மோடியும் ஜெர்மானியரும்


"இந்தியாவின் பலமும் விசேஷமும் அதன் பன்மைத்துவம். உதாரணமாக, ஜெர்மனிக்கு ஒரு உத்தரப் பிரதேசக்காரரும் ஒரு தமிழரும் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இருவரும் ஆங்கிலத்தில் உரையாடுவதைப் பார்த்து ஜெர்மன்காரர் உங்கள் இருவருக்கும் தேசப் பற்றே இல்லையே, நீங்கள் இருவரும் இந்தியராய் இருந்து கொண்டு, உங்கள் மொழியில் பேசாமல் அந்நிய மொழியில் பேசுகிறீர்களே என்று கேட்டு இருவரையும் மிகக் கடுமையாக விமர்சிப்பார். அவருக்கு நீங்கள் எவ்வளவுதான் விளக்கினாலும் புரியவே புரியாது. அவர்களால் ஒரே தேசத்தில் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள், பல்வேறு கடவுள்களைத் தொழும் மக்கள், பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ முடியும் என்பதையே புரிந்து கொள்ள முடியாது. ஜெர்மன் என்றால் அவர் ஜெர்மானிய மொழிதான் பேச வேண்டும்; கிறிஸ்தவராகத்தான் இருக்க வேண்டும். இப்படி ஒரு தேசம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை ஒரே மொழி, ஒரே மதம்தான் இருக்க முடியும். ஆனால் இந்தியாவில் செம்மொழிகளே அரை டஜன் இருக்கின்றன. உதிரி மொழிகள் நூற்றுக் கணக்கில்.


கடவுள், மதம் என்று எடுத்துக் கொண்டால், ஒரு கடவுள் கிடையாது. நூற்றுக் கணக்கான கடவுள்கள். புனித நூலும் கிடையாது. தீர்க்கதரிசியும் கிடையாது. பகவத் கீதையெல்லாம் இந்து மதத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட புனித நூல் இல்லை. வியாசன் என்ற கவிஞன் எழுதிய மகாபாரதம் என்ற இலக்கியப் படைப்பில் வரும் ஒரு சிறிய பகுதியே கீதை. ஆனால் இஸ்லாம், கிறித்தவம் போன்றவற்றில் அப்படிக் கிடையாது. கடவுள் ஒன்று; தீர்க்கதரிசி ஒன்று; புனித நூல் ஒன்று. ஆனால் இந்து மதமே பன்மைத்துவத்தைப் போற்றும் மதமாக இருக்கிறது."
- சாரு நிவேதிதா


இதனால் தான் இந்துத்துவர்கள் ஐரோப்பிய மனோபாவம் கொண்டவர்கள் என்கிறேன். இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய கல்வி பெற்ற, இந்திய சிந்தனை அற்றவர்கள் தாம் இந்துத்துவாவை தோற்றுவித்தார்கள். சாவர்க்கரில் இருந்து மோடி வரை இந்திய தோல் போர்த்திய ஐரோப்பியரே. சாரு குறிப்பிடும் ஜெர்மானியரைப் போன்று தான் ஒவ்வொரு இந்துத்துவரும் சிந்திக்கிறார். மற்றமையை தன்னில் ஒன்றாய் பார்ப்பது இந்திய மனப்பான்மை. மற்றமையை மறுத்து, அம்மறுப்பின் மூலம் தன்னை கட்டமைப்பது ஐரோப்பிய மனோபாவம். மோடி பக்தர்கள் அத்தகைய மனோபாவத்தினர்.(உண்மையான இந்திய மனம் காந்தியிடம் இருந்தது)

நான் சாருவிடம் முரண்படும் இடம் திராவிடர்கள் பற்றியது. திராவிட சிந்தனையும் மற்றமை மீதான வெறுப்பை தனதடிப்படையாக கொண்டதே. (அதனாலே தமிழ் தேசியத்தின் இடத்தில் இந்து தேசியம் இங்கு வருவது மிக சிரமம். தமிழ் தேசியம் முழுக்க மதிப்பிழந்தால் இயல்பாக அவ்விடத்தில் இந்து தேசியம் வந்து விடும்.)

தமிழ் தேசியர்களும் பன்மைத்துவத்துக்கு எதிரானவர்களே. இங்குள்ள சிறுதெய்வங்கள், அவர்களின் சடங்கு சம்பிரதாயங்கள், மக்களின் பூர்வீக நம்பிக்கைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதை மூட நம்பிக்கை என கடந்து போனார்கள். பல்வேறு வட்டார வழக்குகளின் இடத்தில் செவ்வியல் தமிழின் ஒற்றை அடையாளத்தை வலியுறுத்தினார்கள்.

ஆனால் இந்து தேசியவாதிகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள் ஆபத்தற்றவர்களே என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இந்தியாவில் இன்றுள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு நாம் நம் வேர்களுக்கு மீள்வதே. அப்போது நாம் இயல்பாகவே இந்துத்துவா போன்ற முரண் எதிர்வு சித்தாந்தத்தை மறுத்து விடுவோம்!


Comments