Monday, August 7, 2017

பிக்பாஸில் ஜூலி (அல்லது ”ஜீலி”): பிழை என்பது பிழை அல்ல

Image result for big boss julie

No automatic alt text available.

பிக்பாஸில் ஜூலி தன் பெயரை தவறுதலாய் “ஜீலி” என எழுதியதற்காக அதை பேஸ்புக்கில் பகிர்ந்து கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னை ஆக்மார்க் தமிழ் உணர்வாளர் என காட்டிக் கொண்டவருக்கு தமிழே தெரியாது பார் என சொல்வதில் நமக்கு ஒரு கிளுகிளுப்பு. ஆனால் தமிழ் உணர்வு என்பது எழுத்துக்கோர்வையின் சரித்தன்மை அல்ல. அது ஒரு பிடிப்பு, பித்து, மூர்க்கமான அடையாள மோகம். அவருக்கு ஆர்வம் ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு வடிவங்களில் இருக்கலாம். மொழியில் இல்லாமல் இருக்கலாம். அவர் ஏன் இம்மொழியை தப்பாய் எழுதக் கூடாது? சரியாய் எழுதி இப்போது என்ன சாதித்து விட்டோம்? மொழி என்பது ஒரு பொருளை கடத்துவதற்கான கருவி தானே? அது ஏன் கச்சிதமாய், பிசிறின்றி இருக்க வேண்டும்?

 இது போன்ற சந்தர்பங்களில் நமக்குள் தூய்மைவாதம் எட்டிப் பார்க்கிறது. இவ்விசயத்தில் என் அணுகுமுறை வழக்கத்துக்கு மாறானது. மொழியில் தவறுகள் தவறில்லை, பொருட்படுத்த அவசியமே இல்லை என நினைக்கிறேன். “ஜூ”வை எடுத்துக் கொள்வோம். அந்த எழுத்தும் அதன் சுழியும் புழக்கத்தில் இல்லாதது. திடீரென்று கேட்டால் எனக்கே குழப்பமாய் இருக்கும். பல சமயங்களில் தனி சிரத்தை எடுத்து உழைத்தால் தான் அதிக பிழைகள் இன்றி எழுதவும் பேசவும் முடியும். ஆனால் அப்படி நேர்த்தியை பேணுவது அவசியமா எனும் கேள்வியும் எனக்குள் உள்ளது.
நம்மில் பலருக்கும் இலக்கண சுத்தமாய் எழுத வராது. கணிசமான தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒற்று சரியாய் வராது. வாழ்த்துகளா வாழ்த்துக்களா? ரெண்டையும் பயன்படுத்துகிறார்கள். இதில் எது சரி என்பது எது காலப்பழக்கம் கொண்டது, எது எழுத்தில் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்டது, எது அதிகாரபூர்வமானது என்பதைப் பொறுத்தது. அடிப்படையில் சில சமூக விதிகள், சடங்குகள், மாறக் கூடிய நம்பிக்கைகள் தாம் எழுத்துச் சீர்மையை தீர்மானிக்கிறது. நான் எம்.ஸி.ஸியில் படிக்கும் போது சில விடுதி நிகழ்ச்சிகளுக்கு டை கட்ட சொன்னார்கள். எவ்வளவு முயன்றும் எங்களில் சிலருக்கு அது வரவில்லை. எனக்கு அதில் என்ன பெரிய சாமர்த்தியம், முக்கியத்துவம் என தோன்றியது. அதைக் கற்று என்ன செய்யப் போகிறீர்கள்? செவ்வாய்க்கு ராக்கெட் விடப் போகிறீர்களா? இல்லை. ஆனால் ஒரு சமூக வட்டத்தில் நீங்க்ள் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கு அது அவசியம். ஒற்று, சரியான உச்சரிப்பு, ஜி, ஜு போன்றவையும் அப்படியே. நீங்கள் சரியாய் மொழியை கற்றவர், மொழி அறிவு கொண்டவர் என காட்டிக் கொள்ள அது பயன்படும். அது ஒரு மேலோட்டமான ஜாடை. அவ்வளவு தான்.
என்னைப் பொறுத்த மட்டில் ஒரு சொல்லோ, சொலவடையோ பயன்பாட்டில் எப்படியான பாத்திரத்தை வகிக்கிறது என்பது முக்கியம். “ஜீலி” என்பது “ஜூலி” என ஜூலியின் கண்களுக்கு தெரியும் என்றால் அவர் அப்படி எழுதி விட்டுப் போகட்டுமே? அல்லது பின்னர் திருத்துவதானால் திருத்தட்டும். ரெண்டினாலும் நம் மொழிக்கோ பண்பாட்டுக்கோ லாபமோ நட்டமோ இல்லை. சொல் என்பது ஒரு குறியீடு. அது என்னவாக தெரிகிறது என்பது முக்கியம். என்னவாக இருக்க வேண்டும் என்பதல்ல.
”செம” என்கிற சொல் “செம்மையில்” இருந்து வந்திருக்கலாம். ஆனால் அது இன்று முழுக்க வேறொரு பொருளில் பயன்படுகிறது. ரெண்டுக்கும் சம்மந்தமே இல்லை. பாரதியார் இப்போது இருந்திருந்தால் அந்த சொல்லின் பொருளே அவருக்கு விளங்கியிருக்காது. ஒரு செவ்வியல் சொல் மருவி இன்று வேறொரு பொருள் பெறுகிறது. பிழை ஒரு புதுப் பொருளை தோற்றுவிக்கிறது.
என் பேராசிரியரின் பெயர் இனிஷியல் “ஆர்”. அவர் அதை ”ரா” என எழுதுவார். நான் இந்த தூய்மைவாதத்தை மறுக்க வேண்டும் என்றே விடாப்பிடியாக “ஆர்” என எழுதுவேன். “ரா” என்பது ஒரு பழைய சம்பிரதாயம். அதை இன்றும் பேணுவதன் மூலம் நான் ஒரு கலாச்சார குறியீட்டை பேணுகிறேனே அன்றி வேறெதையும் பெறவில்லை. ஒரு ஐயங்கார் நாமம் சாத்துவதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை. மனுஷ்ய புத்திரனின் பெயரை “மானுட மகன்” என்று தான் தூய்மையாய் எழுத வேண்டும். சில கூட்டங்களில் சிலர் அவர் பெயரை அப்படி மாற்றி சூட்ட முயன்றிருக்கும் அபத்தங்களை அவரே குறிப்பிட்டிருக்கிறார். நாம் ஏன் இந்தளவு ஒழுங்கைப் பற்றி கவலை கொள்ள வேண்டும்? பிழை இருந்தால் என்ன பிழை? ஏன் இந்த கோணத்தில் நாம் யோசிக்கக் கூடாது?
நான் என் பெயரை இது போல் தவறாய் எழுதுவேனா? ஏன் கூடாது? அபிலாஷ் என்பது எனக்கு “அபிலேஷ்” எனப் பட்டால் அப்படியும் எழுதுவேன். (என்னை சிலர் அப்படியும் அழைக்கிறார்கள். நான் அவர்களிஅ திருத்துவதில்லை.) என் பெயர். அதை எப்படி எழுத வேண்டும் என சொல்ல நீங்கள் யார்? அதை ஒருவர் இப்படித் தான் உச்சரிக்க வேண்டும் என வலியுறுத்த நான் யார்? என் ஆங்கில விக்கிப்பீடியா பக்கத்தில் கூடுதலாய் ஒரு h சேர்த்து Abhilash என்று தான் இருக்கிறது. எனக்கு உண்மையில் அதைப் பற்றி அக்கறை இல்லை. எல்லாவற்றிலும் ஒரு சீர்மையை ஏன் எதிர்பார்க்கிறோம்? ஏன் சீரற்றதாய் இருக்கக் கூடாது? சீரற்ற ஒரு வாக்கியமோ சொல்லோ பொருள் தருமானால் அது ஏன் அப்படி இருக்கக் கூடாது? அபிலேஷ் என்றோ அபிலோஷ் என்றோ என்னை ஒருவர் அழைத்தால் அது என்னைத் தான் குறிக்கிறது என எனக்குத் தெரியும். அப்படி இருக்கையில் அவரை ஏன் திருத்த வேண்டும்?
நான் மாணவனாய் இருக்கையில் எனக்கும் என் ஆசிரியருக்கும் ஒரு கொந்தளிப்பான விவாதம் ஏற்பட்டது. தமிழ் என்பதை ஏன் Tamil என எழுத வேண்டும், ஏன் Thamizh என எழுதக் கூடாது எனக் கேட்டேன். என் விடைத்தாளிலும் அப்படியே எழுதினேன். ஆசிரியர் கடுப்பாகி விட்டார். ஆனால் அப்படி phoneticஆக, பேச்சொலியை ஒட்டிய வகையில் எழுதுவதே சரி என நான் நினைத்தேன். இது என் பிரக்ஞைபூர்வமான முடிவு. ஒருவேளை நாளை ஒரு குழந்தை இதை அறியாமலே செய்யலாம். அல்லது Thamizh என எழுதுவதே சரியானது என அக்குழந்தை நம்பலாம். நாம் அக்குழந்தையை கேலி செய்து பழிக்கப் போகிறோமா அல்லது ஏற்கப் போகிறோமா?
இப்படி எல்லாம் ஆளாளுக்கு எழுதினால் குழப்பம் நேராதா? நிச்சயமாய் இராது. எழுத்துப் பிழையோடு எத்தனையோ ஆங்கில பெயர்ப்பலகைகளை காண்கிறோம். அவற்றைப் புரிவதில் பொதுமக்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நேர்த்தி, விதிமுறை, சம்பிரதாயம் ஆகியவற்றை வலியுறுத்தும் படித்த மேதாவிகளை இப்பழக்கம் அச்சுறுத்துகிறது. அவர்களின் கலாச்சார அதிகாரத்தை அது அசைக்கிறது. அவர்கள் இந்த எழுத்துப் பிழைகளை பரிகசித்து எழுதுகிறார்கள். இது உலகம் பூரா உள்ள ஒரு போக்கு. School என்பதை scool என எழுதுவது, we bye used cars, motercycle, key to sucses என எழுத்துப்பிழைகளை படம் எடுத்து இணையம் பூரா கொட்டி வைத்திருக்கிறார்கள்.
 ஆனால் இங்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. ஆங்கிலம் ஒரு non-phonetic மொழி. அதாவது பேசுவது போல் எழுத முடியாது. ஏனென்றால் லத்தீன், பிரஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் இருந்து ஏகப்பட்ட சொற்களை ஆங்கிலத்தில் மருவி பயன்படுத்துகிறார்கள். அப்போது அப்பூர்வீக சொல்லமைப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் உச்சரிப்பை மாற்றுகிறார்கள். இதனால் சொல்லின் தோற்றத்துக்கும் அதன் ஒலிக்கும் சம்மந்தமே இருப்பதில்லை. Gigantic என்பதன் உச்சரிப்பு என்னவென கேட்டால் இங்கே 99% தப்பாய் சொல்வார்கள். அது உங்கள் தப்பல்ல. மொழிக்குள் உள்ள ஒரு லாஜிக் பிழை. மனித மனம் இயல்பாகவே ஒலிக்கு ஏற்ப எழுத்தமைப்பை மாற்ற முயல்கிறது. அதனால் தான் scool என்பது தான் தர்க்கரீதியாய் சரி. அதில் வரும் கூடுதல் h அங்கே மௌனமாய் இருக்கிறது. வெறுமனே இடத்தை ஆக்கிரமிக்கிறது. அதை ஏன் நீக்கக் கூடாது? Buy என்பதை விட bye தான் ஒலிக்கு நெருக்கமாய் இருக்கிறது. U என்பதன் உ ஓசையை நீங்கள் பயன்படுத்தினால் அச்சொல் ”புய்” என்றே ஒலிக்கும். Motor என்பதும் அப்படியே. ஒலியில் ஒ இல்லை. ”இ” ஒலியே உள்ளது. அதனால் மனித மனம் இயல்பாகவே வழமையான எழுத்துக்கோர்வையை மறுக்கிறது. இதில் என்ன தவறு?
 இதனாலே எனக்கு எழுத்துப்பிழையை கேலி பண்ணுவர்களைக் கண்டால் எரிச்சலாய் வரும். அது ஒரு கேவலமான மனநிலை என நினைப்பேன். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், தன்னை மற்றவரில் இருந்து மேலாய் காட்டிக் கொள்ள தவிப்பவர்களே அடுத்தவர்களின் இப்படியான தவறுகளை படமெடுத்து அம்பலப்படுத்த ஆலாய் பாய்வார்கள் என்பது என் புரிதல்.
தமிழ் ஒரு phonetic மொழி தான். ஆனால் தொடர்ந்த வட்டார வழக்குகள் மற்றும் சமிஸ்கிருத, ஆங்கில தாக்கத்தால் உச்சரிப்பில் பல்வேறு மாற்றங்களை சந்திக்கும் மொழி. (உதாரணமாய் “ஜூ” எனும் எழுத்தே நமக்கில்லை. ஆக ”சூலி” என்று அழைக்க வேண்டும். ஆனால் உச்சரிப்பில் “ஸூ” தமிழில் இல்லை என்பதால் “ச்சூலி” எனச் சொல்ல வேண்டும். எவ்வளவு சிக்கல்கள்!) நாம் இம்மாற்றங்களை தடுத்து நிறுத்தி ஒரு செவ்வியல் நிலையில் அதை உறைய வைக்க தவிக்கிறோம். இது தலையை கொடுத்து ரயிலை நிறுத்துவது போல் அபத்தமான முயற்சி. மொழியை நாம் செவ்வியல் நிலையில் தக்க வைக்க முயன்றாலும் இன்னொரு பக்கம் எளிய மக்கள் அம்மொழி மீது தம் ஆதிக்கத்தை தக்க வைக்கும் விதமாய் பிழைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் தாம் நம் மொழியை உயிர்ப்பாய் வைக்கிறார்கள். நீங்கள் மு.வ அல்லது கலைஞரின் மொழியை விட மௌனி அல்லது லா.ச.ராவின்  மொழியில் பிறழ்வுகளை, அத்துமீறல்களைக் காணலாம். ஆனால் பின்னவர்கள் தாம் நம் பண்பாட்டை இன்னொரு நிலைக்கு எடுத்துச் சென்றவர்கள். கச்சிதமாய் எழுதும் செவ்வியல்வாதிகள் அல்ல.
 இதையே தான் நான் உச்சரிப்பு விசயத்திலும் சொல்வேன். என் பேராசிரியர் ஒருவர் சொல்வார் தமிழில் “ஸ” எனும் ஓசையே இல்லை என. ஆனால் நாம் சங்கத்தமிழை “ஸங்கத் தமிழ்” என்று தானே சொல்கிறோம். எனக்கு “ஸங்கத் தமிழே” இயல்பாய் ஒலிக்கிறது. ஒருவர் எழுத்திலும் அவ்வாறே (”சங்கம்” என்பதற்குப் பதில் “ஸங்கம்”) எழுத விரும்பினால் நாம் அவரை சாணியடிக்க தேவையில்லை. அந்த குழந்தைத்தனமான துடுக்குத்தனத்தை ரசிக்க வேண்டும்.
என் ஊரில் செபாஸ்டியன் என்றொருவர் இருந்தார். அவரை எல்லாரும் செவித்தியான் என்றே அழைப்பார்கள். அவருக்கே தன் பெயர் செபாஸ்டியன் எனத் தெரியாது. செபாஸ்டியன் என்பதன் ஓசை அந்நியமாய் இருப்பதாலே மக்கள் அந்த பிழைபட்ட வடிவை உருவாக்கினார்கள். இது போல் எத்தனையே பெயர்கள் உருமாறி ஒலிக்கின்றன. கஹானி படத்தில் வித்யா பாலன் கொல்கொத்தா வரும் போது எல்லாரும் தன்னை பித்யா என அழைப்பது கண்டு ஆரம்பத்தில் எரிச்சலடைவார். ஆனால் ஒரு கட்டத்தில் ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொள்வார். ஏனென்றால் வ ஓசை அங்கு ப ஓசை. நாளை யாராவது அவர் பெயரை எழுதும் போது “பித்யா” என எழுதினால் தான் அது அழகாய் இருக்கும். துல்லியத்தில், கச்சிதத்தில், வழமையில் அழகு இல்லை. பிறழ்விலே அழகு உள்ளது.

ஜூ என்பது மனதில் பதியாதவருக்கு “ஜூ” தான் “ஜீ”. அதையே அவர் தொடர்ந்து பயன்படுத்தினால் நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள். இதில் என்னய்யா உங்களுக்கு பஞ்சாயத்து?