தீப்தி நேவல் கவிதைகள் - 10

Image result for deepti naval

சரி, பெண்களின் வார்டில் தங்கியது பற்றி என்ன முடிவுக்கு வருகிறேன்?

நோயாளிகளுக்காய் பரிதாபப்படுகிறேனா, அல்லது அவர்கள் என்னை வசீகரிக்கிறார்களா?
நான் அவர்களைக் கண்டு பொறாமை கொள்கிறேனா? என்ன அது?

என் அனுபவம் பற்றி ஒரே நிலைப்பாடு எடுத்து, அது என்னில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என ஒற்றை சொல்லில் விவரிக்க முடியுமா? சத்தியமாய் தெரியவில்லை.

நான் வார்டில் இருந்து 23 நாட்களில் கிளம்பினேன், மனம் தடுமாறிய நிலையில். அது ஒரு மனநிலை அல்ல. இப்போது அது ஒரு பௌதிக வஸ்து ஆகி விட்டிருந்தது. அது என் ரத்தத்தில் கலந்திருந்தது. போதை போல. மனப்பிறழ்வு ஒரு போதை, நான் அதை அனுபவித்திருந்தேன். உணர்வுரீதியாய் உள்ளிழுக்கபட்டிருந்தேன்; எனக்குள்ளே உருக்குலைந்து போனேன்.
‘அந்த இடத்தை’ விட்டு உடனே கிளம்பி, கிறித்துமஸுக்கு வீட்டுக்கு வருமாறு என் நண்பன் குணல் வற்புறுத்தினான்.


‘கிறித்துமஸா? ஜனங்களுடனா? இல்லை … ப்ளீஸ் … என்னை மக்கள் மத்தியில் தள்ளாதே … என்னால் அதை சமாளிக்க முடியாது!’

‘அட வா, தீப்தி. அவங்க இயல்பான ஆட்கள் தான் … அவங்க நம் நண்பர்கள்! சரியா?’

நான் பீதியுற்றேன். இயல்புநிலையை எதிர்கொள்ள வேண்டும் என நினைப்பதே பதற்றம் கொள்ள வைத்தது.
‘நான் கட்டாயம் கிறித்துமஸுக்கு வீட்டுக்கு வருகிறேன். ஆனால் என்னை மக்கள் மத்தியில் தள்ளி, அவர்களுடன் வெட்டி அரட்டையடிக்கும்படி செய்யாதே.’

குணல் உடன்பட்டான். ‘சரி, நாம் முதலைப் பண்ணைக்கு காரோட்டி போவோம் … ரானாவும் குழந்தைகளும் அங்கே நம்முடன் இணைவார்கள் …’

இரு பக்கமும் பழுப்புநிற வயல்கள் தெரிய நீண்ட கார் பயணம். அது எனக்கு மூச்சு விட அவகாசம் அளித்தது. அடர் மஞ்சள்-பழுப்பாய் குளிர் காலம் அந்த நிலத்துக்கு வந்து விட்டிருந்ததை நான் அத்தனை நாட்களாய் கவனிக்கவில்லை. பயணத்தின் போது என்னை சிந்தனையில் மூழ்கியிருக்க குணல் என்னை அனுமதித்தான். பளீர் வானின் கீழ் பிற்பகல் வெயிலில் நனைந்தபடி சென்றேன், நீண்ட நீண்ட காலமாய் பகலொளியே கண்டிராத ஒருவளைப் போல.

முதலைப் பண்ணையை நாங்கள் அடைந்த போது ஏற்கனவே பிற்பகல் கடந்து விட்டது. ஒளி மாறிக் கொண்டிருந்தது. முதலையை காண்பது என் மனதை துள்ள வைக்கும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் என் உற்சாகம் தற்காலிகமானது. ரத்னாவையும் குழந்தைகளையும் பார்த்த உடனே பிற மனிதர்கள் என்னை சுற்றிலும் இருப்பதை உணர்ந்தேன். ஏமாற்றி விட்டாயே என குணலை பார்வையால் குற்றம் சாட்டினேன். ஆட்களை வரவழைத்திருக்கிறான். அந்நியர்களை. நான் மௌனத்தில் உறைந்தேன்.

