ஹெச்.ஜி ரசூலை காலம் நம்மிடம் இருந்து பறித்து விட்டது

Image result for ஹெச்.ஜி.ரசூல்

(ஜெயமோகனுக்கு அப்பாற்பட்டு) என்னை எழுத்தாளனாய் வடிவமைத்ததில் நால்வருக்கு முக்கிய பங்குண்டு: ஹெச். ஜி ரசூல், ஹமீம் முஸ்தபா, நட.சிவகுமார், என்.டி ராஜ்குமார். இவர்களில் ரசூல் அண்ணனும் ராஜ்குமார் அண்ணனும் ஒரே வகையானவர்கள்: மட்டற்று அன்பை பொழிபவர்கள். குழந்தையை போன்றவர்கள். ரசூல் அண்ணன் எனக்கு 20 வயதுக்கு மூத்தவர் எனலாம். ஆனால் அவரை சந்தித்த முதல் நாளில் இருந்து அவர் மறைவதற்கு முன்பு வரை தன் மூப்பை உணர்த்தாது சமவயது நண்பன் போன்றே நடந்து கொண்டார்.


எந்த கூட்டத்திலும் நண்பர்களில் யாராவது ரசூல் அண்ணனை கலாய்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர் இனிய புன்னகையுடன் அக்கேலியை ரசித்துக் கொண்டிருப்பார். கசப்பு, வெறுப்பு, எரிச்சல் ஆகியவற்றுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் நடந்து கொள்வார். எதையும் இனிக்க இனிக்க சர்க்கரையை அள்ளிப் போட்டு ருசிக்கத் தெரிந்த மனிதர் அவர்.

நான் அவரை முதலில் முஸ்தபா அண்ணனின் புத்தகக் கடையில் தான் பார்த்தேன். எனக்கு அப்போது வானம்பாடிக் கவிதையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ரசூல் அண்ணன் வானம்பாடியில் இருந்து நவீன கவிதைக்கு நகர்ந்த காலம் அது. அவர் வானம்பாடிக் கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் என்பதை அறிந்து அவரிடம் அத்தொகுப்பை படிக்கத் தரும்படி தொந்தரவு செய்வேன். அவர் அத்தொகுப்பு என் பார்வையில் படாதபடி பார்த்துக் கொள்வார்.

 கலை இலக்கிய பெருமன்ற நண்பர்களில் அக்காலத்தில் நான் என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற, பாராட்டுகிற ஒரே நபர் ரசூல் அண்ணன் மட்டுமே. ஒரு இளைஞனை எந்த காரணம் கொண்டும் மனம் தளர செய்யக் கூடாது என்பதில் குறிப்பாக இருப்பார். அதனால் அவர் ஒரு போதும் என்னை விமர்சித்ததோ திருத்தியதோ இல்லை. நான் குப்பையாக ஒரு வரி எழுதிப் படித்தாலும் அதில் ஏதாவது ஒரு சிறப்பான விசயத்தை கண்டு பாராட்ட அண்ணனுக்கு முடிந்தது. அதனாலே அக்கட்டத்தில் அவர் எனக்கு மிகவும் ப்ரியத்த்துக்கு உரியவராக இருந்தார்.

நான் அவரை சந்தித்த வேளையில் அவர் தனது கவிதைத்தொகுப்பு ஒன்றுக்காக ஊர்விலக்கம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அதற்காக தனது சமுதாயத்தின் மீது கசப்போ வெறுப்போ அவர் காட்டவில்லை. ஒரு கண்ணியமான லட்சியவாதி போல அந்த சமூக புறமொதுக்கலை எதிர்கொண்டார். இன்றைய இலக்கிய குழுக்களில் யாராவது ஒருவர் தன் ஒற்றை வரி விமர்சிக்கப்பட்டால் கூட அதை வைத்து கச்சேரியே செய்து ஊரைக் கூட்டி புலம்பும், கசப்பை உமிழும் காலத்தில் வாழ்கிறோம். ஆனால் ரசூல் அண்ணன் தன்னை கடுமையாய் வெறுத்தவர்களையும் ஒரு புன்னகையுடனே எதிர்கொண்டார்.

பதின்பருவத்தில் நான் அவர் வீட்டுக்கு சென்றது, அவரது குடும்பத்தினரை சந்தித்ததெல்லாம் நினைவு வருகிறது. அவரது குடும்பத்தினரும் அவரைப் போன்றே இனிமையானவர்கள். அவரது மகள்களில் ஒருவர் பின்னர் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்தார் என்பது நினைவுள்ளது. அதைப் பற்றி அண்ணனுக்கு தனி பெருமை இருந்தது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது போக்குவரத்துக்கு ஆட்டோ தான் ஒரே உபயம். வழக்கமாய் நான் செல்லும் ஆட்டோவில் ஒருநாள் பள்ளி முடிந்ததும் டியூசன் போகாமல் ரசூல் அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டேன். என்னைக் காணவில்லை என அம்மா பயந்து விட்டார். ரசூல் அண்ணனுடன் மணிக்கணக்காய் பேசி விட்டு தாமதமாய் வீட்டுக்கு வந்து அர்ச்சனை வாங்கியது நினைவுள்ளது.

 ஒருமுறை மன்ற கூட்டமொன்றில் அவர் பின்நவீனத்துவ எழுத்து எப்படி இருக்கு வேண்டுமென சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது: ”நாம் மென்மையான, மகத்துவமான காதல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சென்னை மாதிரியான ஒரு நகரத்தில் நடைபாதையில் தூங்கும் தம்பதியினர் உடலுறவு கொள்ளும் போது மானம், வெட்கம் என்றெல்லாம் தயங்குவார்களா? நாம் பதிவு செய்ய வேண்டிய அப்பட்டமான உண்மை இது போன்றது தான்.” பின்னர், பல வருடங்களுக்கு முன்பு, சென்னை கடற்கரையில் கூட்டங்கூட்டமாய் தங்கி இருக்கும் நரிக்குறவர்களைக் காணும் போது அண்ணன் சொன்னது எனக்கு நினைவு வரும்.
ஒரு எழுத்தாளனாய் எவ்வளவு கனிவுடன், பித்துடன், மகிழ்ச்சியுடன், குழந்தைத்தனமாய் இருக்க வேண்டும் என நான் அண்ணனிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். அவரைப் போன்ற ஒரு அற்புத மனிதரை அறிய வாய்ப்பளித்ததற்கு கடவுளுக்கு நன்றி!

கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என அண்ணனின் மறைவை சொல்லலாம்.

ரசூல் அண்ணனின் இலக்கிய பங்களிப்பு எழுத்து சார்ந்தது மட்டும் அல்ல. அவர் பல நல்ல கட்டுரைகளை, கவிதைகளை எழுதியிருக்கிறார். சடங்குகள், நம்பிக்கைகளின் பண்பாட்டு தடங்கள் படைப்பில் எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியவர் அவரே. மன்றக் கூட்டங்களில் தொடர்ந்து கோட்பாட்டு நூல்களைப் படித்து அது குறித்து பேசியவராக இருந்து அவர் என்னைப் போன்றவர்களுக்கு புது உலகையே காணத் தந்தார். தனது மென்மையான, மயக்கும் வசீகரம் கொண்ட மொழியைக் கொண்டு அவர் மேலும் பல கதைகளை, நாவல் ஒன்றை எழுதியிருக்கலாம். ஆனால் பெரிய ஆசைகளோ சுயமுன்னெடுப்பு வெறியோ அற்றவராய் அவர் இருந்தார்.

 ஆனால் ஒரு எழுத்தாளன் என்பவன் அவனது எழுத்து மட்டும் அல்ல. அவனது வாழ்க்கையும், அதன் மூலம் அவன் தன் சூழலில் ஏற்படுத்தும் பங்களிப்பும் தான். அவ்விதத்தில் ரசூல் அண்ணன் ஒரு டினோசர் கால் தடத்தை தமிழில், குமரி மண்ணில் விட்டுச் சென்றிருக்கிறார்.


இந்த கணத்தில் என் கண்களில் அரும்பி நிற்கும் நீர்த்துளிகளின் ஈரத்தை காற்றில் எங்கிருந்தோ நின்று நீங்கள் தொட்டுணர்வீர்கள் என நம்புகிறேன் அண்ணா. போய் வாருங்கள்!

Comments

Geetha M said…
சொல்ல வார்த்தைகள் இல்லை