செவிடர்களின் நகரம் (1)

Image result for kannada linguistic chauvinism

எம்.ஸி.ஸியில் நான் படிக்கையில் மலையாளிகள் × தமிழர்கள் என இரு முகாம்கள் இருந்ததுண்டு. மலையாளிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என தமிழர்கள் புகார் தெரிவிப்பார்கள். நான் வாழ்ந்த விடுதியில் நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கும் மாணவர்களைக்கென தேர்தல் நடக்கும். அதில் மலையாளிகளை தோற்கடித்து தமிழர்களை பதவிக்கு கொண்டு வர வேண்டுமென எனும் போட்டியில் விடுதி மாணவர்களிடையே பிளவு ஏற்பட்டது. எங்கள் வார்டனே இதைத் தூண்டி விட்டார்.
இங்கு கிறைஸ்ட் பல்கலையில் பல மொழி பேசும் மாணவர்களுடன் பழகி வருகிறேன். எனக்கு வங்காளிகளைப் பிடிக்கும் என்பதால் அவர்களுடன் கூடுதலாய் ஒட்டிக் கொள்கிறேன். தமிழ், மலையாளம் பேசும் ஆசிரியர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். மற்ற மொழிக்காரர்களுடன் நான் உரையாடுவதெல்லாம் ஆங்கிலத்தில் தான். பிற மொழிக்காரர்கள் மீதான வெறுப்பை இங்கு அதிகம் கண்டதில்லை. ஒருவித காஸ்மோபோலிட்டன், கார்ப்பரேட், பின்நவீன கலாச்சாரம் அதற்கு முக்கிய காரணம்.

