செவிடர்களின் நகரம் (2)

Image result for speaking sign language

கன்னட தேசியவாத மாணவர் என் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து திரும்ப திரும்ப “நாங்கள் நல்லவர்கள். பண்பாளர்கள். அதனாலே வந்தேறிகளை இங்கே ஆதிக்கம் செய்ய அனுமதிக்கிறோம்” என பேசிக் கொண்டு சென்றார்.
நான் குறுக்கிட்டு சொன்னேன், “தம்பி நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் நல்லெண்ணம் காரணமாய் அந்நியர்களை இங்கு அனுமதிக்கவில்லை. உங்களுக்கு அவர்களின் தேவை இருந்தது. இங்கு மென்பொருள் துறையை ரத்தினக் கம்பளம் பரப்பி நீங்கள் அழைத்தது உங்கள் கன்னட பண்பாட்டை அவர்களுக்கு கற்றுத் தர அல்ல. அவர்கள் கொண்டு வரும் செல்வத்துக்கும் வளர்ச்சிக்காகவும் தான். பிறமொழிக்காரர்கள் இங்கு வந்து நிறுவனங்களை அமைத்தும் வேலை செய்தும் உங்கள் மாநிலத்தை செழிக்க வைத்தார்கள். அதற்காகவே அவர்களை அனுமதித்தீர்கள். அவர்கள் தம் பங்களிப்பை அவ்வகையில் செய்யும் வரையிலும் நீங்கள் அவர்கள் இங்கு தொடர்வதை அனுமதிப்பீர்கள். அதுவே பிற மாநிலத்தவர்களுக்கும் உங்களுக்குமான உடன்படிக்கை. ஆனால் அதற்கு மாறாக அவர்கள் உங்கள் பண்பாட்டுக்கும் மொழிக்கும் அடிமையாக மாறி கன்னடம் கற்று கன்னடியராக தங்களை காட்டிக் கொள்ள வேண்டும் எனக் கூறுவது அபத்தமானது. அதற்காக நீங்கள் முதன்மையாக அவர்களை இங்கே அழைக்கவில்லையே.

