நீட் சர்ச்சை: ஏன் objective தேர்வுகளையே ஒழிக்கக் கூடாது?

நீட் தேவையா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மெக்காலே காலத்து கல்வி முறையின் நீட்சியான objective தேர்வுகளை நாம் ஏன் ஒழித்துக் கட்டக் கூடாது?
நீட் தேர்வுகளைப் பற்றி தீவிரமாய் விவாதிக்கும் பலரும் அத்தேர்வுத்தாளைக் கண்டார்களா எனத் தெரியவில்லை. நான் பார்த்தேன். நல்ல நினைவுத்திறன் கொண்ட ஒருவர் ஆறு மாதங்கள் இருந்து படித்தால் நிச்சயம் வெல்ல முடியும் (மருத்துவ ஆர்வமில்லாத என்னால் கூட முடியும் எனத் தோன்றுகிறது). இரண்டு திறன்கள் தான் பிரதானமாய் சோதிக்கப்படுகின்றன: 1) நினைவுத்திறன் 2) தர்க்க சிந்தனை.
தொடர்ந்து உருப்போட்டால் முதலாவதையும் பயிற்சி மூலம் இரண்டாவதையும் ஒருவர் பெற முடியும். இந்த இரு திறன்களுக்கும் ஒரு மருத்துவருக்கும் என்ன சம்மந்தம்? ஒரு நல்ல மருத்துவருக்கு நினைவுத்திறன் அவசியமே. புரிகிறது. ஆனால் அது மட்டுமே அல்லவே. ஒரு மருத்துவருக்கு வேறு பல முக்கியமான இயல்புகளும் திறன்களும் அவசியம். ஆனால் நினைவுத்திறனை மட்டுமே அடிப்படையான தகுதியாய் கொண்டு இத்தேர்வு நடக்கிறது (நம் நாட்டின் எல்லா தகுதித்தேர்வுகளையும் போல). உதாரணமாய், நீட் தேர்வில் வரும் ஒரு சாம்பிள் கேள்வியை கீழே தருகிறேன்:
Lungs are made up of air-filled sacs, the alveoli. They do not collapse even after forceful expiration, because of:
1)   Expiratory reserve volume
2)   Residual volume
3)   Inspiratory reserve volume
4)   Tidal volume
மேற்சொன்ன கேள்வியின் பதில் முக்கியம் தான். ஆனால் இதை அறிந்திருப்பவர் மனித உடல் குறித்த அடிப்படை புரிதலைக் கொண்டிருக்கிறார் என நாம் எப்படி உறுதியாக சொல்ல முடியும். ஒன்றுமே புரியாமல், அல்லது புரிந்து கொள்ளும் ஆர்வமின்றி, ஒருவர் இதை சுலபமாய் மனனம் செய்திருக்கலாமே?
நாளை மூச்சுப்பிரச்சனையுடன் தன்னை நாடி வரும் ஒரு நோயாளியின் நோய்த்தன்மையை அறிய மேற்சொன்ன மனனம் செய்த தகவல் எப்படி பயன்படும்?
இதை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் கூகிள் செய்து தெரிந்து கொள்ளலாமே?
மருத்துவக் கல்லூரியில் கற்றுத் தந்ததை அப்படியே ஈயடித்தது போல் எழுதித் தேர்ந்து, ”தகவல் அறிவு மிக்க” எத்தனையோ இளம் மருத்துவர்கள் மோசமான மருத்துவர்களாய் இருப்பதை நாம் காண்கிறோம். இது ஏன்? இந்த கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.
இன்றும், பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தாம் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்து மருத்துவர் ஆகிறார்கள். ஆனால் நாம் எதிர்கொள்ளும் மருத்துவர்களில் பாதிக்கு பாதி பேரால் கூட நோய்க்காரணத்தை சரியாய் ஊகிக்க முடிவதில்லையே? அப்படியெனில் மனித உடலின் நுணுக்கமான செயல்பாடுகள், பிரச்சனைகள் ஆகியவற்றை அறிகுறிகள் மூலம் கண்டறியும் திறனே மிக முக்கியம். தகவல் அறிவு அல்ல.
