மனுஷி பாரதியின் கவிதைகள்: பெண்ணிய வெளியில் இருந்து பொதுவெளிக்கு

Image result for மனுஷி பாரதி

சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருதை இவ்வருடம் பெறும் கவிஞர் மனுஷி பாரதிக்கு வாழ்த்துக்களும் அன்பும். மனுஷி பாரதி ஒரு கவிஞராக தனித்துவமான அடையாளம் கொண்டவர். தொடர்ந்து கவிதையில் தீவிரமாக இயங்கி வருபவர். சமூக இழிவுகள், ஒடுக்குமுறை என ஒரு பக்கமும், மனித வாழ்வில் தீமை, இருண்மை என இன்னொரு பக்கமும் எழுதுபவர். பாதி சமூக விமர்சகர், பாதி உள்மன விசாரிப்பாளர். எந்த குழுவின், அமைப்பின், பத்திரிகையின் முன்னிறுத்தல் இன்றி முழுக்க தன் உழைப்பாலும் திறமையாலும் கவனம் பெற்றவர்.


  சரி, மனுஷியை தமிழ் பெண் கவிதை வரலாற்றில் எங்கு வைப்பது?

தமிழில் பெண் கவிதைகள் ரெண்டாயிரத்துக்கு முன்பே எழுதப்பட்டிருந்தாலும் ரெண்டாயிரம் தாம் பெண் கவிதைக்கு ஒரு தனி அடையாளம் தந்த காலகட்டம். கோட்பாட்டு ரீதியான வாசிப்பின் தாக்கம் வலுவாக கொண்ட உக்கிரமான, கிளர்ச்சியான, பதற்றம் ஏற்படுத்தும், திராவகம் போன்ற கேள்விகளை எழுப்பிய பெண் கவிதைகளின் காலம் அது. குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்த ராணி, சல்மா ஆகியோர் இக்கவிதைகளை அரசியல், சமூகம், பால் நிலை, பாலியல், சாதியம், குடும்ப வெளிக்குள் ஒடுக்கப்படும் உடல் என பல்வேறு திசைகளுக்கு எடுத்து சென்றனர். ஆண் கவிகளில் இருந்து பெண் கவிகள் இன்னொரு விசயத்திலும் வித்தியாசப்பட்டிருந்தனர்: ஆண் கவிகள் மத்திய வர்க்க வாழ்வில் ஒன்று கலந்து இருந்து, இன்னொரு பக்கம் கவிஞர்களாகவும் செயல்பட்டனர் (இதை தான் குற்றமாக காணவில்லை). ஆனால் பெண் கவிகள் புரட்சிகரமாக வாழ்விலும் இயங்கினர். திருமணம் தவிர்த்தனர்; அல்லது மணவாழ்வில் இருந்தாலும் வளைந்து செல்ல மறுத்தனர். வெளிப்படையாய் உடல் பற்றி எழுதி சர்ச்சைக்குள்ளாகினர். சர்ச்சைகளையும், விமர்சனங்களை மூர்க்கமாய் எதிர்கொண்டனர். குட்டி ரேவதி தன் கவிதைத் தொகுப்பு ஒன்றுக்கு “முலைகள்” என தலைப்பிட்டது போல் இதுவரை ஒரு பின்நவீனத்துவ கலகக்கார ஆண் கவிஞரும் தலைப்பிட்டதில்லை என நாம் கவனிக்க வேண்டும்.

Image result for குட்டி ரேவதி

 ரெண்டாயிரத்தின் முதல் பாதி வரை தமிழ் பெண்ணிய கவிஞர்கள் நக்சலைட்டுகள் போல் நம் சூழலில் செயல்பட்டனர். குட்டி ரேவதி ஒரு பதிப்பாளராக மாறி தனக்கு அடுத்து வரும் கவிகளை பிரசுரித்து தன் பாதையை நீட்டித்தார். ஆனால் ஒரு பிரமிளுக்கோ ஆத்மாநாமுக்கோ பின்னர் சுகுமாரனுக்கோ மனுஷ்யபுத்திரனுக்கோ அமைந்தது போல் ஒரு வாரிசு பரம்பரை, கவித்துவ தொடர்ச்சி, பாதச்சுவடுகளின் நீட்சி இப்பெண் கவிஞர்களுக்கு அமையவில்லை. ரெண்டாயிரத்தில் ஒருவிதத்தில் தமிழ் எழுத்துலகை புரட்டிப் போட்ட பெண் கவிதை தொடர்ச்சியற்று முறிந்து போனது.
 இவர்களுக்கு அடுத்து வந்தவர்கள் இதே ஒடுக்கப்படும் பெண்ணுலகை (கோட்பாட்டு மொழியில் அல்லாது) ஒரு பொது மொழியில் எழுதினர். ஆனால் பாலியலால் கட்டமைக்கப்பட்ட பெண்ணுடலை வெளிப்படையாய், தத்ரூபமாய் எழுதவோ சித்தாந்த மொழியில் அலசவோ இப்புது கவிகள் முயலவில்லை. இந்த அடுத்த தலைமுறையினரின் கவிதைகள் தம் மொழி மற்றும் பாடுபொருளைப் பொறுத்து எண்பதுகளின் நவீன கவிதைகளை ஒத்திருந்தன. மனுஷியின் கவிதைகள் அப்படியானவை.
Image result for சுகுமாரன்Image result for மனுஷ்யபுத்திரன் 
மனுஷியிடம் நான் மேலே குறிப்பிட்ட சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், ஆத்மாநாம் ஆகியோரின் தாக்கம் வலுவாக இருக்கிறது.

Image result for ஆத்மாநாம்

 அவரது குரல் உள்ளொடுங்கிய ஒரு தனிமனிதரின் குரல் அல்ல; உருவகங்களும் விவரணைகளும் அடர்ந்த குட்டி ரேவதி, சுகிர்த ராணியின் குரல் அல்ல. அது தமிழ்க் கவிதையில் முன்பு ஒலித்த, இன்றும் தொடரும் பொதுக்குரல். அறத்தைப் பற்றியும், சமூகக் கொடுமைகளைக் கண்டும் ஒரு மேடையில் இருந்து கொந்தளித்து கையுயர்த்தி கத்தும் குரல். ”கடவுள் தியானத்தில் இருந்த போது” எனும் அவரது கவிதையின் இறுதிப் பத்தியை கவனியுங்கள்:

”நண்பர்களே
இனி
சிறுமிகளின் பிஞ்சு யோனிக்குள்
விறைத்த குறிகளைத் திணிப்பதற்கு முன்
அச்சத்தில் உறைந்த அவர்களின் கண்களை
ஒருமுறை பாருங்கள்.
அவர்கள் சொல்ல விரும்பும்
சக்தியற்ற சொற்களைக் கேளுங்கள்”.


பெண்ணிய வெளியில் இருந்து பொதுவெளிக்கு பெண் கவிதை வந்துள்ளதற்கான அடையாளம் மனுஷியின் கவிதைகள். இதன் அடுத்த கட்டமாய், வரும் ஆண்டுகளில், பெண் கவிதையை அவர் மற்றும் அவரது சகபாடிகள் எங்கு அழைத்து செல்லப் போகிறார்கள் என்பதை அறிய ஒரு வாசகனாக ஆர்வம் கொள்கிறேன். மீண்டும் அவருக்கு எனது வாழ்த்தையும் பிரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி: உயிர்மை

Comments