வேலையே செய்யாமல் ஏன் இருக்கக் கூடாது? (1)


Image result for ration shop

அரசின் இலவசத் திட்டங்கள் மீதான அவநம்பிக்கையும் கசப்பும் பலரிடமும் உள்ளதை நான் ஊரில் இருக்கும் போதே கவனித்திருக்கிறேன். குறிப்பாய் கிராமங்களில் மேல்மத்திய வர்க்க மக்கள் இதை வலுவாய் உணர்கிறார்கள். முன்பைப் போல் உடலை வருத்தும் வேலைகளுக்கு ஜனங்கள் சுலபத்தில் வருவதில்லை. விளைவாய் …
சோற்றையும் துணியையும் வீட்டு வசதிப் பொருட்களையும் துச்சமாய் அளித்தால் மக்கள் எதற்கு வேலை செய்யப் போகிறார்கள்? இந்த கேள்வி பரவலாய் மேல் மத்திய வர்க்கத்தினரிடமும் எழுந்துள்ளது. இந்திரா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தில் எப்படி போலியாய் கணக்கு காண்பித்து வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குகிறார்கள், இந்த சம்பளத்துக்காய் எப்படி பணக்கார மகன்கள் அம்மாவை காரில் கொண்டு போய் வேலையிடத்தில் இறக்கி கையெழுத்திட வைத்து திரும்ப அழைத்து வருகிறார்கள் என ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார். இந்த கேலிக்கூத்து நிஜம் தான். இலவச அரிசி, மிக்ஸியும், லேப்டாப்புகளும் வெளியே விற்கப்படுவதும், அரிசிக் கடத்தல் இங்கு புது தொழில் வர்க்கத்தையே உருவாக்கி உள்ளதும் உண்மை தான். ஆனால் கேலிக்கூத்தில் மக்கள் பங்கெடுப்பதை விமர்சிப்பதுடன் நில்லாமல் ஏன் அப்படி செய்கிறார்கள் என புரிந்து கொள்ள வேண்டும்.


சில நாட்களுக்கு முன்பு என்னுடைய வகுப்பு ஒன்றில் இடதுசாரி சிந்தனை மக்களை வேலை செய்யும் ஊக்கம் அற்றவர்களாக்குகிறது என ஒரு மாணவி குறிப்பிட்டார். அதை ஒட்டி ஒரு விவாதம் நடந்தது. அதன் பிறகு ஒரு மாணவி என்னை சந்தித்து இலவசங்கள் சம்மந்தமாய் மேற்சொன்ன கருத்தை சொன்னார். அவர் நாக்பூரை சேர்ந்தவர். அங்கும் அரசு அளிக்கும் இலவச அரிசி, துணி, வீட்டு வசதிப் பொருட்கள் உண்டு. இதன் விளைவாக இப்போது வீட்டு வேலைக்கு அங்கு ஆட்களே கிடைப்பதில்லை. கூடுதல் பணம் கொடுத்தால் கூட யாரும் பத்து பாத்திரம் தேய்க்க, வீட்டை சுத்தம் செய்ய வருவதில்லை என்றார். மக்களை அரசே இப்படி சோம்பேறி ஆக்கலாமா என்று என்னிடம் கேட்டார்.

