தனிமனிதன் எனும் பிரமை (3)

Image result for ayn rand + fountainhead
நான் போன பதிவில் குறிப்பிட்ட ஆதர்ஷ் சமீபமாய் ஐயன் ரேண்டின் நூல்களை படித்து வருகிறார்.
 ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து எழுத்தாளராய் அங்கு மலர்ந்த ஐயன் ரேண்ட் The Fountainhead மற்றும் Atlas Shrugged ஆகிய நாவல்களுக்காகவும், தனது தனிமனிதவாத கருத்துக்களுக்காகவும் இன்றும் பிரசித்தமாய் விளங்குபவர். அவர் தனிமனிதவாதத்தின் போர்க்கொடி என்பதால் பதின்பருவத்தினர் தொடர்ந்து அவரது நாவல்களின் பெரும் ரசிகர்களாக விளங்குகிறார்கள். இன்றும் எந்த கல்லூரிக்கு சென்றாலும் யாராவது அங்கு The Fountainhead படித்துக் கொண்டிருப்பார்கள்.

 மனித இருப்பு என்பது ஒருவர் தன்னை தனித்து அடையாளப்படுத்துவதில் ஆரம்பிக்கிறது, ”இருத்தல் என்பது அடையாளம்” என்றார் ரேண்ட்.
 நமது பிரக்ஞை என்பது சுயத்தின் கண் வழி விரிகிறது; இந்த பிரக்ஞை நம்பகத்தன்மை அற்றது, அதன் வழி நாம் புரிந்து கொள்ளும் உலகமும் நிலையற்றது, ஆனால் இதுவே நமக்கு சாத்தியமான ஒரே உலகம் என்பது ஐரோப்பிய கருத்துமுதல்வாத சிந்தனையின் அடிப்படை எனலாம். பூனை கண்ணை மூடித் தூங்குகையில் உலகமே இருள்கிறது என கற்பனை பண்ணும் என வேடிக்கையாக சொல்வார்கள். நான் சிந்திப்பதால் இருக்கிறேன், நான் இருப்பதால் உலகமே இருக்கிறது எனக் கூறும் கருத்துமுதல்வாதிகளின் மீதான பகடி இது. ஐயன் ரேண்ட் இந்த கருத்துமுதல்வாதிகளை மறுத்து ஒரு புது சித்தாந்தத்தை உருவாக்கினார்: புறவயவாதம் (objectivism).
Image result for ayn rand
ரேண்ட்
 நாம் நமது நமது பிரக்ஞையால் கண்டுணரும் உலகம் பகுத்துணரக் கூடியது என்றார் ரேண்ட். பகுத்தறிவையும் புறவய பார்வையையும் முன்னிறுத்தினார். தனிமனிதனை முன்வைக்கும் சித்தாந்தமே சிறப்பானது என்றார். தனிமனிதன் தன்னை சமூகத்தின் பொதுப்போக்குகளில் இருந்து தனித்து உணர்கிறான். அப்படி உணர்வதன் வழி தனது பிரக்ஞையை கட்டமைக்கிறான். இது இமானுவல் காண்ட் ஆகியோர் வலியுறுத்திய அபௌதிகமான, அகவயமான பிரக்ஞை அல்ல. இது ஹைடக்கர் முன்வைத்த மொழிக்குள் மட்டும் வாழும் (சூனியத்தில் உறையும்) பிரக்ஞை அல்ல. இது மண்ணில் கால்பதித்த, பொருளியல் வெற்றியை கொண்டாடும், பகுத்தறிவை தன் பாதையாக வகுத்த பிரக்ஞை. பூமியை வென்றடக்குவதன் வழி தனிமனிதன் உணரும் இருத்தலே ரேண்டின் இருத்தல். இந்த தனிமனிதனின் வெற்றிக்கு வழிவகுக்கும் முதலாளித்துவத்தை ரேண்ட் தனது கடவுள் என வழிமொழிந்தார்.
 வெற்றி பெறும் உந்துதல் அற்ற, சமூக வளத்தை சுரண்டி வாழ முயலும் மந்தை மனப்பான்மையை ரேண்ட் வெறுத்தார். இந்த மந்தையை முதலாளித்துவம் கசக்கிப் பிழிந்து பொருளை உற்பத்தி செய்வதில் தவறில்லை, திறமையும் புத்திசாலித்தனமும் கொண்ட சில தனிமனிதர்களின் உய்வுக்காக மந்தை மனிதர்கள் பலிகொடுக்கப்படுவதே நியாயம் என அவர் நம்பினார். இந்த சிந்தனை சுலபத்தில் சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் என ரேண்டின் விமர்சகர்கள் சுட்டுகிறார்கள்.
ரேண்டின் கருத்தியலுடன் எனக்கு உடன்பாடில்லை. இங்கு நாம் அதைப் பற்றி விரிவாக விவாதிப்பது பொருத்தமாக இராது என்பதால் ஒரே ஒரு விசயத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
மனிதனின் சுயம் தனித்துவமானது, பிறரில் இருந்து தன்னை வேறுபடுத்துவதே ஒரு மனிதனை தனிமனிதனாக்குகிறது, அதுவே அவனது சிறப்பு, அவனது வலிமை, வளர்ச்சியின் ஆதாரம் என அவர் நம்புகிறார். இதை விளக்க அவர் ஒரு உதாரணம் தருகிறார். ஒரு இலை ஒரே சமயம் பச்சையாகவும் பழுப்பாகவும் இருக்க இயலாது. (இரண்டு வண்ணங்களும் கலந்து இருக்கலாம். ஆனால் அது வேறு.) பச்சை இலை தன்னை பச்சையாக உணர வேண்டும். அதுவே அதன் தனித்துவமாகிறது. இருப்பாகிறது. அதுவே அதன் உண்மை. பகுத்துணர முடிகிற, நிரூபிக்க முடிகிற உண்மை.
 பச்சை எனும் அடையாளம் ஒரு தர்க்கரீதியான உண்மை. பச்சை A என்றால் பழுப்பு B. பச்சை எப்போதும் பச்சையாகவே இருக்க இயலும். அது பழுப்பாகாது என்பதை அவர் A = A என்கிறார். இந்த சூத்திரத்தில் நீங்கள் எதையும் இட்டு நிரப்பலாம். இதன்படி ஒரு தலித் பீ அள்ளுகிறார் என்றால் அது அவரது குறைபட்ட திறமையின், அடையாளத்தின் விளைவு. தலித் = பீ என்றால் ரேண்ட் “இல்லை இல்லை தவறு” பீ = பீ என்பார். பீயாக இருப்பதனால் அவன் பீ அள்ளுகிறான் என்பார். இது கடும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் அபத்தமான குரூரமான வாதம். ஒருவரின் இழிநிலைக்கு பின்னால் உள்ள சாதியம், சமூகக் காரணிகள், வரலாறு, பொருளாதாரம் ஆகியவற்றை பொருட்படுத்த மறுக்கும் வாதம்.
இந்த வாதத்தின் தர்க்கப் பிழையை அடுத்த பதிவில் பார்ப்போம்…
(தொடரும்)


Comments