வாம்மா மின்னல்!

Image result for கார்த்திக் + வருசம் 16

“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்தார்கள். ஒரு தனி அறை மட்டும் தான். வீட்டில் மற்றபடி குடும்பத்தினர் தங்கி இருந்தார்கள். அந்த அறை ஒரு அக்காவின் (என் அக்கா அல்ல, ஒரு தெரிந்த குடும்பத்தை சேர்ந்தவர்) படுக்கையறை. பள்ளிக்கு போயிருந்த அக்கா வீட்டுக்கு திரும்புகிறார். ஆடை மாற்ற தன் அறைக்கு போகும் போது அம்மா அவரை அழைத்து அங்கே நடிகர் கார்த்திக் தூங்குவதாய் சொல்கிறார். அப்பெண்ணுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்க வில்லை. ஏனென்றால் அவர் கார்த்திக்கின் அதிதீவிர விசிறி. தன் அறையிலேயே தனது நாயகன் தங்குவதை அவரால் கற்பனை பண்ண முடியவில்லை. ஆடை மாற்றி அலங்கரித்து வந்து அவர் கார்த்திக்கை காண்பதற்காக காத்திருந்தார். கார்த்தி தூங்கி எழுந்து வெளியே வந்ததும் அவர் முன் போய் நின்றார். அக்காவுக்கு பேச வார்த்தை வரவில்லை. பூரித்து சிலையாக நின்றார்.
இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் கழித்தும் அந்த அக்கா என்னிடம் இப்படி கார்த்திக்க எதிர்கொண்ட திகைப்பை பற்றி அடிக்கடி சொல்வார். அப்போது இது போல் எனக்கு பிடித்த நடிகை என் அறையில் சில மணிநேரம் ஓய்வெடுக்க வந்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் என் கற்பனை சிறகடிக்கும். நினைக்கவே கிளர்ச்சியாக இருந்தது.

ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை. இரண்டு முறை மோகன்லால் எங்கள் ஊருக்கு படப்பிடிப்புகாக வந்தார். முதன்முறை எனக்கு பத்து வயதுக்குள் இருக்கும். அவரைப் பார்க்க ஊரே திரண்டு போகிறது. நான் சற்று வருத்தமும் ஏக்கமுமாய் ஜன்னல் திண்டில் அமர்ந்து போகிற மக்களை வேடிக்கை பார்த்தேன். சற்று நேரத்தில் அப்பா அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்தார். அவரிடம் சென்று அழுது அடம்பிடித்தேன். அவர் என்னை தோளில் ஏற்றிக் கொண்டு படப்பிடிப்பை காட்ட அழைத்து சென்றார்.
Image result for mohanlal young

நாங்கள் வழக்கமாய் குளிக்கும் குளத்தில் தான் ஒரு காட்சியின் படப்பிடிப்பு. மோகன்லால் மூழ்கி எழுந்து தலை துவட்டுகிறார். படப்பிடிப்பு முடிந்த பின் லால் பொதுமக்களிடம் சற்று நேரம் குசலம் விசாரித்தார். தன்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பாட்டியை பார்த்து “எந்திரு அம்மச்சி, சுகமாணல்லோ” எனக் கேட்டதும், பாட்டி வெட்கி முகம் தாழ்த்தியதும் நினைவுள்ளது. அப்பா என்னை மோகன்லால் அருகே கொண்டு போய் காட்டினார். லால் என்னை கையில் வாங்கி கன்னத்தில் முத்தம் அளித்தார். எனக்கு அப்போது லாலிடம் பெரிய ஈர்ப்பு இல்லை. எம்.ஜி.ஆரும் விஜயகாந்துமே எனது ஹீரோக்கள். ஆனால் லால் அப்படி என்னை கையில் வாங்கி அன்பைக் காட்டிய விதம் பிடித்துப் போக அன்றில் இருந்து அவரது விசிறியாக மாறினேன். அவரது கன்னத்தில் இருந்த தழும்பை குளோசப்பில் பார்த்தது இன்னும் நினைவுள்ளது.
நான் இன்றும் அவ்வப்போது மோகன்லால் என்னை கையில் வாங்கி முத்தமளித்த கதையை யாரிடமாவது கூறுவேன்.

