அனிதாவின் தற்கொலை: லட்சியமும் மார்க்கமும்

Image result for அனிதா தற்கொலை

நியூஸ் 18 அலைவரிசையில் நடந்த விவாதம் என நினைக்கிறேன். தோழர் தியாகும் பேசும் போது அனிதாவின் தற்கொலையை இப்படி அணுகினார்: “நாங்கள் ஒரு போது அரசியலுக்காக உயிர்விடுவதை ஏற்க மாட்டோம். ஆனால் அனிதா செய்தது தற்கொலை அல்ல. அது ஒரு உயிர்க்கொடை. அவர் எந்த லட்சியத்துகாக தன் உயிரை பலிகொடுத்தாரோ அதை, அந்த உணர்வை நான் வணங்குகிறேன்.”

இதைக் கேட்ட போது என்னவொரு முரண்பாடான நிலைப்பாடு எனத் தோன்றியது. நீங்கள் லட்சியத்தை வணங்குகிறீர்கள். ஆனால் மார்க்கத்தை மறுக்குகிறீர்கள். (முதலில் தியாகு தான் அந்த மார்க்கத்தை ஏற்கவில்லை என சொல்லி விட்டு பின்னர் “உயிர்க்கொடை” என பாராட்டுகிறார். அது கூட போகட்டும்.) தோழர் தியாகுவுக்காவது அரசியல் தியாகங்களின் சிக்கல் புரிகிறது. நான் இது சம்மந்தமாய் பலரிடம் உரையாட நேர்ந்தது. அவர்களுக்கு தியாகுவின் இந்த தெளிவு கூட இல்லை. உயிரை விடுவது அவசியமில்லை. ஆனால் அனிதா செய்து விட்டார். அவரது உயர்வான லட்சியத்தை நாங்கள் வழிபடுகிறோம் என்கிறார்கள். முகநூலில் நான் கண்ட கணிசமான பதிவுகள் இப்படி அனிதாவின் இழப்புக்காக துக்கம் தெரிவித்து விட்டு, அவரது நோக்கத்தை வணங்கி எழுதப்பட்டவை. ஏனெனில் அனிதாவின் சமூக நீதி சார் இலட்சியம் மிக உயர்வானது என அவர்கள் நம்புகிறார்கள். அப்படி எனில் லட்சியமும் மார்க்கமும் வேறு வேறா?
நீட்டை எதிர்க்கும் பொருட்டு ஒருவர் பிரதமர் மோடியை குண்டு வைத்துக் கொன்றால் அதை பாராட்டுவீர்களா? மாட்டீர்கள். ஏனெனில் கொலையை ஏற்க மாட்டோம். அது எங்கள் மார்க்கமல்ல என்பீர்கள். அப்படி எனில் நீட்டை எதிர்ப்பது எனும் லட்சியம்? அது மகத்தானது அல்லவா? சரி குண்டு வைப்பது சற்று விபரீதமான உதாரணம். ஒருவர் நீட்டை அனைத்து மாநிலங்கள் மீது திணிக்கும் வண்ணம் தீர்ப்பளித்த நீதிபதிகளை கடத்தி செல்கிறார். நீட்டை விலக்கினால் மட்டுமே நீதிபதிகளை விடுவிப்போம் என அரசை மிரட்டுகிறார். இதை ஏற்பீர்களா? லட்சியம் சரி தானே? மார்க்கம் மட்டும் தானே சிக்கல். நிச்சயம் கணிசமானோர் இந்தவிதமான தீவிரவாத செயல்களை ஏற்க மாட்டீர்கள்.
ஆக மார்க்கமும் லட்சியமும் வேறுவேறல்ல. அப்படி எனில் அனிதா விசயத்தில் மட்டும் ஏன் முரண்பாடாய் சிந்திக்கிறீர்கள்?
நீங்கள் அனிதாவின் தற்கொலையை சமூக நீதிக்கான உயிர்க்கொடை என கருதி அந்த மார்க்கத்தையும் ஏற்பதனால் தான் அதை ஆதரித்து பேசுகிறீர்கள். அப்படி எனில் அம்மார்க்கத்தை நீங்கள் பின்பற்றாதது ஏன்?
ஏன் அனிதாவின் மரணத்தை ஒட்டி லட்சக்கணக்கான நீட் எதிர்ப்பாளர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்யவில்லை? சரி, எங்களுக்கு துணிச்சல் இல்லை. துணிந்து அதை செய்த அனிதாவை வணங்குகிறோம் என சொல்கிறார்கள் என வைப்போம். அப்படி எனில், அனிதாவின் இடத்தில் உங்கள் மகளோ சகோதரியோ தாயோ அன்பு மனைவியோ தற்கொலை செய்யும்படி தூண்டுவீர்களா? பள்ளியில் படிக்கும் உங்கள் உங்கள் மகள் உங்களுக்கே தெரியாமல் அனிதா வழியில் நீட்டுக்கு எதிராய் தற்கொலை செய்தால் அதை பாராட்டி வீரவணக்கம் செய்வீர்களா? அல்லது பதறி அழுது இரங்குவீர்களா? நிச்சயம் மாட்டீர்கள்.
சரி, உங்களுக்கும் துணிச்சல் இல்லை. உங்கள் மகளும் அதை செய்வதை விரும்பவில்லை. அப்படி எனில் இன்னொருவர் மட்டும் அதை செய்ய வேண்டும்?
நாங்கள் தற்கொலையை கோரவில்லையே என்கிறீர்கள். அப்படி எனில் உயிர்க்கொடை என அதை ஏன் மகத்துவப்படுத்துகிறீர்கள்? நீங்கள் இது போன்ற உயிர்த்தியாகங்கள் தொடர்ச்சியாய் நிகழ வேண்டும் என மறைமுகமாய் வேண்டுகிறீர்களா? நீங்கள் மகத்துவப்படுத்துவதால் ஊக்கம் பெற்று நாளை மற்றொரு அனிதா தன்னுடலை எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தால் அதற்கு யார் பொறுப்பு? அதையும் வீரச்செயல் என வணங்குவீர்களா?