அது போல் தொடர்ந்து நிகழும் ஆய்வுகளுக்கு தம்மை தகவமைக்கும் ஆற்றலும் முக்கியம். என் உறவினர் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். மருத்துவர் வழக்கமான மருந்துகளை கொடுத்தார். ஆனால் வலி நிவாரணம் இல்லை. என் உறவினர் சிறுநீர் கழிக்க முடியாது துடித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து செவிலிகளை நோக்கி கத்தி விட்டார். நிலைமை தன்னை மீறிச் செல்கிறது என மருத்துவருக்கு புரிந்து விட்டது. அவர் என்ன செய்திருக்க வேண்டும்? உண்மையை ஒத்துக் கொண்டிருக்க வேண்டும். நோயாளியை வேறு மருத்துவமனைக்கு செல்லக் கேட்டிருக்க வேண்டும். அதற்குப் பதில் “உங்களுக்கு உளவியல் பிரச்சனை. வியாதி சரியானாலும் ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள்” என்று சொல்லி அவரை மனநல சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி விட்டார். என் உறவினர் அங்கிருந்து தப்பித்து ஓடி இன்னொரு மருத்துவரிடம் சென்றார். அவர் இவரது வியாதி அறிகுறிகளை கேட்டு அதை கூகிள் செய்தார். ஐந்தே நிமிடங்களில் என் உறவினருக்கு வந்திருப்பது ஒரு புது வகை நோய்க்கிருமியால் ஏற்பட்ட தொற்று என அறிந்து கொண்டார். கூகிள் வழியாகவே சிகிச்சை முறையையும் தெரிந்து கொண்டு மருந்துகள் கொடுத்தார். மூன்று வாரங்கள் முந்தைய மருத்துவமனையில் திக்குமுக்காடியவர் இங்கு மூன்று நாட்களில் முழுநலன் பெற்றார்.
எனக்கு கிட்டதட்ட இதே போன்ற ஒரு அனுபவம். எனக்கு ketoacidosis ஏற்பட்டிருக்கிறது என என் மருத்துவருக்கு தெரியவில்லை. நீரிழிவு + மூச்சுத்திணறல் என அவர் கூகிள் செய்திருந்தால் அது ஒரு நொடியில் சொல்லியிருக்கும். ஆனால் மருத்துவர் கூகிளாண்டவரை நாடாமல் என்னை பத்து நாட்கள் மருந்தின்றி வைத்ததில் நான் கோமா நிலைக்கு சென்றேன். அடுத்து என்னை காப்பாற்றிய மருத்துவர் சமகால ஆய்வுகள் பற்றி விரல் நுனியில் வைத்திருப்பவர்.
ஆக ஒரு நல்ல மருத்துவருக்கு இரண்டு திறன்கள் அவசியம்: 1) நோயின் குணங்களை, நோய்க்குறிகளைக் கண்டு ஊகிப்பது. அதாவது காதுகொடுத்து உடலின் குரலைக் கேட்பது. 2) புதுவகை ஆய்வு கண்டுபிடிப்புகளை அறிந்து வைத்திருப்பதும், ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதும்.
நாம் ஏன் வேறு வகையான ஒரு தேர்வு முறையை பரிசோதித்துப் பார்க்கக் கூடாது? இப்படியான தேர்வுகள் (வெறும் புரிதலற்ற தகவலறிவை, மனனத்திறனை மட்டும் சோதிக்காமல்) இந்த இயல்புகளை சோதிப்பவையாக இருந்தால் நலம்: எதிர்கால மருத்துவரின் துறை சார்ந்த ஆர்வம், மனித உடல் மீதான உள்ளார்ந்த புரிதல், ஆய்வு ஈடுபாடு, சகமனிதருடனான பிணைப்பு, அர்ப்பணிப்பு … இந்த உணர்வுத் தேர்வில் தோற்கிறவர்களுக்கு நிச்சயமாய் படிக்க இடம் கொடுக்கக் கூடாது.
ஏன் உணர்வுபூர்வமான பண்புகளை வலியுறுத்துகிறேன்? நோய் தீர்ப்பது மட்டுமல்ல மருத்துவரின் பணி? அவருக்குத் தேவை அறிவு அல்லவா? நாவரசு வழக்கு நினைவிருக்கிறதா? ஜான் டேவிட் மாதிரியான ஒரு ஆள் உங்கள் அதிர்ஷ்டம், என் அதிர்ஷ்டம் அந்த வழக்கில் மாட்டிக் கொண்டு சிறைசென்றார். இல்லாவிட்டால் உங்க்ள் இதயத்தை திறந்து அறுவை சிகிச்சை ஒருநாள் பண்ணியிருப்பார். அவர் எப்படியானவர் எனத் தெரியாமலே உங்கள் உடலை ஒப்படைத்திருப்பீர்கள். அவரைப் போன்ற ஜான் டேவிட்கள் வேறு மருத்துவக் கல்லூரிகளில் இல்லை என உங்களுக்கு எப்படி உறுதியாகத் தெரியும். ஆக, பழக இனிமையான, மிகுந்த பொறுமை கொண்ட, எளிதில் உணர்ச்சிவயப்படாத மாணவர்களை கண்டறிந்து முன்னிரிமை கொடுக்க வேண்டும் (இவர்கள் கட்டாயம் நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் சமூகப் பண்பும் மக்களுடன் மக்களாய் செயல்படும் இயல்பும் கொண்டிருப்பார்கள். தொழிலுக்காக மருத்துவத்தை தேர்பவர்களை நாம் உதறித் தள்ள முடியும்.)
