நீட் தேர்வும் சாதியும்


நீட் தேர்வின் மாதிரிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை நான் தரவிறக்கி வாசித்துப் பார்த்திருக்கிறேன். பிற தகுதித் தேர்வுகளைப் போன்றே அவற்றை ஜெயிக்கவும் தனி பயிற்சி வேண்டும் எனும் வாதத்தை நான் ஏற்கிறேன். அவசரமாய் நீட் தேர்வை திணிக்கும் முன்பு அரசு இதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி மாணவர்களை தயாரித்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது அரசின் தவறு தான். இந்த அவலநிலைக்கு, அனிதா போன்ற ஒரு எளிய பின்புலத்தில் இருந்து வந்த ஒரு மாணவியின் நெருக்கடிக்கு, தற்கொலைக்கு ஆட்சியாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

இதே சிக்கல் நெட்/ஸ்லெட் போன்ற தேர்வுகள் நிலுவையில் வந்த போதும் எழுந்தது. முதுகலை பட்டத்தை முதல் வகுப்பில் தேறினவர்களால் கூட சுலபத்தில் பயிற்சியின்றி இத்தேர்வுகளில் வெல்ல முடியவில்லை. அப்படி என்றால் பிற மாணவர்கள் நிலைமையை சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில் குறிப்பிட்ட பாடங்களை படித்து, அலசி ஆராய்ந்து எழுதும் பயிற்சியே அம்மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் நெட் தேர்வோ தர்க்கம், தகவல் அறிவு, நினைவுத் திறன் ஆகியவற்றை சோதித்தன. மெல்ல மெல்ல பல்கலைகளும் கல்லூரிகளும் மாணவர்களுக்காய் தனி நெட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்தன. இன்று இளங்கலை, முதுகலை பாடத்திட்டங்களே நெட் தேர்வை முன்னிட்டுத் தாம் தயாரிக்கப்படுகின்றன. இன்று முன்பை விட பலமடங்கு அதிகமான மாணவர்கள் நெட் தேர்வில் தேறுகிறார்கள்.
அதாவது மேல் சாதி / கீழ் சாதி வித்தியாசங்கள் நெட் தேர்வு வெற்றி சதவீதத்தில் நான் அறிந்து இல்லை. முழுக்க மாணவர்களின் தயாரிப்பு, அதற்கான வாய்ப்புகள் பொறுத்தே தேர்வு விகிதம் அமைகிறது. மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்த தத்தளிப்பு இன்று இல்லை. நீட் தேர்வு விசயத்திலும் எதிர்காலத்தில் இந்நிலை, இன்றுள்ள சுதாரிப்பு நிகழும் என நான் நம்புகிறேன்.
நெட் தேர்வு பட்டதாரி இளைஞர்கள், கல்லூரி ஆசிரியர்கள் எனும் முக்கியத்துவமற்ற பகுதியினர் சம்மந்தப்பட்ட பிரச்சனையாக இருந்ததால் அதை அன்றும் இன்றும் நாம் பொருட்படுத்தவில்லை. இன்று நீட் விசயத்தில் அது நம் மாநிலத்தின் பள்ளி மாணவர்கள் எனும் பெரும் தரப்பு சம்மந்தப்பட்ட, மருத்துவப் படிப்பு எனும் செண்டிமெண்டான விசயம் சார்ந்த பிரச்சனையாக மாறுவதால் தமிழகமே கொந்தளிக்கிறது.
