Tuesday, August 1, 2017

உணவு என்பது வெறும் உணவல்ல

Image result for indian lunch

நாம் எந்த புது ஊருக்குப் போனாலும் முதலில் கவலைப்படுவது உணவைப் பற்றித் தான். அங்குள்ள மனிதர்கள் கூட பொருட்டில்லை. ஏன்?
மனிதர்களுடன் தானே அங்கு அன்றாடம் உறவாடுகிறோம். மனித உறவுகள் தாமே நமது வெற்றி தோல்விகளை, சிக்கல்களை, தீர்வை, நிம்மதியை, மகிழ்ச்சியை, அவஸ்தைகளை தீர்மானிக்கப் போகிறது. ஆனால் விஷயம் அதில்லை.

 கணிசமான வெளி மனிதர்களுடனான நமது சடங்கு ரீதியானது. அவர்கள் நமக்கு குறியீடுகள் மட்டுமே. அவர்கள் எதைக் குறிக்கிறார்களோ அந்தளவுக்கு எதிர்வினையாற்றி விட்டு கடந்து விடலாம். உயரதிகாரி என்றால் வணக்கம் வைக்க வேண்டும், அவர் தலையாட்டி விட்டு போய் விடுவார்; கீழ்நிலை வேலையாள் என்றால் நமக்கு வணக்கம் வைப்பார்கள், நாம் தலையாட்டி விட்டு கடப்போம். எங்கு போனாலும் நமக்கென்று ஒரு மிகச்சின்ன வட்டம் அமைகிறது. அதனுள் பேசி கலந்து கைகுலுக்கி மகிழ்ந்து வெளியேறி வீடு திரும்பி விடுவோம்.
 ஆனால் உணவு அப்படி அல்ல. உணவுடன் நமக்கு ஆத்மார்த்தமான உறவு உள்ளது. ஏனென்றால் உணவு நமது தன்னிலையை (subjectivity) கட்டமைக்கிறது. நீங்கள் யாரென்பதை உங்கள் உணவு மூலமே நிறுவுகிறீர்கள். நீங்கள் மதியம் தயிர்சாதம் விரும்பும் ஆளா நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகை மனிதர். நீங்கள் பிரியாணியை வெட்டுபவர் என்றால் ஒரு மனிதர்; சப்பாத்தி என்றால் வேறு. நான் சமூகப்பின்னணியை, சாதியை, மதத்தை இங்கு குறிக்கவில்லை. உங்கள் தனிமனித அடையாளமே உங்கள் உணவு மூலம் தான் தீர்மானமாகிறது.
 என் அப்பா முன்பு மதியம் உணவருந்த மாட்டார். டீயும் கடலை மிட்டாயும் மட்டுமே. முப்பது வருடங்களாய் அப்படித் தான். அதுவே “அவர்”. அவர் மதியம் சோறும் குழம்பும் பொரியலும் கூட்டுமாய் உண்டால் வேறு மனிதராகி விடுவார். நீங்கள் யாரென்பது பற்றி உங்களுக்கே ஒரு தீர்மானம், புரிதல், சித்திரம் இருக்கிறது. இதை நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவு வழி சிறுக சிறுக உருவாக்குகிறீர்கள். இதனால் தான் நீங்கள் ஒரு புது ஊருக்குப் போனால் உங்கள் ஊர் உணவையே தொடர்ந்து உண்ண ஏங்குகிறீர்கள் (நாவின் சுவையும் ஒரு காரணம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த நாவுச் சுவை உங்கள் தன்னிலையின் ஒரு பகுதி; உங்களை அறியாது உங்களை நீங்கள் வடிவமைக்கும் செயல்.)
கேரளாக்காரர்கள் எங்கு போனாலும் தங்கள் ஊர் உணவு கிடைக்கும் இடத்தை கண்டு பிடித்து விடுகிறார்கள். சமைப்பதற்கான பிரத்யேகப் பொருட்களை சேகரிக்கிறார்கள். ஊரிலிருந்து கொண்டு வருகிறார்கள். தமிழர்கள் வெளிநாடு போனால் “அங்கே சரவண பவன் உண்டு. ஆம்பூர் பிரியாணி கிடைக்கும்.” என்று யாரோ ஆறுதல்படுத்துகிறார்கள். சொந்த ஊர் உணவின் சுவை நாவில் பட்டதும் மனிதர்கள் ஆறுதலாகி ஆழ்ந்த திருப்தி கொள்கிறார்கள். தாம் மாறவில்லை; சிதைந்து உருக்குலைய வில்லை எனும் உணர்வு நெஞ்சில் பரவுகிறது.
