ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (4)

எழுத்தில் என்னுடைய தாரக மந்திரம் ஒன்றே: எழுத்துடன் தொடர்பில்லாத எதையும் யாரையும் பொருட்படுத்தாதே. நீ இருக்கிற கட்டிடம் இடிந்து விழப் போகிறதா? தீ விபத்தா? பக்கத்து கட்டிடத்துக்கு விரைந்து செல். அங்கு ஒரு நல்ல இடமாக பார்த்துக் கொள். தொடர்ந்து எழுது. எந்த கூச்சலையும் ஆட்கள் பாய்ச்சலையும் காதில் வாங்கிக் கொள்ளாதே; கண்களில் விழ விடாதே.

என் கல்லூரியின் பிரதான வாயிலின் காவலாளிக்கு மட்டுமே என் நடத்தை விசித்திரமாக இருக்கிறது. ஒருநாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் இரவு ஒன்பதரைக்கு வெளியே போவது பார்த்து அவர் கேட்டே விட்டார் “சார் கல்லூரி 4 மணிக்கு முடிகிறது. உங்களுக்கு மட்டும் என்ன இவ்வளவு நேரம் 9: 30 வரை வேலை?” நான் புன்னகைத்தபடி வந்து விட்டேன். அவருக்குத் தெரியாது, நான்கு மணி வரை நான் ஒரு கனவில் இருக்கிறேன், நான் விழித்துக் கொள்வதே நான்கு மணிக்கு பிறகு தான் என.
நான் சென்னை பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் போதும் இதுவே தான் நடக்கும். இலக்கிய ஆர்வம் கொண்ட ஆய்வாளர்கள் ஐந்து பேர் நாங்கள் மாலை ஐந்து மணியானால் எங்கள் பேராசிரியர் அறைக்குள் வந்து விடுவோம். அரட்டை, கதை வாசிப்பது, எழுதுவது என ஒரு தனி உலகில் திளைப்போம்.. நாங்கள் கிளம்பவே எட்டு மணி ஆகி விடும். அதுவும் கூட அங்குள்ள காவலாளி வந்து துரத்தி விடுவதால் தான். இல்லாவிட்டால் பத்து மணி வரை எங்கள் தர்பார் ஓடும். அவருக்கு நாங்கள் பல்கலைக்கழகம் முடிந்த பின் அங்கு என்ன பண்ணுகிறோம் எனப் புரியாது. எங்களுக்கு இவர்களெல்லாம் சரியாய் நாங்கு மணிக்கு கிளம்பி பேருந்து பிடித்து வீட்டுக்குப் போய் என்னதான் செய்கிறார்கள் எனப் புரியாது. சும்மா சாப்பிட்டு, டிவி பார்த்து மனைவியுடன் ரெண்டு வார்த்தை பேசி தூங்கப் போவதற்கு இவர்களெல்லாம் வாழாமல் இருக்கலாமே என நினைப்போம்.
தொந்தரவுகள் இல்லாத, கவனச்சிதறல்கள், பொருளாதார அழுத்தங்கள் இல்லாத எழுத்து வாழ்வு ஒரு பேரழகியைக் கண்டு காதல் கொண்டு, உடனடியாய் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அடுத்து அவள் பெற்றோராலும் ஏற்கப்பட்டு, விரைவில் மணம் புரிந்து எந்த சிக்கல்க்ளும் இன்றி (கரன் ஜோஹர் படங்களின் ஸ்டைலில்) மகிழ்ச்சியாய் வாழ்வது போல.
ஆனால் அது ஒரு லட்சியக் கனவு மட்டுமே. இன்று பொதுவாகவே எல்லா வேலைகளிலும் நெருக்கடி அதிகரித்து விட்டது. அல்லது வெட்டி வேலை என்றாலும் மனிதர்கள் ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக் கொள்கிறார்கள். சும்மா இருக்கிறவர்களை இன்று விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியே ஒருவர் சும்மா இருக்க முயன்றாலும் பேஸ்புக், வாட்ஸ் ஆப், குடும்பத்தினர், நண்பர்கள், கூட்டங்கள் என யாராவது / ஏதாவது ஒரு விசயம் நம்மை ஆற்றொழுகு போல் இழுத்துச் செல்ல வந்து விடுகிறது.
நாம் இன்று எழுத்துக்கு முழுக்க விரோதமான ஒரு காலத்தில் வாழ்கிறோம். ஆயிரம் பெண்கள் காபரே ஆடும் ஒரு விடுதியில் ஒரு விஸ்வாமித்திரர் தியானம் பண்ணுவது போல் நாம் எழுத வேண்டி இருக்கிறது. வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுவே நிதர்சனம்.
அப்படி ஒருநாள் முழுக்க முழுக்க எழுத்துக்கு மட்டுமே வாழ்வை செலவிடும் நாள் வர வேண்டும் என்பது என் கனவு. ஆனால் அக்கனவு நிறைவேறா விட்டாலும் நான் எழுதிக் கொண்டு தான் இருப்பேன். என் நாய்க்கு குலைப்பதற்கு என்று ஒரு காரணம் குறிப்பாய் வேண்டாம். சும்மா போரடித்தால் கூட எழுந்து ரெண்டு முறை குலைத்து விட்டு படுத்துக் கொள்ளும். குலைப்பதே அதன் வாழ்வு. அதே போல் எழுதுவதே என் வாழ்வு.
நடைமுறை வாழ்க்கையின் தேவைகளையும் எழுத்தையும் ஒரே நேரம் சமாளிக்க முடியாது என்னிடம் ஒரு எழுத்தாள நண்பர் புலம்பினார். நான் அவரிடம் இவ்வாறு சொன்னேன்:
“நடைமுறை சிக்கல்கள் தாமே தீர்ந்து விடும். அவற்றை பொருட்படுத்தாமல் போகிற போக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். நடைமுறையிலும் எழுத்திலும் ஒரே சமயம் ஜெயிக்க முடியாது. இது உண்மை. நடைமுறையில் பெரிதாக சறுக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள், அது போதும்.
இருபது வருடங்கள் கழித்து நாம் சம்பாதிக்கும் பணம், அந்தஸ்து எதுவும் நம்முடன் இராது. நம் மனைவி, குழந்தை கூட நம்முடன் இருப்பார்கள் என்பதற்கு உறுதியில்லை. ஆனாலும் எழுத்தும் வாசகர்களின் அணுக்கமும் நிச்சயம் இருக்கும். அதுவே நமது உண்மையான சம்பாத்தியம். அதனால் கலங்காதீர்கள். நாம் இருப்போம். இவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த நம்பிக்கை உங்களை செலுத்தட்டும்.”


Comments