தீப்தி நேவல் கவிதைகள் (1)


Image result for deepthi naval

அறிமுகம்:
தீப்தி நேவல் எண்பதுகளின் மாற்று சினிமா இயக்கத்தின் தாரகை. ஒரு பக்கம் நடிகையாக அவர் பிரசித்தமானவர் என்றால் இன்னொரு பக்கம் இலக்கியம், ஓவியம், புகைப்படக் கலை ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர். “தோ பைசே கி…” என ஆரம்பமாகும் நீண்ட தலைப்பு கொண்ட படம் ஒன்றை இயக்கினார். 2009இல் நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த திரைக்கதைக்கான பரிசை வென்றது. ஒரு கவிஞராக தீப்தி நேவல் முக்கியமானவர். அவர் கவிதைகள் ஜப்பானிய கவிதைகளை நினைவுபடுத்தும் மென்மையும் நுணுக்கமும் கொண்டவை.

 முதல் வாசிப்பில் வெகுசாதாரணமானவையாக வாசகனுக்கு இவை தோன்றலாம். ஆனால் மீளமீள வாசிக்கையில் எப்படி எளிய புற விவரிப்புகள் ஒரு உருவகமாய், குறியீடாக மாறுகின்றன என்பது வாசகனுக்கு துலங்கத் துவங்கும். ஒரு கார் பயணத்தை நினைவுகளை கைவிட்டு புது உறவை நோக்கிச் செல்லும் அகப்பயணத்தின் உருவகமாய் அவர் எந்த பிரயத்தனங்களும் இன்றி மாற்றுவார். இந்த சாதாரணத்துவத்தின் நுணுக்கம் தான் தீப்தியின் கவிதைகளின் சிலாக்கியமான அம்சம்.
அவரது கவிதைகள் நவீனத்துவ கவிதைகளின் வடிவ நேர்த்தியும் தனிமனிதக் குரலும் காட்சிபூர்வமும் உணர்ச்சிக்குவிப்பும் கொண்டவை. உணர்ச்சிகளை அடங்கின தொனியில் பேசுபவை..
 தீப்தி நேவல் எண்பதுகளில் இருந்தே இந்தியிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். 1983இல் அவரது முதல் தொகுப்பு இந்தியில் வெளியானது (”லம்ஹா லம்ஹா”). 2004இல் அவரது Black Wind and Other Poems எனும் கவிதைத் தொகுப்பு வெளியானது. இதில் The Silent Scream எனும் ஒரு பகுதியை ஒரு தனி தொகுப்பு எனலாம். பைத்தியம் எனும் தலைப்பில் அவர் எழுதின பல நுட்பமான, இருண்மைக்கு வெகு அருகில் செல்கிற, மனதை கலங்கடிக்கும் கவிதைகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் தோன்றிய கதை சுவாரஸ்யமானது. தமிழ்க் கவிஞர்கள் யாரேனும் இத்தகைய சாகசம் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்களா என்பது ஐயமே! Ankahi எனும் தனது படம் ஒன்றிற்காக, மனநலம் அற்றவர்களை அணுக்கமாய் கவனிக்கும் நோக்கில், நேவல் ஒரு மனநல மருத்துவமனைக்கு சென்று நான்கு மணிநேரங்கள் செலவழிக்கிறார். அந்த அனுபவம் அவரை உலுக்கிறது. அதன் பிறகு, 1993இல், அவர் மனநலமற்ற பாத்திரம் ஒன்றை நடிக்க நேரும் நடிகை எப்படி அதனால் பாதிக்கப்படுகிறார் என்பதை சித்தரிக்கும் ஒரு படத்தின் திரைக்கதையை எழுதுகிறார். இதற்காக ஆய்வு செய்யும் நோக்கில் ஒரு மனநல மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு மேல் நோயாளிகளுடன் தங்குகிறார். அவர்களை அணுக்கமாய் கவனிக்கிறார். ஒரு பெண் அவரிடம் “ரொம்ப உணர்ச்சிகரமான ஆட்கள் மட்டுமே பைத்தியமாவார்கள்” என்று அடிக்கடி கூறுகிறார். நேவல் அப்போது ஒரு உண்மையை உணர்கிறார். பைத்தியம் என்பது நோய் அல்ல. ஒரு மிகு உணர்ச்சி நிலை. அகம் கட்டற்று வெளிப்படும் நிலை. மேலும் மனப்பிறழ்வு எப்படி ஒரு வைரஸ் போல் இயல்பானவர்களைக் கூட தொற்றிக் கொள்ளும் என உணர்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவது நமது அணுகுமுறையை, உடல்மொழியை, பேசும் பாணியை நாம் அறியாமலே மாற்றக் கூடும். அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின் தீப்திக்கு புற உலகத்து மனிதர்கள் விசித்திரமானவர்கள் என தோன்றுகிறது. மனநல மருத்துவமனை உண்மையான உலகம், அதற்கு வெளியே உள்ளது போலியான உலகம் என நினைக்கிறார். இது அவருக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. புற உலகுடன் பொருத்தப்பட முடியாமல் திணறுகிறார். இந்த மனநிலையை ஒட்டி எழுதின கவிதைகளே அவரது The Silent Scream தொகுப்பில் இடம்பெறுகின்றன. மேலும், மருத்துவமனைக்குள் உறவினர்களால் தள்ளப்பட்ட எந்த மனநோயும் அற்ற பெண்களின் அவலம், மனநலமற்ற பெண்களின் அன்றாடம் அனுபவிக்கும் கடும் துயரம், வலி, மற்றும் குழப்பநிலை, பாலியல் ஒடுக்குமுறை சிகிச்சைகளின் பெயரில் மனித உடல் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவது ஆகியவற்றையும் இக்கவிதைகளில் பதிவு செய்கிறார்.
மேற்சொன்ன இரு தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளை மொழியாக்கியுள்ளேன். வரும் நாட்களில் அவற்றை இங்கு வெளியிடுகிறேன்...

Comments