எனது திடீர் ‘போதையில் பிரக்ஞை இழந்தது போன்ற’ முகத்தோற்றத்தை குணல் தன் புன்னகையால் கடந்து போக முயன்றான். அவனது நண்பர்கள் புற்தரையில் அமர்ந்தார்கள். செய்தித்தாள்களில் உணவு விளம்பப்பட்டது; அது சுற்றுலா நேரம் அல்லவா. அவர்கள் என்ன இழவுதான் பேசினார்கள் என எனக்கு நினைவில்லை. ஒரே ஒரு சொற்றொடருடன் என் தலை சுழன்றது: ‘இல்லை, என்னால் இங்கு இருக்க முடியாது!’ அந்த நேரம் குணலை எப்படியெல்லாம் வெறுத்தேன் தெரியுமா. ‘நீ என் நண்பன்! ஆனால் என்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது! உன்னை நம்பினேன்! ஆனால் நீயா இப்படி செய்தாய்?’

ஆட்கள் சிரித்தார்கள், பேசினார்கள். சாதாரண விசயங்கள். பணிவான, ஆனால் முக்கியமற்ற உரையாடல் என் காதுகளுக்கு இரைச்சலானது. எதற்காய் சிரிக்கிறார்கள்? சொல்ல ஒன்றுமில்லையென்றால் இவர்களுக்கு சும்மா இருந்தால் என்ன!
‘தீப்தி … இரு! … பரவாயில்லை … பேசி மயக்கு! … (நான் எனக்கே சொல்லிக் கொள்கிறேன்) … தயவு செய்து புன்னகை செய் …
புன்னகை செய்!’

நான் அமர்ந்தேன், புன்னகைத்தேன் … எதையாவது சாப்பிட முயன்றேன். ஒரு ஆள் சிக்கன் கால் ஒன்றை தன் நண்பனிடம் நீட்டினார், அவர் அதற்கு பதிலளித்தார் – ‘இது என்ன என்று தெரியுதா … மாதுரி தீக்‌ஷித்!’

நான் விறைப்பானேன்.
அவர் அந்த ஒல்லியான காலை திரும்ப சூடுகாப்புக் கலனில் போட்டு விட்டு, இளித்தபடி ஒரு பருத்த இறைச்சித் துண்டை எடுத்து நீட்டினர் ’இதைப் பாருப்பா … ஸ்ரீதேவி!’ அவர்கள் சிரித்தார்கள். பெண்களும் சேர்த்து.

வயிறு புரட்டிக் கொண்டு வர நான் எழுந்தேன். வாந்தி எடுக்க முயன்றேன்.

திடீரென மருத்துவமனையில் இருந்து பிம்பங்கள் ஒரு செய்தித்தொகுப்பு போல என் தலைக்குள் ஓடத் துவங்கின. எனக்கு திரும்ப செல்ல வேண்டும். எப்படியாவது திரும்பிப் போக வேண்டும். மனநல மருத்துவமனையில் சுவர்கள் நடுவே இருந்த நுண்ணுணர்வுக்காக ஏங்கினேன். இந்த நடுத்தரத்தில் இருந்து எனக்கு ஒரு காப்பிடம் வேண்டும். அந்த இருண்ட நடைவழிகளில் ஒன்றுக்கு திரும்ப அழைத்து செல்லப்பட்டு, தனியே அங்கு விடப்பட வேண்டும் என விரும்பினேன்.

கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு நடந்து போனேன் என்பது மட்டும் தான் அதன் பிறகு நினைவுள்ளது; என் பாவப்பட்ட நண்பன் குணல் என் பின்னால் ஓடி வந்து கெஞ்சினான், திரும்பி வந்து விடும்படி, ’தேவையில்லாத ஒரு பிரச்சனையை’ ஏற்படுத்தாமல் இருக்கும்படி.    

கடைசியில், நாங்கள் கிளம்பினோம். ஆனால் அதற்கு முன் குணல் தன் நண்பர்களிடம் எனது எதிர்பாராத நடத்தைக்காக மனம் கசிய, முன்னும் பின்னுமாய் சென்று, மன்னிப்பு கேட்க வேண்டி வந்தது.

அவர்களின் கிறித்துமஸுக்கு முந்தின மாலை நேர கொண்டாட்டத்தை கெடுத்ததற்காக இப்போது வருத்தம் கொள்கிறேன். என் மீதான தங்கள் அக்கறையை காட்டுவதற்காக, என்னுடன் இருக்க அவ்வளவு தூரம் பயணித்து வந்திருந்தார்கள். ஆனால் அந்த சந்தர்பத்தில், என்னால் அப்படி மட்டுமே நடந்து கொள்ள இயன்றது, ஏனெனில் நான் அப்படித்தான் உண்மையாய் உணர்ந்தேன்.

எப்படியானாலும், அந்த இடத்தை விட்டு ஒருவரால் சுலபத்தில் வெளியேற முடியாது தானே, பாதிப்பின்றி …

முடியுமா?

Comments