அனிதாவின் மரணம்: மருத்துவக் கல்வியும் தமிழ் செண்டிமெண்டும் – பகுதி 1

Image result for அனிதா தற்கொலை

அனிதாவின் தற்கொலை உங்கள் எல்லாரையும் போலவே என்னையும் கலங்க வைத்தது. அவரைப் போன்று நீட் தேர்வில் தேற முடியாது ஏமாற்றமடைந்த பிற மாணவர்கள் இத்தகைய விபரீத முடிவை எடுக்கக் கூடாதே என பதற்றம் என்னை ஆட்கொள்கிறது. அதேவேளை இன்னொரு புறம், என் மனதுக்கு இந்த மருத்துவப் படிப்புக்காய் ஏன் இப்படி மக்கள் அடித்துக் கொள்கிறார்கள் என்பது புரியவும் இல்லை.

என்னால் தமிழ் சமூகத்தின் சில பொதுவான செண்டிமெண்டுகளை புரிந்து கொள்ள முடிந்ததில்லை. அதில் ஒன்று மருத்துவப் படிப்பு. படித்து போராடி மருத்துவர் ஆகும் கனவு. (இன்னொன்று மாவட்ட ஆட்சியர் ஆகும் கனவு) இக்கனவின் மீது உணர்ச்சிகரமாய் கட்டி எழுப்பட்ட ஒரு மொத்த மாநிலத்தின் செண்டிமெண்ட். “ஜெண்டில்மேன்” படத்தில் மருத்துவம் படிக்க காசில்லாமல் வாய்ப்பை இழந்து அத்துயரத்தில் தற்கொலை செய்யும் வினீத் பாத்திரத்தின் நிலையை காணும் போது எனக்கு கண்ணீர் முட்டி வந்ததில்லை. மருத்துவப் படிப்பு அவ்வளவு பெரிய விசயமா என எனக்கு விசித்திரமாய் தோன்றியிருக்கிறது.
 இதற்குக் காரணம் ஒருவேளை நான் பிறந்த வளர்ந்த ஊரின் பண்பாட்டுப் புலமாக இருக்கலாம். எண்பதுகளின் தமிழ்ப் படங்களில் ஒரு கிராமத்தில் ஒரு மருத்துவர் வருவார். மொத்த கிராமமுமே அவரை கடவுளைக் கண்டது போல் வரவேற்கும். கூப்பி வழிபடும். எங்கள் ஊரில் அப்படி யாரையும் மக்கள் மதிப்பளித்து நான் பார்த்ததில்லை. குமரி மாவட்டத்தில் மருத்துவர்களை கிண்டல் செய்து திட்டுபவர்களைத் தான் பார்த்திருக்கிறேன்.
 பள்ளியிலும் என்னுடன் மருத்துவம் படிக்க வேண்டும் எனும் கனவுடன் படித்த ஒருவரைக் கூட கண்டதில்லை. சிறந்த மதிப்பெண் எடுத்து மருத்துவர் ஆக வேண்டும் என எந்த ஆசிரியரும் எங்கள் வகுப்புகளில் ஊக்குவித்ததில்லை. என் உறவினர்களில் ஒருவர் மருத்துவர் ஆனார். பல் மருத்துவர். அதுவும் பணம் கொடுத்து இடம் பெற்று ஆர்வமின்றி படித்து, வேண்டாவெறுப்பாய் மும்பையில் பணி செய்கிறார். அவரையும் எங்கள் உறவு வட்டத்தில் வேடிக்கையாய் காண்பார்களே அன்றி “மருத்துவர்” என்று மரியாதையுடன் நடத்த மாட்டார்கள். அவருக்கு பெண் கொடுக்க வேண்டும் என்று கூட என் உறவினர்கள் ஆர்வம் காட்டவில்லை. உறவுக்கு வெளியே தான் அவர் பெண் எடுத்தார். இன்னொரு பக்கம், என் சித்தப்பா மகன் தாசீல்தார் அலுவலகத்தில் வேலை பெற்றதும் மிகுந்த விருப்பத்துடன் அவருக்கு பெண் கொடுக்க என் அத்தை முன்வந்தார். இது தான் எங்கள் மாவட்டத்தின் செண்டிமெண்ட். நிலம் மற்றும் அரசு வேலை. இவை இரண்டையும் அன்றி (இடதுசாரி அரசியலையும், கொஞ்சம் இலக்கியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்) வேறெதுவும் எங்களுக்கு பொருட்டல்ல.
 என்னுடைய அத்தான் சூர்யா ஒரு பேஸட் ஹவுண்ட் நாய் வளர்த்தார். அதற்கு “டாக்டர்” என பெயரிட்டார். ஏனென்றால் அவருக்கு மருத்துவர்கள் என்றாலே அப்படி ஒரு வெறுப்பு. வீட்டுக்கு வந்ததுமே “டேய் டாக்டர் வாடா” என்று அழைத்து அப்படி கொஞ்சுவார்.
