ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (1)

நான் பல சிரமமான வேலைகளில் இருந்துள்ளேன். வீட்டிலும் கடும் நெருக்கடி இருந்துள்ளது. சொல்லப் போனாலும் சரியான எழுதும் சூழலே இருந்ததில்லை. சாலை ஓரமாய் பைக்கில் இருந்து கொண்டு கூட எழுதி இருக்கிறேன்.
 ஒருநாள் என்னை ஏதோ ஒரு டிவியில் பேச அழைத்தார்கள். ஆறு மணிக்கு வர வேண்டி சேனலின் கார் டிரைவர் ஐந்து மணிக்கு வருகிறேன் என்றார். அதன் பிறகு தாமதமாகி விட்டது, ஆறு மணிக்கே வருகிறேன் என்றார். நான் வீட்டில் இருந்து மூன்று மாடிகள் இறங்கி வந்து விட்டேன். திரும்ப மேலே போக தோன்றவில்லை. இடைப்பட்ட நேரத்தில் வேறுவேலையும் இல்லை. அதனால் தான் மேற்சொன்னபடி பைக்கில் இருந்தபடி எழுதினேன். அப்போது பார்த்து ஒற்றைக் கால் இல்லாத ஒருவர் அழுக்கான தோற்றத்தில் என்னிடம் வந்தார். அவர் தனது ஆரம்ப கால வாழ்க்கை, தற்போதைய சிரமங்கள் என பல விசயங்களைச் சொன்னார். நான் அவரிடம் எதையுமே விசாரிக்காமல் அவர் பாட்டுக்கு நீயாநானா பங்கேற்பாளர்கள் போல் ஆற்றொழுக்காய் பேசிக் கொண்டு போனார். நான் உம் கொட்டிக் கொண்டே எழுதிக் கொண்டிருந்தேன்.

என்னுடையதைப் போன்ற ஒரு வண்டி இருந்தால் அவருக்கு அன்றாட வாழ்க்கை சிரமமின்றி போகும் என்றார். நான் தலையாட்டினேன். அவர் சட்டென நான் அவருக்கு ஒரு பைக் வாங்கித் தர வேண்டும் என்றார். ஆகா இது விவகாரமாச்சே என தோன்ற அவரை நைசாக கழற்றி விட்டு கிளம்ப முயன்றேன். ஆனாலும் அவரோ என்னைப் போன்ற பணம் படைத்தநல்லவர்கள்உதவாவிட்டால் அவரைப் போன்றவர்கள் எப்படி பிழைக்க முடியும் என விலாவரியாய் பேச ஆரம்பித்தார். நான் என் சிரமங்களை எடுத்துச் சொல்லி, அவர் அத்தகைய வாகனம் ஒன்று வாங்குவதற்காக உதவ சாத்தியமுள்ள வேறு அமைப்புகளை குறிப்பிட்டேன். அவரோ சட்டென எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றை பாடத் துவங்கினார். ஒற்றைக் காலில் சுழன்று நடனமாடவும் செய்தார். அப்பாடலில் வருகின்ற கருத்துக்களை எனக்கு இடையிடையே விளக்கவும் செய்தார். ரோட்டில் போகிறவர்கள் என்னை விசித்திரமாக பார்க்கத் துவங்கினர். இந்த களேபரத்தில் நான் என் கட்டுரை ஒன்றை முக்கால் வாசி தான் முடித்திருந்தேன். லேப்டாப்பை மூடி விட்டு அவரிடம் இருந்து தப்பித்து வர பெரும்பாடாகியது
என் தினசரி வாழ்க்கை இப்படித் தான் இருக்கிறது
என்னைப் பொறுத்த மட்டில் இந்த உலகமே ஒரு பைத்திய விடுதி தான். எங்கு போனாலும் பைத்தியங்கள் என்னை துரத்துகின்றன என புக்காவஸ்கி ஒரு கவிதையில் எழுதுவார். நான் என் வாழ்க்கையில் பைத்தியங்களிடம் இருந்து தப்பித்து ஓடியபடியே இருக்கிறேன். இங்கு புத்தி சுவாதீனத்துடன் நான் இயங்க தினமும் எழுத தேவையுள்ளது. ஏன் இந்த நிலை?
ஒன்று, மனிதர்கள் தொடர்ந்து அலைகழிப்பிலும் போதாமையிலும் அல்லல்படுகிறார்கள். ஆனால் இவர்களை அலைகழிப்பவை மிக எளிய, மிக அபத்தமான, அற்பமான விசயங்கள் தான். நான் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இச்சென தும்முவதென்றாலும் மீட்டிங் போடுவார்கள். இரண்டு மணிநேரம் கூட்டத்தில் கழிந்தால் நான் கூடுதலாய் அவ்வளவு நேரம் அலுவலகத்தில் இருந்து வேலையை முடிக்க வேண்டும்.
இது போக மற்றொரு கொடுமை அலுவலக மின்னஞ்சல்களை பார்ப்பது. மின்னஞ்சல் என்றாலே நான் அலறுவேன். யாரோ ஒருவர் முடிக்க வேண்டிய வேலையை நம் தலையில் சுமத்தி விடுவார்கள். ஒருவர் ஒரு சந்தேகம் எழுப்பி இருப்பார். அதை புரிந்து கொள்ள சங்கிலித் தொடரான மின்னஞ்சல்களை படிக்க வேண்டும். எதையெடுத்தலும் FYI என நாமம் சாத்தி என்னிடம் அனுப்பி விடுவார்கள். இதில் பாதி நாள் முடிந்து விடும். இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டால் ஒழுங்காய் வேலையை முடிக்க முடியாது. வேலையை முடிக்காவிட்டால் புதுப் பிரச்சனைகள் முளைக்கும். எனக்கு பைத்தியம் பிடித்து விடும்.
ஆக இவை அற்பமானவை, கௌரவமான நேரவீணடிப்புகள் என புரிந்து கொண்டே அவற்றை எல்லாம் செய்வேன்.
 இன்னொரு விசயம் நமது உணர்வு ஆற்றல் (emotional energy). இந்த ஆற்றலே நம் எழுத்தை செலுத்துகிறது. இந்த ஆற்றலை அன்றாட அற்பத்தனங்களில் வீணடிக்காமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும்.
எழுத்தாளர்களில் எளிதில் சின்ன சின்ன விசயங்களால் தூண்டப்படுபவகள். கூருணர்வு மிக்கவர்கள். அதனால் நாம் எதனால் எல்லாம் எப்போதெல்லாம் தூண்டப்பட வேண்டும் என்பதில் ஒரு தெளிவும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும். அல்லாவிட்டால் அன்றாட வேலைகளுக்கு நடுவிலோ வேலை முடிந்து மாலையிலோ நாம் மிகவும் களைத்து, காற்றிறங்கிய பலூன் போல, படுக்கையறையில் களைத்துறங்கும் கணவன் போல இருப்போம். ஒரு வரி எழுதக் கூட சக்தி இருக்காது. அப்போது நாம் நம் வேலையை, பந்தங்களை, குடும்பத்தை, பொறுப்புகளை பழிப்போம். இதன் நீட்சியாக நம்மை பழிப்போம். கசப்பு கொள்வோம்.
இதற்கான தீர்வு என்ன?

அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Comments