மதிப்பெண் போடும் வியாதி


தமிழ் விமர்சனங்களில் நான் வெறுக்கும் வரி ஒன்று உண்டு: “ஆனால் இப்படைப்பு இலக்கியமாகுமா எனக் கேட்டால்… ” என ஆரம்பிப்பார்கள். ஒரு படைப்பு இலக்கியமாகுமா என ஏன் இவ்வளவு மெனெக்கெட்டு யோசிக்க வேண்டும்? ஏன் மதிப்பிட்டு மதிப்பெண் வழங்க உங்களுக்கு இவ்வளவு அவசரம்? அதென்ன தேர்வுத் தாளா?

ஒரு படைப்பு எனக்கு எப்படியான அனுபவத்தைத் தருகிறது, அது எனக்கு மனத்திறப்பை அளிக்கிறதா, உற்சாகத்தை, திளைப்பை, குதூகலத்தை தருகிறதா, என் மனதை சிதறடிக்கும் அல்லது ஒருங்கிணைக்கும் அனுபவத்தை தருகிறதா, என் மொழிக்குள் புத்தம் புதிதான ஒரு நுண்ணுணர்வை கொணர்கிறதா ஆகிய கேள்விகள் தாம் எனக்கு முக்கியம். இப்படியான விசயங்களை எந்த பிரதி செய்தாலும் அதைப் பாராட்டுவேன்; கொண்டாடுவேன். அது ஒரு கச்சிதமான கவிதையா, துல்லியமான சிறுகதையா, இலக்கிய ஆகிருதி பெற்ற நாவலா என்றெல்லாம் கேட்க மாட்டேன்.
எழுத்தை ஒரு தேர்வு போல், ஒரு பந்தயம் போல் பார்ப்பது ஒரு வியாதி எனத் தோன்றுகிறது. அந்த பிரதி மீது ஒருவித அதிகாரத்தை நிறுவுவதற்கு மட்டுமே இது பயன்படுகிறது. இது எவ்வளவு அபத்தமானது என்பதற்கு உதாரணம் ஒன்று தருகிறேன்.
ஒரு அழகான பெண்ணை காண்கிறீர்கள். மயங்கி பின் செல்கிறீர்கள். சில நிமிடங்கள் இருவரும் உரையாடுகிறீர்கள். அவளை உங்களுக்கு அவ்வளவு பிடித்துப் போகிறது. அவள் தரும் அக்கணத்து அனுபவமே அவள். ஆனால் அது போதாது என முடிவு செய்து அவள் பெண் தானா என சோதிக்க தலைப்படுகிறீர்கள். அவளை தனியாக அழைத்து சென்று ஒவ்வொரு ஆடையாக கழற்றி பார்க்கிறீர்கள். உறுப்புகள் சரியாக இருக்கிறதா என சரி பார்க்கிறீர்கள். இது எவ்வளவு அபத்தமாய் இருக்கும்? ஒரு படைப்பு இலக்கியம் தானா எனக் கேட்கும் போது நீங்கள் இப்படியான ஒரு காரியத்தையே செய்கிறீர்கள்.
ஒரு பெண்ணுக்கு பர்தா மாட்டி விட்டு திருப்தி கொள்பவருக்கும், முதலிரவுக்கு அடுத்த காலை மணப்பெண்ணின் பிறப்புறுப்பில் குருதி வெளிப்பட்டதா என சோதிப்பவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு படைப்புக்கு கலை அமைதி என ஒரு சங்கதி உண்டென அறிவேன். ஆனால் அதுவே அப்படைப்பின் ஆதார விசயம் அல்ல. உடலின் நெளிவு, சுளிவு போன்றதே கலை அமைதி. ஒரு படைப்பு கரடுமுரடாய், கச்சிதமின்றி, பிசிறுகளுடன் கூட இருக்கலாம். அது ஒரு குறை அல்ல. கலை அமைதி முகத்தில் உள்ள மீசை போல. அதை திருத்தலாம். முறுக்கியும் தாழ்த்தியும் அழகு காட்டலாம். அந்தளவு தான் அது முக்கியம்.
ஒரு படைப்பு குறைபட்டதாய் இருக்கவே முடியாது என நினைக்கிறேன். ஏனென்றால், ஒரு படைப்பு கச்சிதமாக, நிறைவானதாயும் இருக்க இயலாது. அப்படி இருப்பதாய் தோன்றினால் அது பாவனை மட்டுமே. செயற்கையாய் பண்ணி மாட்டின விக் மட்டுமே. காற்றடித்தால் விக் பறந்து போய் சொட்டை தெரியும்.
 உதாரணமாய், ஜெயமோகன் மற்றும் தி.ஜாவின் முக்கியமான நாவல்கள் பல பிசிறுகளும், மிகைகளும், கட்டின்றி நெகிழும் தன்மையும் கொண்டவையே. புதுமைப்பித்தனின் கதைகளும் அவ்வாறானவையே. அசோகமித்திரனின் மிகக் கச்சிதமாய் செய்யப்பட்டதாய் தோன்றும் “தண்ணீர்” நாவல் கூட குறைகள் கொண்டதே. குறைநிலையில் இருந்து நிறைநிலை நோக்கின தாவலை மட்டுமே ஒரு படைப்பு மேற்கொள்ள முடியும். அது என்றுமே “அதை” அடைய முடியாது. ஆக, “சரியான அளவுகளும் பொருத்தங்களும்” கொண்ட “சர்வ லட்சணங்களும் பொருந்திய” இலக்கிய பிரதியே உலகில் இல்லை.
ஒரு விமர்சகனின் பணி மதிப்பிடுவதாய் என்றுமே இருக்கக் கூடாது. ஒரு படைப்பின் மீது அவன் கொள்ளும் அவதானிப்புகளை குறிப்பிடுவதும், அப்படைப்பை தன் கற்பனை மற்றும் அறிவு மூலம் அவன் எந்த எல்லைக்கு கொண்டு சென்று விரிவுபடுத்துகிறான் எனக் காட்டுவதுமே அவன் பணி. தன்னை அப்படி செய்ய ஈர்க்காத படைப்பை அவன் விமர்சிக்கவே கூடாது. இதை அ.முத்துலிங்கம் முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். எனக்கு பின்னர் அதுவே சரியான அணுகுமுறை எனப்பட்டது.
எல்லா படைப்புகளையும் பாராட்ட வேண்டுமென நான் கூறவில்லை. தெருமுனையில் நின்று பெண்களை வேடிக்கை பார்க்கிறீர்கள். எந்த பெண் மனதை கவர்கிறாளோ அவள் மீது உங்கள் கண்கள் நிலைக்கும். சற்று நேரம் ரசித்து விட்டு விலகுவீர்கள். ஆனால் உங்களை கவராத ஒவ்வொரு பெண்ணாக சென்று பார்த்து “உன் முகம் சரியில்லை”, “நீ அவலட்சணம்”, “நீயெல்லாம் பெண்ணே இல்லை” என சொல்வீர்களா? மாட்டீர்கள் தானே? பின் அதை ஏன் ஒரு படைப்பின் மீது செய்கிறீர்கள்? அது அநாகரீகம் அல்லவா? அது வன்முறை அல்லவா?
நான் என்னை கவராத படைப்புகளை பற்றி எழுதுவதே இல்லை.
மதிப்பெண் இடுவது வாசகனை வழிநடத்த பயன்படும் அல்லவா? இல்லை. அப்படி நினைப்பது விமர்சகனின் மிகைநம்பிக்கையை, அகந்தையை காட்டுகிறது. தனக்கு முக்கியமானது பிறருக்கு அவ்வாறே இருக்கும் என அவன் எப்படி முடிவு செய்யலாம்? வழிநடத்துபவன் அவன் என்றால் வாசகர்கள் எல்லாம் குருடர்களா? அவன் அவர்களின் கைத்தடியா? என்ன அபத்தம்!
மேலும் ஒரு படைப்பு மிக நெகிழ்வானது. பல காரணங்களால் ஒரு வாசகனுக்கு புது திறப்புகளை ஒரு கட்டத்தில் கொடுக்கும் ஒரு படைப்பு இன்னொரு கட்டத்தில் சட்டென மூடிக் கொள்ளும். நிலைத்த மதிப்பென ஒன்று இல்லவே இல்லை.
நிலைத்த மதிப்பு என ஒன்று செவ்வியல் படைப்புகளுக்கு இல்லையா? இல்லை. அப்படி இருப்பதாய் நாமே கற்பிதம் செய்கிறோம். Metaphysical கவிஞர்கள் எனச் சிலர் பதினாறாம் நூற்றாண்டில் செயல்பட்டார்கள். அவர்களை கேலி செய்யும் பொருட்டே metaphysical (தேவையின்றி அரூபமாய் எழுதுகிறவர்கள்) என பெயரிட்டார்கள் ஆங்கில விமர்சகர்கள். முன்னூறு, நானூறு வருடங்கள் யாருமே அவர்களை பொருட்படுத்தவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் டி.எஸ் எலியட் அவர்களின் கவிதைகளின் நவீனத்தன்மையை, நுண்ணுணர்வை கொண்டாடினார். சட்டென அக்கவிதைகள் செவ்வியல் தகுதி பெற்றன. ஆனால் இன்று மீண்டும் அவை இருட்டுக்கு சென்று விட்டன. இப்படி எத்தனை எத்தனையோ படைப்புகள் பாதாளத்துக்கும் சொர்க்கத்துக்குமாய் பயணித்தபடி இருக்கின்றன. இங்கு எதுவும் நிலையல்ல.

ஆகையால் “இது இலக்கியமாகுமா?” எனக் கேட்டு இலக்கிய வஹாபியர் போல் செயல்படாதீர்கள். ஒரு நல்ல இலக்கிய விமர்சகன் ஒரு சூபி ஞானியைப் போல் இருக்க வேண்டும். ஒரு சூபி ஞானிக்கு எல்லாமே இறைவன் தான். ஒரு இலக்கிய விமர்சகனக்கும் ….

Comments