சாருவை யார் சொந்தம் கொண்டாடுவது? (2)

 Image result for charu nivedita

இன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தும் ஆர்வம் கொண்டவரல்ல சாரு. அவருக்கு அன்பையும் ஈடுபாட்டையும் காட்டவே ஆர்வம்.
ஒருவரைப் பார்த்து “தென்னகத்துக்கு மார்க்வெஸ்” என சாரு சொன்னார் என்றால் “உண்மையிலேவா? மார்க்வெஸ் என்றால் யார் தெரியுமா? அவருடனா இவரை ஒப்பிடுவது?” என்றெல்லாம் நான் கேட்க மாட்டேன். சாரு அந்த குறிப்பிட்ட இளம் எழுத்தாளர் மீதான மிதமிஞ்சிய பிரியத்தை காட்ட அப்படி சொல்கிறார் என புரிந்து கொள்வேன்.

மிகை, போலி, செயற்கை, பொய் போன்ற சொற்களுக்கு சாருவின் அகராதியில் இடமில்லை. எதையும் அவர் தன் உணர்வுகளைக் காட்டவே பயன்படுத்துவார். அவர் எந்த உண்மையையும் கூற முயல்வதில்லை என்பதால் அவர் பொய்யும் சொல்வதில்லை. அவர் எதையும் சொல்ல முயல்வதில்லை. அவர் காட்டவே செய்வார். அதற்கு அவர் தன் கருத்துக்களை, வாதத்திறனை, தான் கற்ற கோட்பாடுகளை எடுத்து வீசுவார்.
இதை நான் ஒரு குறை என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் சாரு ஒரு பின்நவீனத்துவ பிறவி. பிறர் பின்நவீனத்தும் உதிர்ப்பார்கள். சாரு பின்நவீனத்துவமாகவே வாழ்வார். அதாவது, தமிழில் பின்நவீனத்துவம் அறிமுகமாகுமுன்னரே சாரு பிறந்து விட்டார். பின்நவீனத்துவம் என்றால் என்ன என அறியுமுன்னரே சாரு பின்நவீனத்துவமாகத் தான் இருந்தார். பின்நவீனத்துவம் ஒரு வாழ்க்கை நிலையாக இருந்தால் எப்படி இருக்கும் என அறிய சாருவை பின்தொடர்ந்தாலே போதும்.
இந்த கோணத்தில் லுலுவை அவர் பாராட்டியதை புரிந்து கொண்டால் அதில் எந்த சிக்கலும் இல்லை.
சாருவின் வாசகர்கள் உண்மையிலேயே புத்தகம் எல்லாம் படிக்கிறார்களா என ஒரு நண்பர் என்னிடம் விசாரித்தார். நான் அறிந்த வரையில் படிக்கிறார்கள். ஆனால் சாருவை படித்திருப்பது அவர்களின் முழுமுதல் தகுதி அல்ல. (சாருவே அதை எதிர்பார்த்தாலும் கூட) சாருவும் அவர் எழுத்தும் வேறுவேறல்ல. அவரது எழுத்தின் அத்தனை சிறப்பியல்புகளும் அவரது ஆளுமையில் உள்ளது தான். அவரை நெருங்குகிறவர்களுக்கு உண்மையில் அவரை படிக்க அவசியமே இல்லாமல் ஆகிறது. சாருவின் முக்கிய ஈர்ப்பே இது தான் எனத் தோன்றுகிறது.
சாருவை ஒருவர் சொந்தம் கொண்டாட நினைப்பதும், அதனால் பொறாமை போட்டியுணர்வு ஏற்பட்டு கலவரச் சூழல் தோன்றுவதும் அவரே ஒரு புத்தகமாய் இருப்பதனால் தான். நீங்கள் ஒரு புத்தகத்தை வாசித்து அதை உங்கள் சொந்த பிரதியாக வைத்து ரசிக்கலாம். ஆனால் ஒரு மனிதனுக்கு பிரதி இல்லையே. ஒரு புத்தகத்தை ஆயிரம் பிரதி அச்சிட்டால் ஆயிரம் பேர் ஒரே சமயம் படிக்கலாம். ஆனால் ஆயிரம் பேர் ஒரே சமயம் சாருவுடன் பழக முடியாது. இதனால் இயல்பாகவே அவருடன் நேரம் செலவிடுவது சம்மந்தமாய் அவரது வாசகர்கள் இடையே போட்டியும் பொறாமையுடன் ஏற்படுகிறது.
சாருவுடன் பழகுவதன் முக்கிய பலன் இது: எப்படி கட்டற்று வாழ்க்கையை அணுகி கொண்டாடுவது, மகிழ்ச்சியையும் கோபத்தையும் துயரத்தையும் ஆற்றில் நீச்சலடிப்பது போல் கடப்பது எப்படி என அவர் உங்களுக்கு கற்றுத் தருவார். மிகையும் மீறலும் தான் அவரது ஆயுதங்கள். அந்த அஸ்திரங்களை உங்கள் கையில் கொடுத்து உலகை சுயமாய் சந்திக்க அனுப்பி விடுவார்.
புத்தக வாசிப்பு, சிந்தனைப் பயிற்சி, கோட்பாட்டு வாள்வீச்சு, தர்க்க ஒழுங்கு, அரசியல் போதம், சமூக சிந்தனை, போராட்டம், புரட்சி ஆகியவற்றை விட சாரு தரும் வாழ்க்கைப் பாடம் மேலானது என எனக்கு இப்போது தோன்றுகிறது.
ஏனென்றால் நாமெல்லாரும் மகிழ்ச்சிக்காகத் தான் உயிர் வாழ்கிறோம்? வேறு எவரையும் விட சாருவின் வாசகர்கள் அதிக மகிழ்ச்சியானவர்கள். ஆனால் இந்த மகிழ்ச்சிக்காக சண்டை சச்சரவு வரத் தான் செய்யும்.
என்னை திட்டுவதென்றால் வீட்டுக்குள் வைத்து திட்டுங்கள், பொதுவெளியில் அவமானப்படுத்தாதீர்கள் என தன் வாசகர்களிடம் சாரு சொல்வது படிக்க சற்று வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் எந்த எழுத்தாளன் “என்னை தாராளமாக திட்டிக் கொள், அந்த உரிமை உனக்கு உண்டு” என வாசகனிடம் தன்னை ஒப்புக் கொடுப்பான் சொல்லுங்கள்?

(இதைப் படித்து விட்டு சாருவின் வாசகர்கள் சிலர் “சாரு உங்களை அபிலாஷ் நையாண்டி செய்திருக்கிறார் கவனித்தீர்களா? உங்களை அவர் பாராட்டவில்லை, ரொம்ப கேவலமாய் கேலி செய்திருக்கிறார்.” என்றெல்லாம் சொல்லி உருவேற்றுவார்கள். அரைமணி இந்த கேன்வாஸிங் நடந்தால் சாருவே பற்களை நறநறவென கடித்து கண்ணை உருட்டி “ஆமா ஆமா அவன் என்னை பகடி பண்ணியிருக்கிறான். எவ்வளவு கொழுப்பு?” என கொதித்துப் போவார். “நம்ம வந்த ஜோலி முடிஞ்சு போச்சு” என அவர்களும் கிளம்புவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இந்த விளையாட்டை நான் ரசிக்கிறேன் சாரு!)


Comments

Anonymous said…
என் எண்ணங்களின் சில பிரதிபலிப்புகளை இந்த பதிவில் காண்கிறேன்.
Anonymous said…
He is a role model and such an unique personality.