நான் அவனல்ல

Image result for milan kundera

(தலைப்பு நான் அளித்தது. கீழ்வருவது மிலன் குந்தெராவின் ஒரு கட்டுரையில் வரும் ஒரு சிறிய உண்மைக் கதை)
என் நண்பர் ஜோசப் ஸ்க்வொரெக்கி, தனது புத்தகம் ஒன்றில், இந்த உண்மைக் கதையை சொல்கிறார்:
பிரேகில் உள்ள ஒரு பொறியியலாளர் லண்டனுக்கு ஒரு தொழில்முறை கருத்தரங்குக்கு அழைக்கப்படுகிறார். அவர் செல்கிறார், நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார், பிரேகுக்கு திரும்புகிறார். திரும்ப வந்த சில மணிநேரங்களில் அவர் தன் அலுவலகத்தில் இருந்தபடி ரூட் பிரேவோவை – ஆளும் சோஷலிஸ கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை – எடுத்து படிக்கிறார்: ஷெக் நாட்டு பொறியியலாளர் ஒருவர், லண்டனில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு, தன் சோஷலிஸ தாயகத்தைப் பற்றி மேற்கத்திய ஊடகங்களுக்கு அவதூறு கருத்தொன்றை தெரிவித்துள்ளார்; அத்துடன் அவர் மேற்கிலேயே தங்கி விட்டார்.

சட்டத்துக்குப் புறம்பான குடிபெயர்ச்சி மற்றும் அந்த மாதிரியான கருத்து வெளியீடு என்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. இருபது வருடங்கள் சிறையில் தள்ளி விடுவார்கள். நமது பொறியாளருக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை. ஆனால் சந்தேகமில்லை, அப்பத்திரிகை செய்தி அவரைத் தான் குறிக்கிறது. அவரது காரியதரிசி அலுவலகத்துக்கு வந்து பார்த்து அதிர்ச்சியாகிறார்: அடக்கடவுளே, அவள் சொல்கிறாள், திரும்பி வந்திட்டீங்களா? எனக்குப் புரியவில்லை – உங்களைப் பற்றி என்னவெல்லாம் எழுதியுள்ளார்கள் என படித்தீர்கள் தானே?
தன் காரியதரிசியின் கண்களில் அவர் அச்சத்தைக் காண்கிறார். என்ன செய்வது? அவர் ரூட் பிராவோ அலுவகலகத்துக்கு விரைகிறார். அந்த செய்திக்கு பொறுப்பான ஆசிரியரைக் காண்கிறார். ஆசிரியர் மன்னிப்பு கோருகிறார்; ஆம், இது ஒரு சிக்கலான காரியம் தான், ஆனால் அவர் – ஆசிரியர் – இதற்கு பொறுப்பல்ல, உட்துறை அமைச்சரவையிடம் இருந்து அவருக்கு நேரடியாக வந்த தகவல்களின் அடிப்படையில் தான் அச்செய்தியை எழுதினார்.
ஆக, பொறியாளர் அமைச்சரவைக்கு செல்கிறார். அங்கே அவர்கள் சொல்கிறார்கள், ஆமாம், நிச்சயமாய் எல்லாம் தவறு தான், ஆனால் அவர்கள் – அமைச்சரவை – இதற்கு பொறுப்பல்ல. லண்டன் தூதரகத்தில் உள்ள உளவுத்துறையினரிடம் இருந்து அவர்களுக்கு அந்த அறிக்கை கிடைத்தது. அறிக்கையை திரும்பப் பெறுமாறு பொறியாளர் கேட்கிறார். இல்லை, அவருக்கு சொல்லப்பட்டது, அவர்கள் ஒருபோதும் திரும்பப் பெறுவதில்லை, ஆனால் அவருக்கு எந்த பிரச்சனையும் வராது, கவலைப்பட ஒன்றுமில்லை.
ஆனால் பொறியாளரால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. தான் கண்காணிப்படுவதாய், தனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாய், தெருவில் பின் தொடரப் படுவதாய் அவருக்கு திடீரென்று தோன்றுகிறது. தூக்கமில்லை, துர்கனவுகள் துரத்துகின்றன, கடைசியில் இந்த நெருக்கடி தாள முடியாமல், அவர் நிறைய ஆபத்துகளை சந்தித்து தன் நாட்டை விட்டு சட்டத்துக்குப் புறம்பாய் வெளியேறுகிறார். அப்படி அவர் உண்மையிலே அரசியல் காரணத்துக்காய் புலம்பெயர்ந்தவர் ஆகிறார்.

(Somewhere Behind கட்டுரையில் இருந்து)

Comments