பின்நவீன தலைமுறை

Image result for south korea army

என் சகபேராசிரியர் தன் வகுப்பில் மொபைல் பார்த்துக் கொண்டிருந்த மாணவனிடம் இருந்து மொபைலை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டார். பையன் தென்கொரியாவை சேர்ந்தவன். அவன் அவரைத் தேடி துறைக்கு வந்து மொபைலை திரும்பத் தரக் கேட்டான். அவர் கேட்டார் “ஏம்பா வகுப்பில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாதுன்னு தெரியாதா?” அவனது பதிலைக் கேட்டு அருகில் இருந்த எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
“சார் எனக்கு போரடிச்சது. அதனால் தான் மொபைலை பார்த்தேன்.”
நானெல்லாம் அவனிடத்தில் இருந்திருந்தால் வீட்டில் இருந்து ஒரு அவசர அழைப்பு வந்தது, அதனால் மொபைலை எடுக்க வேண்டியதாகி விட்டது என வழக்கம் போல் புளுகி இருப்பேன்.

பேராசிரியர் ஒரு ரசிகர். அதனாலே சிரித்தபடி அவனுடன் அரட்டையடித்தார்.
“சரி என்ன பார்த்தாய்?”
“கேம் விளையாடினேன்.”
“என்ன கேம், புளூவேலா?”
“இல்லை சார். ஸ்விட்சிங் கலர்ஸ்”
“சரி, ஏன் போரடிச்சுது?”
“வகுப்பில் வேறு பையன்கள் பிரசெண்டேஷன் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதனால் தான். ஆனால் நீங்கள் பேசினால் எனக்கு போரடிக்காது சார்.”
“ஓ அப்படியா? சரி நீ இப்படி சொல்கிறாய் என உன் வகுப்பு நண்பர்களிடம் சொல்லட்டுமா?”
“ஐயோ வேண்டாம் சார், அவர்கள் பேசியதால் போரடிக்கவில்லை. அவர்கள் ரொம்ப மெல்ல பேசினார்கள். எனக்கு சுத்தமாய் கேட்கவில்லை. அதனால் தான் போரடித்தது.”
“கேட்கவில்லை என்றாலும் அவர்களை சத்தமாய் பேச கேட்க வேண்டியது தானே?”
இதற்கு பதிலளிக்காமல் அவன் இளித்தான்.
இதை அடுத்து பேச்சு அவனது ஊரைப் பற்றி திசை மாறியது.
“சரி நீ கொரியாவுக்கு எப்போது போகப் போகிறாய்?”
“எனக்கு அங்கே போகவே வேணாம் சார்.”
“ஏன்?”
“அங்கு போனால் நான் ரெண்டு வருடங்கள் கட்டாய ராணுவப் பயிற்சி எடுக்க வேண்டும்.”
“ஏன்?”
“அது எங்க ஊர் சட்டம்.”
“சரி எண்ண பண்ணலாம் என இருக்கிறாய்? நிரந்தரமாய் இங்கேயே தங்க முடியாதில்லையா?”
நான் குறுக்கிட்டு விளையாட்டாய் சொன்னேன், “ஒரு வழி இருக்கிறது. ஒரு இந்தியப் பெண்ணை மணந்து இந்திய பிரஜையாகி விடு.”
அவன் உடனே ரொம்ப சீரியஸாக “ஆமா சார். நானும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்க சரியா சொல்லிட்டீங்க. நான் இங்கே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.”
நான் மனதுக்குள் “அடப்பாவி” என்றேன்.
பேராசிரியர் தொடர்ந்தார், “ஆனால் ராணுவப் பயிற்சி நல்லது. ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் உனக்கு அளிக்கும்.”
“எனக்கு அதெல்லாம் வேண்டாம் சார்.”
“வடகொரியாவுடன் திடீரென போர் ஏற்பட்டால் நீங்கள் பிரஜைகள் எல்லாம் ராணுவத்தில் உடனடியாய் சேர்ந்து நாட்டுக்காக போரிட வேண்டியிருக்கும். அப்போது இப்பயிற்சி மிகவும் பயன்படும் இல்லையா?”
அவன் இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
“சார் அதெல்லாம் டைம் வேஸ்ட்.”
“எது டைம் வேஸ்ட்?”
“ராணுவம், போர் அதெல்லாம். ரெண்டு வருடத்தை அப்படியே முழுசா என்னால பயிற்சிக்கு வீணடிக்க முடியாது.”
“அப்புறம் அந்த நேரத்தில் வேறேன்ன செய்வாய்?”
“ஜாலியாய் இருப்பேன்.”
“மொபைலில் கேம் விளையாடி…கல்யாணம் பண்ணி…”
“ஹி ஹி”
“சரி இந்த மொபைலை திரும்பத் தந்தால் எனக்கு என்ன பயன்?”
“சார் நமக்குள் ஒரு உடன்படிக்கை. நீங்க மொபைலை கொடுங்க, நான் இனிமே வகுப்பில் பேசவே மாட்டேன்.”
“சரி நான் பாடமெடுப்பது போரடித்தால்…”

“மொபைலில் கேம் விளையாடுவேன் சார்.”

Comments