ஏன் மாணவர்களை பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு – அவர்களின் மதிப்பெண்ணைப் பொறுத்து தேர்வு செய்யப்பட்டு – pre-medical மாணவர்களாய் ஆய்வும் பயிற்சியும் செய்யும் ஒரு இடத்துக்கு அனுப்பப்பட கூடாது? அங்கு அவர்கள் ஆறு மாத அடிப்படை வகுப்புகளுக்குப் பிறகு மருத்துவர்களின் உதவியாளர்களாய், செவிலிகளாய், கிட்டத்தட்ட ஒரு மருத்துவமனையின் அத்தனை வித பணிகளையும் செய்ய வேண்டும். அதே சமயம், சுயமாய் வாசித்தும் கண்டுணர்ந்தும் நோய்மை, மருந்துகள், மருத்துவ முறை பற்றி ஒரு புரிதலை உண்டு பண்ண வேண்டும். அதன் அடிப்படையில் ஒரு ஆய்வுத்தலைப்பை தேர்ந்து மூன்று வருடங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதன் முடிவில் நூறு பக்கங்கள் வருகிற ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கலாம். இந்த காலப் பொழுதில் அவர்கள் சில மதிப்பு மிக்க ஆய்வு ஏடுகளில் கட்டுரைகள் பிரசுரிக்க வேண்டும். புத்தகங்களும் எழுத வேண்டும். மருத்துவர்கள், சக பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோரிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி பணிக்காலத்தில் இம்மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம், மனிதநேயம், சமயோஜிதம், பணிவு ஆகியவை மதிப்பிடப்பட வேண்டும். இந்நான்குக்கும் தனித்தனி மதிப்பெண்கள் வழங்கி, ஒரு cutoff வைத்து அதில் தேறுகிறவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் அளிக்கலாம். அவர்களின் மொத்தப்படிப்பில் மூன்று வருடங்களை குறைத்தும் விடலாம். இதன் மூலம், தியரி வகுப்புக்கு பிறகு கட்டாய பயிற்சிக்கு மாணவர்களை அனுப்பாமல் அதை தலைகீழாய் செய்யலாம். ஆர்வமில்லாத, ஊக்கமில்லாத மாணவர்கள் இந்த மூன்று வருடங்களில் கழன்று கொள்வார்கள். பணம் கொடுத்து ஆய்வறிக்கைகள் எழுதி வாங்கலாம். ஆனால் மதிப்பு மிக்க ஏடுகளில் அப்படி பிரசுரிக்க இயலாது. இதன் மூலம் உண்மையான அறிவு தாகமும் முதிர்ச்சியும் சேவை மனப்பான்மையும் கொண்ட மாணவர்களை நாம் தேர்வு செய்யலாம். எதற்காக படிக்கிறோம் என குழப்பமில்லாமல், நடைமுறை அனுபவத்திற்கு பிறகு அவர்களுக்கு வகுப்புகள் அதிக அர்த்தமுள்ளவையாகும்.
இதன் மூலம் ஒரு மனனத்தேர்வில் கூட்டமாய் மாணவர்களை நிராகரிக்காமல் அவர்களுக்கு போராடி மருத்துவப்படிப்பில் இடம் பெற நாம் மூன்று வருடங்களை வழங்க முடியும். நிறைய மருத்துவமனைகளுக்கு இலவசமாய் பணி செய்ய ஊக்கம் மிக்க இளைஞர்கள் கிடைப்பார்கள். (அதாவது இறுதியில் படிக்கப் போகிறவர்களை விட பத்து மடங்கு pre-med மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாய் பணி செய்யக் கிடைப்பார்கள்.)
இது போல் (அல்லது இதைவிட மேலான) மாற்றுத் தேர்வுகள் உங்களுக்கும் தோன்றினால் எழுதுங்கள். ஒரு அறிவார்ந்த சமூகமாய் நாம் இந்த மெக்காலே யுக எச்சங்களான objective தேர்வுகளை கடந்து செல்ல குரல் எழுப்ப வேண்டும். அது அவசியம்!
கூடுதல் ஐயம்: இத்தேர்வில் இயல்பியல், வேதியல், தாவரவியல், உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து 180 கேள்விகள் வருகின்றன. ஒரு மருத்துவருக்கு ஏன் தாவரவியல், இயல்பியல் சார்ந்த அறிவு ஏன் இருக்க வேண்டும் என எனக்கு புரியவில்லை. துறை வல்லுநர்கள் தாம் விளக்க வேண்டும்.


Comments

Anonymous said…
சிறந்த மருத்துவர்களை உருவாக்க வேண்டுமா?
சமூக சமநிலை அடைய அனைவருக்கும் மருத்துவ வாய்ப்பு வழங்கவேண்டுமா?

இதற்கு பதில் உங்களிடம் இருந்து வந்தபின்பே தேர்வு முறையை பற்றிய discussionக்குள் செல்லமுடியும்ங்க