தொண்ணூறுகளில் பா.ஜ.க எப்படி அதிரடி எழுச்சி கண்டது?

Image result for advani rath yatra

இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்து தொண்ணூறுகளின் துவக்கம் வரை பாரதீய ஜனதா கட்சி பல்வேறு கொரில்லா அமைப்புகளாக (ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா, ஜனதா கட்சி) இந்திய அரசியலின் விளிம்பில், அதிகம் பொருட்படுத்தப்படாமல் - வீட்டில் பயன்பாடற்றுக் கிடக்கும் ஆட்டுரல் போல் - இருந்தது. ஆனால் தொண்ணூறுகளின் முதல் பாதியில் சட்டென இக்கட்சி உயிரூட்டம் பெற்றது. சூன்யத்தில் இருந்து முளைத்து ஒரு ராட்சசனைப் போல் வளர்ந்து இந்திய அரசியலை ஆட்டம் காண வைத்தது. 1996இல் காங்கிரஸை தோற்கடித்து மத்தியில் ஆட்சிக்கு வந்து, பெரும்பான்மை இன்றி ஆட்சியை இழந்து, 1998இல் மீண்டும் பெரும்பான்மையுடன் தோன்றி வாஜ்பாயின் தலைமையின் கீழ் ஆட்சி அமைத்தது.
 அதன் பிறகு பா.ஜ.கவிற்கு இருண்ட காலமே இல்லை. ஒன்று பிரதான எதிர்க்கட்சி அல்லாவிட்டால் ஆளும் கட்சி. இந்திய அரசியல் வரலாற்றில் வேறு எந்த கட்சியும் இப்படியான ராட்சஸ வளர்ச்சியை தேசிய அளவில் பா.ஜ.க அளவுக்கு ஒரு குறுகிய கால அளவில் அடைந்ததில்லை. இது எப்படி சாத்தியப்பட்டது?