அவருடையதை ஒரு பிற்போக்குத்தனமான பார்வை என சாடாமல், மனிதன் எந்த நோக்கத்துக்காய் வேலை செய்கிறான் என நான் வினவினேன். அது சம்மந்தமாய் பின்னர் சிந்தித்தேன்.
உணவு, உறைவிடம், அடிப்படை வசதிகளை பெறுவது மட்டுமே ஒரு மனிதனை வேலை செய்ய தூண்டுகிறதா? அவை சுலபத்தில் கிடைக்கும் பட்சத்தில் மக்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் குறைகிறதா? இந்த வாதத்தை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொள்வோம் எனில் இக்கேள்விகள் எழுகின்றன: ஒரு மனிதன் உணவுக்கும் அடிப்படை வசதிகளுக்காகவும் மட்டுமே வேலை செய்கிறானா? நம்மை எது உண்மையில் வேலை செய்யத் தூண்டுகிறது?
பெரும்பாலானோர் பணத்துக்காகத் தான் பிடிக்காத வேலைகளை கூட செய்கிறோம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எந்த குறிப்பிட்ட தேவையை (அல்லது தேவைகளை) நிறைவேற்றுவதற்கு போதுமான பணம் நம்மை ஒரு வேலையை செய்யத் தூண்டுகிறது? இந்த கேள்விக்கான பதில் இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்குகிறதா என்பதற்கான விடையாகவும் இருக்கும்.
இந்த கேள்வியை ஏன் கேட்கிறேன் என்றால் பொறியியல், மருத்துவம் போன்ற நன்கு சம்பளம் பெறக் கூடிய தொழில்களைக் கற்ற நண்பர்களில் ஒரு பகுதியினர் சமீபமாய் அத்தொழில்களுக்கு செல்லாமல் குறைவான சம்பளம் தரும் தொழில்களுக்கு செல்வதை அல்லது வேலையே செய்யாமல் படிப்பது எழுதுவது என இருப்பதை அல்லது சும்மா ஊர் சுற்றுவதை சமீபமாய் கவனிக்கிறேன். இன்னொரு பக்கம், வேலை செய்ய ஆரம்பித்து, கை நிறைய சம்பளமும் வாங்கி, பின்னர் வேலையில் பிடிப்பை இழந்து, ராஜினாமா செய்து விட்டு வீட்டோடு இருப்பவர்களையும் தொடர்ந்து காண்கிறேன்.
சமீபத்தில் மது போதை பற்றி ஒரு சுவாரஸ்யமான நூல் படித்தேன். மதுபோதையால் கடுமையாய் பாதிக்கப்படுபவர்கள் வேலையும் கூலியுமற்ற சமூக உதிரிகள், உதவாக்கரைகள் என நாம் நினைப்போம். இந்த நூலாசிரியர் நிறைய ஆய்வுகள் செய்து மற்றொரு முடிவுக்கு வருகிறார். அமெரிக்க சமூகத்தில் மருத்துவம், வணிகம், கார்ப்பரேட் என பல துறைகளில் பெரும் வெற்றி பெற்று உச்சத்தில் இருப்பவர்களே இன்னொரு பக்கம் கடும் போதை நோயாளிகளாய் இருக்கிறார்கள். எப்படியோ போதை அடிமைத்தனத்தையும் கடும் உழைப்பையும் அருகருகில் வைத்துக் கொண்டு, அழகாய் தம் போதை உலகை புற உலகிடம் இருந்து மறைத்துக் கொண்டு, இவர்கள் சமாளிக்க்கிறார்கள். என்றோ ஒருநாள் இவர்களின் கச்சிதமான செப்பு பொம்மை உலகம் ஒரு மணல் கோட்டை போல் சரிகிறது. இவர் போதை அடிமையா என மொத்த சமூகமும் அன்று வியக்கிறது?
 ஆக, நேர்த்தியின்மை, போக்கிரித்தனம் ஆகிய “இழிகுணங்கள்” கடும் உழைப்பு, வெற்றிக்கான தீரா முனைப்பு ஆகிய ”சிறப்பியல்புகளுடன்” கைகோர்த்து செல்ல முடியும் என்பதை நான் அறிந்து கொண்டேன். ரொம்ப ஒழுக்கசாலியாய் தெரிகிறவர் ஒழுக்கமற்றவராகவும் இன்னொரு பக்கம் இருக்கிறார். கடும் உழைப்பாளிகள் இன்னொரு பக்கம் போதையில் அழியும் சோம்பேறிகளும் தான். இவர்கள் எதற்காய் உழைக்கிறார்கள்? குடித்தும் போதை மருந்துகள் பயன்படுத்தியும் இன்னொரு பக்கம் அழிவதற்காகவா?
கிண்டியில் என் வீட்டுக்கு எதிராய் ஒரு பாபா கோயில். அதன் வளாகத்துள் பிச்சைக்காரர்கள் சிலர் வரிசையாய் அமர்ந்திருப்பார்கள். தினமும் பார்ட் டைமாய் வேலை செய்ய ஒரு குடிகாரர் வருவார். அவர் காலை ஏழு மணியில் இருந்து ஒன்பதரை வரை பிச்சை எடுப்பார். அன்று தின்னமும் குடிக்கவும் தேவையான பணம் ஏற்பாடானவுடன் எழுந்து வீட்டுக்கு செல்வார். இவரும் மேற்சொன்ன வெற்றியாளர்களும் ஒன்று தானே?
இல்லை. ஏனென்றால் இவர் பகுதி நேரமாகவும் அவர்கள் முழுநேரமாகவும் அல்லவா வேலை செய்கிறார்கள்? போதையை தாண்டி வேறு எதையோ அடையவும் மேற்சொன்ன வெற்றியாள / போதை அடிமைகள் பணி செய்கிறார்கள். அது தான் பாபா கோயில் பிச்சைக்கார குடிகாரருக்கும் இவர்களுக்குமான முக்கிய வித்தியாசம். அதுவே இவர்களுக்கும் இலவச திட்டங்களில் ”சுகம் கண்டு” வேலையை கைவிடுபவர்களுக்குமான (கூடவே பெரும் படிப்புகள் படித்து விட்டு வேலைக்கே செல்லாதவர்களையும் சேர்க்கலாம்) வித்தியாசம்.
வேலையின் நோக்கம் சம்பளமும் அதன் வாயிலான பௌதிக தேவைகளின் நிறைவேற்றமும் மட்டுமல்ல. வேலை என்பது உங்கள் அகத்தேவை ஒன்றை நிறைவேற்ற வேண்டும். அது உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆழமான திருப்தியும் அளிக்க வேண்டும். அது உங்களுக்கு என்று ஒரு சிறந்த சமூக அடையாளத்தை தர வேண்டும். அது உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகள், தேவைகள், ஆசைகளுக்கு பொருந்தி வர வேண்டும். பத்து பாத்திரம் தேய்க்கும், களை பிடுங்கும், ரப்பர் வெட்டும், மரத்திலேறி தேங்காய் பறிக்கும், மேஸ்திரி, கையாள் வேலைகள் மேற்சொன்ன தேவைகளை நிச்சயம் நிறைவேற்றுவதில்லை. இன்றைய பெரும்பாலான கார்ப்பரேட் வேலைகளும் இத்தேவைகளை நிறைவேற்றுவதில்லை என்றாலும் குறைந்தபட்ச ஆடம்பரங்களையும், அதன் வழி சமூக அந்தஸ்தையும் அவை தருகின்றன. ஆனால் இவையும் போதவில்லை என்பதாலே சமூக வாழ்வில் ஜெயிப்பவர்களும் குடியும் போதை கேளிக்கைகளிலும் சிக்கி அழிகிறார்கள்.
(தொடரும்)

Comments