Wednesday, August 9, 2017

ஆசிரியரும் அப்பாவும்


என்னுடைய வகுப்பு மாணவர்கள் CIA எனும் உள்மதிப்பீட்டுக்காக கட்டுரைகள் சமர்ப்பிப்பார்கள். அவற்றை நான் கவனமாய் படித்து கஞ்சத்தனமாய் மதிப்பெண்கள் அளிப்பேன். புது கருத்துக்கள், சுயமான பார்வை, விரிவான அலசல், ஓரளவு தப்பில்லாத மொழி என அளவுகோல்கள் வைத்தே கராறாய் மதிப்பிடுவேன். பெரும்பாலான மாணவர்கள் 20க்கு 12 தாண்ட மாட்டார்கள். சமீபத்தில் எங்கள் பல்கலையில் அரைக்கல்வியாண்டின் இடையில் நடத்தும் mid-sem பரீட்சைகள் நடந்தன. அதன் விடைத்தாள்கள் என் மேஜைக்கு வந்தன. நான் பாடம் நடத்தாத வகுப்புகளின் விடைத்தாள்கள் (ஆனால் நான் நடத்தும் பாடங்கள்). நான் இந்த தாள்களை தாராள மனதுடன் மதிப்பிட்டு மதிப்பெண்களை அள்ளி வழங்கினேன். சிறு தவறுகள் கண்டாலும் குறித்து விட்டு மதிப்பெண்ணை அதிகம் குறைக்காமல் இருந்தேன். ஏன் இந்த மாணவர்களுக்கு – நான் நேரடியாய் அறியாத மாணவர்களுக்கு – இப்படி மதிப்பெண்களை தாராளமாய் அளிக்கத் தோன்றுகிறது? ஏன் இந்த மனப்பான்மை என் சொந்த மாணவர்களைப் பொறுத்து ஏற்படவில்லை? இக்கேள்வி என்னை குடைந்து கொண்டிருந்தது.


 இன்று காலை எனக்கு உண்மை துலங்கியது. எளிய உண்மை தான்.

நான் இம்மாணவர்களை என் சொந்த குழந்தைகளைப் போல பாவிக்கிறேன். ஆக, இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் வைக்கிறேன். அவர்களால் என்னை சுலபத்தில் திருப்திப்படுத்த முடியாது. அவர்களின் சிறு பிழைகளும் எனக்கு பெரிதாய் தெரிகின்றன. என் அப்பாவும் என்னிடம் இப்படித் தான் இருந்தார். அவரால் என்னை சுலபத்தில் பாராட்டி கொண்டாட முடியவில்லை. நான் தடம் புரண்டு விடுவேனோ என அஞ்சினார். என்னிடம் கராறாய் இருக்க முயன்றார். இது ஒரு father complex என தோன்றுகிறது.
இன்று காலை ராஜீவ் எனும் சமூகவியல் பேராசிரியரிடம் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்: “ஆச்சரியம்! நானும் இன்று காலை இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி வளாகத்தில், வகுப்புக்கு வெளியே என் வகுப்பு மாணவர்கள் கும்பலாய் கூடி நின்று சிரித்து விளையாடுவதை காணும் போது நான் அதை ரசிக்கிறேன். ஆனால் இதையே வேறு மாணவர்கள் பண்ணும் போது எரிச்சலடைகிறேன். என்ன இது அபத்தமான, அற்பமான விளையாட்டு. இந்த மாணவர்களுக்கு அறிவே இல்லை எனத் தோன்றுகிறது. ஏன் இப்படி இருவிதங்களில் மாணவர்களைக் காண்கிறேன் என வியந்து கொண்டிருந்தேன். இதுவும் father complex தான். ஆனால் நாம் இருவருக்கும் ஒரு வித்தியாசம். நீ ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு அப்பாவைப் போல் இருக்கிறாய். நானோ இருபதாம் நூற்றாண்டு அப்பாவாய் நடந்து கொள்கிறேன்…”
”அதென்ன பத்தொன்பதாம் நூற்றாண்டு அப்பா?”
“போன தலைமுறை அப்பாக்கள். தன்னால் முடியாததை தன் மகன் சாதிக்க வேண்டும் என ஏங்கிய அப்பாக்கள். தன் பிள்ளைகள் சுவடு பிழைப்பதை தாங்கிக் கொள்ள முடியாத அப்பாக்கள். எதிர்பார்ப்பின் கயிறுகளால் பிள்ளைகளை கட்டி வைத்த அப்பாக்கள். மிதமிஞ்சிய பிரியத்தால் பிள்ளைகளை நேசிக்க தவறிய அப்பாக்கள். ஆனால் இன்றைய அப்பாக்கள் பிள்ளைகள் வாழ்க்கையை பார்க்க கொண்டாடுவதை விரும்புகிறார்கள். அவர்களின் தவறுகளை சுலபத்தில் மன்னிக்கிறார்கள். பிள்ளைகள் என்ன குற்றம் செய்தாலும் அதை கண்ணை மூடி ஏற்கிறார்கள்.”
எனக்கு அவர் சொல்வது உண்மை எனத் தோன்றியது. ஜெயமோகனை சு.ரா மறுத்ததற்கும், வாக்னரை நீட்சே கடுமையாய் விமர்சித்ததற்கும், பிராயிடும் லகானும் மனதளவில் விலகி நின்றதற்கும் இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு அப்பா-மகன் முரண்கள் தாம் காரணம். இருபதாம் நூற்றாண்டு அப்பா-மகன் உறவை எழுத்தாளர்கள் இடையே காண இயலுமா? சாருவுக்கும் அவரது சீடகோடிகளுக்குமான உறவு ஓரளவு அப்படியானது தான்.

பேராசிரிய நண்பர் இறுதியில் இப்படி சொன்னார்: “ஆனால் ரொம்ப சுவாரஸ்யமான விசயம் இதுவல்ல. இந்த மாணவர்களுக்கு நாம் பொருட்டே அல்ல. அவர்கள் பின்நவீனத்துவ பிறவிகள். தமது கற்பனைக்குள், தமது கனவுகளுக்குள் வாழும் காற்றுக்குமிழிகள் அவர்கள். அவர்களுக்கு சொந்த அப்பாவே பொருட்டில்லை. ஆசிரியர்கள் அவர்கள் உலகிலேயே இல்லை!”   

No comments: