத்தின் போது Disgrace (1999) நாவலையும் என் கையில் தந்தார். சில மணிநேரங்களில் முக்கால் வாசி நாவலையும் படித்து விட்டேன்.

வாசு அந்நாவலின் ஒற்றை வரியை சொன்ன போதே எனக்கு பிடித்து விட்டது. ஒரு ஆங்கில பேராசிரியர் தன் மாணவியுடன் பாலுறவு கொள்கிறார். இதனால் வேலையை இழக்கிறார். அவரது வாழ்க்கை தலைகீழாகிறது. 18 வருடங்களுக்கு முன் அந்த இளம் பேராசிரியை இந்த ஒற்றை வரியை ஏன் என்னிடம் சொல்லவில்லை என யோசித்தபடியே நாவலுக்குள் பயணித்தேன்.
இந்நாவல் என்னை நீர்ச்சுழி போல இழுத்துக் கொண்டதற்கு இரண்டு காரணங்கள். 1) கூட்ஸியின் மொழி. அவரது மொழி முரண் அதிர்ச்சி கொண்டது. பிரவாகம் போன்றது. கட்டறுந்தது. 2) முக்கியமாய் கூட்ஸி எனக்கு சாருவை வெகுவாக நினைவு படுத்துகிறார்.
முதலில் சாரு நிவேதிதாவின் மொழிக்கு வருகிறேன். சாருவின் “எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்” நாவல் எனக்கு பிடித்தமானது. எதை எதையோ போட்டு மிக்ஸியில் அரைத்தது போன்ற கதைமொழிக்காக அதை மிகவும் சிலாகிப்பேன். ஒரு இடத்தில் அவர் ஏன் தான் தில்லியில் பார்க்கும் கையில்லாத ரவிக்கை அணிந்த பெண்களை தனக்கு பிடிக்காது என விளக்குவார். பேருந்தில் இப்பெண்கள் கையை தூக்கினால் பார்க்கும் சாருவுக்கு அசூயையாகி விடுகிறது. சவரம் செய்யாத அந்த அக்குளை பார்த்தால் அவருக்கு எது நினைவுக்கு வருகிறது என நான் மேற்கோளுடன் இங்கு சொன்னால் பெண்ணியவாதிகள் உருட்டுக்கட்டையும் வருவார்கள். அந்த ஒப்பீட்டை விடுங்கள். அதை விட முக்கியமாய், சாருவிடம் மனம் போன போக்கில் எழுதும் ஒரு கட்டறுந்த நிலை உண்டு. இப்படி எழுதினால் நம்மை கேவலமாய் எண்ணுவார்களோ, இது மானுட அறத்துக்கு எதிரானதாகி விடுமா ஆகிய போலி கவலைகள் அவருக்கு இல்லை. இதை நாம் கூட்ஸியிடமும் பார்க்கிறோம். Disgrace நாவலில் சில வர்ணனைகள் pedophilia (குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு) என சொல்லும் அளவுக்கு உள்ளன. தான் ஒரு சமூக பொறுப்பு மிக்க நாவலாசிரியன் எனும் பாவனைகள் கூட்ஸிக்கு இல்லை. அவரது மைய பாத்திரத்தின் மனநிலைக்கு வெகு அருகில், அதன் அத்தனை கீழ்மைகள், பிறழ்வுகளுடனும் பயணிக்க அவருக்கு அச்சமில்லை. இங்கு தான் கூட்ஸியும் சாருவும் வெகு அருகில் வருகிறார்கள்.
உதாரணமாய், இந்நாவலின் மைய பாத்திரமான பேராசிரியர் டேவிட் லூரி தன் மாணவியான மெலனி எனும் கிட்டத்தட்ட சிறுமியான ஒரு பெண்ணுடன் உறவு கொள்கிறார். இது பல பிரச்சனைகளை ஏற்படுத்திய பின் ஊரை விட்டு போகும் அவர் நாவலின் இறுதியில் திரும்ப வருகிறார். மெலனியின் வீட்டுக்கு மன்னிப்பு கேட்க செல்கிறார். தரையில் சாஷ்டாங்கமாய் விழுந்து மெலனியின் தாய், தந்தை, மற்றும் தங்கையிடம் மனப்பூர்வமாய் தன் குற்றத்தை மன்னிக்க கோருகிறார். அவர்களும் அவரை மன்னித்து ஏற்கிறார்கள். இதற்கு முன் எப்போதும் அவர் தன் தவறுக்கு குற்றவுணர்வு கொண்டதாய் நாவலில் குறிப்பில்லை. இந்த குற்றமன்னிப்பே ஊருக்கு திரும்ப வரும் டேவிட் லூரி திடீரென எடுக்கும் முடிவு தான். சொல்லப் போனால் அவரது குற்றம் கல்லூரி நிர்வாகத்தால் கண்டறியப்பட்டு அவர் விசாரிக்கப்படும் போது மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறும் அவர் அதற்காகவே குற்றத்தை ஏற்று சமரசத்தை மறுப்பார். மீண்டும் வேலையில் அமர்வதற்கான வாய்ப்பையும் இதனால் இழப்பார். தன் மனம் ஒன்றில் இச்சை கொள்கிறதென்றால் அதில் ஈடுபடுவதில் தப்பில்லை என்பது டேவிட் லூரியின் தரப்பு. இதைத் தான் பிறரால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் இப்போது டேவிட் சட்டென மனம் மாறி மன்னிப்பு கோரி வருகிறார்.
