தீப்தி நேவல் கவிதைகள் - 7

8  
Image result for deepti naval

8.   கொந்தளிப்பு – 2
(பம்பாய் கலவரங்கள் – டிசம்பர் 6, 1992)
இரவின் விசித்திர அமைதியில்
கட்டிடத்தில் எங்கோ
வெறித்தனமாய் தேம்புகிறாள் ஒருவள்

வெளியே உள்ள கொந்தளிப்பிற்கும் இதற்கும் சம்மந்தமில்லை
இது உள்ளே நிகழும் நிலைகுலைவு

அவளுக்கு மரை கழன்று விட்டது
இனி தப்பிக்க முடியாது

படிக்கட்டில் முணுமுணுப்புகள் சூழ்கின்றன
சிறு விவாதத்துக்குப் பிறகு, அவளை
மூன்று கோப்பைகள் வைன் குடிக்க வைத்து
உறக்கத்தில் அமிழ்த்துகிறார்கள் …


நான் கதவை விட்டகன்று
அந்த கரிய திரவத்தை மேலும் சற்று அருந்துகிறேன்

இன்றிரவு எனக்கு தேவையெல்லாம்
என்னில் இருந்து துண்டிப்பு

நகரம் அலுப்பான அவஸ்தையில்
இரைச்சலாய் சுவாசிக்கிறது

கடல் மிக நிச்சலமாய், தான் இல்லை என பாவனை செய்கிறது

கட்டிட விளிம்புகள் கரிய புகைமூட்டமான வானப் பின்னணியில்
காங்கிரீட் புதிர்வட்டப்பாதைக்கு அப்பால்
நான் காண்கிறேன் வெறிகொண்ட நரகத்தை

என்ன எரிகிறது இப்போது

ஒரு மசூதியா அல்லது கோயிலா …

Comments