வேலையே செய்யாமல் ஏன் இருக்கக் கூடாது? (2)

Image result for corporate job
ஒரு மனிதனின் அடிப்படை தேவைகள் பலவற்றை இன்றைய வேலைகள் நிறைவேற்றுவதில்லை. அதனாலே நாம் வேலைகளை உதறுகிறோம். அல்லது அப்படி உதறுவதற்காய் தவித்தபடி இருக்கிறோம். அல்லது வேலையில் இருந்தபடியே கேளிக்கைகள் வழி மெல்லக் கொல்லும் பழக்கங்களில் கரைகிறோம்.
ஏன் இன்றைய வேலைகள் என்கிறேன்? ஐம்பது வருடங்களுக்கு முன்பான வேலைகள் நிறைவானவையாய் இருந்தனவா? அல்ல. அன்றைய நிலப்பிரபுத்துவ சூழலுக்கு வேலையில் இருந்து பெரும் எதிர்பார்ப்புகள் இல்லை.

 எரிக் புரோம் Fear of Freedom நூலில் நிலப்பிரபுத்துவ காலம் மக்களை தனிமனிதர்களாக அன்றி மந்தையாகவே வைத்திருந்தது என்கிறார். ஆக, மந்தையாக உணரும் மக்களுக்கு வேலையில் பெரிய எதிர்பார்ப்புகளோ ஏமாற்றமோ இருக்காது. ஆனால் இன்று ஊழியர்கள் தம்மை தனிமனிதர்களாய் காண்கிறார்க்ள். இந்த வேலை என் கடமை என்றல்ல, இந்த வேலையினால் நான் அடைவதென்ன என்றே யோசிக்கிறார்கள். இது பல பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றன.
மேலும் இன்று நம் தேவைகள் அதிகரித்து விட்டன. அதனாலே இன்றைய வேலைகள் நமக்கு ஏமாற்றம் அளிக்கின்றன. நமது ஆதாரமான ஆவல்கள், நாட்டங்கள், முன்னோக்கிய பாய்ச்சல்களில் இருந்து இன்றைய வேலைகள் அந்நியப்பட்டு நிற்கின்றன. நாம் இன்று நம்மை ஒரு கக்கூஸ் கழுவுகிறவனாய், பிளம்பராய், சவரம் செய்பவனாய் (இன்னொரு நேர் எதிர் எல்லையில் நேர்த்தியான ஆடைகளும் டேகும் ஹெல்மெட்டும் அணிந்த கார்ப்பரேட் கூலியாய்) காண விரும்பவில்லை. முன்பு ஒருவர் மரமேறி தேங்காய் பறிப்பவனாய் வாழ்ந்ததற்கு பெரிதாய் அலட்டிக் கொண்டிருக்க மாட்டார் (அப்படி வாழ்வது சரி என நான் கூறவில்லை). ஆனால் இன்று அந்தஸ்து குறைவான வாழ்க்கை கடும் கசப்பை, நெருக்கடியை நமக்கு ஏற்படுத்துகிறது.
 “நீ இந்த வேலைகளை ரசித்து செய்யவே வேண்டும், இல்லாவிட்டால் நீ சோம்பேறி!” என்று இன்று ஒருவரை நோக்கி நாம் தீர்ப்பு வாசிக்க முடியாது. அதே போல இன்னொரு பக்கம் “உன்னை இலவசங்கள் மூலம் இந்த அரசு சோம்பேறி ஆக்குகிறது” என கூவுவதும் நியாயம் அல்ல.
சோற்றுக்காய் வேலை செய்ய, சோற்றடிமைகளாய் இருக்க நாம் இன்று தயாரில்லை என்பதை நான் ஒரு முக்கிய வளர்ச்சியாகவே காண்கிறேன். இந்த அதிருப்தியை “சோம்பேறித்தனம்” என நாம் எளிமைப்படுத்தி காறித் துப்பாமல் இன்றைய மனிதனின் பரிதவிப்பை, முணுமுணுப்பை, அலறலை, கூக்குரலை ஏன் நாம் காதுகொடுத்து கேட்கக் கூடாது? வீட்டு வேலைக்கு ஆட்கள் வர விரும்பவில்லை என்றால் அவர்கள் அவ்வேலையுடன் உறைந்து போக விரும்பவில்லை; சமூக ஏணியில் மேலேற விரும்புகிறார்கள், அதற்காய் தவிக்கிறார்கள், உங்கள் வீட்டில் எச்சில் பாத்திரம் தேய்ப்பது அவர்களுக்கு அவமானமாய் இருக்கிறது என ஏன் புரிந்து கொள்ளக் கூடாது? கார்ப்பரேட் வேலையை உதறி விட்டு சும்மா இருப்பவர்களுக்கு அவ்வேலை ஏதோ ஒரு விதத்தில் போதாமையை ஏற்படுத்துகிறது என ஏன் பார்க்கக் கூடாது? ஏன் எல்லாரும் எப்போதும் எந்திரம் போல் புகாரின்றி வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்?
இதன் நீட்சியாய் ஒரு கேள்வி: ஒரு முன்னேறிய, வளர்ந்த சமூகத்தில் மனிதர்கள் ஏன் வேலையே செய்யாமல் இருக்கக் கூடாது?
நிச்சயம் கூடாது!

மனிதன் மகிழ்ச்சியாய் இருக்க வேலை அவசியம். தன்னை அறியவும் நிரூபிக்கவும் நிறுவவும் மனிதனுக்கு வேலை அவசியம். ஒரு சிறந்த சமூகத்தில் ஒவ்வொருவனும் தனக்குத் தோதான வேலை என்ன என்பதை உணர்ந்து அதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கும். அதை உணர்வதற்கான பண்பாட்டு பயிற்சியையும் அச்சமூகமே அவனுக்கு அளிக்கும். நம் இந்திய சமூகம் அப்படியான ஒரு சமூகம் அல்ல என்பதே அவலம்!

Comments

Anonymous said…
மதிப்பான தங்களுக்கு

நான் கார்போரேட் வேலை விட்டு விரும்பிய படித்தல், பார்த்தல் செய்யலாம் என்று அன்மையில் வேலையை விட்டேன். ஓரளவு பொருளாதாரம் உள்ளது. அதனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து வாழாமல் நம் விருப்பம் போல் வாழ முயற்சி செய்கிறேன். சமுக மதிப்பீடுகள் சாதி பொருத்து இன்னும் உள்ளது. பொருளாதாரம் பொருத்து சிறிதளவே மாறி உள்ளது. வேலை செய்யாமல் எவ்வளவு நாட்கள் தள்ள முடியும் என்று நினைக்கவே மலைப்பாக உள்ளது.