ஏன் இது போன்ற உயிர்க்கொடைகளை இன்னொருவர் நிகழ்த்த வேண்டும் என நாம் வேண்டுகிறோம்? அவர் ஏன் எப்போதும் “இன்னொருவராய்” இருக்க வேண்டும்? இதுவே என் அடிப்படையான கேள்வி.

Comments

சரியான... சாட்டையடிக் கேள்வி சார்.
ஒரு உயிர் அது எதன் பொருட்டு போனாலும் உயிர்க்கொடை, லட்சியத்துக்கான மரணம் என்றெல்லாம் சொல்லும் யாராலும் உயிர்க்கொடைகளையும் லட்சியச்சாவுகளையும் தங்கள் இல்லத்திலோ உறவிலோ ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏன்னா அடுத்தவன் செத்தா அது கொடை... தன் வீட்டில் என்றால் அது உயிர்.

Anonymous said…
உங்கள் கருத்து சிந்திக்க தூண்டுகிறது. தன்மீதே ஏவப்படும் வன்முறையும் ஏற்க படமுடியாத வன்முறையே. எதையும் ஆக்கப்பூர்வமான முறையிலேயே எதிர்க்க வேண்டும்.

அறிவுப்பரப்பு என்பது வெறும் என்ஜினீரிங்கும் , மருத்துவமு மட்டுமே அல்ல. பௌதிகம், கணிதம், வரலாறு, உயிரியல் போன்ற அறிவு சார் துறைகளில் ஏன் நம்மிடம் ஆர்வம் இல்லை. மருத்துவத்திலும் கூட ஏன் நம்முடைய சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற முறைகளும் உள்ளனவே. ஆங்கில வைத்தியத்தில் மட்டும் ஏன் இந்த வெறிபிடித்த மோகம்.?

நீட் பற்றிய இவ்வளவு பெரிய அலட்டல் தேவையா?.....கல்வி பற்றி இன்னும் ஆழமான பரந்த விவாதம் தேவை.

சிவா
தியாகு பேசியது நீயூஸ் 18 தமிழ்நாடு
நன்றி. திருத்தி விட்டேன்
Anonymous said…
Nalla Sindhanai.

Thiyagarajan