யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா? (1)
இது ஒரு கோழியா முட்டையா என்பது போன்ற சிக்கல் என உங்களுக்கு தோன்றலாம். ஆனாலும்
இக்கேள்விக்கு என்னிடம் தெளிவான விடை ஒன்று உள்ளது. மேலும் இக்கேள்வி வெகுசுவாரஸ்யமானது
என்றும் எனக்குத் தோன்றுகிறது.
மனிதனின் தேவைகள் ஒரு பண்டத்தை உற்பத்தி பண்ணத் தூண்டுகிறதா அல்லது நேர்மாறா?
சமீபத்தில் ஒரு சமூகவியல் வகுப்பில் ஒரு மாணவி மார்க்ஸிய கோட்பாடு பற்றி பேசும் போது
இவ்விசயத்தை குறிப்பிட்டாள். தேவையே பொருட்களின் உற்பத்தியை நேரடியாய் தீர்மானிக்கிறது
என்றாள். நான் அவளிடம் கேட்டேன், “ஒரு அழகிய சுரிதார் பார்த்ததும், ஒரு புது போன் சந்தையில்
வந்ததும் உங்களுக்கு அதை வாங்கத் தோன்றுகிறது. அங்கே தேவையா அல்லது அப்பொருள் நமக்குள்
தூண்டும் ஆசையா நம்மை வாங்க வைக்கிறது? அதே போல ஒரு புதுப்படம் வெளியாகி அதைப் பற்றி
மீடியாவில் பரபரப்பாய் பேசினால் போய் பார்க்கத் தோன்றுகிறது. நாம் பார்க்க ஆசைப்பட்டதனால்
அப்படம் வெளியானதா அல்லது அப்படம் வெளியானதால் நமக்கு பார்க்க ஆசை தோன்றியதா?
அத்தியாவசிய
பொருளான மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம். உற்பத்தி செய்யப் படும் ஒவ்வொரு மின்சாதனப்
பொருளும் நமது மின்சாரப் பயன்பாட்டை அதிகரிக்க வைக்கின்றன. இப்பொருட்களை கொடு என நான்
சந்தையிடம் கேட்கவில்லை. ஆனால் சந்தை இப்பொருட்களை தட்டில் வைத்து என்னிடம் நீட்ட நீட்ட
எனக்கு கூடுதல் மின்சாரம் தேவையாகிறது. எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு ஒரு பிக்சர் டியூப்
டிவி போதும். நூறு ரூபாய்க்கு கேபிள் கனெக்ஷன் போதும். ஆனால் இரண்டுமே இனி கிடைக்காது
என ஆகும் போது நான் பத்தாயிரம் ரூபாய்க்கு எல்.சி.டியும் மூவாயிரத்துக்கு செட் ஆப்
பாக்ஸும் வாங்க நேர்கிறது. சில வேளைகளில் நமது ஆசை தூண்டப்பட்டு தேவையை சந்தையே உருவாக்கிறது.
சில சந்தர்பங்களில் ஒரு தேவை நம் மீது
திணிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மாசுபட்ட சூழல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான
சந்தையை உருவாக்குகிறது. கார்ப்பரேட்மயமாக்கல் ஒரு நகரப்பகுதியின் நில மதிப்பை பல மடங்கு
செயற்கையாக ஏற்றி விடுகிறது. அங்கு வசிப்பவர்கள் மிகையான வாடகைக்கும் சேர்த்து சம்பாதிக்க
நேர்கிறது. அதற்காக கூடுதல் உழைக்கிறார்கள். வீடு வாங்க வேண்டும் என்பதையே ஒரு கனவாக
வளர்க்கிறார்கள். அதற்காக இருபது வருடங்கள் உழைத்து வங்கிக் கடன் செலுத்தி போராடி இறுதியில்
வீடு எனும் லட்சியத்தை அடைகிறார்கள். ஆனால் வீட்டின் விலையை சந்தை செயற்கையாய் ஏற்றவில்லை
என்றால் (அல்லது ஒரு நகரத்தில் இருந்து மென்பொருள் நிறுவனங்கள் வெளியேறினால்) நீங்கள்
அதே வீட்டை பத்து வருடங்களில் வாங்கி இருக்க முடியும். வீட்டின் மதிப்பு மேலும் குறைந்தால்
உங்களுக்கு வீடு வாங்கும் ஆசையே ஏற்படாது.
ஆக செயற்கையான பரபரப்பு, போட்டி மனப்பான்மை,
பொருள் மீதான இச்சையை கார்ப்பரேட் சந்தை உண்டு பண்ணுகிறது.”
இதை ஒட்டி ஒரு சுவாரஸ்யமான விவாதம் வகுப்பில் நடைபெற்றது. எனக்கு Fast Food
Nation எனும் புத்தகத்தில் Eric Schlosser துரித உணவு பண்பாடு எப்படி அமெரிக்காவில்
திணிக்கப்பட்டது என விளக்கியிருந்தது நினைவு வந்தது. அறுபதுகளில் ரயில் பாதைகள் அகற்றப்பட்ட
தேசத்தை முழுக்க இணைக்கும் சாலைகள் அமெரிக்கா எங்கும் அமைக்கப்பட்டன. ரயில் பாதைகளே
அதுவரையிலும் அமெரிக்காவின் ரத்த தமனிகளாய் இருந்தன. குறைவான கட்டணத்தில் மக்கள் இந்த
பொதுபோக்குவரத்தை பயன்படுத்தி சௌகர்யமாய் இருந்தனர். அப்போது அறிமுகமாகத் துவங்கின
கார்களை விற்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரயில் சேவை முக்கிய தடையாக இருந்தன. அதனால்
அவை அரசை லாபி செய்து ரயில் பாதைகளை அகற்றினர். பதிலுக்கு சாலைகளை (மக்கள் செலவில்)
பரவலாய் அமைத்தனர். அடுத்து கார்களின் தேவையை, வசதியை மக்களுக்கு இந்நிறுவனங்கள் அறிமுகப்படுத்தினர்.
மக்களுக்கு இப்போது கார்கள் அவசியமாய் போயின. ரயிலை விட இதுவே சௌகர்யம், இதுவே முன்னேற்றத்தின்
அறிகுறி என நம்பத் தலைப்பட்டனர். ஆனால் சந்தை இத்துடன் நிற்கவில்லை. சாலையில் பயணிப்போருக்கு
அவசரமாய் வண்டியை நிறுத்தி வாங்கி கொறிக்க துரித உணவு தேவைப்பட்டது. அப்படி சாலை ஓரங்களில்
பர்க்கர் கடைகள் அறிமுகமாகி மெக்டொனால்ட்ஸ், கெ.எப்.ஸி போன்றவை பெரும் வணிக வெற்றி
பெற்று அமெரிக்க உணவில் இருந்து பிரிக்க முடியாத வஸ்துக்களாகின. ஆனால் ரயில் பாதைகள்
அகற்றப்படாவிட்டால் மெக்டவல்ஸ், கெ.எப்.ஸி எல்லாம் முளைத்திருக்காது.
(தொடரும்)
Comments