தனிமனிதன் எனும் பிரமை (1)

Image result for teenage crisis
பள்ளி மற்றும் கல்லூரி மாணவப் பருவத்தில் எனக்கு இருந்த முக்கிய நெருக்கடி கூட்டத்தோடு கூட்டமாய் கலப்பது.
 என் நெருங்கின நண்பர்கள் கூட - ஆழமான நிலையில் - என்னில் இருந்து முழுக்க வேறொரு உலகில் இருப்பதாய் ஒரு உணர்வு என்னை உறுத்திக் கொண்டிருக்கும். இதனாலே எனது பல நண்பர்களை மெல்ல மெல்ல கைவிட்டிருக்கிறேன். நானாக முயற்சியெடுத்து அவர்களை தக்க வைத்ததில்லை. என்னைத் தவிர வேறு யாரும், வேறெதுவும் உண்மையில்லை எனும் பிரமையே இதற்கு காரணம் என இப்போது தோன்றுகிறது.

 என் குழந்தை மற்றும் பால்ய காலங்களின் நான் அனுபவித்த தனிமை இதற்கு மற்றொரு காரணம் எனலாம். மற்ற குழந்தைகளைப் போல நான் விளையாடியும் ஊர் சுற்றியும் வளரவில்லை. தனித்து என்னுடைய கற்பனை உலகில் மிதந்து அதில் ருசி கண்டு கொண்டேன். அதனாலே பள்ளிக் காலத்தில் இருந்தே புது நண்பர்களை சந்திக்கும் போது ஒரு புது பொம்மையைக் காணும் குழந்தையை போல் உற்சாகம் கொள்வேன். ஆனால் அவர்கள் அலுக்கத் துவங்கியதும் விலகி விடுவேன்.
எங்கள் பல்கலையில் Holistic Education எனும் ஆளுமை வளர்ச்சி சம்மந்தமான வகுப்பு ஒன்றை எடுக்கிறேன். அதில் மாணவர்கள் என்னிடம் உரையாடும் போது பதின்பருவத்தில் இருந்து முதிர்ச்சியை நோக்கி வளரும் போது ஏற்படும் சிக்கல்களை, தத்தளிப்புகளை, நெருக்கடியை குறிப்பிட்டார்கள். மனம் ஓரிடத்தில் நிலைப்படாது தவிக்கிறது. எது நான் என புரிய முடியாத பரிதவிப்பு அலைகழிக்கிறது. இந்த தவிப்பு இருபதுகளின் இறுதியில் அகன்று மனம் நிலைப்படுகிறது என ஒரு மாணவி சொன்னாள்.
 இந்த தத்தளிப்புக்கு இன்னொரு காரணமும் உண்டு: பதின்பருவத்தில் தான் நமது தனித்த ஆளுமை மலர்ந்து வெளியே வருகிறது. நம்மை பிறரில் இருந்து தனித்துக் காட்ட போராடுகிறோம். எதிர்பாலினத்தின் கவனம் பெற, வகுப்பில் பெயர் வாங்க, சக பாலினத்தோர் மத்தியில் அங்கீகாரம் கிடைக்க முட்டி மோதுகிறோம். சிலர் இசை, நடனம் பயில்வார்கள். ஜிம்முக்கு போய் உடலை பெருக்குவார்கள். நீளமாய் முடி வளர்ப்பார்கள். அதற்கு நிறமூட்டுவார்கள். உடம்பெல்லாம் டாட்டூ வரைவார்கள். விளையாட்டில் ஜொலிப்பார்கள். கவிதை எழுதுவார்கள். சிலர் வன்முறையில் ஈடுபடுவார்கள். ஆனால் ஐந்து அல்லது எட்டு வருடங்களில் (சிலருக்கு ஒன்றிரண்டு வருடங்களிலேயே) இந்த விருப்பங்கள் மறைந்து விடும். (மிக மிகச்சிலர் தான் இந்த ஆர்வங்களை தொடர்ந்து வளர்த்தெடுப்பார்கள்.) ஏனென்றால் கலை / விளையாட்டு ஆர்வம் அல்ல இவர்களை ஈடுபட வைப்பது; தம்மை தனித்து காட்ட வேண்டும், தாம் யாரென அறிய வேண்டும் எனும் விழைவே.
இருபதுகளின் துவக்கத்தில் சுயம் முழுக்க மலர்ந்து இதழ்கள் விரித்த நிலையில், (தோராயமாய்) 25 வயதில்  அது மெல்ல மெல்ல வாடி, மாலைவேளை சூரிய காந்தி போல் மூடத் துவங்கும். அவர்கள் நிதானமாகி வாழ்க்கையில் மகிழ்ச்சியை காணத் துவங்குவார்கள். மிகை ஆர்வமும் கிளர்ச்சியும் மட்டுப்படும். தனது சுயத்துக்கு சமூகத்தில் பெரிய இடம் ஒன்றுமில்லை; தன்னை அழுத்தமாய் முன்னிறுத்த தேவையில்லை; நிறுவனங்கள், அமைப்புகளின் நுண் விதிகளுக்கு வளைந்து கொடுத்தால் போதும்; சமூகமாக்கல் சடங்குகளில் (நண்பர்களுடன் குடிப்பது, அரட்டையடிப்பது, பயணிப்பது, கூட்டங்களுக்குப் போவது) பங்கேற்பது மனதுக்கு நிம்மதியும் சந்தோஷமும் தரும் என அறிவார்கள். தன்னை மறக்கும் எத்தனிப்பு இந்த பருவத்தில் ஆரம்பிக்கும். வேலையில் ”தன்னை” இழப்பது, குடும்பத்துக்காக “தன்னை தியாகம்” செய்வது, அரசியல் விவாதங்களில் (“தனக்காக அன்றி”) கொள்கைக்காகவும் சமூக நலத்துக்காகவும் பேசுவது, குடியில், போதையில் ”தன்னை” கரைப்பது என “தானற்றுப்” போவார்கள்.
பதின்பருவம் குறித்த அழகிய நினைவுகள் நமக்குண்டு. ஆனாலும் அது ஆழமான வலியையும் உட்கொண்டது. ஒருவிதத்தில் பதின்மத்துக்கு அடுத்த இருபதாண்டுகளில் நாம் இந்த வலியின் நினைவுகளில் இருந்து தப்பித்து ஓடவே பிரயத்தனிக்கிறோம்.

(தொடரும்)

Comments

shiva said…
நல்ல கட்டுரை அபிலாஷ்