பிரக்ஞை என்றால் என்ன?

Related image

டாம் ஸ்டாப்பர்ட் எனும் நாடக ஆசிரியரின் படைப்புகளில் பிரக்ஞை என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் தோழி ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். பிரக்ஞை பற்றி தான் படித்த பல்வேறு நூல்கள், கருத்துக்கள், சர்ச்சைகள் பற்றி குறிப்பிட்டார். பிரக்ஞை பற்றி பல நூற்றாண்டுகளாய் பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்பட்டு விட்டன. ஆனால் இன்னும் கூட பிரக்ஞையை சுருக்கமாய் தெளிவாய் எளிதாய் யாராலும் விளக்க முடியவில்லை. பிரக்ஞை பற்றின விளக்கங்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரியவையாகவே உள்ளன.  

இந்திய வைதிக தத்துவம் பிரக்ஞையை உயர் பிரக்ஞை என்றும், தற்காலிகமான, பௌதிக பிரக்ஞை என்றும் பிரிக்கிறது. உயர் பிரக்ஞை என்றால் என்ன என வினா வரும் போது வைதிக தத்துவம் எதிர்மறையாய் கழித்துக் கட்டி அதை விளக்க முயல்கிறது. உதாரணமாய், எது மற்றொன்று அல்லவோ அதுவே அது. பசு என்றால் என்ன? எது பூனை அல்லவோ அதுவே பசு. சரி, பூனை என்றால்? எது எலி அல்லவோ அதுவே பூனை… இப்படி இந்த கேள்வி முடிவற்று சென்று கொண்டிருக்கும். பின்னர் இப்ப்பார்வையே இந்தியாவில் இருந்து மேற்குக்கு சென்று கட்டமைப்பியல், பின் கட்டமைப்பியல், தெரிதாவின் கட்டுடைப்பு என வளர்ந்தது.
மொழியின்மை என்றொரு நிலை உள்ளது. அதாவது ஊமையாவதோ பேச்சற்று திகைப்பதோ அல்ல. ஒவ்வொரு சொல்லின் மீதும் ஒரு அர்த்தம் பொதிசுமை போல் கட்டப்பட்டுள்ளது. இதை கழற்றி விடுவது தான் மொழியின்மை. கவிதை வாசிக்கையில் இது நிகழ்கிறது. ஜோக் கேட்டு சிரிக்கும் போது நிகழ்கிறது. மொழியில் நிகழும் ஒருவித நெகிழ்வு இது. , மொழியை ஒற்றை அர்த்தத்தில் இருந்து விடுவிக்கையில் மொழியின்மை தோன்றுகிறது. எதிர்பாராத அர்த்தங்களை மொழி கொள்ளும் போதும் அங்கு மொழியின்மை தோன்றுகிறது. இதை இப்படி பார்க்கலாம். ஒரு பெண் உடை மாற்றிக் கொண்டிருக்கிறாள். வேகவேகமாய் பல்வேறு ஆடைகளை முயன்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். முழுக்க ஆடை களைந்து மற்றொரு ஆடை அணிகிறாள். அடுத்து இன்னொரு ஆடை… இன்னொரு ஆடை. நாம் இதை “அப்பெண் உடை மாற்றுகிறாள்” என்று அடையாளப்படுத்துவோம். ஆனால் இப்படி ஆடைகளை அணியும் இடைவெளியில் அவர் நிர்வாணமாகவும் தானே இருக்கிறாள். அதாவது அவள் நிர்வாணமாய் நின்று கொண்டிருக்கவில்லை. பல்வேறு ஆடைகள் அவள் உடலை தழுவி நழுவும் இடைவெளியில் மின்னல் போல் அவள் நிர்வாணமாய் இருக்கிறாள். படைப்பூக்கம் மிக்க, பித்தான, நகைச்சுவையான, அபத்தமான நிலைகளில் மொழியும் இது போல் நிர்வாணமாகிறது. ஒரு படத்தில் பெண் வேடமிட்டு ஒளிந்து திரியும் வடிவேலுவை வில்லன் கடத்திப் போய் சாந்தி முகூர்த்தம் பண்ண முயலும் அக்காட்சியை நினைத்துப் பாருங்கள். சிரிக்க தொடங்கி விடுவீர்கள். அது சிந்தனைக்கு இடம் தராத சிரிப்பு. அபத்தக் கூத்து. அங்கு நம் மொழி நிர்வாணமாகிறது. பெண் என்றும் ஆண் என்றும் நமக்குள் உருவான கற்பனைகள் வேடிக்கையாய் நிலைகுலைகின்றன. அதனால் தான் நாம் சிரிக்கிறோம். இதை தெரிதா கட்டுடைப்பது என்றார். சிக்ஸூ போன்ற பெண்ணியவாதிகள் இதை பெண் குறியால் மொழியை மீள எழுதுவது என்றனர். பௌத்தம் இதை ஜென் என்றது.
இது உயர் பிரக்ஞை. எனக்கு வேறொரு அடிப்படையான கேள்வி உள்ளது. சாதாரண பிரக்ஞை இருக்கிறதே அது என்ன? எங்கு உள்ளது? அது மன உணர்வா? மூளையின் இருப்பா? அறிவா? ஹார்மோன்களா, நரம்பணுக்களின் மின்சாரமா? அது என்ன? அது எப்போது தோன்றுகிறது?
உயர் பிரக்ஞை பற்றி பேசின அளவுக்கு நாம் எளிய அன்றாட பிரக்ஞை பற்றி விவாதிக்கவில்லை.
நான் பிரக்ஞையை எப்படி புரிந்து கொள்கிறேன்?
பிரக்ஞை என்பது காலம், வெளி ஆகியவற்றுடன் உடல் கொள்ளும் உறவாடலின் போது விளைகிற ஒன்று. காலம் மற்றும் இடத்தை விலக்கி விட்டால் பிரக்ஞையே இல்லை. எந்த உணர்வும் நம் உடல் இந்த உலகுடன் (வெளியுடன்) கொள்ளும் பொருத்தப்பாட்டில் தான் தோன்றுகிறது. காமத்தை எடுத்துக் கொள்வோம். இரண்டு உடல்கள் ஒரே இடத்தில் அருகாமையில் இன்றி விலகி இருக்கையில் காமம் உருவாகிறது. உடல்கள் இணைகையில் அங்கு காமம் மறைகிறது. ஒன்றுமின்மையின் நிம்மதி கிடைக்கிறது. இதுவே நாம் தேடும் காமத்தின் திருப்தி (செக்ஸ் இன்பம்). காமம் ஒரு துன்பமான உணர்வு. செக்ஸ் மகிழ்ச்சியான உணர்வு. காமம் உலகுடன் நம் உடல் கொள்ளும் பொருத்தமின்மையில் விளைகிறது. செக்ஸ் பொருத்தப்பாட்டில் தோன்றுகிறது.
இழப்பின் துயரம் எப்படி தோன்றுகிறது? நமக்கு நெருக்கமான ஒருவர் நம் காலத்தை வடிவமைக்கிறார். அதாவது நம் நினைவுகளுக்கு வடிவம் கொடுக்கிறார். உதாரணமாய், காதலியுடன் நேரம் செலவிடும் போது ஒரு ஆணின் அக்காலப் பொழுது இனிக்கிறது. அவன் வாழ்வு இனிக்கவில்லை. மாறாக, அந்த சில மணிநேரங்கள் இனிக்கின்றன. அவை இனிப்பாகவே நம் நினைவில் தங்குகின்றன. நம் மனதில் கடந்த காலத்தை சேமிக்கும் நினைவுத் திறன் இல்லை எனில் நம்மால் காதலிக்கவே முடியாது. அதனால் தான் காதல் பற்றி பேசுகிறவர்கள் எப்போதும் கடந்த காலத்தை பற்றியே பேசுகிறார்கள்.
 நமக்கு நெருக்கமான ஒருவர் புற உலகிலும் தொடர்ந்து தோன்றி அதை மாற்றி அமைக்கிறார். உதாரணமாய், நீங்கள் தினமும் இரவில் கட்டிலில் ஒரு ஓரமாய் படுக்கிறீர்கள். மனைவி உங்கள் பக்கத்தில் படுத்து கட்டிலின் மீத இடத்தை பிடிக்கிறார். ஒருநாள் உங்கள் மனைவி வீட்டில் இல்லை. நீங்கள் இயல்பாகவே கட்டிலின் ஓரமாய் தான் படுப்பீர்கள். முழுக்கட்டிலிலும் புரள மனம் வராது. ஏனென்றால் கட்டிலில் அந்த இடத்தை உங்கள் மனைவி தன் உடலால் மாற்றி வைத்திருக்கிறார்.
 அது மட்டுமல்ல நீங்கள் நேசிக்கும் பெண் அவள் தோன்றும் இடங்களை எல்லாம் முழுக்க வேறொன்றாய் மாற்றுகிறாள். அவளை இழக்கும் போது அந்த இடங்கள் அவள் இன்றி தவிக்கின்றன. நீங்கள் தவிக்கவில்லை. அந்த இடங்களை வேறு விதமாய் புரிந்து ஏற்க, பொருத்தப்பாடு கொள்ள உங்கள் மனம் மறுக்கிறது. மனுஷ்யபுத்திரனின் “இறந்தவனின் ஆடை” கவிதை இதைத் தான் பேசுகிறது. இறந்தவனை கூட மறந்து விடலாம். ஆனால் அவன் ஆடை பெரும் மனத்தொந்தரவை அளிக்கிறது. அதை எங்காவது கண் காணாதபடி மறைத்து வைக்க வேண்டும்.
 ஒரு இழப்பு நேர்ந்த பின் நாம் எப்போது சமாதானம் கொள்கிறோம்? நாம் இழந்தவர் தோன்றும் இடங்களை அவர் இன்றி நம்மால் மறுபரிசீலனை செய்ய முடியும் போது! ஒரு நகரத்தில் போர்க்காலத்தின் போது குண்டுகள் விழுகின்றன. அந்நகரம் சின்னாபின்னமாகிறது. போருக்கு பிறகு அதை முழுக்க திரும்ப கட்டியெழுப்புகிறார்கள். தெருவீதிகள், கட்டிடங்கள் அனைத்தும் புதிதாய் உருவகின்றன. நீங்கள் இந்த நகரத்தில் நடந்து சென்றால் அங்கு முன்பு பார்த்த எவரையும் நினைவில் கொள்ள முடியாது. ஏனென்றால் இடம் மாறி விட்டது. அதே இடம் தான். ஆனால் அது இப்போது மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.
அதனால் தான் ஒரு குழந்தை இறந்த பிறகு அவ்விடத்தில் மற்றொரு குழந்தை வந்தால் இழப்பை சுலபத்தில் நம்மால் கடந்து போக முடிகிறது. எப்படியென்றால் பழைய குழந்தை தன் நடவடிக்கைகளால் மாற்றியமைத்த இடத்தை (வெளியை) புதுக்குழந்தை மீண்டும் தன் போக்கில் புதிதாய் அமைக்கிறது. புது சேட்டைகள், புது பிரச்சனைகள், புது அழுகை, புது சிரிப்பு, புது சேதங்கள், அச்சங்கள், மகிழ்ச்சி என வீடே மற்றொன்றாகிறது. வீடு மற்றொன்றாகும் போது மறைந்த குழந்தையை மறக்கிறோம்.
இப்படி காலமும் வெளியும் நம் பிரக்ஞையை உண்டு பண்ணுகிறது. காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. நதி போல் ஒழுகியபடி இருக்கிறது. காலத்தை அணை போட்டு நிறுத்த மனம் முயல்கிறது. அப்போது பிரக்ஞை பிறக்கிறது.
அதே போல் இடமும் மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் தினமும் சுத்தம் பண்ணாவிட்டால் நம் வீடு எப்படி எல்லாம் மாறுகிறது! சுத்தம் பண்ணாதவர் கூட ஏதோ ஒருவித ஒழுங்கை வீட்டுக்குள் கடைபிடிக்கிறார். உதாரணமாய், யாரும் பல்லைத் தேய்த்து வாசல் படியில் துப்புவதில்லை. அப்படி ஒருவர் துப்புவதானால் அதை தினமும் அப்படியே செய்வார். ஒருநாள் வாசலில், ஒருநாள் அலமாரியில், ஒருநாள் சுவர் மீது, ஒருநாள் கழுவுத்தொட்டியில், ஒருநாள் சமையலறையில் என யாரும் துப்ப மாட்டார்கள். மனிதனுக்கு ஒழுங்கின்மையிலும் ஒரு ஒழுங்கு அவசியம் தேவை. அப்படித் தான் அவன் மாறிக் கொண்டிருக்கும் இடத்தை தனக்கு ஏற்றபடி நிலை நிறுத்துகிறான். அப்படி தன் இடத்தின் மாற்றத்தை ஒருவன் அணை போட்டு தடுக்கையில் அவன் பிரக்ஞை தோன்றுகிறது.
