இன்றைய வாசகர்கள், இளம்
எழுத்தாளர்களுக்கு கோட்பாட்டு எழுத்தாளர்கள் மீது ஒரு அலுப்பு, இளக்காரம் உள்ளதை அறிவேன்.
அவர்கள் இருண்மைவாதிகள், அராஜகவாதிகள், மொழியை திருகி இடியாப்பமாக்கினார்கள் ஆகிய குற்றச்சாட்டுகள்
உள்ளன. வேற்று கலாச்சார பண்பாட்டு, தத்துவ கருத்துக்களை அரைகுறையாய் புரிந்து கொண்டு
தமிழில் சாயம் கலையாமல் இறக்குமதி செய்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளில்
சில நியாயமானவை தாம். கோட்பாட்டு எழுத்து பீதியூட்டுகிறது என்பது உண்மையே. ஆனால் அது
தமிழில் மட்டுமல்ல. ஆங்கிலத்திலும் அவ்வாறே. பொதுவாகவே கோட்பாட்டு எழுத்தாளர்கள் எங்கும்
ஜீரணமாகும் மொழியில் எழுதுவதில்லை. மிக மிக பிரபலமான பிராயிடை ஆங்கிலத்தில் படித்துப்
பாருங்கள். லேசாய் தலைசுற்றும். ஒரு வரியில் ஒன்பது மேற்கோள்கள் காட்டுவார். லக்கான்,
சிக்ஸூ போன்றோரையும் சுலபத்தில் படிக்க இயலாது. காயத்ரி ஸ்பிவாக் எப்படி தேவையற்று
தன்னை சிக்கலானவராய் மாற்றிக் கொள்கிறார் என ஒரு பிரபல ஆங்கில இணைய பத்திரிகையில் ஒரு
கட்டுரை படித்தேன். எல்லா இடங்களிலும் இக்குற்றச்சாட்டு உள்ளது. ஏன் இந்த குற்றச்சாட்டு
வருகிறது?
கடந்த நூற்றாண்டில் தான்
அதிகமான மீடியா வெளிச்சம் தத்துவவாதிகள் மீது விழுந்தது. அவர்களைப் பற்றி பத்திரிகைகளில்
எழுதினார்கள். மக்கள் அவர்களை படித்து தெரிந்து கொள்ள விரும்பினார்கள். ஆனால் அது சுலபமல்ல.
அவர்கள் வெகுஜன தரப்பை சேர்ந்தவர்கள் அல்ல. ஒரு பொறியியல் நூலை நானோ நீங்களோ பொழுதுபோக்காய்
படிக்க முனைவதில்லையே? ஏன் அல்ஜீப்ரா இப்படி குழப்பமாய் இருக்கிறது என கேட்பதில்லையே?
இலக்கிய கோட்பாடுகள் மேற்கத்திய, கிரேக்க, பிரஞ்சு தத்துவங்களில் முளைத்தவை. அவற்றுக்கு
நூற்றாண்டுகளின் நீட்சி உள்ளது.
உதாரணமாய், “மற்றமை” (other) எனும் சொல்லை நீங்கள்
அங்கங்கே படித்திருக்கலாம். இதற்கு நிச்சயம் பிளேட்டோ வரை ஒரு தொடர்ச்சி உண்டு. லக்கான்
சுயம் × மற்றமை பற்றி சொன்னதை நாம் ஒரே வாக்கியத்தில் புரிந்து கொள்ள இயலாது. நான்
சமீபத்தில் ஒரு பிரஞ்சு எதிர் சினிமா இயக்குநர் (Phillippe Grandrieux) பற்றி ஒரு நூல்
படித்தேன். ஒரு பிரஞ்சு பெண் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார். எங்குமே இலக்கிய கோட்பாடுகளை
அவர் குறிப்பிடவில்லை, கலைச்சொற்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின் அமைப்பியல், கட்டுடைத்தல்
குறித்த புரிதல் இல்லாமல் அவர் இதை எழுதி இருக்க முடியாது என உணர்ந்து கொண்டேன். (அந்த
புரிதல் இல்லாமல் ஒரு வாசகனுக்கும் அவர் எதிர் சினிமா என எதை சொல்கிறார் என புரியாது)
சினிமா குறித்து எழுதுபவர் எப்படி இவ்வளவு ஆழமான தத்துவ புரிதலோடு இருக்கிறார் என வியந்தேன்.