ராமஜென்ம பூமி இயக்கம், பாபர் மசூதி இடிப்பு, அதை ஒட்டின கலவரங்கள், அத்வானியின் ரதயாத்திரை, மதவெறிச் சூழல், நரசிம்ம ராவ் ஆட்சி என பல காரணங்கள் நமக்கு உடனடியாய் தோன்றும். ஆனால் இவை தாம் ஆதார காரணமா? ராமஜென்ம பூமி சர்ச்சை பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே நிலுவையில் உள்ளது. என்றுமே காவிப் படையினரின் அஜெண்டாவில் அது உள்ளது தான். ஆனால் தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஒரு காட்டுத்தியாய் அது பற்றிக் கொண்டது. ஏன்? எப்படி?
நண்பர் சர்வோத்தமனுடன் இன்றைய பா.ஜ.க ஆட்சியின் சீர்கேடுகள், இவ்வளவு ஒடுக்குமுறைகளை மக்கள் மீது நிகழ்த்திய பின்னரும் மக்கள் தொடர்ந்து மோடியை ஆதரிப்பதன் விசித்திரம் பற்றி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னார்: “இந்தியா மாதிரி ஒரு தேசத்துக்கு காங்கிரஸ் தான் பொருத்தமான கட்சி. அவர்கள் எந்த கேடு விளைவிக்கும் அதிரடி மாற்றங்களையும் கொண்டு வர மாட்டார்கள். பலதரப்பான மக்களையும் கருத்தில் கொண்டே சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவார்கள். அவர்களின் அந்த மந்தமான அரசியல் பாணி, மெத்தனமான செயல்திட்டங்கள், பன்மைத்துவத்தை ஏற்கும் தலைமை இந்தியாவுக்கு மிகவும் ஏற்றது.”
நான் சொன்னேன், “ஆமாம். அவர்களால் பெரிய நன்மைகள் இல்லாமல் இருந்தாலும் டிமானிடேஷன், நீட் போன்ற டினோசர்களை மக்கள் மீது ஏவி விடாமல் இருப்பார்கள்.”
பிறகு எங்களின் உரையாடல் இப்படிப் போனது. எந்த பெரிய தொந்தரவுகளையும் தராத, இழப்புகளை ஏற்படுத்தாத காங்கிரஸை ஏன் மக்கள் நிராகரித்து பா.ஜ.கவை ஆட்சிக்கு கொணர்ந்தார்கள்?
கலாச்சார அரசியல் என்றார் சர்வோத்தமன். உடனே கீழ்வரும் கேள்விகள் எங்களுக்கு எழுந்தன:
ஏன் நடைமுறை வசதிகளை விட கலாச்சார அரசியல் மக்களுக்கு திடீரென முக்கியமாய் போனது? ஏன் மதநம்பிக்கைகள், இஸ்லாமிய வெறுப்பு, “நாங்கள் இந்துக்கள்” எனும் செண்டிமெண்ட் ஆகியவற்றுக்காக வாக்குகள் திரளும் நிலை இந்தியாவில் ஏற்பட்டது? ஐம்பது வருடங்களாய் இல்லாத மதவாத உணர்வு எப்படி சட்டென ஏற்பட்டது? மதவாதம் என்றுமே இங்கு இருந்திருக்கிறது. ஆனால் அது அரசியலில் ஒரு மையவிசையாக ஆவது தொண்ணூறுகளில் தான். தொண்ணூறுகளில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும்விதமாய் என்ன தான் நடந்தது?
ஒரு முக்கியமான விசயம் நடந்தது: உலகமயமாக்கல். அதன் விளைவான பிரம்மாண்ட பொருளாதார வளர்ச்சி. நகரமயமாக்கல். இந்திய உலக சந்தைக்கு தன்னை திறந்து வைத்தது. தொழில்நுட்பம், மென்பொருள் துறை, ஊடகங்கள் என ஒவ்வொன்றாய் காலூன்றி புதிய இந்தியாவை கட்டமைத்தன. அதுவரையில் தன்னை தன் கிராமத்துடன், சிறுநகரத்துடன், உறவு வட்டத்துடன் இணைத்து புரிந்து கொண்ட சராசரி இந்தியன் இப்போது தன்னை ஒரு பெரிய கேன்வாஸில் வைத்து யோசிக்க ஆரம்பித்தான். அவன் கையில் அதிக பணம் புழங்கியது. அவனுக்கு டிவி வழியாகவும், புதிய ஊடகங்கள் வழியாகவும் நிறைய தகவல்கள் வந்து சேர்ந்தன. பளிச்சிடும் புதிய நகரங்களை அவை அள்ளி வழங்கிய வாய்ப்புகளை நாடி அவன் தன் ஊரை விட்டு புறப்பட்டான். வசதி வாய்ப்புகளும் வளர்ச்சியும் அவனை தன்னை “இந்தியனாய்” பெருமையாக கருதிக் கொள்ள வைத்தன. உலகமயமாக்கல் அவனை தன்னை உலகம் எனும் பேரிருப்பின் முன் வைக்க தூண்டியது. அப்போது அவனுக்கு ஒரு அழுத்தமான பொது அடையாளம் தேவைப்பட்டது. அது இந்திய தேசியம் ஆகியது. தேசிய பெருமிதம் தோன்றி அவன் மனதை ஆக்கிரமித்தது. இந்தியா நகரம் சார்ந்த ஒன்றாக மாற மாற, சிறுதெய்வங்களும், பலவித நம்பிக்கைகளும், சடங்குகளும் செல்வாக்கை இழந்தன. அனைத்து நகர்வாழ் இந்தியர்களுக்கும் பொதுவான ஒரு மையவாத இந்து மதம் தேவைப்பட்டது. ராமனும் விநாயகரும் அந்த இடத்துக்கு வந்தனர்.
அரைநூற்றாண்டு காலமாய் பா.ஜ.க இந்தியா எனும் ஒற்றை அடையாள கருத்தாக்கத்தை தான் வலியுறுத்தி வந்தது. வளர்ச்சி, நகரமயமாக்கல், ஒற்றை பெருமதம் ஆகிய கருத்தாக்கங்களை காந்தி ஏற்காததனால் தான் இந்து மகாசபையினர் காந்தியை கொன்றனர். ஆனால் இந்துத்துவர்கள் முன்வைத்த இந்து தேசியம் கணிசமான இந்தியர்களுக்கு அன்று புரியவில்லை. ஏனென்றால் இந்தியா அன்று கிராமங்களின் தொகுப்பாக இருந்தது. அன்று ஆயிரக்கணக்கான சிறுமதங்களும் தொன்மங்களும் சடங்களுமாய் கொழகொழவென்ற வஸ்துவாக இந்து மதம் இருந்தது. ஒற்றை அடையாளம் மக்களுக்கு தேவைப்படவில்லை. பல்வேறு முரண்படும் போக்குகளுக்கு ஒரு இணைப்புப் புள்ளி தேவை இருந்தது. அதுவே காங்கிரஸ். அப்படித் தான் காங்கிரஸ் இங்கே அரைநூற்றாண்டு காலம் ஆண்டது. அதாவது இந்தியா எனும் தேசியக் கனவு இந்தியர்களுக்கு அரைநூற்றாண்டாய் தேவைப்படவில்லை. இந்தியாவை ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டிருந்தோம்.
 ஆனால் தொண்ணூறுகளுக்குப் பிறகு சட்டென உலகமயமாக்கல் காரணமாய் இந்திய தேசியத்துக்கான மவுசு அதிகரித்தது. அதே வேகத்தில் அதுவரை செல்லாக்காசாக இருந்த இந்துத்துவாவும் மதிப்பு பெற்றது. இதை உணர்ந்து கொண்ட அத்வானியின் தலைமையில் பா.ஜ.க ராமஜென்ம பூமி இயக்கத்தை மீட்டுக் கொணர்ந்தது. எழுபது, எண்பதுகளில் அத்வானி ரதயாத்திரை நடத்தி இருந்தால் யாரும் பொருட்படுத்தி இருக்க மாட்டார்கள்.

உலகமயமாக்கலை 1991இல் மன்மோகன் சிங் அறிமுகம் செய்த போது “சரியான நேரம் வந்து விட்ட பின் ஒரு கருத்தாக்கம் மேலெழுந்து வருவதை யாரும் தடுக்க முடியாது” என்றார். அவர் உலகமயமாக்கலையே அவ்வாறு குறிப்பிட்டார் என்றாலும், இந்துத்துவாவின் நேரமும் தான் அத்துடன் துவங்கியது. அதை யாராலும் “தடுக்க” முடியவில்லை. ஒருவிதத்தில் இதன் மூலம் காங்கிரஸின் அழிவை மன்மோகன் சிங் – தன்னையறியாது - துவங்கி வைத்தார். உலகமயமாக்கல் மூலம் காங்கிரஸ் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது. 

Comments