அனிதா: உயிர்த்தியாகம் கேட்கிறதா தமிழ் மனம்?


இந்த பதிவு அனிதாவின் தற்கொலைக் காரணங்கள் பற்றியது அல்ல. அனிதாவின் தற்கொலையை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதே என் கேள்வி.
இது தற்கொலை அல்ல, ஒரு அரசியல் அறைகூவல், லட்சியத்துக்கான உயிர்த்தியாகம், சமூக நீதிக்கான களப்பலி என சில நண்பர்களிடன் என்னிடம் கூறினர். தொடர்ந்து முகநூலில் இந்த கோணத்தில் எழுதப்பட்ட ஏகப்பட்ட பதிவுகளைக் கண்டேன். நம் சமூகத்தில் உடலை வருத்தியோ அழித்தோ நடக்கும் போராட்டங்கள் மிகப்பெரிய உணர்வெழுச்சியை கிளப்புவதை கவனித்திருக்கிறேன். காந்தியின் அரசியில் போராட்ட வடிவமே இது தான். பகத்சிங், கோட்சே (அவரும் ஒரு சுதந்திர போராளி தான்), வாஞ்சிநாதன் துவங்கி முத்துக்குமரன், அனிதா வரை எத்தனை எத்தனையோ பேர் தன் உயிரை தியாகம் செய்து நம் சமூகத்தின் ஆழ்மனதை அசைத்திருக்கிறார்கள். நாம் திடுக்கிட்டு விழித்து சில நிமிடங்கள் கதறி இருக்கிறோம். கோபத்தில் கத்தி இருக்கிறோம். நம் அரசியல் பிரக்ஞையை தற்காலிகமாய் விழிக்க வைக்கிறது என்பதற்காகவே இத்தகைய உயிர்த்தியாகங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த உயிர்பலிகள் பெரிய அரசியல் எழுச்சிகளுக்கு வலிகோலும் என்று பல்லாயிரம் பேர் இன்றும் நம்புகிறோம்.
 ஆனால் அப்படியான பெரும் மாற்றங்கள் உயிர்த்தியாகங்களின் அடிப்படையில் இந்தியாவில் நிகழ்ந்துள்ளனவா, அவை எவை எனும் கேள்விகள் எழுப்பினால் அதற்கு தெளிவான நேர்ம்றையான பதில்கள் இராது. மாறாக, உயிர்த்தியாகங்கள் சிறு சிறு அலைகளாய் நம் அரசியல் மனதின் பின்னால் எழுந்து வந்து நம்மை ஒருமுகப்படுத்துகின்றன, முக்கியமான் அரசியல், சமூக மாற்றங்களுக்கு உயிர்ப்பூட்டுகின்றன என ஒரு தரப்பினர் நம்புகிறார்கள். சமூக அரசியல் இயக்கங்களுக்கு உயிர்த்தியாகங்கள் விசையை அளிக்கலாம் என்பதை ஏற்கிறேன். ஆனால் உயிர்த்தியாகங்கள் இன்றியும் இந்த இயக்கங்கள் செவ்வனே செயல்பட முடியும். உதாரணமாய், நமது தேசத்தின் மாபெரும் அரசியல் இயக்கமான காந்திய இயக்கம் உயிர்பலியை கோரவில்லை (எதிர்பாராமல் நடந்தவை தவிர. அந்த பலிகளையும் காந்தி கொண்டாடவில்லை.). போராட்டங்களின் போது மக்கள் இறக்கும் தருவாய் ஏற்பட்டால் காந்தி உடனே போராட்டங்களை நிறுத்தி விடுவார். அவரது உண்ணாநிலை போராட்டங்களும் அவ்வாறே மிகக்கச்சிதமாய் உடலின் சாத்தியங்களை உணர்ந்து நடத்தப்பட்டன. எந்த அளவு பட்டினியை உடல் தாங்கும், அதற்கு உடலை எப்படியெல்லாம் தயாரிக்க வேண்டும் என காந்தி அறிந்து செயல்பட்டார். உடல்நலமில்லாமல் ஆகும் போது அவர் உண்ணாநிலை போராட்டம் செய்ய மாட்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் காந்தியை கடுமையாய் பாதித்தன. மக்களின் உயிர்களை தியாக தீபங்களாய் எரிய விடுவோம் என அவர் கூவவில்லை. அந்த படுகொலைகளே நடந்திருக்கக் கூடாது, இனி ஆங்கிலேய அரசுக்கு ஆளும் தகுதி இல்லை என்று அறிவித்தார்.
தமிழகத்தின் மட்டுமல்ல இந்தியாவின் மாபெரும் சமூக அரசியல் இயக்கங்களில் ஒன்று பெரியாரின் பகுத்தறிவு இயக்கம். இந்த மாநிலத்தின் தலைவிதியையே மாற்றி அமைந்த போராட்ட வரலாறு திராவிட கழகத்தினுடையது. ஆனால் நான் அறிந்து அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு உயிர்பலிகள் தேவைப்படவில்லை.
உயிர்த் தியாகங்களுக்கு ஒரு பங்கு உள்ளன. ஆனால் அவை இன்றியமையாதவை அல்ல. ஒருவேளை கொரில்லா இயக்கங்களில் உயிர்பலிகள் தேவையிருக்கலாம். ஆனால் நாம் ஒரு மக்களாட்சி சமூகம் அல்லவா?
அனிதாவின் தற்கொலையைப் பற்றி கண்கலங்க, சொற்களில் கண்ணீர் பிசுபிசுப்புடன் எழுதும் பலரும் அவர் தற்கொலை செய்திருக்க வேண்டாம் என கூறவில்லை. “ஏனம்மா நீ போனாய்?” என்கிறவர்கள் “நீ போயிருக்கக் கூடாது” என திடமாக கூறவில்லை. நம்மில் பலருக்குள்ளும் அவரது தற்கொலையை ஏற்று அதை ஒரு தீரச்செயலாய் பாராட்டும் விழைவு துடிக்கிறது. போர்க்களத்தில் அமர்ந்து தலைவிரிக் கோலமாய் பிணத்தில் மடியில் கிடத்தில் அழுது மன்றாடும் புறநானூற்று காலத் தாயைப் போல் நடந்து கொள்கிறோம்: “போய் விட்டாயே தங்கமே!” என்று தான் அவள் புலம்புவாள். “நீ போகாமல் இருந்திருக்கலாமே” என அழ மாட்டாள். ஏனெனில் மகனின் உயிர்பலி சமூகத்துக்கு அவசியம் என அவள் நம்பினாள்.
இன்று அனிதாவுக்காக புலம்பும் பலருக்குள்ளும் அந்த பழங்குடி தமிழ்த் தாய் தான் இருக்கிறாள். அவள் மரணத்தை நாம் மறைமுகமாய் ஆதரிக்கிறோம். இந்த நோக்கம் நமக்கே புலனாகும் தருணங்களில் “இது தற்கொலை அல்ல, அரசுகள் நிகழ்த்திய சமூக படுகொலை” என வாதத்தை திருப்புகிறோம். இது சமூகக் கொலை என்றால் ஏன் அவள் உயிர்த்தியாகம் தேவை தான் என முரணாக நம் மனம் ஒரே சமயம் யோசிக்கிறது?
நமக்குள் இன்னமும் அந்த பழங்குடி மனம் விழித்துக் கொண்டு தான் இருக்கிறது என்பதை இச்சம்பவம் காட்டுகிறது. அனிதாவை குலசாமியாக பார்க்கத் தூண்டுவது நடுகற்களை வழிபட்ட ஒரு சமூகம் தானே? எந்த கொந்தளிக்கும் பிரச்சனைக்கும் நமது துயரத்தின் தரப்பிலோ, நமது வெஞ்சினத்தை வெளிப்படுத்தும் முகமாகவோ ஒருவர் தன்னுயிரை நீக்க வேண்டும் என நம் சமூக பழங்குடி மனம் எப்போதும் ஏங்குகிறது. அது நிகழ்ந்ததும் ஒரு நடுகல்லை முகநூலில் அமைக்கிறோம். முத்துக்குமரனுக்கு வைத்த நடுகல் அருகே அனிதாவுக்கும் இனி ஒன்று இருக்கும்.

அனிதாவை பலியாக்கியது மத்திய அரசும், டம்மி அதிமுக ஆட்சியும் தான். ஆனால் அந்த பலியை விழைந்தது நீங்கள் தானே?

Comments

நீட் தேர்வு -அனிதா தற்கொலை உங்க பதிவுகள் படித்தேன் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. தற்கொலைகளை கொண்டாடி, மேலும் உசுப்பு ஏற்றும் செயல்களை தான் அரசியல் கட்சிகளும், ஜாதிகட்சிகளும், புரச்சிகாரர்களும் தமிழகத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே சிந்தனை கொண்டவர்கள்.ஒரே குட்டையில் ஊறியவர்கள்.