தனிமனிதன் எனும் பிரமை (6)

Image result for monkey's tail

நமது உடல் நமது கட்டுப்பாட்டில் முழுக்க இருக்கிறது என்பது கூட ஒரு கற்பிதம் தானே என ஆதர்ஷிடம் கேட்டேன்.
 ஒரு காலத்தில் தலித் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என ஒடுக்குமுறை நிலவியது. இன்றும் ஆடைக் கட்டுப்பாடு, ஆடை ஒழுக்கம் சார்ந்து பல சர்ச்சைகள் நிலவுகின்றன. இங்கு என்ன உடை அணிய வேண்டும், உடலை எப்படி முன்னிறுத்த வேண்டும் என்பதில் கூட அடிப்படையான உரிமையே நமக்கு இல்லையே? (இது குறித்து பூக்கோ செய்துள்ள ஆய்வுகளை அறிவோம்.)
நம் உடல் நம் கட்டுப்பாட்டில் உள்ளதென்றால் ஏன் “கௌரவக் கொலைகள்” நடக்கின்றன? ஏன் சதா நாம் தாக்குப்படுவோம் எனும் அச்சத்துடன் பெண்கள் இருக்கிறார்கள்? ஏன் லாக் அப் சித்திரவதைகள், கொலைகள் நடக்கின்றன? நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு லுங்கியோ நைட்டியோ அணிந்து கொண்டு போக முடியுமா? அலுவலகத்தில் படுத்துக் கொண்டு வேலை செய்ய முடியுமா? திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது நீங்கள் உட்கார்ந்திருக்க முடியுமா?

தொடர்ந்து சூழ்நிலையும், மருந்துகளும், பல்வேறு புதுப்புது உணவுகளும் நம் உடம்பை உருமாற்றிக் கொண்டே இருக்கின்றன. நமது கணிசமான மரபணுக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு நம் உடம்பில் நுழைந்த நுண்ணுயிர்களின் கொடை என ஒரு ஆய்வுக் கட்டுரையில் முன்பு படித்தேன். அதன் படி பௌதிகமாய் கூட நமது உடம்பே அநேகமாய் நுண்ணுயிர்களால் ஆனதே. நமது குடலில் உள்ள நுண்ணியிர்கள் நமது மூளையின் போக்கையே கட்டுப்படுத்துகின்றன; அவை சுரக்கும் ரசாயனங்களே மனச்சோர்வுக்கு காரணம் என்று சமீபத்தைய ஆர்வுகள் தெரிவிக்கின்றன.
நம் உடல் எதுவாக இருக்க வேண்டும் என நாம் ஒரு வரைவை எழுதுகிறோம். சமூகமும் பிற காரணிகளும் மற்றொரு வரைவை எழுதுகின்றன. இரண்டுக்குமான மோதலும் அடுத்து சமரசமும் ஏற்படுகிறது. அந்த சமரசம் தான் இப்போது நமது இப்போதைய உடல். தொடர்ந்து தேய்ந்து வளரும் நிலவு போன்ற நமது உடல்.
 அதே போல் சமூக வெளியில் நிகழும் பல்வேறு உரையாடல்களுக்கு / உறவாடல்களுக்கு ஒரு மையம் தோன்றுகிறது. அதுவே நமது தனிமனித அடையாளம். நமது சுயம்.
 ஒரு மரக்கிளையில் பத்து குரங்குகள் திரும்பி அமர்ந்திருக்கின்றன. நமக்கு பத்து வால்கள் மட்டும் தெரிகின்றன. நெளியும் வால்கள். (அவ்வால்களே குரங்குகள் என நாம் கூறக் கூடாது.) இந்த வால்களே நமது சுயம். அப்படி என்றால் குரங்குகள்? நமது மொழி. இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் மொழி. இதைப் படிக்கையில் உங்களுக்குள் ஏற்படும் சலனங்களே நெளியும் வால்கள். இச்சொற்களைப் படிக்கையில் உங்கள் “சுயங்கள்” நீள்கின்றன, வளைகின்றன, நெளிகின்றன. தாமே அத்தனையையும் செய்ததாய் படித்து முடித்த பின் கற்பனை செய்கின்றன. திரும்பி இருக்கும் குரங்கை மறக்கின்றன. அது தான் தனிமனிதன் எனும் உங்கள் பிரமை!


 (நன்றி: தீராநதி, ஆகஸ்ட் 2017)

Comments