இங்கு இன்னொரு விசயம் நடக்கிறது. முதலில் அவர் மெலனியின் வீட்டுக்கு வரும் போது அங்கு மெலனியின் தங்கையும் தாயும் மட்டுமே இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் மெலனியின் தங்கை தான் அவரை வரவேற்கிறாள். அப்போது டேவிட்டின் மனம் அவள் அழகைக் கண்டு நிலை தடுமாறுகிறது. தங்கையின் உடல் அக்காவின் உடலை நினைவுபடுத்துகிறது. அவர் நினைக்கிறார், “இரண்டு பேரையும் ஒரே படுக்கையில் வைத்து துய்க்க முடிந்தால் அது ஒரு மன்னருக்கே உரித்தான விருந்தாக இருக்கும்.” இது ஒரு குற்றமன்னிப்பு நாடி வரும் மனிதனின் மனம் என்பதை கவனியுங்கள். டேவிட்டின் மனம் இரண்டாக உடைகிறது: ஒன்று மன்னிப்பு கோருகிறது; மற்றொன்று மீண்டும் குற்றத்தை நாடுகிறது. ஒன்று குற்றத்துக்காக வருந்துகிறது. இன்னொன்று அதே குற்றத்தில் திளைத்தபடி, அது ராஜ சுகம் என வர்ணிக்கிறது.
வேலையை இழந்த பின் டேவிட் தன் மகள் லூசியின் பண்ணை வீட்டுக்கு குடிபெயர்கிறார். லூசி ஒரு லெஸ்பியன். மரபான ஐரோப்பிய வாழ்க்கை முறையை துறந்து இயற்கையுடன் இயைந்து வாழ முயல்பவள். ஒரு பக்கம் டேவிட் ஒரு நல்ல தகப்பனாக லூசிக்கு பண்ணையில் உதவவும் அவளை பாதுகாக்கவும் முயல்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் அவளைக் காணும் போதெல்லாம் அவரது பாலுணர்வு தூண்டப்படுகிறது. சில காட்சிகளில் அவர் எல்லை மீறுவாரோ என வாசகன் பதற்றம் கொள்ளும்படி கூட்ஸியின் மொழி உள்ளது. ஆனால் டேவிட் நிலை கொள்கிறார்.
Disgrace என்றால் அவமானம், இழுக்கு. ஒரு கல்வியாளனாகவும் தகப்பனாகவும் டேவிட் இழுக்கின் எல்லா எல்லைகளுக்கும் சென்று மீள்கிறார். ஆனால் அவமான உணர்வு அவருக்கு ஏற்படுவதில்லை. டேவிட்டால் பாதிக்கப்படும் மாணவி மெலனி, அவளது குடும்பம் ஆகியோர் அவமானத்தில் குறுகுகிறார்கள். பண்ணை வீட்டில் வைத்து டேவிட்டின் மகள் லூசி மூன்று ஆப்பிரிக்கர்களால் பலாத்காரம் செய்யப்படுகிறார். அந்த மனப்பாதிப்பு அவளை பல மாதங்கள் உருக்குலைய செய்கிறது. அவள் ஒன்றுமே செயலாற்ற முடியாமல் உறைந்து போய் இருக்கிறாள். அந்த அவமானம் அவளை வெளியே போக முடியாமல் செய்கிறது. ஆனால் அவள் மெல்ல மெல்ல தன் இழுக்கை ஏற்கிறாள். காவல்துறையிடம் தன் மீதான பலாத்கார முயற்சியை மறைக்கிறாள். பலாத்காரத்தின் போது நேர்ந்த கர்ப்பத்தை சுமக்கிறாள். தன் அண்டை வீட்டானான ஆப்பிரிக்க விவசாயி (ஏற்கனவே இரு மனைவிகள் கொண்டவன்) அவளை தன்னை மணக்கும் படி வற்புறுத்துகிறான். அவனுக்கு லூசியின் நிலத்தை அபகரிக்க ஆசை. திருமணம் இதற்கு ஒரு வழியாக அவனுக்கு உள்ளது. லூசி இதை உணர்ந்தாலும் அந்த ஊரில் தொடர்ந்து வாழ அவனை மணப்பதே தனக்கு பாதுகாப்பு என புரிந்து கொள்கிறாள். அவனை மணம் புரிய சம்மதம் தெரிவிக்கிறாள். லூஸியின் இந்த சாத்வீக அணுகுமுறை டேவிட்டுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு அவள் இப்படி தன் இழுக்கை, அவலத்தை, இழப்பை எதிர்ப்பின்றி ஏற்கும் நோக்கம் புரிவதே இல்லை. ஆனால் ஒரு மனிதன் அப்படியும் வாழலாம் என நாவலின் இறுதியில் உணர்ந்து கொள்கிறார்.