“கலெக்டர்” என்றதுமே தனிமரியாதை அளித்து மனம் நடுங்க எதிர்நோக்கும் போக்கும் என் ஊர் மக்களிடையே இல்லை. மாவட்ட ஆட்சியரை “ஆளும் அரசின் கூலி” என்று பார்க்கும் நோக்கே இருந்தது. மக்களுக்காய் சிறப்பாய் பணி செய்த ஆட்சியர்கள் சிலர் மீது மரியாதை இருந்தது. ஆனால் வாழ்வின் உச்சகட்ட சாதனை ஆட்சியர் ஆவது எனும் நம்பிக்கை என் மக்களிடையே இல்லை. ஐ.ஏ.எஸ் அகாடெடிமிகளை நான் அங்கு வளர்ந்த காலத்தில் எங்கும் கண்ட நினைவில்லை. ”ஐ.ஏ.எஸ்” என்ற பின்னொட்டு கொண்டவர்களை குட்டிக்கடவுளர்களாய் பாவிக்கும் மக்கள் தரப்பை நான் குமரி மாவட்டத்தைத் தாண்டி படிக்க “தமிழகம்” வந்த பின் தான் கண்டேன். மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் எனக்கு புரிகிறது. ஆனால் அப்பதவியின் “சிறப்பு” என்ன எனும் இளக்காரம் தான் என் ரத்தத்தில் இன்னமும் ஓடுகிறது. இதெல்லாம் என் மண்ணின் குணம். சுலபத்தில் விட்டுப் போகாது.
இந்த பின்புலத்தில் இருந்து தான் நான் நீட் தேர்வு, அது இங்கு ஏற்படுத்திய கடும் கொந்தளிப்பு, அனிதாவின் தற்கொலை, நீட் தேர்வை ஒரு பெரும் சமூக அநீதியாய் காணும் நிலை, அதற்காய் மக்கள் பொங்கி எழுந்து கொதிக்கும் சூழல் ஆகியவற்றை நான் பார்க்கிறேன். இந்த உணர்ச்சி அலையை புரிந்து கொள்ள முயல்கிறேன். ஆனால் மருத்துவப் படிப்பின் மகத்துவம், அதன் மீதுள்ள செண்டிமெண்ட் என்னைப் போன்ற ஒரு ஆளின் சிற்றறிவுக்கு எட்டாதது. நீங்கள் என்னை காறித் துப்புங்கள், கல்லால் அடியுங்கள். ஆனால் “படித்து மருத்துவராகி ஆயிரமாயிரம் பேருக்கு சேவை செய்ய வேண்டும்” எனும் சொற்களின் பின்னுள்ள ஆவேசம் எனக்கு புரியாது. என்ன செய்ய நான் சிறுவயதில் இருந்தே அப்படி மருத்துவர் / கலெக்டர் ஆவதற்காக யோசித்து, ஏங்கி, தவமிருந்து வளரவில்லை.
உடலை அணுகி அறிந்து, அதன் சூட்சுமங்களை தொட்டுணர்ந்து, நோயில் இருந்து மீட்கும் அற்புதத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். அதன் அறிவியலும், ரசாயன சூத்திரங்களும் இன்று புரிகிறது. இன்னின்ன அறிகுறிகள், அதற்கு இன்னின்ன மருந்துகள், சிகிச்சை முறைகள் என்று வாசித்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் ஒருவர் நம் உடலின் கண்காண முடியாச் சிக்கலை அறிந்து சரி செய்யும் போது நம் “ஆதிமனம்” அதைக் கண்டு வியந்து திகைத்து கைகூப்புகிறது. என்னைக் காப்பாற்றிய சில மருத்துவர்கள் மீது எனக்கு அத்தகைய மட்டற்ற மதிப்பு இன்றும் உள்ளது. ஆனாலும் இது மற்றொரு தொழில் எனும் எண்ணமும் வலுவாக எனக்குள் உடனே எழுகிறது. இத்தொழிலின் குறைபாடுகள், பிரச்சனைகள் என்னென்ன என புரிந்து கொள் என்கிறது என் மனம்.
 மருத்துவர்கள் நம்மைப் போல், நம்மை விட கடும் நெருக்கடிக்கு மத்தியில் பணி செய்கிறார்கள், பல கார்ப்பரேட் மருத்துவமனைகளில் அவர்களுக்கு நோயாளிகளை மனிதர்களாய் அணுகி சேவை செய்யும் வாய்ப்புகளே இருப்பதில்லை என அறிவேன். கடும் சலிப்பும், எரிச்சலும் கொண்டு பணியாற்றும் மருத்துவர்களை அறிவேன். என் நண்பர் ஸ்ரீராம் மருத்துவப் படிப்பு படித்தும் பணியாற்றாமல், பதிப்புத் துறையில் இருக்கிறார்.

மருத்துவராவது சமூகத்தின் உச்ச அந்தஸ்தைப் பெறுவது என யோசிக்கும் அனிதாவின் அந்த செண்டிமெண்டலான மனநிலையை என்னால் சத்தியமாய் உணர முடியாது. அதனாலே என்னால் நீட்டுக்காக பதறி கொந்தளித்து கையுயர்த்தி கத்த முடியவில்லை. என்னை மன்னியுங்கள்!

Comments

syed habeeb said…
அவர் தன் தாய் மருத்துவ உதவி பெற முடியாமல் இறந்ததின் காரணமாக இந்த லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்