எனது முனைவர் பட்ட நெறியாளரான பேராசிரியர் அழகரசனிடம் இது குறித்து கேட்கும் போது அவர்
பிரான்ஸில் பள்ளி, கல்லூரி அளவிலேயே தத்துவங்கள் தெளிவாய் அறிமுகமாகி விடுகின்றன என்றார்.
அதனால் தான் அங்கே சார்த்தர் ஒரு நட்சத்திரமாக முடிந்தது. ஆனால் தமிழில் என்ன நிலை?
இங்கு நமக்கு இந்திய தத்துவமே
தெரியாது. புத்தரின் சிலையை வீட்டில் வைத்திருப்பவர்கள், அவர் சிலையை வணங்கி தன்னை
தலித் போராளியாக காட்டுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பௌத்தம் பிறவி குறித்து
கூறிய தத்துவத்துக்கும் பின் கட்டமைப்பியலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து தமிழில்
கவலைப்பட்டிருக்கிறார்களா? எழுதியிருக்கிறார்களா? அதை விடுங்கள். பா.ரஞ்சித் பற்றி
பேசுகிறவர்கள் அயோத்திதாசர் பற்றி எழுதுவார்களா? இதை நான் ஒரு குற்றச்சாட்டாக வைக்கவில்லை.
நம் மண்ணின் வைதிக, அவைதிக தத்துவங்களை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பை நமது கல்வி அமைப்பு
நமக்கு வழங்கவில்லை. மேற்கத்திய தத்துவவாதிகளை நாம் சுத்தமாய் அறிய மாட்டோம். அடிப்படையில்
தத்துவத்தோடு பெரிய அளவில் துண்டிக்கப்பட்ட ஒரு சமூகம் நாம்.
இலக்கிய கோட்பாடுகள் இந்த தத்துவங்களின் ஒரு நீட்சி.
நம் மரபின் சூனியவாதம் தெரிந்து கொண்டாலே நமக்கு மேற்கத்திய மொழியியல் விவாதங்கள்,
கட்டுடைத்தல் ஆகியன விளங்கும். ஆனால் நாம் சூனியமாகவே இருந்து விட்டோம்.
இப்படியான ஒரு வறட்டு சூழலில் தான் தொண்ணூறுகளில்
இங்கே கோட்பாட்டு எழுத்து ஒரு பெரிய அலையாக தோன்றியது. இந்த எழுத்தாளர்களால் மேற்கத்திய
தத்துவ கோட்பாடுகளை முழுமையாய் உள்வாங்கி சுலபத்தில் இங்கு பேசி இருக்க இயலாது. அவர்களே
புரிந்து கொண்டிருந்தாலும் இங்கு விளக்க முடியாது. ஏனென்றால் இங்கு அதற்கான அடித்தளமே
இல்லை. கலைச்சொற்கள் இல்லை. கோட்பாட்டு எழுத்தாளர்களே இக்கலைச்சொற்களை உருவாக்கி உலவ
விட வேண்டி வந்தது.
நாம் அரைநூற்றாண்டாக பௌத்தம், சமணம் பற்றி புரியாமலே
சீவக சிந்தாமணி பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கண்ணகி, கோவலன், திருக்குறள் ஆகிய சொற்களை
மீண்டும் மீண்டும் மேலோட்டமாய் உருப்போட்டுக் கொண்டிருந்தோம். ஆக இந்த சூழலில் கோட்பாட்டு
எழுத்தாளர்களால் ஒரு தனி மரபை உருவாக்க முடியவில்லை என்பதை அவர்களின் தோல்வியாய் நான்
பார்க்கவில்லை.
நாம் பிளேட்டோவில் இருந்து
ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பேசப்பட்ட மேற்கத்திய தத்துவங்களை
ஒதுக்கி விட்டு நடுவில் புகுந்து சார்த்தர், தெரிதா, பூக்கோ என புரிந்து கொள்ள பார்த்தோம்.
தலையை விட்டு விட்டு வாலை மட்டுமே வேடிக்கை பார்த்தோம். இது முழுக்க கோட்பாட்டுவாதிகளின்
தவறு அல்ல. வாசகர்கள் நாம் அதற்கு தயாராக இருக்கவில்லை. இது முழுக்க நம் தவறும் அல்ல.
நம் கல்வியாளர்கள் நம்மை காயடித்து விட்டார்கள்.
இந்த அரைகுறை புரிதல் சில
சுவாரஸ்யமான விளைவுகளை இங்கு ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாய் பெண் உடல் எழுத்தை
சொல்லலாம். ஆண் குறி மையவாதத்தை முறியடிக்க பெண் குறி எழுத்து அவசியம் என இங்கு ஒரு
புரிதல் கிளம்பியது. விளைவாக, ரெண்டாயிரத்தின் முற்பாதி வரை இங்கு பாலியல் தூக்கலான
பல சிறந்த பெண்ணிய கவிதைகள் எழுதப்பட்டன. இக்கவிதைகளை வெகுஜன வாசகர்களுக்கு எப்படி
எடுத்துக் கொள்ள என புரியவில்லை. ஏன் ஒருவர் தன் கவிதைத்தொகுப்புக்கு “முலைகள்” என
பெயரிடுகிறார் என அவர்கள் குழம்பினார்கள். அது வெறும் உறுப்பு தானே, அதை ஏன் பிரதானப்படுத்த
வேண்டும்? – இது ஒரு பக்கம். அது கொச்சையானது அல்லவா? இவர்களுக்கு வெட்கம் இல்லையா?
– இது இன்னொரு பக்கம். உடல் எழுத்து குட்டிரேவதி, சுகிர்தராணி, லீனா மணிமேகலை ஆகியோருக்கு
திடீர் வெளிச்சத்தை பெற்றுத் தந்தது. அவர்கள் கலகவாதிகளாய் பார்க்கப்பட்டார்கள். ஆனால்
அவர்களின் கவிதைகள் போதுமான கவனத்துடன் படிக்கப்படவில்லை. அதே போல உடல் எழுத்தின் தத்துவ
/ உளவியல் / மொழியியல் தளங்களும் புரிந்து கொள்ளப்படவில்லை. உடலை வைத்து கவனம் பெறுகிறார்கள்
என இது தட்டையாய் பார்க்கப்பட்டது. கடந்த வருடம் கவிஞர் திலகபாமா ஒரு கருத்திரங்கில்
இதை ஒரு குற்றச்சாட்டாகவே வைத்தார். உடல் சித்தரிப்புகள், காமம் இன்றி பெண்கள் எழுதினால்
அது கவனிக்கப்படுவதில்லை. ஏன் ஒரு பெண் அப்படி எழுதியாக வேண்டும் எனும் அழுத்தம் இங்கு
உள்ளது என அவர் கேட்டார்.
ஒரு பெண் ஏன் தன் பாலியல்
பற்றி எழுத வேண்டும்? உடல் எழுத்தை புரிந்து கொள்ள நாம் மேற்கில் சிக்ஸூ, பிராயிட்,
லக்கான் ஆகியோர் உடலுக்கும் சுயத்துக்குமான தொடர்பை பற்றி பேசியதை அறிந்து கொள்ள வேண்டும்.
சுருக்கமாய் சொல்வதானால் ஒரு ஆண் இந்த உலகை தன் பாலுறுப்பின் மூலமாகவே பிறிது (மற்றமை)
என பிரித்து தான் வேறு, பிறர் வேறு என அறிந்து கொள்கிறான். அதாவது முலை குடிக்கும்
ஒரு மதலை தன்னை தாயில் இருந்து எப்போது மாறுபடுத்தி பார்க்க ஆரம்பிக்கிறான்? அவன் தன்
ஆண்குறியை அறியும் போது தான் என்றார் பிராயிட். லக்கானும் சிக்ஸுவும் இதை உளவியல்,
பின் அமைப்பியல் சார்ந்து மற்றொரு தளத்துக்கு எடுத்துப் போனார்கள். சிக்ஸூ ஒரு முக்கியமான
பெண்ணிய கோட்பாட்டாளர். அவர் ஆண் பிம்பம் மூலம் மொழியில் அதிகாரம் குவிகிறது. இதை உடைக்க
ஒரு பெண் பிம்பம் நோக்கி மொழி நகர வேண்டும் என்றார். பெண் குறிக்குள் இருந்து புது
எழுத்து தோன்றட்டும் என்றார் (இதனாலே குட்டி ரேவதி “முலைகள்” என தொகுப்புக்கு பெயர்
வைக்கிறார்). அவர் என்ன சொல்ல வருகிறார்?
பெண்ணின் பாலுறுப்புகளின் உணர்வுகளை பற்றி எழுத வேண்டும்
என்றா? இல்லை. தெரிதா ஒரு சொல் எப்படி ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தை பெறுகிறது என பேசும்
போது சொல்லும் அதன் அர்த்தமும் நிரந்தரமான தொடர்பு அற்றது என்றார். இன்று அம்மா என்றால்
உடனடியாய் ஜெயலலிதா மனதில் தோன்றுகிறார். ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்பு அப்படி
இல்லை. ஆக அர்த்தம் ஒரு சொல்லின் மீது ஏற்றப்படுகிறது. பின்னர் அது இறக்கப்பட்டு மற்றொரு
அர்த்தம் அச்சொல்லில் ஏற்றப்படுகிறது. குறிக்கப்படும் ஒன்று (ஜெயலலிதா), குறிக்கும்
ஒன்று (அம்மா) என அவர் பிரித்து பார்த்தார்.
சொல்லுக்கு நிரந்தரமான
பொருள் இல்லை. (இதை நாம் நமது சூனியவாதத்துடன் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளலாம்)
ஆனால் ஒரு பொருள் சொல்லின் மீது வலிமையாய் திணிக்கப்படுகிறது. இதன் மூலம் அதிகாரம்
தோன்றுகிறது. ”நான் ஆம்பளைடா” என சினிமாவில் வரும் வசனம் இப்படித் தான் அதிகாரத்தை
குறிக்கிறது. இந்த அதிகாரத்தை உடைக்க வேண்டும் என்று தான் மேற்கத்திய பெண்ணியவாதிகள்
வலியுறுத்தினார்கள். ஆண்குறியில் இருந்து எழுத்தை நகர்த்தி பெண் குறிக்கு கொண்டு வர
வேண்டும் என அவர்கள் விரும்பியது நிரந்தர அர்த்தங்களின் பொருளை நிர்மூலமாக்கத் தான்.
அதாவது அவர்கள் இதை ஒரு மொழிப் பிரச்சனையாகத் தான் கண்டார்கள்.
ஆண் குறி, பெண் குறி ஆகியவை கூட இங்கு குறியீடுகள்
தானே ஒழிய பாலுறுப்புகள் அல்ல. சரி, ஆண் குறியில் இருந்து பெண் குறிக்கு மொழியை கொண்டு
வந்தால் அது மற்றொரு அதிகாரத்தை தோற்றுவிக்காதா?
இங்கு தான் பிராயிட் மீண்டும்
வருகிறார். பிராயிட் ஆண், பெண்ணை உடல்களாக அல்ல சீன யின் – யாங் கோட்பாடு படித் தான்
பார்த்தார். யின் என்றால் ஆற்றலை செலுத்தும் இருப்பு. யிங் ஆற்றலை உள்வாங்கும் இருப்பு.
விந்தை பாய்ச்சும் ஆண் குறியை யின் ஆகவும், வாங்கும் பெண் குறியை யாங் ஆகவும் அவர்
கருதினார். (இந்திய அரசியலில் வைத்துப் பார்த்தால் பிரிட்டீஷ் அரசை யின் ஆகவும் காந்தியின்
அகிம்சையை யாங் ஆகவும் பார்க்கலாம். குங் பூவில் ஒரு குத்தின் ஆற்றலை தடுக்காமல் வாங்கி
எதிரி மீது திரும்பி தாக்கும் வியூகமாய் யின் யாங் பயன்படுகிறது) யின் அதிகாரம் என்றால்
யாங் அதிகாரத்தை உள்வாங்கி வெற்றிடமாக்கும் சக்தி. சிக்ஸூவும் பெண் குறியை பல வித அர்த்தங்களை
தன்னுள் வாங்கி, ஒரு பொருள் மட்டும் தராத, ஒற்றை அதிகாரத்தை ஏற்காத (சூனியமாக) இருப்பின்
குறியீடாகத் தான் பார்த்தார். அவர் பெண் குறியைப் பற்றி நேரடியாய் எழுத சொல்லவில்லை.
அவர் பலவித அர்த்தங்கள் தொடர்ந்து நிலைக்காமல் முயங்கும் ஒரு மொழியை உருவாக்க கேட்டார்.
நாம் தவறாய் இதை செக்ஸ் பற்றி அவர் எழுத கேட்டதாய் புரிந்து கொண்டோம்.
இதன் ஒரு நல்ல விளைவு தான்
நமது பெண்ணெழுத்து. அதாவது கோட்பாடுகளை தவறாய் புரிந்து கொண்டதன் விளைவாக மிக வீரியமான,
கற்பனை கிளர்ச்சி கொண்ட, படைப்பூக்கம் மிக்க சிறந்த பல கவிதைகளை நம் பெண் கவிஞர்கள்
எழுதினார்கள்.
இன்னொரு புறம் கட்டுடைப்பை
நாம் ஒரு கருத்தின் மறைமுக அரசியலை வெளிப்படுத்தும் வியூகமாய் தவறாய் புரிந்து கொண்டோம்.
ஆனால் தெரிதா கட்டுடைப்பை ஒரு சொல்லின் நேரடியான பொருளை அகற்றி, புது அர்த்தங்களை கட்டுடைத்து
வெளிப்படுத்தி, அதன் மூலம் ஒரு கருத்தோ சொல்லோ அர்த்தமின்மையை, அர்த்தங்களில் இருந்து
விடுதலையை தேடிக் காணும் ஒரு முறைமையாகவே கண்டார். அதாவது ஒரு ”மொழியியல் யோகாவாக”
கட்டுடைப்பை பார்த்தார். நாமோ ஒருவரின் சாதி அல்லது வர்க்க பின்னணியை தோண்டி எடுத்து
பேசுவதே கட்டுடைப்பு என புரிந்து கொண்டு புதுமைப்பித்தனை, பல பிராமண, வெள்ளாள எழுத்தாளர்களை
“கட்டுடைத்து” புளகாங்கிதம் அடைந்தோம்.
இப்படி கோட்பாட்டு புரிதலின்
குறைபாடு இங்கு நன்மைகளையும் சில வேடிக்கை வினோதங்களையும் ஏற்படுத்தின. கோட்பாட்டு
இயக்கத்திற்கு ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் தேக்கம் ஏற்பட்டது இதனால் தான்.
ஆனால் இதனால் கோட்பாட்டு
எழுத்தின் பொற்காலம் முடிந்து விட்டது என நான் நம்பவில்லை. தமிழில் எப்போதுமே
10-20 வருடங்களுக்கு ஒருமுறை புதிய அலை தோன்றும். பழைய அலையில் புரண்டு வந்தவை கவனத்தில்
இருந்து விலகும். இங்கு எஸ்.ராவும், கோணங்கியும் புது அலையில் மேலெழுந்து வந்த போது
கா.ந.சுவும் சு.ராவும் காலி என நினைத்தோம். ஆனால் நுணுக்கமாய் ஆராயும் போது பின்நவீனத்துவ
எழுத்தில் நவீனத்துவ எழுத்தின் வேர் இருப்பதை காண இயலும்.
இன்று தமிழில் எழுதி வரும்
முக்கியமான இளம் உரைநடையாளர்கள் கோட்பாட்டு இயக்கத்தின் (சீருடை அணியாத) நீட்சி தான்.
“அதிகாரம்” என்ற சொல் தமிழில் எத்தனை ஆயிரம் முறை பயன்படுத்தப்படுகிறது என ஒரு கணக்கு
எடுத்தாலே இது விளங்கும். இந்த கலைச்சொற்களின் பின்னால் மொழி, சமூக அடுக்கு, அதிகார
மனம் செயல்படும் விதம் குறித்த பல புரிதல்கள் உள்ளன. இந்த புரிதல்களின் அடிப்படையில்
தான் நாம் இன்று எழுதுகிறோம். வணிக பத்திரிகைகளில் வரும் அரசியல் சமூக கட்டுரைகளிலும்
இன்று கோட்பாட்டு இயக்கத்தின் மங்கலான பிரதிபலிப்பை பார்க்கிறோம். இந்த கோட்பாட்டு
இயக்க மரபின் மைந்தனான எச்.பீர் முஹம்மது இன்று நக்கீரனில் தொடர்ந்து எழுதி வருவதன்
வழி நாம் தொண்ணூறுகளின் போக்கு இன்று வந்து சேர்ந்துள்ள இடத்தை புரிந்து கொள்ளலாம்.
டி.வியில் நீயா நானா நிகழ்ச்சியின் வேர்கள் தொண்ணூறுகளின்
கோட்பாடுகளில் தான் உள்ளன. இந்த நிகழ்ச்சி எல்லா விசயங்களை திருப்பி பார்க்க சொல்கிறது.
கோமாளிகளை மனிதர்களாகவும் மனிதர்களை கோமாளிகளாகவும், தப்பை சரியாகவும், சரியை தப்பாகவும்
பார்க்க கேட்கிறது. தமிழின் கோட்பாட்டு எழுத்து இன்று டி.வி ரியாலிட்டி ஷோவாக இன்னொரு
வடிவை எடுத்திருப்பதாய் நம்புகிறேன்.
தமிழ் கோட்பாட்டு எழுத்தாளர்களில்
நான் மிகவும் மதிப்பவர்கள், தொடர்ந்து வாசிப்பவர்களில் என ரவிக்குமார், ராஜ் கௌதமன்,
தமிழவன் ஆகியோரை குறிப்பாக சொல்லலாம். என்னையும் நான் இவர்களின் ஒரு மிக எளிய நீட்சியாகத்
தான் காண்கிறேன்.