 இதையே உலகமயமாக்கலுக்கும் சொல்லலாம். ஒரு ஜப்பானிய நிறுவனம் தமிழகம் வந்து கார் தொழிற்சாலையை ஆரம்பிக்கிறார்கள். அவர்களிடம் சென்று தமிழ்ப்பண்பாட்டை பரப்பும் வண்ணம் அவர்களின் கார்களுக்கு தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும். அங்கு தமிழர்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என நாங்கள் வற்புறுத்த மாட்டோம். ஏனெனில் அதற்காக அவர்கள் இங்கு வரவில்லை.”
மாணவர் உடனே உரிமையாளர் முகமூடியை கழற்றி விட்டு பாதிக்கப்பட்டவர் முகமூடியை அணிந்து கொண்டார்:
“சார் நீங்கள் எங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடன் வாழும் போது நீங்கள் எங்கள் பண்பாடு, மொழி ஆகியவற்றுடன் அந்நியப்பட்டு இருந்தால் அது எங்களின் கன்னத்தில் அடிப்பது போல் அல்லவா? என்னுடைய இருக்கையில் உங்களுக்கு கொஞ்சம் இடம் அளிக்கிறேன். நீங்கள் மெல்ல மெல்ல என்னைப் பிடித்து கீழே தள்ளி விட்டு முழுஇடத்தையும் பிடித்துக் கொள்கிறீர்கள். நாங்கள் அதனால் கீழே கிடக்கிறோம் சார்!”
“நீங்கள் பிற மொழியினரால் பயன்பெறவில்லை என்பது அப்பட்டமான பொய். இந்த பல்கலையை எடுத்துக் கொள்ளுங்கள். இங்குள்ள பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சுற்றுவட்டாரங்களில் விடுதிகளிலும் வீடுகளிலும் தங்குகிறார்கள். அவர்களிடம் இருந்து நீங்கள் பூர்வகுடிகள் அதிக வாடகை வசூலிக்கிறீர்கள். ஐயாயிரம் ரூபாய் வீட்டை பதினைந்தாயிரத்துக்கும், பத்தாயிரம் ரூபாய் வீட்டை இருபத்தைந்தாயிரத்துக்கும் வாடகைக்கு விடுகிறீர்கள். இங்குள்ள ஓட்டல்கள், கடைகள் அனைத்தும் இம்மாணவர்களை நம்பி இருக்கின்றன. இவர்கள் ஒரு பெரிய தொகையை உங்களுக்கு வருமானமாய் கொணர்கிறார்கள். இவர்கள் இல்லையென்றால் இங்குள்ள கன்னட வணிக நிறுவனங்கள் கடையை சாத்தி விட்டு போக வேண்டியது தான். இங்கு தினம் தினம் கட்டப்படும் வீடுகளில் குடியிருக்க ஆட்கள் இருக்க மாட்டார்கள். இந்த பொருளாதார பங்களிப்பை முழுக்க புறமொதிக்கி விட்டு ஏதோ நீங்கள் பெரிய மனதோடு அடுத்த மாநிலத்தவரை இங்கு வாழ அனுமதிப்பதாய் கூறுவது ஆபாசமானது.
இன்னொரு விசயம். பலர் இங்கே தற்காலிகமாய் வசிக்க வருகிறார்கள். அவர்களுக்கு கன்னடம் கற்பதில் பயனில்லை. ஒருவேளை அவர்கள் இங்கு நீண்ட காலம் தங்கி விட்டாலும் தமது சொந்த ஊர்க்காரர்களை சந்தித்து ஒரு சமூகமாய் இணைந்து கொள்கிறார்கள். இதுவே இந்தியாவின் சிறப்பு. நீங்கள் சென்னையில் பல தலைமுறைகளாய் வாழும் மார்வாரிகளைப் பாருங்கள். அவர்களுக்கு தமிழ் வாசிக்க தெரியாது. பலர் இங்கே ஓட்டுப் போடுவது கூட இல்லை. ஏனெனில் அவர்கள் இங்கு ஒரு தனி சமூகமாய் வாழ முடிகிறது. அவர்கள் பொதுப் பண்பாட்டு நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் கட்டாயம் இல்லை. அப்படி வாழும் உரிமை பன்மைத்துவத்துவத்தை காப்பாற்றுகிறது. அதை நம் இந்திய அரசியலமைப்பு அனுமதிக்கிறது.”
“அவர்களை இருக்க வேண்டாம் என நான் கூறவில்லை. எங்கள் பண்பாட்டை மதித்து பின்பற்றுங்கள் என்று தானே கூறுகிறேன்.”
“தம்பி நான் உங்களுக்கு ரெண்டு உதாரணக் கதைகள் சொல்கிறேன்.”
“சொல்லுங்க”
“நீங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு உரிமையாளர். உங்கள் குடியிருப்பில் பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய, கிறித்துவ குடும்பங்கள் வசிக்கின்றன. உரிமையாளரான நீங்கள் தீவிர இந்து. ஒவ்வொரு ஞாயிறும் உங்கள் வீட்டில் படோபமாய் பூஜை செய்கிறீர்கள். உங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் அனைவரும் கட்டாயமாய் இப்பூஜையில் கலந்து கொண்டு இந்துக் கடவுளை வழிபட்டாக வேண்டும் என்கிறீர்கள். அது எவ்வளவு கொடுமையான வன்முறையாக இருக்கும். நீங்கள் அனைவரும் கன்னடம் கற்றாக வேண்டும் என்பது அப்படியான வன்முறை தான்.”
“நீங்கள் எங்களை வீட்டு உரிமையாளராக சித்தரித்ததை ரசித்தேன். ஆனால் நீங்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை. எங்கள் வீட்டில் வசிப்பதானால் எங்களைத் தானே நீங்கள் பின்ப்ற்ற வேண்டும்? சரி, அடுத்த உதாரணத்துக்கு வாருங்கள்.”
“செவிடர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு நகரம். அவர்கள் தன்னிறைவாய் வாழ்கிறார்கள். ஆனால் தமது பொருளாதார நிலை மேம்பட வேண்டும், முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என எண்ணி அவர்கள் செவிடர்கள் அல்லாத மனிதர்களை தம் நகரத்துக்கு வந்து வணிகம் செய்ய அழைக்கிறார்கள். செவிடர் அல்லாதவர் அந்நகரத்தை சொர்க்கபுரியாக மாற்றுகிறார்கள். பணம் கோடி கோடியாக வந்து குவிகிறது. அத்துடன் தமக்கு ஏற்றபடி அந்நகரத்தை மாற்றி அமைக்கிறார்கள். செவிடர் அல்லாதவரின் பண்பாட்டு வடிவங்கள், கலைகள், ஊடகங்கள் அங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன. பேசும் படங்கள், ஏராளமான டிவி சேனல்கள், இசை நிகழ்ச்சிகள், ஹாரன் அடிக்கும் வாகனங்கள், சதா பேசிக் கொண்டே இருக்கும் மக்கள் என அந்த நகரமே முழுக்க மாறுகிறது. இது செவிடர்களுக்கு தொந்தரவாகிறது. தமக்கு புரியாத தமக்கு பயனில்லாத விசயங்கள் அங்கு தொடர்ந்து நடப்பது தம்மை புறக்கணிப்பதாகும் என நினைத்து கொதிப்படைகிறார்கள். அதனால் அவர்கள் செவிடர் அல்லாதோரை மொத்தமாய் அழைத்து பேசுகிறார்கள். ’நாங்கள் உங்களுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் நீங்கள் செவிடர்களுக்கான சைகை மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். இனிமேல் நீங்கள் அனைவரும் சைகை மொழியிலே முழுக்க உரையாட வேண்டும். எங்களுடன் மட்டுமல்ல, உங்களுக்கு மத்தியிலும் கூட. வீட்டிலும் அலுவலகத்திலும் கோயிலிலும் திரையரங்கிலும் இனி சைகை மொழியிலே நீங்கள் பேச வேண்டும்.’
செவிடர் அல்லாதோர் குழம்பி விட்டார்கள்: ‘ஆனால் ஐயா எங்களுக்குத் தான் காது கேட்குமே. நாங்கள் ஏன் சைகை மொழியில் பேச வேண்டும்?’
‘உங்களுக்கு காது கேட்கும் தான். ஆனால் எங்களுக்கு கேட்காதே. எங்களுக்கு கேட்காத ஒலியை நீங்கள் எழுப்புவது எங்களை அவமதிப்பதாக இருக்கிறது’”
மாணவர் சொன்னார், “சார் இந்த கதை நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு ஊர் முழுக்க அப்படி செவிடர்களாக இருப்பார்களா?”
“ஆமாம் இருப்பார்களே”
“எங்கே?”
“இதோ இங்கே, இந்த ஊரில் தான்”
“சார் உங்கள் முகத்தில் இந்த டீயை கொட்டி விடலாம் போலிருக்கிறது. ஆனால் நான் சகிப்புணர்வு மிக்கவன் என்பதால்….”


