ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (2)


அன்றாடத்தின் கவனச்சிதறல்களில் இருந்து, வேலையின் அலைகழிப்பில் இருந்து, அபத்தமான மனிதர்களிடம் இருந்து ஒரு எழுத்தாளன் தப்பிப்பது எப்படி? என எனக்கு கீழ்வரும் விசயங்கள் தோன்றுகின்றன:
1)   அன்றாட விசயங்களில், தினசரி சகமனித உரையாடல்களில், சந்திப்புகளில் (நமக்கு பயன்படாது எனத் தோன்றும் சமாச்சாரங்களில்) உணர்ச்சியை வீணடிக்காமல் இருப்பது.

2)   முடிந்த வரை பட்டும்படாமல் நடந்து கொள்வது. எல்லாரிடமும் நடிப்பது. இது போலித்தனமோ பாசாங்கோ அல்ல. இது ஒரு சிறந்த கலை. நீங்கள் ஒருவரிடம் சிரிக்கிறீர்கள். ஆனால் சிரிக்கிறீர்கள் எனும் உணர்வு உங்களுக்குள் உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டை, அலுவலகத்தை, ஒரு பொதுவெளியை ஒரு நாடக அரங்காக பயன்படுத்துகிறீர்கள். இதில் ஒரு தனி சந்தோசம் உள்ளது. முயன்று பாருங்கள். நீங்கள் இயல்பாக உண்மையாக வெளிப்படையாக எல்லா இடங்களிலும் இருப்பது நல்லதல்ல. விரைவில் களைத்து விடுவீர்கள். பொய் அழகானது.
3)   கிடைக்கும் நேரத்தில் எல்லாம் எழுதுவது.
4)   எழுதும் போது நமக்காக ஆற்றலை வளர்த்துக் கொள்வது. இது பயிற்சியின் விளைவாக தானே நிகழும். நான் எழுதி பாதி வாக்கியத்தின் நடுவே லேப்டாப் கீபோர்டில் என்னையறியாது சாய்ந்து உறங்கி இருக்கிறேன். அவ்வளவு கடும் களைப்பிலும் என்னால் இப்போது எழுத முடிகிறது. எழுத கை வைத்ததும் வயாக்ரா உண்ட ஆண்குறி போல் நான் விரைத்துக் கொள்கிறேன், எப்போதும்.
5)   எழுதும் போது மிக உற்சாகமாய், துடிப்பாய் நம்மை வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு பிரமை தான். ஆனால் தொடர்ந்து பயின்றால் நாம் எழுதும் போதே தனி உயிர்ப்புடன் இருப்பதை அறிய முடியும். இதை நான் ஜெயமோகனிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவரை முன்பு அலுவலகத்துக்கு பார்க்க போவதுண்டு. மதியம் குட்டித் தூக்கம் போடுவார். நான் அவர் அருகில் காத்திருப்பேன். அவர் விழித்துக் கொண்டதும் ஸ்விட்ச் போட்ட பொம்மை போல் என்னிடம் இலக்கியம், எழுத்து, வாழ்க்கை என மிகுந்த உற்சாகத்துடன் உரையாட ஆரம்பிப்பார். Lag என்று நாம் இன்று காணொளிகள், மின்கருவிகளுக்கு சொல்வோமே. ஒரு எழுத்தாளன் எனும் கிரீடத்தை அணியும் போது ஜெயமோகனிடம் அரைவினாடி lag கூட இராது. எழுத்தாளன் சோர்வாக இருக்கக் கூடாது, எதிர்மறை சிந்தனைகளை வளர்க்கக் கூடாது என அவர் என்னிடம் வலியுறுத்துவார். தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகள் நம் எழுத்தை பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்பார். ஒரு தேநீர் அருந்துவதைக் கூட அவர் எழுத்தை சுற்றியே திட்டமிடுவார். நம் சூழலில் எழுத்தாளனாய் இப்பண்பு மிக அவசியம்!
6)   இறுதியாக, முழுநேர எழுத்தாளனாய் இருப்பது மேற்குறிப்பிட்ட அல்லல்களில் இருந்து தப்பிக்க நிச்சயம் உதவும். ஆனால் வாழ்க்கையில் ஏதாவது அன்றாட தொந்தரவுகள், குறுக்கீடுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். கொசுவிடம் இருந்து தப்பித்தாலும் அதன் ரிங்காரம் நம்மை விடாது. ஆனால் முழுநேர எழுத்து மிகப்பெரிய சௌகரியமே. அது வாய்க்காதவர்கள் வேறுவகையில் வாழ்க்கையை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நிறைய பொருள் ஈட்டி நிலைப்பெற்ற பின் எழுதலாமே?
1)   ஆனால் பத்து வருடங்கள் கழித்து நமக்கு எழுதும் ஆர்வம், தேவை, ஆற்றல் இருக்குமா?
2)   பத்து வருடங்கள் கழித்து நாம் உயிருடன் தான் இருப்போமா?
3)    மேலும் இந்த பத்து வருடங்கள் நான் எழுத்தில் இழக்கப் போவதை எப்படி ஈடுகட்டுவது?
இக்கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை. ஆகையால், நான் எதிர்காலத்தில் அமையப் போகும் ஒரு கற்பனையான எழுத்து வாழ்வுக்காக எனது “இன்றை” நடைமுறைத் தேவைகளின் பலிபீடத்தில் வெட்டி சாய்க்க மாட்டேன்.


Comments