ஆனால் பிரக்ஞை இது மட்டும் அல்ல. நம் உடலை எந்த அளவுக்கு கட்டுப்படுத்துகிறோமோ அதன் படி நம் சுயம் உருவாகிறது. வெளியே முதன்முதலில் சந்திக்கும் எவரோ ஒருவர் நம் தோளைத் தட்டி பேசுவதை நாம் விரும்ப மாட்டோம். ஏன் கூட்டமான இடங்களில் மனிதர்களை உரசி நடக்கையில் எரிச்சலடைகிறோம்? நமக்கு பிடிக்காத ஒரு விசயத்தை ஒருவர் பேசுவதை கூட சகித்துக் கொள்வோம். ஆனால் நம் உடலை நம் விருப்பமின்றி மற்றொருவர் சீண்டுவதை நம்மால் சகிக்கவே முடியாது. நாம் மட்டுமல்ல நாய், பூனை, குருவி, காகம் எல்லாமே அப்படித் தான். உங்கள் செல்ல நாயை அதன் முதுகில் தடவிக் கொடுத்தால் சுகமாக முனகும். ஆனால் தெரியாத ஒருவர் அதை தடவ முயன்றால் கவ்வி விடும். அச்சம் மட்டும் தான் காரணமா? சரி நாய் பயப்படுகிறது தான்! யானை ஏன் பயப்பட வேண்டும்? யானை கோபமாய் இருக்கையில் அதன் தும்பிக்கையை தொட்டுப் பாருங்கள் – தூக்கி கீழே போட்டு மிதிக்கும். ஆக அனைத்து உயிர்களுக்கும் தன் உடலை மற்றொருவரை சுலபத்தில் தொட அனுமதிக்கக் கூடாது எனும் உணர்வு உள்ளது. இது ஏன் அப்படி?
நம் உடலை எந்தளவு பிறர் தொட்டு கையாள எந்தளவு நாம் அனுமதிக்கவில்லையோ அந்தளவு நம் சுயம் உறுதியாக பத்திரமாக இருக்கும். அதனால் தான் தன்னுணர்வு மிக்கவர்கள் உறவுகளில் தடுமாற்றமும் பதற்றமும் மிக்கவர்கள் ஆகிறார்கள். பொதுவாக பெண்ணியவாதிகள் மற்றும் சுதந்திரத்தை அதிகம் விரும்பும், வலுவான சுயம் மிக்க பெண்கள் திருமணம் செய்ய தயங்குகிறாரகள். ஏனென்றால் காதலிலும் திருமணத்திலும் நீங்கள் உங்கள் உடலை மற்றொருவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். உடலை மட்டுமல்ல உங்கள் காலத்தை, நீங்கள் வசிக்கும் வெளியை பகிர வேண்டும். உங்கள் காலத்தை, வெளியை மற்றொருவர் மாற்றுவதை அனுமதிக்க வேண்டும். உடலுறவு நம் உடலின் ஹார்மோன் சுரப்பை கூட மாற்றத் தக்கது. மேலும் உடலுறவின் போது நாம் சில நிமிடங்களேனும் உடலற்றவர்கள் ஆகிறோம். ஆக (காலம், இடம், உடல் என) மூன்று விதங்களிலும் நாம் மாறுகிறோம்.
 இந்த மூன்று விசயங்களும் மாற நம் சுயமும் மாறுகிறது. மாறுகிறது என்பதை விட பலவீனமாகிறது என்பதே துல்லியமாக இருக்கிறது. அதனால் தான் அன்புடையார் எலும்பு கூட பிறருக்கானது என்றார் வள்ளுவர். எந்தளவு அதிக உறவுகள் உங்களுக்கு கிடைக்கிறதோ அந்தளவு உங்கள் சுயம் தொடர்ந்து மாறுவதாக, உறுதியற்றதாக இருக்கும். சுயம் உறுதியற்றதாய் ஆகும் போது “நான்” எனும் உணர்வும் தேசலாகிறது. “நான்” ஒரு ஐஸ் கட்டி. ”நான்” கரைந்தால் என் அடையாளம் என்னாவது? இந்த ஆதார பயம் உள்ளதாலே நாம் நம் உடலை முதலில் யாரும் எளிதில் சீண்டாதவாறு, அணுகாதவாறு, மாற்றியமைக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம்.
