அனிதாவின் தற்கொலையும் ஸ்டாலினும்


மாநில அரசின் ஆட்சி அதிகாரத்திலும் கொள்கை முடிவுகளிலும் மத்திய அரசு கைவைப்பதே நீட் எனும் அநீதியின் மூலகாரணம். மத்திய அரசுக்கு இந்த துணிச்சலையும் சாத்தியத்தையும் வழங்கியது தமிழகத்தில் உள்ள நிலையற்ற, தலைமையற்ற, பா.ஜ.கவின் பொம்மையாட்சி. ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் மட்டுமல்ல ஜி.எஸ்.டி விசயத்திலும் நிச்சயமாய் ஆளும் மத்திய அரசை எதிர்த்திருப்பார். எந்த ஒரு தன்னிறைவான ஆட்சி இங்கு இருந்திருந்தாலும் பா.ஜ.கவின் பொம்மலாட்டம் இங்கு இவ்வளவு அப்பட்டமாய் நிகழ்ந்திருக்காது.

மக்கள் இந்த தலைமையற்ற, முதுகெலும்பற்ற அரசுக்காக ஓட்டளிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் இந்த அரசை மாற்றும் பொருட்டு பெரும் போராட்டங்களை தன்னிச்சையாய் நடத்தும் ஆன்ம வலிமையும் லட்சிய ஒருங்கிணைப்பும் பொதுமக்களிடம் இல்லை. அப்பணியை திமுக எனும் பெரும் எதிர்க்கட்சி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் திமுகவோ அதை விடுத்து எதிர்ப்பரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் அதிமுக அரசின் மீதான மக்களின் அதிருப்தியை வளர்த்தெடுத்து, அடுத்த தேர்தலில் தான் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என விரும்புகிறது.
நீட் பிரச்சனை தமிழகத்தை உலுக்குவதற்கே காரணம் ஆட்சி ஸ்திரமின்மை தான் என ஸ்டாலினுக்குத் தெரியும். ஜெயலலிதா மரணத்தை அடுத்து அவர் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் இருந்தும் தனது இயல்பான தயக்கத்தால் அவ்வாய்ப்பை தவற விட்டார். இப்போது ஆட்சி அமைத்தால் திமுக மீது மக்களுக்கு அதிருப்தி உருவாகும் என அவர் அஞ்சுகிறார். ஒருவேளை பா.ஜ.கவின் குறுக்கீடுகளையும் அவர் விரும்பாதிருக்கலாம்.
நேரடியாய் பொறுப்பெடுத்து தமிழகத்தை நிலைப்படுத்தாமல் பின்னால் நின்று அரசுக்கு எதிராய் மக்களை தூண்டி விடுவதே அவரது இப்போதைய திட்டம். அனிதாவுக்கு ஆதரவளித்து அவரை உச்சநீதிமன்றம் வரை அழைத்துப் போய் வழக்குத் தொடுக்க வைத்து, தமது ஆதரவான ஊடகங்கள் மூலம் இப்பிரச்சனையை பெரிதாக கவனம் பெற செய்து இன்று அதிமுகவை நடுக்கம் கொள்ள வைக்கும் அனிதாவின் தற்கொலை வரையிலான நிகழ்வுகளின் பின்னால் உள்ளது திமுக தான். திமுகவின் இந்த சாதுர்யத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் இந்த பாணி அரசியல் மக்களுக்கு நலம் பயக்கக் கூடியதல்ல. இது சாணக்ய அரசியல் லட்சியமற்ற, சமூக பொறுப்பற்ற அரசியல் என்பதையும் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒரு வீட்டுக்குள் பாம்பு நுழைய அனுமதிக்கிறீர்கள். அதன் பிறகு அப்பாம்பு ஒரு கூட்டம் பாம்புகளை வீட்டுக்குள் அழைத்து வந்து புற்றுகளை எழுப்புகின்றன. பாம்புகள் மக்களை கொத்தி கொல்லத் துவங்கும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்கள். அதன் பிறகு கூச்சலிட்டு மக்கள் கவனத்தை திருப்பி இதை ஒரு பெரிய பிரச்சனையாக வளர்க்கிறீர்கள். அதைக் கொண்டு அரசியல் செய்கிறீர்கள். மக்கள் உங்களுக்கு போன தேர்தலில் ஓட்டளித்தது முதல் பாம்பு வீட்டுக்குள் நுழையும் போதே கட்டையெடுத்து அதை அடித்துக் கொல்ல அல்லவா ஸ்டாலின்?
நீங்கள் மகுடம் அணிந்து ஆட்சிப் பொறுக்க வேண்டிய வேளை இது. துணிச்சலாய் களம் இறங்குங்கள்.
“நடக்கட்டும், நடக்கட்டும். பார்த்துக் கொள்ளலாம்” எனும் உங்கள் வியூகம் தமிழகத்துக்கு மேலும் பல இடர்களை, துயரங்களை கொண்டு வரப் போகிறது!

 போதும்! 

Comments

எதிர்க்கட்சிகள் எது பேசினாலும் அது அந்தக் கட்சியின் சுய லாபத்திற்காக என்று கூறி எளிதாக ஆளும் கட்சியினர் திசை திருப்பிவிடும் சூழ்நிலையில் அவர் வேறு என்ன செய்ய முடியும்
நடக்கின்ற அத்தனை நிகழ்வுகளுக்கும்
நிகழ்வுகளுக்கும் இவர்கள் தானே மூலக்காரணம் அது கதிராமங்கலமாக இருக்கட்டும் நீட் தேர்வாக இருக்கட்டும் இவர்களும் காங்கிரஸ் அரசும் தானே கொண்டு வந்தது
Anonymous said…
தங்கள் மாநிலத்துக்கு எதிராக ஒன்று வந்தால்
குறிப்பாக கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்கள்
கட்சி வேறுபாடின்றி போராடுகின்றன.. ஆனால்
தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவரை
பார்த்து சிரித்தார் என்று அந்த கட்சியின் தலைவி
அவரையே தூக்கி விட்டார் . இப்போது அனிதாவின்
மரணத்தில் கூப்பாடு போடும் கட்சிகள் திருமா ,
ஸ்டாலின் போன்றோர் இந்த நீட் தேர்வை காங்கிரஸ்
கொண்டு வரும்போது ஏன் எதிர்க்கவில்லை ?
போன வருடம் ஸ்வாதி மற்றும்
ராம்குமார் , இந்த வருடம் அனிதா . கொஞ்ச நாட்கள்
கூப்பாடு போட்டு விட்டு அப்புறம் ஒன்னும் தேறவில்லை
என்றால் வேறு சோலி பார்க்க போய்விடும் இவர்களை
நம்பமுடியாது.