சாருவை யார் சொந்தம் கொண்டாடுவது? (1)


Image result for charu nivedita

லுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் வாய்க்கவில்லை.) சாரு அவரைப் பாராட்ட, அதற்கு எதிர்வினையாக சாருவின் ரசிகர்களே அவரை வறுத்தெடுக்க எனக்கு இதற்கு முன்பு நேர்ந்த இது போன்ற சில விபத்துக்கள் நினைவு வந்தன. சாருவுக்கும் அவரது நண்பர்கள் / வாசகர் வட்டத்தினருக்கு மட்டுமே நிகழும் விபத்துக்கள் இவை.
நான் முன்பு சாருவை என் நூல் வெளியீடு ஒன்றுக்கு அழைத்தேன். அவரும் ஒப்புக் கொண்டார். அடுத்த நாளே சாருவின் சார்பில் ஒரு நண்பர் அழைத்து நிகழ்ச்சிக்கு வர முடியாது என தெரிவித்தார். இதை அடுத்து எனக்கும் சாருவுக்கும் ஒரு மோதல் இணையத்தில் நடந்தது. அன்று நான் மிகவும் எரிச்சலடைந்ததற்கு காரணம் யாரோ அவரிடம் கோள்மூட்டி என் நிகழ்ச்சிக்கு வர விடாமல் தடுத்திருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தது தான். இதுவே பின்னர் வேறு நண்பர்களுக்கும் நடந்துள்ளது. சாரு யாரையாவது பாராட்டினாலோ பாராட்டப் போவதாய் தெரிய வந்தாலோ அவரது அப்போதைய நண்பர்கள் முழுமூச்சாய் அதை தடுப்பார்கள். லஷ்மி சரவணகுமாரை சாரு பாராட்டிய அடுத்த நொடியே இது ரணகளத்தில் முடியப் போகிறது என நான் ஊகித்தேன். அப்படியே நடந்தது.

சாருவை ஒருவர் நெருங்குவது கவர்னர் மகளான நக்மாவை பிரபுதேவா காதலிப்பது போலத் தான். கரும்பூனைகள், லாடம் அடிக்கும் போலீஸ், குண்டு வைப்பவர்கள் என பல அரண்களைக் கடந்து தான் ஒரு சின்ன முத்தமாவது அவருக்கு நீங்கள் கொடுக்க இயலும்!