டேவிட் ஏன் இப்படி இருக்கிறார்?
டேவிட்டுக்கு எந்த விழுமியங்களிலும் நம்பிக்கை இல்லை. கல்வி, சமூகம், குடும்பம் ஆகியவை அவருக்கு வெறும் பம்மாத்து தான். இதனால் தான் அவர் வாழ்வின் அர்த்தம் தேடி பாலியல் இன்பத்திடம் போகிறார். அங்கும் அவர் முழு திருப்தி கொள்வதில்லை. இந்த விழுமியங்கள் இழந்த மனிதனின் ஆழமின்மை தான் நாவலின் மையம்.
 டேவிட்டின் மகள் நேர் எதிரான திசையை எடுக்கிறாள். அவள் மரபான, கிராமிய வாழ்வின் விழுமியங்களை ஏற்கிறாள். தனிமனிதன் பொருட்டே அல்ல, சமூக வாழ்வும், அதற்கான தியாகங்களும் அதன் பொருட்டு அவமானங்களை மென்று முழுங்குவதும் முக்கியம் என நினைக்கிறாள். நாவல் முடிகையில் டேவிட் சிறிது மாறுகிறார். முதிர்கிறார். தன் மகளிடம் இருந்து சில விழுமியங்களை கற்கிறார்.
கூட்ஸிக்கு முற்போக்கு பாவ்லாக்கள் ஏதும் இல்லை. டேவிட் ஒரு வெள்ளையர். அவருக்கு கறுப்பர்கள் மீதுள்ள ஆழ்மன வெறுப்பும் அவநம்பிக்கையும் அச்சமும் நாவலில் வெளிப்படுகிறது. தன் மகளை ஒரு கறுப்பன் பலாத்காரம் செய்து அதில் ஒரு குழந்தை தன் வம்சாவளியாக தோன்றி வளரக் கூடும் என்பதை அவரால் ஜீரணிக்கவே முடிவதில்லை. தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களும் ஆப்பிரிக்கர்களும் முரண்களுடன் வாழும் நிலை, அதன் எதிர்காலம் ஆகியவற்றை கூட்ஸி நேர்மையாக முன்வைக்கிறார்.
கூட்ஸியின் மொழி முரண் அதிர்ச்சி கொண்டது என்று ஆரம்பத்தில் சொன்னேன். அவர் ஒன்று ஒரு பாத்திரத்தின் மனப்போக்கு பற்றி நாம் சற்றும் எதிர்பாராத ஒரு தகவலைச் சொல்வார். அல்லது வாக்கியத்தின் இறுதியில் ஒரு முரணை பொதிந்து வைத்திருப்பார். கூட்ஸி நேரடியாக கதைக்குள் நுழைந்து விடுவார். பக்கம் பக்கமாய் வர்ணனைகள், மனவோட்டங்கள் இராது. எளிய சின்ன சின்ன வாக்கியங்கள். இதெல்லாம் கூட்ஸியை வாசிப்பதை எளிதாக்குகிறது. சுவாரஸ்யமும் வேகமும் கொண்ட நடை அவருடையது. அதே நேரம் இரு கூறாய் பிரிந்து சிந்திக்கும் செயல்படும் மனிதர்களையும் அவர் சித்தரிக்கிறார். எந்த ஒழுக்க, சமூக நீதி சார்ந்த நிலைப்பாடுகளும் எடுக்காமல் ஒரு செயல் பலவிதங்களில் மனிதனால் அர்த்தப்படுத்தப்படுவதை, மனித மனம் எந்த கணமும் தடம் மாறி செல்லக் கூடியது என்பதையும் காட்டுகிறார். இந்த நாவல் இன்ன பார்வையை அளிக்கிறது என வாசகன் எண்ணிய அடுத்த கணம் முற்றிலும் மாறான பார்வையும் உள்பொதிந்து வைத்திருப்பார் கூட்ஸி. இந்த முரண்களும் ஏற்கனவே குறிப்பிட்ட கட்டறுந்த மொழியும் தான் கூட்ஸியின் தனிச்சிறப்புகள்.

நன்றி: தீராநதி

Comments