தனிமனிதன் எனும் பிரமை (4)

Image result for sewage workers

நான் அனுதினமும் இடஒதுக்கீட்டை கடுமையாய் எதிர்க்கும் மேற்தட்டு மாணவர்களிடம் உரையாடுகிறேன். அவர்கள் அப்படியே மேற்சொன்ன தனிமனித வாதத்தை பேசுகிறார்கள். மனிதனின் ஆதாரமான திறமையின் அடிப்படையிலே அவனுக்கான வாய்ப்புகள் அமைய வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆதாரமான திறமை என ஒன்று இல்லை; அது கட்டமைக்கப்பட்டது என அவர்களுக்கு புரிவதில்லை.

நாம் ரேண்டின் உதாரணத்துக்கு மீண்டும் வருவோம். ஒரு இலை பச்சை என எப்படி அறிகிறோம்? இலை “பச்சையாக இருப்பதே” அதை பச்சையாக்கிறது என்பார் ரேண்ட். ஆனால் உலகம் மொத்தமும், காற்றும், மழையும், மேகங்களும், சூரியனும் “பச்சையாக” இல்லை என்பதாலே இலையின் பச்சை நமக்கு துலங்குகிறது என்பது என் பார்வை. அதாவது, இலையை சூழ்ந்துள்ளவை அதைப் போல பழுப்பாக இல்லை என்பதே இலையை பச்சை ஆக்குகிறது. A = A, ஏனென்றால் A × B.
 இந்த முரணியக்கத்தின் அடிப்படையிலே மனிதனின் பகுத்தறிவு செயலடுகிறது. மற்றமை தான் ஒன்றின் தனித்தன்மையை (அப்படி ஒன்று உண்டெனில்) தீர்மானிக்கிறது. உயர்சாதிகள் தாம் தலித்துகளை உருவாக்குகிறார்கள். முன்னவர் இன்றி பின்னவரை நாம் விளக்கவே இயலாது. முரணியக்கத்தை கருத்திற் கொள்ளாமை ரேண்டின் சிந்தனையின் ஒரு அடிப்படை பிழை. 
 இன்றைய இளம் தலைமுறையினரில் சிலர் இடஒதுக்கீட்டை இவ்வாறு பார்க்கிறார்கள்: இந்தியாவில் தன்னை தனியாக, முக்கியமாக உணரும், தன்னளவுக்கு திறமையற்ற மந்தையினர் (இட ஒதுக்கீடு, சமூகநல திட்டங்களின் பெயரில்) அடுத்தவரை உறிஞ்சி வாழ்கிறார்கள். இதை வெறுக்கும் இந்த மேற்தட்டு / மேல்சாதி இளையதலைமுறையினர் இயல்பாகவே ஐயன் ரேண்டினால் ஈர்க்கப்படுகிறார்கள்.
 இங்கு வலதுசாரிகள், தாராளவாத கருத்தியலாளர்கள், முதலாளித்துவாதிகள், இடதுசாரி எதிர்ப்பாளர்கள், இடஒதுக்கீடு மறுப்பாளர்கள் என பலரும் ரேண்டின் தத்துவம் சரி என நம்புகிறார்கள். பொதுப்போக்குக்கு வளைந்து போக விரும்பாதவர்களும் இந்த கட்சியில் சேர்கிறார்கள்.
நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட மாணவர் ஆதர்ஷ் இறுதி வகையை சேர்ந்தவர். ஆதர்ஷ் என்னிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டார்:
1)   ஒரு தனிமனிதனாக நான் ஏன் பிறரின் போக்குகளால் அலைகழிக்கப்பட வேண்டும்? நான் ஏன் பொதுப்போக்குக்கு வளைய வேண்டும் எனும் நெருக்கடிக்கு ஆளாகிறேன்? நான் ஏன் “நானாகவே” இருக்கக் கூடாது?
2)   என் உடல் முழுக்க என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. என்னை மீறி யாரும் என் உடலை கையாள இயலாது. ஆனால் இதே உறுதிப்பாடு ஏன் என் மனதுக்கு இருப்பதில்லை? நான் எதை சிந்திக்க வேண்டும், நம்ப வேண்டும் என்பதை தீர்மானிக்க பிறர் ஏன் முனைகிறார்கள்? என் மனதுக்கு ஏன் கடிவாளம் போடுகிறார்கள்?
ஆதர்ஷின் கேள்விகள் எனக்கு எனது பதின்பருவ குரலை நினைவுபடுத்தின. நானும் இப்படியே தான் ஒருகாலத்தில் யோசித்தேன்; என்னை பிறரில் இருந்து விலக்கி வைக்கவும், தனியாய் காட்டிக் கொள்ள தவித்தேன் ஆனால் ஒரு எழுத்தாளனாய் மாறியதும் எனக்கு இதைப் பற்றி ஒரு முற்றிலும் புதிய பார்வை கிடைத்தது.

(தொடரும்)

Comments