ஜும்பா லஹிரியின் Namesake நாவலின் துவக்கத்தில் அமெரிக்காவுக்கு புதிதாய் சென்ற மணப்பெண்ணான ஆஷிமா தனது ஊரைப் பற்றின நினைவேக்கத்தில் தவிப்பாள். அவர் கர்பிணி வேறு. அவளுக்கு பிடித்த உணவைப் பண்ணித் தர அவளது அம்மா அங்கில்லை. அதனால் அவளே கொல்கொத்தாவின் தெரு உணவான ஜல்மூரி (நம்மூரில் பேல்பூரி) பண்ணத் துவங்குவாள். அந்த உணவு அவளை சில நிமிடங்கள் கொல்கொத்தாவுக்கு கூட்டிப் போய் விடும்.
(சிலர் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் உணவை விரும்பி உண்பார்கள். இவர்கள் வேரற்று உலவ விரும்பும் ஆளுமை கொண்டவர்கள்.)
சென்னையில் கல்லூரியில் படிக்கையில் எனக்கு பிரகாஷ் பத்ரா என ஒரு வங்காளி நண்பன் இருந்தான். அவன் என்னை ஒருநாள் ஒரு சின்ன வங்காளி உணவகத்துக்கு அழைத்துப் போனான். அங்கு சுவையான ரொட்டியும் வங்காள சப்ஜியும் வாங்கித் தந்தான். நான் அதன் பிறகு அங்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன். இன்னொரு நண்பர். வறுமையில் இருந்தார். எம்.பில் பண்ணிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த பிரியாணிக் கடைக்கு அவர் சரியாக 11: 30க்கு போவார். அப்போது அங்கே 25 ரூபாய்க்கு குஷ்கா கிடைக்கும். கொஞ்சம் தாமதமானால் பிரியாணி மட்டுமே இருக்கும் (விலை 45). நண்பர் இருந்த நிலையில் அவருக்கு அது சிறந்த ஏற்பாடு. என்னை ஒருநாள் அந்த வேளைக்கு அழைத்துப் போய் குஷ்கா வாங்கித் தந்தார். அதன் சுவையை மெச்சிக் கொண்டே சாப்பிட்டார். இருவரும் தத்தமது நிலையை, அடையாளத்தை (தன்னிலையை) என்னிடம் தாம் அன்றாடம் உண்ணும் பிரத்யேக உணவை பங்கிட்டே வெளிப்படுத்தினார்கள்.
எனது தோழி ஒரு கல்லூரியில் முனைவர் பட்ட நெறியாளர். அவரிடம் ஆயுவு செய்யும் திபெத்திய மாணவர்கள் தமது ஊரின் பிரத்யேக தேயிலையை பெட்டி பெட்டியாக வாங்கி அளிப்பார்கள். திபெத்திய சின்னம் பதித்த சேலையை பரிசளிப்பார்கள். அதை நம்மால் பயன்படுத்த முடியாது. ஆனாலும் ஏன் அளிக்கிறார்கள்? அவர்கள் நம்மிடம் பேச முயலும் மொழி அது.
(என்னைப் போல்) பேலியோ உணவுப்பழக்கத்தை பின்பற்றுபவர்கள் அதன் மிஷனரிகள் போல் ஆகி விடுவார்கள். என் தோழி ஒருவரின் மகனுக்கு அடிக்கடி சளி, ஜுரம் என படுத்தி எடுக்கும். நான் ஒருநாள் அப்பையனிடம் அறிவுரைத்தேன்: “தம்பி நீ சாப்பிடும் தானியங்கள் தாம் உன் தற்காப்பு சக்தியை அடியோடு படுக்க வைக்கிறது. நீ பலவீனமாகி விட்டாய். தானிய உணவுகளை விட்டு விடு. உனக்கு எந்த நோய்த்தொற்றும் ஏற்படாது.” நான் இதைச் சொன்னதும் தோழி என் மீது ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து விட்டார், “அவனே ஏதோ மூணு வேளை சாப்பிட்டு கிட்டு இருக்கிறான். அதையும் பேலியோ கீலியோன்னு கெடுத்திராதே. சோறு, சப்பாத்தி, தோசை எல்லாம் உடம்புக்கு நல்லது தான்.”
“அதில்ல. அவனுக்கு அடிக்கடி ஜுரம் வருதேன்னு…”
“ஜுரம் வரது நல்லது தான். அப்போ தான் தற்காப்பு சக்தி அதிகமாகும். நீ வாயை மூடு”

அவர் ஏன் அப்படி பதற்றமாகிறார் என எனக்கு புரிந்தது. அவர் சமைத்து அந்த உணவை மட்டும் பரிமாறவில்லை; தன் அன்பையும் எண்ணங்களையும் பரிமாறுகிறார். வாழ்க்கைமுறையை, பண்பாட்டை பகிர்கிறார். மகன் பேலியோவுக்கு மாறி விட்டால் அவன் அவரிடம் இருந்து தனியாகி விடுவான். அவர்களுக்குள் பேசப்படும் அந்தரங்கமான மொழியை துண்டாக்க நான் யார்?

No comments: