இன்றைய தலைமுறை: மகன்களால் உடைந்தழும் அப்பாக்கள்

Image result for father son

பதின்பருவத்தினரை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு ஐந்து வருடங்களும் ஒரு புதுத் தலைமுறை தோன்றுகிறது. முன்பு இது பத்து அல்லது இருபதாண்டுகளுக்கு முன்பு நடக்கும். ஆனால் 2012இல் இருந்த பதின்பருவத்தினரும் 2017இல் இருப்பவர்களும் ஒன்று போல் இல்லை. மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க முடிகிறது. (சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சி, இணையத்தின் பரவல் ஆகியவற்றினால் இருக்கலாம்.) கல்லூரியில் தொடர்ந்து புதுப்புது மாணவர்களை காண்கிறவன் ஆகையால் என்னால் இம்மாற்றத்தை டிவி சேனல்களை மாற்றி ஒப்பிடுவது போல் செய்ய முடிகிறது. இன்றைய இளைஞர்களின் பிரதான குணம் என்ன? சுதந்திர விழைவு.

நாம் எல்லாருமே பதின்பருவத்தில் நமது சுயத்தை கையில் பிடித்த துள்ளும் மீன் போல கையாளத் தெரியாமல் தவித்திருப்போம். அதுவரை மூடி இருந்த எல்லாம் சட்டென திறந்து கொள்கிறது. உலகத்தின் அத்தனை சாத்தியங்களையும் முகர்ந்து அனுபவித்து ஆட்கொண்டு விட வேண்டும் எனும் ஆவேசம் கிளம்பும். இப்பருவத்து மாணவர்கள் மீது பள்ளி ஆசிரியர்கள் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். பெற்றோர்கள் ஜெயிலர்கள் போல் நடந்து கொள்வார்கள்.
பதின்பருவத்தினரின் இந்த கொந்தளிப்புகளை செல்வராகவன் தன் படங்களில் பேசி வெற்றி கண்டார். ”துள்ளுவதோ இளமை”, ”செவன் ஜி ரெயின்போ காலனி” ஆகிய படங்களில் இந்த கொந்தளிப்பு நேரடியாக வந்தது. “புதுப்பேட்டை”, “மயக்கம் என்ன?” போன்ற படங்களில் வளர்ந்தவர்களின் ஆளுமையில் இந்த கொந்தளிப்பு – முதிராத ஆவேசம் – தெரிந்தது.
மேற்சொன்ன அடக்குமுறைக்கு பணிந்து போகும் கட்டாயம் அன்று இருந்தது. என்ன கட்டாயம்? ஒருவித பயம், “பெற்றோரும் ஆசிரியர்களும் கைவிட்டால் நாம் என்னாவது?” எனும் பதைபதைப்பு. ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு அந்த அச்சம் சுத்தமாய் இல்லை. தூக்கணாங்குருவி கூடு கட்டியது போல் தங்கள் விருப்பங்களால், கனவுகளால், சுயபோகத்தால், மகிழ்ச்சியால் ஒரு உலகைப் புனைந்து அதனுள் முழுக்க முழுக்க வாழ்கிறார்கள். இன்றைய இளைஞனின் முன்னால் போய் நின்று ஏதாவது சைகை காட்டிப் பாருங்கள். அவன் கவனிக்க மாட்டான். அவன் பார்வை தனது மின்சாதனக் கருவி ஒன்றில் இருக்கும். அல்லது யாரிடமாவது பேசிக் கொண்டோ பாட்டுப் பாடிக் கொண்டோ ஒன்றுமில்லாவிட்டால் எதையாவது யோசித்து தனக்குள் மூழ்கியபடியோ இருப்பான். இவர்கள் கூட்டமாய் இருக்கும் போதும் தமக்குள் தனித்தனியே – ”நான் சுத்தமாய் வேறு ஆள், உலகில் யாருமே என்னைப் போல் இல்லை” எனும் உணர்வுடன் – இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் முப்பது வயதில் நாம் அனுபவிக்கும் நெருக்கடிகள், வேலை களைப்பு, எதிர்கால அச்சம், ஈடுகொடுக்க முடியாத சோர்வு, தனிமை ஆகியன இவர்களை 17 வயதில் சூழ்கின்றன. நான் கல்லூரியில் லிப்டில் காத்திருக்கையில் ஒட்டுக்கேட்டவை இவை:
ஒரு பெண் தன் நண்பனிடம் சொல்கிறாள்,
“தூங்கி ஐந்து நாட்கள் ஆகின்றன”
“என்னாச்சு?”
“தெரியல. தூங்க முடியல. கண்ணை மூடினா பதற்றமா வருது”
ஒரு பையன் விடுதியில் தன்னை கொடுமைப்படுத்துவதாய் சொல்கிறான். என்ன பிரச்சனையாம்? அவனுக்கு சுதந்திரம் இல்லை. அவனுக்கு இரவு பன்னிரெண்டு மணி வரை கொஞ்சம் சுதந்திரமாய் வெளியே சுற்ற வேண்டும். வெளியே என்றால் சாலைகளில் அல்ல. கல்லூரிக்குள்ளேயே தான். அப்போது தான் மனசுக்கு ஆறுதல் இருக்கும்.
என்னுடன் படித்த பல நூறு மாணவர்கள் என்றால் இதெல்லாம் ஒரு பிரச்சனையா என நினைத்து போர்த்தி தூங்கி இருப்பார்கள். ஆனால் இந்த மாணவனின் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவனுக்கு இங்கு யாருமே இல்லை. வேலைப்பளு என் தலைமுறையினருக்கு இருந்ததை விட பத்து மடங்கு. அதனாலே அவன் நிம்மதி தேடுகிறான். இரவில் வெளியே இருப்பது எனும் ஒரு அற்ப காரியத்தில் தனக்கு நிம்மதி கிடைத்து விடும் என்கிறான்.
இது போன்ற ஒரு அற்ப கோரிக்கையை இவர்கள் முன்வைக்கும் போது நாம் உடனே சரி என ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் கடுங்கோபம் கொள்வார்கள். பெரிய விசயங்களில் கூட பணிந்து போவார்கள். ஆனால் ஏதோ ஒரு சின்ன விசயத்தில் தனக்கு மரியாதை இல்லை, சுதந்திரம் இல்லை என உணர்ந்தால் கொலைவெறியாக பயங்கர கலகக்காரன் ஆகி விடுவார்கள். அதன் பிறகு அவர்களிடம் இருந்து துளி மரியாதையை கூட நீங்கள் பெற முடியாது.
இப்படித் தான் நேற்று ஒரு நண்பர் தன் உறவுக்காரன் பையனை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தார். ”என்னவாம்?” என்றேன்.
 “அவன் அப்பா அவனைத் திட்டி விட்டார்”
“அதுக்கென்ன? என் அப்பா என் முகத்தில் கொதிக்கும் டீயை ஊற்றியிருக்கிறார். சொல்ல முடியாத கெட்டவார்த்தைகளால் தினமும் அர்ச்சனை செய்வார். நான் பார்க்காததா?”
அவர் சொன்னார், “நாம வேற ஜெனரேஷனுங்க”
அந்த பையனின் அப்பா ஏன் திட்டினாராம்? ஒரு வாரமாய் பையன் தினமும் தாமதமாய் விடுதிக்கு போகிறான். ஊரில் இருந்து அப்பா போன் செய்தால் எடுப்பதில்லை. கடைசியில் ஒருநாள் போனை எடுத்தான். அப்பா தன் நெஞ்சின் ஆற்றாமையை பொங்கி எடுத்து விட பையன் கத்தியிருக்கிறான் “இனிமே என்னை திட்டுறதானா போன் பண்ணாத. வை” தன் மகன் இப்படி சொன்னான் என்பதை அப்பாவால் தாங்க முடியவில்லை. அப்படி என்றால் அவருக்கு என ஒரு மரியாதை, உரிமை இல்லையா? அவர் பெற்ற பையனை அவர் திட்டக் கூடாதா? இதையெல்லாம் சொல்லி அப்பா என் நண்பரிடம் புலம்பித் தள்ளி இருக்கிறார். காலம் எப்படி மாறி விட்டது பாருங்கள்! மகன்கள் திட்டி அப்பாக்கள் அழுகிறார்கள்.

இந்த தலைமுறையினர் கால்கள் நடுங்கியபடி மலைவிளிம்பில் நிற்கிறார்கள். அவர்களின் கரத்தைப் பற்றி சற்று கூடுதலாய் அழுத்தினால் மனம் உடைந்து கீழே குதித்து விடுவார்கள். அல்லது கோபத்தில் உங்களை கீழே இழுத்து தள்ளி விடுவார்கள். இன்றைய தாம்பத்யமும் இப்படித் தான் இருக்கிறது. அதைப் பற்றி இன்னொரு சந்தர்பத்தில் …

Comments