ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (3)


இப்போதைக்கு என் எழுத்தும் என் வாழ்வும் எனக்கு வேறுவேறல்ல. எழுதுவது தவிர்த்து நான் செய்யும் எதிலும் என் மனம் ஈடுபடுவதே இல்லை. எழுதும் நேரம் மட்டுமே நான் உண்மையான உலகில் இருப்பதாயும் மிச்ச நேரம் நான் முழுக்க பொய்களால் புனையப்பட்ட ஒரு மாய உலகில் வசிப்பதாயும் தோன்றுகிறது. (போதை அடிமைகளுக்கு இப்படியான பிரமைகள் இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.)
 ஆக நான் இப்போதெல்லாம் எழுத்தைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. அது என்னிடம் இருந்து (அல்லது என் வழி) பாய்கிறது. எழுதாத நேரத்துக்கான வாழ்வை சரியாய் திட்டமிட்டு நடத்துவது பற்றி மட்டுமே அக்கறைப்படுகிறேன்.
எழுத்துக்கு தோதான வேலை எது?

எழுத்தே ஒரு முழுநேர வேலை தானே. எண்பதுகளின் எழுத்தாளர்கள் பலர் எப்படி அரசு வேலை எனும் சௌகர்யத்தை அனுபவித்தார்கள், அது எப்படி அவர்களின் எழுத்து வேலையை சுலபமாக்கியது என சில நண்பர்கள் என்னிடம் சொல்வதுண்டு. அதிக சிரமமோ அதிக நேரமோ செலவிடத் தேவையில்லாத வேலை அமைவது சுகமே. ஆனால் அப்படி அமைந்தவர்கள் அனைவரும் எழுதிக் குவித்து விட்டார்கள் என்றும் கூற முடியாது. இன்று தமிழில் தொடர்ந்து எழுதும் சிலர் கடுமையாய் வேலைப்பளு கொண்ட மென்பொருள் துறையில் இயங்குகிறார்கள். வினாயக முருகன் ஒரு உதாரணம்.
நானும் மிக அதிகமாய் எழுதியது அதிக வேலைப்பளு கொண்ட வேலையில் இருந்த போதே.
ஆனால் முழுநேர எழுத்துப் பணிக்கென ஒரு அனுகூலம் உண்டு. தொடர்ந்து நீண்ட மணிப்பொழுதை ஒரே பணிக்காக செலவழிக்க முடியும். உதாரணமாய், எனது ”புரூஸ் லீ” நூலையும் ரசிகன் நாவலையும் முனைவர் பட்ட ஆய்வுக்காக வேலையை துறந்த பின்னர் தான் எழுதினேன். என் மற்ற புத்தகங்களை விட இவை சுலபமாய் அமைந்தன.
கல்லூரி ஆசிரிய வேலை எழுத்துப் பணிக்கு ஏற்றது என பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஐந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் கல்லூரிப் பணிக்கு மீண்டிருக்கிறேன். ஆனால் இங்கும் ரொம்ப ரொம்ப பரபரப்பான வேலை தான். கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட் அலுவலகம் போன்ற சூழல்.
வாரம் 16 மணிநேரங்கள் பாடம் எடுக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் தொடர்ந்து மீட்டிங், நிர்வாகப் பணிகள், வகுப்புக்கான தயாரிப்பு, பரீட்சைத்தாள் திருத்துவது, இண்டெர்னல் மதிப்பெண்ணுக்கான வேலைகள் என தொடர்ந்து ஏதாவதொன்று கழுத்தில் கட்டிய கல் போல இருந்து கொண்டே இருக்கும். இதன் இடையில் நான் எப்படியாவது சில மணிநேரங்கள் எழுத கண்டு பிடித்து விடுகிறேன். ஆனாலும் தொடர்ந்து எழுத ஒரே வழி வேலை நேரம் முடிந்ததும் நூலகத்தில் போய் சரணடைவது தான்.
 பொதுவாக மாலை 4இல் இருந்து 9 வரை இவ்வாறு கழிக்கிறேன்.
வேலைக்கான நேர்முகத்தின் போது இதைப் பற்றி குறிப்பாய் கேட்டார்கள். “நீங்கள் ஒரு எழுத்தாளர். உங்களுக்கு எழுத நிறைய நேரம் தேவைப்படும். இங்கே உங்களுக்கு மூச்சு விட நேரம் இருக்காது. உங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா?”
நான் சொன்னேன், “எனக்கு அதிகம் நேரம் தேவையில்லை. எழுத நான்கு மணிநேரம், வாசிக்க மூன்று மணிநேரம். இங்கே தலை போகிற வேலை இருந்தாலும் நான் அதற்கான நேரத்தை கண்டைந்து விடுவேன்.”
உடனே என்னிடம் கேள்வி கேட்டவர் சிரித்தார்: “சொல்வது சுலபம். இங்கே என்னென்னமோ திட்டங்களுடன் நம்பிக்கையுடன் வந்தவர்கள் மனம் சோர்ந்து போயிருக்கிறார்கள்.”
நான் சொன்னேன் “பத்து வருடங்களுக்கு முன் என் அப்பா இறந்து போன சேதி வந்தது. நான் விமானம் பிடித்து திருவனந்தபுரம் போய், அங்கிருந்து ஒரு கார் ஏறி நாகர்கோயிலுக்கு போனேன். அவ்வருடம் நான் ஒரு நாவல் எழுத முயன்று கொண்டிருந்தேன். அந்த மாலையில் விமானத்திலும் காரிலும் நாவலின் அத்தியாயம் எழுதிக் கொண்டு தான் இருந்தேன். வீட்டுக்கு போன பின் அப்பாவின் உடல் அருகே போய் அமர்ந்து கொண்டேன். அப்போது தான் எழுதுவதை நிறுத்தினேன். ஆனால் நான் இப்போதுள்ள நிலையில் அப்பாவின் உடல் அருகே அமர்ந்தும் தடதடவென என் கீபோர்டில் தட்டிக் கொண்டு இருந்திருப்பேன்.
இன்னொரு முறை நான் நோயில் விழுந்து பத்து நாட்கள் கோமா நிலையில் இருந்தேன். சட்டென விழித்துக் கொண்டேன். அரைமணியில் நிலைப்பெற்றேன். கைகால் மூட்டுகள் இறுகி இருந்தன. ஒழுங்காய் எழுந்து அமர முடியவில்லை. ஆனாலும் உடனே இரு கட்டுரைகள் எழுதினேன். நான் எப்படி கோமாவுக்கு சென்றேன், எனக்கு நடந்த கொடூரங்கள் என்ன, மருத்துவமனைகள் நீரிழிவாளிகளை நடத்தும் விசித்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி.
இதை விட பெரிய துயரங்களை எல்லாம் இக்கல்லூரி எனக்கு தந்து விடாது என நம்புகிறேன்.”
அவர் “உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்” என்றார்.
நான் அன்று கோரியதைப் போன்றே இங்குள்ள இந்த நெருக்கடியிலும் என்னால் எழுத்துக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.


Comments