இயல்பாகவே நீட்டை ஒரு ஆரிய சதியாக, பா.ஜ.க தமிழக மாணவர்களை ஒடுக்குவதற்காய் திணிக்கிற ஒரு மாற்றமாக நாம் காண்கிறோம். அனிதா தலித் என்பதால் இது ஒரு சாதிப் பிரச்சனையாகவும் கூட பார்க்கப் படுகிறது. ஆனால் சாதி, சமூக வகுப்பு சார்ந்த பிரிவினை எல்லா பிரச்சனைகளுக்குள்ளும் இருக்கிறது தானே!
பெண்களின் ஒடுக்குமுறையை எடுத்துக் கொண்டால் ஏழைப் பெண்கள் தாம் அதிகமான வன்முறையை, ஏற்றத்தாழ்வை சந்திப்பார்கள். ஏழைகளில் தலித்துகள் இன்னும் கூடுதலான ஒடுக்குமுறையை சந்திப்பார்கள். ஏனென்றால் கல்வி, தொழில் வாய்ப்புகள் அவர்களுக்கு இயல்பிலேயே குறைகின்றன. சித்தாளாக ஒரு பிள்ளைமார் பெண் இருக்கப் போவதில்லை. தாழ்த்தப்பட்ட பெண் தான் இருப்பாள். அவளுக்கு நிச்சயம் ஆண்களை விட குறைவான கூலியே வழங்கப்படுகிறது. இந்த பாரபட்சம் ஒரு கார்ப்பரேட் பெண் ஊழியருக்கு இல்லை. அவள் தலித்தாக இருந்தாலும் (தலித்துகளும் இன்று கார்ப்பரேட்டில் இருக்கிறார்கள்.). கணவன் துன்புறுத்தினாலும் அவள் எதிர்த்தடிக்க, தனியாய் வாழ சாத்தியங்களும் வாய்ப்புகளும் மேற்தட்டு பெண்களை விட குறைவே. இதைக் கொண்டு பெண் ஒடுக்குமுறையே ஒரு சாதிய பிரச்சனை என நாம் கூற முடியுமா? முடியாது தானே? அது ஒரு பெண்நிலை, பெண்ணிய பிரச்சனையே!
அதே போல் நீட் தேர்வை ஒரு சாதிய, வர்க்க ஒடுக்குமுறையாக பார்ப்பதும் மிகை தான் – குறுகின பார்வை தான்.
இதை ஒரு பிராந்திய தனி உரிமை பிரச்சனையாக காண்பது மேலும் பொருத்தமானது. தமிழகத்துக்கு என்று ஒரு தனியான இட ஒதுக்கீட்டை நாம் பேணுவதை மைய அரசு விரும்பவில்லை. ஒரு பொது இட ஒதுக்கீட்டுக்குள், பொது அடையாளத்துக்குள், பொது வரையறைக்குள் இவ்விசயத்தை கொண்டு வர முனைகிறது. GST விசயத்தில் எப்படி மாநிலங்கள் காயடிக்கப்பட்டனவோ அவ்வாறே நீட் விசயத்திலும் நடக்கிறது.
நெட் தேர்வில் அனைத்து மாணவர்களாலும் உடனடியாய் வெற்றி பெற முடியாமல் போக தமிழக அரசுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது. கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு போதாமை ஏற்பட்டது. அரசு இதற்கு தீர்வாக ஸ்லெட் என்றொரு மாநில தகுதித் தேர்வை கொணர்ந்தது. (ஆனால் இந்த தேர்வை வெறும் கண் துடைப்பாகவே இன்று வைத்துள்ளது. தொடர்ச்சியாக எல்லா வருடமும் நடத்துவதில்லை. மேலும், ஒழுங்காக, ஊழலின்றி நேர்த்தியாகவும் நடத்துவதில்லை.) நீட்டுக்கும் அப்படி ஒரு தீர்வை கொணர்வதும் அதன் மூலம் நம் மாநிலத்துக்கு உரித்தான இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதும் தோதாக இருக்கும்.
ஆனால் அந்த துணிச்சல் இந்த டம்மி அதிமுக அரசுக்கு உண்டா?

பி,கு: எழுத்து ரீதியான எல்லா தகுதித் தேர்வுகளையும் ஒழித்து நடைமுறைத் தேர்வுகளை ஏன் நாம் அறிமுகப்படுத்தக் கூடாது? இது குறித்த என் கட்டுரை

Comments