Image result for shobana manichitrathazhu

அடுத்த முறை “மணிச்சித்திரத் தாழ்” படப்பிடிப்புக்காக லால் வந்திருந்தார். நான் அப்போது இன்னஸெண்ட், ஷோபனா உள்ளிட்ட நட்சத்திரங்களைப் பார்த்தேன். அப்போது ஷோபனா என் கனவு நாயகி என்பதால் அவரைக் கண்டது மறக்க முடியாத அனுபவமாய் இருந்தது. ஒரு காட்சியில் ஷோபனா பித்தில் சன்னதம் வந்து தன் கணவனை தாக்க முயன்று பின் உடனே தன் நிலையை உணர்ந்து மயங்கி சரிவார். அப்படி மயங்கிக் கிடப்பதற்கான காட்சிக்காக ஷோபனா தன்னை தயாரித்துக் கொண்டிருந்தார். போதையில் மயங்கியவர் போல் அவர் சற்று நேரம் ஒரு படுக்கையில் கிடந்தார். அப்போது தான் அவரை நான் பார்த்தேன்.
இந்த ஷூட்டிங் நடந்த ஒரு மாதத்தில் ஊரே அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தது. அப்படம் வெளிவந்து ஹிட் ஆன பிறகும் நாங்கள் நண்பர்கள் அன்று பார்த்த நடிகர்கள், அவர்களின் விசித்திர குணாதசியங்கள் என்பவை பற்றி அடிக்கடி நினைவில் மீட்டெடுத்து பகடி செய்வோம்.
நான் இப்போதும் அதே ஆளாகத் தான் இருக்கிறேன். எந்த பிரபலத்தை, நான் கொண்டாடும் ஒரு ஆளுமையை முதலில் சந்தித்தாலும் பல நாட்கள் என் மனதில் ஒரு புளிப்பு மிட்டாய் போல் அதக்கிக் கொண்டு சுவைக்கிறேன். யாரிடமாவது அதைப் பற்றி சில சொற்கள் பேசத் தவிக்கிறேன்.
ஆனால் இன்றைய தலைமுறை பிரபலங்களை எதிர்கொள்வது நேர் எதிராக இருக்கிறது.

Image result for rana daggubati

சமீபமாய் நடிகர் ரானா டகுபதி எங்கள் பல்கலைக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். முன்கூட்டி அறிவிப்பேதும் இல்லை. திடீரென அவரை அழைத்து வந்தார்கள். ஆனாலும் சில நொடிகளில் கூட்டம் சேர்ந்து விட்டது. சுனாமி அலைகள் போல் மாண மாணவியர் திரண்டு அவர் முன் வந்து ஆர்ப்பரித்தார்கள். வகுப்பறைகளுக்குள்ளும் ஆர்வாரம் அலையடித்தது. ரானாவை அவர்கள் பேசவே விடவில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு “ஓஓஒ”.
நானும் போயிருந்தேன். ஆள் பார்க்க செம அழகன். என்னவொரு கம்பீரம், உயரம் என்றெல்லாம் தோன்றியது. அவர் சில நிமிடங்களில் கிளம்பி விட்டார். மாணவர்களும் கலைந்தனர். நான் அங்கு சற்று நேரம் சுற்றினேன். யாரும் ரானா டகுபதியை பற்றி பேசக் காணோம். மாணவர்கள் தாமெடுத்த படங்களை பேஸ்புக்கில் ஏற்றினர். அதன் பிறகு தம் பாட்டுக்கு வேலையை பார்க்க கிளம்பினர். நான் சில மாணவர்களிடம் ரானா பற்றி கேட்டேன். அவர்கள் தான் சற்று நேரத்துக்கு முன் அங்கு நின்று துள்ளித் துள்ளி கூவினவர்கள். இப்போது அவர்களிடம் அந்த பரபரப்பும் கிளர்ச்சியும் முழுக்க வடிந்திருந்தது. அவர்கள் வேறு விசயங்களில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர். “ரானாவா யார்?” என்கிற மாதிரி பேசினார்கள். சில ஆந்திர மாணவர்களின் முகங்களில் மட்டும் பெருமிதம் இன்னமும் ஜொலித்தது. மற்றவர்களைப் பொறுத்த மட்டில் ரானா வந்து போன சுவடே இல்லை.
வாம்மா மின்னல் … போம்மா மின்னல். அவ்வளவு தான்!
யாருமே எதுவுமே அது நடந்த நொடிக்கு அப்பால் இவர்களுக்கு பொருட்டில்லை. அலை மீண்ட பின் கரை தேமேவென இருப்பது போல் இவர்கள் இருக்கிறார்கள். அடுத்த அலை வந்ததும் மீண்டும் தளும்புகிறார்கள்.
இன்றைய தலைமுறைக்கு நம்மைப் போல் நினைவுகள் தேவையில்லை. எதையும் நினைவில் மீட்டி சிலாகிக்க அவகாசம் இல்லை.
ரானா தான் கிளம்பி சென்ற பின் ஒரு கண்ணுக்கு புலப்படாத மனிதனாக மாறி எங்கள் பல்கலை வளாகத்துக்கு திரும்ப வந்து மாணவர்களை கவனித்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பார்? ஒரு நட்சத்திரமாய் தன் மதிப்பின் ஆயுள் மிகச்சில நொடிகள் மட்டுமே என புரிந்தால் அவர் ஏமாற்றம் அடைந்திருப்பாரா? தான் உண்மையிலேயே இந்த இளைஞர்கள் மத்தியில் இருக்கிறோமா இல்லையா எனும் கேள்வி அவருக்கு எழுந்திருக்குமா?


Comments

தற்போதைய நிலை இதுதான் சார்...
நட்சத்திரங்களை ஆதர்ஷ நாயகர்களாகப் பார்த்தது ரெண்டாயிரத்துக்கு முன்...
இப்போ பார்க்கும் போது பரவசம்.. அப்புறம் அவனும் மனிதன்தானே என்ற எண்ணம் மேலிட முகநூலும் டுவிட்டரும் உள்ளிழுத்து விடுகின்றன.