இப்போது லுலு எழுதுவது குப்பையா உன்னதமா என்பதை விட ஏன் இவ்வளவு வன்மமாய் இதை எதிர்கொள்கிறார்கள் என்பது தான் எனக்கு ஆர்வமூட்டுவதாய் உள்ளது.
சாரு புதிதாக யாரை நெருங்கினாலும் சாருவை யாராவது நெருங்கினாலும் ஒரு வாரத்துக்குள் சாருவின் நண்பர்கள் அவரை சுற்றி நின்று தாக்குவார்கள். அல்லது சாருவே இந்த புதுவரவை நிராகரித்து அடித்து துவைத்து துரத்தி விடுவார். அப்படி அவரை இவர்கள் செய்ய வைப்பார்கள்.
இதற்கு பின்னால் இயங்குவது பொறாமை, மலினமான வயிற்றெரிச்சல் என்றெல்லாம் நான் முன்பு நம்பி இருக்கிறேன். இப்போது சாருவின் மீது இவர்களுக்கு உள்ள மிதமிஞ்சிய அன்பே அவர்களை இப்படி செய்ய வைக்கிறது என தோன்றுகிறது.
இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரின் வாசகர்கள் ஏனிப்படி இல்லை என்று கேட்க வேண்டும். பின்னவர்கள் வெறும் வாசகர்களாக மட்டுமே – அறிவார்ந்த, கலாச்சார தளத்தில் – ஜெ.மோ அல்லது எஸ்.ராவை அணுகுகிறாரக்ள். அதனால் பெரிய பொறாமை பூசல்கள் அங்கு இல்லை. ஆனால் சாருவின் வாசகர்கள் / நண்பர்கள் அவரை உணர்வுரீதியாய், ஒரு வித “காமத்துடன்” அணுகுகிறார்கள். சாருவும் அவ்வாறு தான் அவர்களை நடத்துகிறார்.
 ஆனால் சாருவுக்கு யார் மீதும் பொறாமை இருப்பதில்லை. எனக்குத் தருவதை விட அதிக பிரியத்தை உன் காதலியிடம் ஏன் காட்டுகிறாய் என அவர் உங்களிடம் கோபிக்க மாட்டார்.
 ஏனென்றால் சாரு எதைப் பற்றியும் எவரைப் பற்றியும் அதிக நேரம் சிந்திக்க மாட்டார். அவர் எந்த கணத்தில் இருக்கிறாரோ அந்த கணத்தைத் தாண்டி சிந்தித்து மூளையை பாரமேற்றுவதில்லை. சிந்தனைகள், கருத்துக்கள், மனநிலை, அடிதடி, கோபம், மனம் கசிதல், உற்சாகம் எல்லாமே அவருக்கு செருப்பைப் போல. சுலபத்தில் கழற்றி வைத்து அடுத்த வேலைக்கு போய் விடுவார். மனிதர்கள் கூட அவருக்கு கிட்டத்தட்ட ஒரு ஆடை போலத் தான். ஒன்றை கழற்றி விட்டு இன்னொன்றை அணிந்து கொள்வார்.
இது சாருவுக்கு இயல்பாக அமைந்த ஒரு சிறப்பான அணுகுமுறை. இதுவே அவரை சதா இறகு போல் சன்னமாய், நீர்க்குமிழி போல் எங்கு வேண்டுமெனிலும் மெல்லென போய் அமரக் கூடியவராய், உற்சாகத்தில் திளைப்பவராய் வைத்துள்ளது. அவர் எந்த பாரத்தையும் தன் இதயத்தில் சுமப்பதில்லை.

இதே காரணத்தால் தான் அவர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறி வருகிறார். சாருவின் மனநிலைப்படி அவரால் எந்த கருத்துநிலையுடனும் நிரந்தரமாய் பிணைந்திருக்க முடியாது. நேற்றைய சாரு இன்றைய சாரு அல்ல. அவரிடம் ஒரு தொடர்ச்சியை எதிர்பார்ப்பதே அபத்தம் தான்.

Comments

P Vinayagam said…
மனித உளவியல்படி எவரும் புதுத்தொடக்கத்தை தங்கள் சிந்தனைகளில் உருவாக்க முடியாது. No one can begin on a tabla rasa. ஆனால் முயற்சிப்பது உண்டு. ஓரளவுக்கு வெற்றி கிடைக்கலாம். அங்கும் ஆழநோக்கின், அப்புதிய சிந்தனைகளுக்கு அடித்தளம் ஏற்கன்வே இருக்கிறது. இது ஃப்ராயிட் உளவியல். சப் கான்சியஸ். இதன்படி, அறிவழகன் தன்னை விட்டு விலகவே முடியாது. விலகியதாக நடிக்கலாம். நான் அவரெழுதும் பழைய கட்டுரைகளை - திணமனியிலும் அவர் இணையத்திலும் - தொடர்ந்து வாசித்தேன்: எனக்குப் பட்டது அவர வட்டத்தில் அவர் வாழ்கிறார்; அதன்படியே அவர் கட்டுரைகள். Once an actor, always an actor . சாமான்ய மனிதர்களுக்கு பிம்பங்கள் இல. அப்படியே இருந்தாலும் அதனால் பெருஞ்சிறை அவர்களுக்கு உருவாகாது. நடிகர்கள், எழுத்தாளர்கள் பிம்பங்கள் அறிந்தும் அறியாமலும் உருவாக்கப்பட்டு அவர்கள் சிறைப்படுகிறார்கள். கருத்தில் மட்டுமன்று, எழுத்து நடையிலும் கூட சிறைப்படுகிறார்கள். அறிவழகனின் பார்வையையும் எழுத்து நடையும் அவரின் கல்லறை வரை செல்லும். அதைப்போலவே மற்றவர்களும்.