பிரக்ஞையை வெறும் எண்ணமாக அல்லது ”நான்” எனும் உணர்வாக புரிந்து கொள்வது ஒரு பிழை. அறுபதுகள் முதல் தொண்ணூறுகள் வரை பிரக்ஞை தமிழ் தீவிர இலக்கிய உலகில் ஒரு பிரபல சொல்லாக இருந்தது. “பிரக்ஞை” என்ற பெயரில் ஒரு சிறுபத்திரிகை கூட வெளியானது. பிரக்ஞையை ஒரு தீர்க்கமான சுய உணர்வு, சமூக கலாச்சார மன உணர்வு, பண்பட்டு பொறுப்புணர்வு, அறிதலும் படைப்பூக்கமும் தரும் மனத்திறப்பு என பல அர்த்தங்களில் புரிந்து கொண்டோம். குறிப்பாக, பிரக்ஞையை ஒரு உன்னத தனிமனித அகநிலையாக கண்டோம்.
 ஆனால் ரெண்டாயிரத்தில் இங்கு பின்நவீனத்துவம் முழுக்க நிலைப்பட்ட சூழலில் பிரக்ஞை பற்றின பார்வை தலைகீழானது. பிரக்ஞை ஒரு கெட்ட வார்த்தையானது. பிரக்ஞையற்ற களியாட்டமே இலக்கிய எழுத்தின் முகாந்திரம் என்றானது. முக்கியமாய், பிரக்ஞையை அழிப்பது நோக்கமாயிற்று. பன்முகத்தன்மை, ஒரு படைப்புக்குள் பல-பிரதிகளை உள்ளடக்கிய இயல்பு, கட்டற்று சிதறும் எழுத்து வேகம் சிறந்த இலக்கியத்தின் இயல்புகள் ஆயிற்று. ஆனாலும் பிரக்ஞையை நாம் தொடர்ந்து அபௌதிகமான ஒன்றாகவே கண்டோம். மொழியின் எல்லைக்குள் வைத்து பிரக்ஞையை புரிந்து கொள்ள பார்த்தோம். உடலுக்கும் பிரக்ஞைக்குமான உறவு என்ன என்பதை நாம் கேட்கவில்லை.
தமிழில் பெண்ணிய கவிதையும் தலித் புனைவுகளும் கவிதைகளுமே உடலுக்கும் உலகுக்குமான உறவாடலில் மனித பிரக்ஞை தோற்றம் கொள்வதை இயல்பாக புரிந்து கொண்டு முன்வைத்தன. இந்த இரு தரப்பினராலும் உடலை தவிர்த்து தம் சுயத்தை பரிசீலிக்க இயலவில்லை. ஏனென்றால் இரு தரப்பினருமே இச்சமூகத்தால் ஒடுக்கப்பட்டது அவர்கள் உடலை முன்வைத்து தானே! அவர்கள் அதே உடலைக் கொண்டு தம் அடையாளத்தை மீள் கட்டமைப்பு செய்தனர். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாய், நாம் இமையத்தின் “எங் கதெ” நாவலை பார்க்கலாம்.
”எங் கதெ” நாவலை சம்பத்தின் “இடைவெளியுடன்” ஒப்பிட்டுப் பாருங்கள். சம்பத்தின் நாவலில் தொடர்ந்து கதைசொல்லியின் ஒற்றைக்குரல் தான் கேட்கிறது. அது அவன் மனதின் குரல், அவன் சுயத்தின் குரல். தன் சொற்களுக்கு அவனே பொறுப்பு. ஆனால் “எங் கதெ” நாவலில் கதைசொல்லியான விநாயகத்தின் மொழியின் வழியே அவனது ஊர்மக்கள் அனைவரும் பேசுகிறார்கள். அவனுக்கும் அவன் ஊர் மக்களுக்குமான உறவாடல், அவன் குடும்பத்துடனான உறவாடல், அவன் காதலியுடனான் உறவாடல் அவனது பார்வையை, பிரக்ஞையை, மொழியை மாற்றிக் கொண்டே இருக்கிறது. அவன் அவனாகவும் அவர்களாகவும் ஒரே சமயம் இருக்கிறான். தன்னை வஞ்சித்ததாய் அவன் நம்பும் தன் காதலியை அவன் நாவல் முழுக்க பழித்தபடியே இருக்கிறான். அவள் எப்படியான துரோகி என்பதை அவன் சித்தரிக்கும் போது முரண்பாடாக நமக்கு அப்பெண்ணின் நியாயங்கள் சட்டென புரிபடுகின்றன. அதாவது அவனது மொழியின் வழி அப்பெண்ணின் மொழி நம்மிடம் பேசுகிறது. அவன் பிரக்ஞையில் அப்பெண்ணின் பிரக்ஞை தோன்றுகிறது. பல்வேறு பிரக்ஞைகள் தோன்றி மறையும் கலிடோஸ்கோப்பாக அந்நாவலின் புனைவு மொழி இருக்கிறது.
“எங் கதெ” நாவலில் விநாயகம் தன் காதலியை கொல்ல முடிவெடுக்கிறான். ஆனால் இறுதியில் தன் முடிவை அவன் சட்டென மாற்றுகிறான். அவளை கொல்ல அவ்வளவு நியாயங்கள் இருந்தும் அவன் அவற்றில் இருந்து சட்டென விடுபட்டு தன் அதுவரையிலான அழிவு சிந்தனையின் அபத்தத்தை புரிந்து கொள்கிறான். எப்படி? அவன் தன் வழி பல்வேறு சமூக எண்ணங்கள், நம்பிக்கைகள் கடந்து போக அனுமதிக்கிறான். ஊரின் தொன்மங்கள், அவனை சூழ்ந்தோரின் மாற்றங்கள், நம்பிக்கைகள் அனைத்துக்கும் ஏற்றபடி அவன் மாறிக் கொண்டே இருக்கிறான். உண்மையில் அவனுக்கு நேர்வது எதற்கும் அவன் பொறுப்பல்ல; அப்பெண் அவனை ஏமாற்றி இருந்தால் அதற்கும் அவள் பொறுப்பல்ல. அவள் வேண்டுமென்றே செய்யவில்லை. அவளை சூழ்ந்த மக்களின் தாக்கத்தால் அவள் தன்னை மீறி எதை எதையோ செய்ய வேண்டியதாகிறது. இந்த புரிதல் தான் நாவலின் திறப்பு. இந்நாவலில் எந்த பாத்திரத்துக்கும் உறுதியான பிரக்ஞை என்று ஒன்றில்லை. கொள்கலனின் வடிவுக்கு தன்னை மாற்றிக் கொள்ளும் நீரைப் போல இவர்களின் பிரக்ஞை இருக்கிறது.
பிரக்ஞை என்பது ”தான்” எனும் உணர்வு தான். ஆனால் இந்த தன்னுணர்வு எப்படி தோன்றுகிறது எனும் கேள்விக்கு நம் இலக்கியத்தில் இப்போது தான் தெளிவான விடை கிடைத்திருக்கிறது எனலாம். அதாவது மனம் என்பது மூளையிலோ இதயத்திலோ உள்ள வஸ்து அல்ல. இந்த உலகம், அதன் காலம், இவற்றினுள் வாழும் மக்கள் சமூகம், இம்மூன்றுடனும் நிகழும் தனிமனிதனின் உரையாடலில் தான் பிரக்ஞை பிறக்கிறது. அதனால் தான் என்னுடைய “நான்” உங்களுடைய “நானாகவும்” இருக்கிறது. தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய (புதுமைப்பித்தனில் இருந்து இமையம் வரையிலான) இந்த அரைநூற்றாண்டில் மனிதன் தனியாக (தனிமனிதனாக) இருக்கிறான் எனும் நம்பிக்கையில் இருந்து மனிதன் தனியாக இல்லை, நானும் நீங்களும் ஒன்று தான் எனும் இடத்துக்கு வந்திருக்கிறோம். இது தான் ”இன்றைய பிரஞை”.

நன்றி: தீராநதி

Comments