ஒருமுறை என் மாணவி ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் வடக்கத்திய மாணவர்கள் தென்னிந்தியர்களை பொருட்படுத்துவதில்லை என புலம்பினார். நான் அந்த உரையாடலை அதிகம் ஊக்குவிக்கவில்லை. ஏனெனில் அது ஏற்கனவே பிளவுண்ட வகுப்பு. தங்கள் ஒற்றுமிமையின்மைக்கு காரணம் கண்டுபிடிக்கிறார்கள் என கருதினேன்.
கிறைஸ்ட் மாணவர்கள் குறித்த சித்திரம் லேசாய் மாறியது இங்கு யக்‌ஷ்கானா நாடகம் அரங்கேற்றப்பட்ட போது தான். அதற்கு முழுக்க கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மாணவர்களே வந்திருந்தார்கள். அவர்களை மொத்தமாய் பார்க்கையில் தோற்றம், உடல்மொழி, நடவடிகை, பேச்சு, ஆடை என ஒவ்வொன்றிலும் எப்படி பிற மாணவர்களுடன் மிகவும் வேறுபட்டிருக்கிறார்கள் என கவனித்தேன். சென்னையின் பிரசிடென்ஸி, குயின் மேரிஸ் மாணவர்களுக்கும் எம்.ஸி.ஸி, டபிள்.யு.ஸிஸி மாணவர்களுக்குமான வேறுபாடு அது. மையநீரோட்டத்தில் இருந்து கன்னட மண்ணின் மைந்தர்கள் முழுக்க வேறுபட்டு விளிம்பில், யாரும் கவனியாமல் தனித்திருப்பதை புரிந்து கொண்டேன்.
கிறைஸ்டின் எலைட்டான, காஸ்மோபோலிட்டன் மாணவர்களின் பண்பாட்டு முன்னெடுப்பு, பளபளப்பு, துணிச்சலுடன் ஈடுகொடுக்க முடியாது இம்மாணவர்கள் நிழலோடு நிழலாக பதுங்கிக் கிடக்கிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பண்பாட்டு தாழ்வு மனப்பான்மையை அல்லது மறைமுக ஒடுக்குமுறையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்காய் இரங்குகிறேன். ஏனெனில் முதன்முதலாய் சென்னைக்கு படிக்க வந்த போது நானும் இந்த மிரட்டும் நகரமயமாக்கலுக்கு ஈடுகொடுக்க முடியாது தத்தளித்தேன்.
இப்படி விளிம்புக்கு நகர்கிறவர்கள் வன்மமாகவும் மாறுவார்கள். மொழி தேசியவாதம், பண்பாட்டு மிகை பெருமிதம், அடுத்த மொழியினர் மீதான கடும் வெறுப்பு இந்த போதாமையில் இருந்து தோன்றக் கூடும். இந்த மிதவாதிகளின் மனதில் நொதிக்கும் தவிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து பிற மொழிக்காரர்களை நோக்கி “வெளியே போடா வந்தேறிகளே” என கூவும் ஒரு சிலர் முளைத்து வருவார்கள். அப்படியான ஒருவரை நேற்று சந்தித்தேன்.
நானும் ஒரு பேராசிரியரும் தேநீர் அருந்தச் சென்றோம். அவர் ஒரு மலையாளி. ஆனால் பத்து வருடங்களாய் இங்கு வாழ்வதால் பேசுமளவு கன்னடம் தெரிந்து வைத்திருக்கிறார். கடைப்பையன்களிடம் அவர் கன்னடத்தில் அளவளாவ அங்கு ஏற்கனவே தேநீர் அருந்திக் கொண்டிருந்த ஒரு கன்னட மாணவர் உற்சாகமாகி அவரை பாராட்டினார். எந்த ஊரில் நாம் வாழப் போனாலும் நாம் அந்த ஊர் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஊர் மக்களை மதிக்க வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஏன் கன்னடத்தை கட்டாய பாடமாக வைக்கக் கூடாது, இங்கு வேலை செய்ய கன்னடம் கற்க வேண்டும் என்பதை ஏன் கட்டாய விதியாக வலியுறுத்தக் கூடாது என்றெல்லாம் அம்மாணவர் பேசினார்.
 நான் குறுக்கிட்டு சொன்னேன், “தம்பி உங்கள் மொழியை பிறர் கற்றறிய வேண்டும் எனும் உன் ஆர்வம் புரிகிறது. ஆனால் அது இயல்பாக நிகழ வேண்டும். உங்கள் மொழியையும் பண்பாட்டையும் நீங்கள் அடுத்தவர் மீது திணிக்கக் கூடாது. அது நியாயம் அல்ல.”
அவர் உடனே பாதிக்கப்பட்டவர்களின் முகமூடியை அணிந்து கொண்டார். “நாங்களே இம்மண்ணின் பூர்வகுடிகள். நாங்களே இதன் உரிமையாளர்கள். ஆனால் எங்களுக்கு இங்கே இடம் இல்லை. இங்கே வந்தேறிகள் ஆதிக்கம் செய்கிறார்கள். எல்லா சிறந்த வேலைகளையும் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த கல்லூரி கர்நாடக மண்ணில் இருக்கிறது. ஆனால் இங்கே எங்கள் அடையாளம் முன்னெடுக்கப்படுவதில்லை. பெயர்ப்பலகை மட்டுமே கன்னடாவில். ஆனால் மாணவர்கள் சதா ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். மலையாளிகளும் இந்திக்காரர்களும் தத்தமது மொழியில் பேசி குழுக்களை வளர்க்கிறார்கள். நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். எங்கள் மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். இது எங்கள் மண். இங்கே நீங்கள் வாழ்வதென்றால் எங்களை மதித்தே ஆக வேண்டும்.”
“உங்கள் உணர்வு புரிகிறது. ஆனால் உங்கள் மொழியும் பண்பாடும் மட்டுமே மதிப்புக்குரியது. அதைப் பிறர் போற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது மொழிவெறி. நீங்கள் அடுத்த வருடம் வேலை செய்ய சென்னை வருகிறீர்கள். நாங்கள் உடனே உங்களிடம் நீங்கள் தமிழ் கற்று, தமிழில் மட்டுமே பேசி, தமிழை மட்டும் போற்றி வாழ வேண்டும் என நாங்கள் வற்புறுத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா?” என்றேன் நான்.
அவர் உடனே சமாளித்தார்: “சார் நாங்கள் மொழிவெறியர்கள் அல்ல. நாங்கள் பிற பிறமொழிக்காரர்களை இங்கே வந்து தங்க கனிவுடன் அனுமதித்திருக்கிறோம். அவர்களை வெளியே துரத்தவில்லை. எங்கள் மண்ணில் அவர்களை வாழ விடுவதே நாங்கள் மொழிவெறியர்கள் இல்லை என்பதைக் காட்டுகிறது.”
நான் சொன்னேன், “உங்கள் பார்வையே தவறானது. அவர்கள் இங்கே தஞ்சம் கேட்டு வந்த அகதிகள் அல்ல. அவர்களை நீங்கள் இங்கே வாழவும் செழிக்கவும் விடுவது உங்கள் கனிவையோ சகிப்புணர்வையோ காட்டவில்லை.”
“என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் வெறிபிடித்தவர்கள் என்றால் எங்கள் இடத்தை, நாங்கள் அனுபவிக்க வேண்டியதை வடநாட்டவருக்கும் தமிழர், மலையாளிகளுக்கும் விட்டுக் கொடுத்திருப்போமா?”

நான் அவரிடம் கேட்டேன், “சரி அனுமதித்தீர்கள். எதற்காக அனுமதித்தீர்கள்? உங்கள் நோக்கம் என்னவாக இருந்தது?”

Comments