நான் தொண்ணூறுகளில் தமிழ்
கோட்பாட்டு எழுத்துக்கள் வழியாகத் தான் பின்நவீனத்துவம், கட்டுடைத்தல், அமைப்பியல்,
பின் – அமைப்பியல் என பல விசயங்களை அறிந்து கொண்டேன். அப்போது நான் கல்லூரியில் ஆங்கில
இலக்கியம் கற்க துவங்கி இருந்தேன். இங்கு அரசியல் சமூக தளங்களிலும் இலக்கிய விமர்சனத்திலும்
கோட்பாடுகள் சம்மந்தமாய் எழுந்த சர்ச்சைகள் கோட்பாடுகளை அனுபவரீதியாய் அறிந்து கொள்ள
எனக்கு உதவின. நான் ஆங்கிலத்தின் வழியாக அல்ல, தமிழ் மூலமாகவே மேற்கத்திய கோட்பாடுகளை
அறிந்து என் கல்லூரித் தேர்வுகளை சிறப்பாய் எதிர்கொண்டேன். நான் முதுகலை படிக்க சென்னை
கிறுத்துவக் கல்லூரி சென்ற போது அங்கு வகுப்பில் பின்நவீனத்துவம் என்ற சொல் கூட பிற
மாணவர்களுக்கு அந்நியமாய் இருந்தது. ஆனால் எனக்கு அது ரஜினி, கமல் போல் ஒரு சாதாரண
சொல்லாக இருந்தது. இரண்டாம் வருடத்தில் என் சக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இக்கோட்பாடுகளை
போதித்தார்கள். ஆனால் எனக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே இவை அறிமுகமாகி இருந்தன. அதற்கு
நான் தமிழின் கோட்பாட்டு எழுத்தாளர்களையே வணங்க வேண்டும். நான் தமிழ் வழியாக் கற்றுக்
கொண்டதைக் கொண்டே ஆங்கில இலக்கிய முதுகலையில் முதல் மாணவனாய் வந்து தங்க பதக்கம் பெற்றேன்.
’
இவர்கள் இன்றி இன்றைய என்
உரைநடை இல்லை. கோட்பாட்டு எழுத்தின் அந்திம காலம் என இக்காலத்தை கூற மாட்டேன். கடும்
வெயில் எரிக்கும் பகலில் இருந்து இளமஞ்சள் வெயில் அடிக்கும் மாலையில் இருக்கிறோம் எனலாம்.
கோட்பாடுகளை நாம் இன்று
ஆங்கிலம் வழியாகவும் கற்கலாம். எளிமையான கையேடுகள் இன்று கிடைக்கின்றன. ஆனால் தமிழில்
இக்கோட்பாடுகள் எப்படி சுழற்றி இடம் வலமாய் கத்தி வீச பயன்பட்டன என நாம் தெரிந்திருந்தால்
ஆங்கிலத்திலும் அவற்றை புரிந்து கொள்ள எளிதாய் இருக்கும். அதாவது Cane and Abel பற்றிய
விவிலிய கதையை நீங்கள் அண்ணாமலை படத்தில் இருந்து பின்னோக்கி சென்று ஆங்கிலத்தில் படித்தால்
இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். உடனே உணர்வுரீதியாய் புரியும்.
பின் குறிப்புகள்:
1) இடைநிலை
இதழ்களின் வரலாற்று இடத்தை நாம் இன்னும் பத்திருபது ஆண்டுகளுக்கு பிறகு தான் வரையறுக்க
இயலும் என மனுஷ்யபுத்திரன் கூறுவது தான் சரி. ஒரு காலகட்டத்தை அதில் இருந்தபடியே மதிப்பிட
இயலாது.
2) புரியவில்லை
என பிலாக்காணம் வைப்பதை விடுத்து முயற்சி எடுத்து நாம் தமிழவன் உட்பட்ட கோட்பாட்டு
எழுத்தாளர்களை முழுமையாய் வாசிக்கலாம். அது நம் எழுத்தை செறிவாக்கும். நம் பார்வையை
விசாலமாக்கும். நமக்கு சினிமாவை தவிர்த்து பேச வேறு விசயங்களை கோட்பாட்டு அறிவே தரும்.
இக்கோட்பாடுகளின் ஒளியில் மீண்டும் சமூக வரலாற்று விசயங்களைப் பற்றி நாம் எழுத முனைந்தால்
தமிழில் உரைநடை எழுத்து புது களங்களை உயரங்களை அடையும்.
நன்றி:
தீராநதி
2 comments:
அருமையான கட்டுரை அண்ணா...
நல்ல கட்டுரை
Post a Comment