Comments

ko.punniavan said…
சிறுபான்மையினருக்குப் பெரும்பான்மையினர் தரும் தொந்தரவுகள் குறித்த சரியான சாட்டையடி இக்கட்டுரை.
bk said…
கன்னட சகோதரர்களுக்கு புரியுமா
Anonymous said…
அருமையான உரையாடல் :)
இது மாதிரியான மனிதர்களை பெங்களூரில் பார்த்துள்ளேன்.

வேலையில் சேர்ந்த முதல் நாள் உனக்கு கன்னடம் பேச வருமா - என்று ஒரு சக ஊழியர் கேட்டார். எனக்கு கொஞ்சம் தான் தெரியும் என்று சொன்னேன் - சில நாட்களில் அவர் சீமான் கோஷ்டி(கன்னட version) என்று புரிந்து கொண்டேன். இன்று எங்கும் இது போன்ற மனிதர்களும் (அவர்தம் எண்ணங்களும்) வலு பெற்று வருகின்றன :(
இம்மாதிரியான எண்ணங்களை மிக எளிதாக மக்கள் (அனைவரும் அல்ல) ஏற்று கொள்கின்றனர்.


இது சிறந்த உரையாடயலாக இருந்தாலும் சற்று கவனமாக இருக்கவும். இம்மாதிரியான எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மனிதர்கள் சற்று ஆபத்தானவர்கள்.

please keep writing :)
Senthil Prabu said…
மிகவும் ரசித்தேன் !!
shiva said…
இது மொழி வெறிபிடித்த தமிழர்களுக்கும் பொருந்தும்..
Bala said…
Great,
Continue..... Pls