சுஜாதாவும் சாருவும் – துள்ளுவதே இளமை


Image result for கணையாழி கடைசி பக்கங்கள்

அன்புள்ள அண்ணன்,
     நேற்று சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கங்கள் வாங்கினேன். டி என் பி சி எஸ் பரீட்சைக்கு டியூட்டி போட்டிருந்தார்கள். மனக்கசப்போடுதான் சென்றேன். ஞாயிற்றுக் கிழமை அதுவுமா இப்படி சாகடிக்கிறாங்களேன்னு நொந்து கொண்டேன். நானூறு ரூபாய் டியுட்டி பார்த்ததிற்கு கொடுத்தார்கள். வாக்கிக் கொண்டு எதாவது புத்தகம் வாங்கலாம் என்ரு பனுவல் புத்தகக் கடைக்குச் சென்றேன். முழுக்க அலசியும் ஒரு புத்தகம் கூட வாங்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. கடைசியாக சுஜாதாவின் புத்தகம். சுஜாதாவின் நாவல்களை வாங்க தற்போதைக்கு மனம் இல்லை.இதுபோன்ற விசயங்களில் நான் கட்டுரைகளையே காசு கொடுத்து வாங்குவது வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். கணையாழி கண்ணில் பட்டது. இந்த புத்தகத்தின் விசேஷம் என்னவெனில் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பயணம் செய்த போது ஒரு வாலிபர் வெண்ணிற இரவுகள் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். இன்னும் நினைவில் இருக்கிறது. கருப்புக்கலர் சட்டை. அவர்தான் சுஜாதா புளியமரத்தின் கதையைப் பற்றி தன் கட்டுரையில் எழுதியிருப்பதாகச் சொன்னார். அன்றிலிருந்து அந்தப் புத்தகத்தை என்றைக்காவது வாங்க வேண்டும் என்று முடுவு செய்திருந்தேன். நேற்றைக்கு வாங்கி விட்டேன்.


    கல்லூரிக்கு போகும் போதே இரண்டு கட்டுரைகளை வாசித்துவிட்டேன். முன்னுரையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது மிகவும் இரசிக்க வைத்தது. “என் இந்த எழுத்துக்களை பதிப்பில் கொண்டுவர மனுஷ புத்திரன் பிறக்க வேண்டியிருந்தது. அதாவது அவர் பிறப்பதற்கு முன்னமே நான் எழுதிக் கொண்டிருந்தேன்”. அவ்வளவு வயதாகியும் நம் மத்தியில் அவர் ஒரு மார்டன் எழுத்தாளர் என்றுதான் பார்க்க முடிகிறது. அவரது எழுத்துக்களுக்கு வயதாகவே இல்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியமான விசயம். எழுத்தை வாசித்து சுஜாதாவைப் பற்றி யோசித்தால் அவர் ஒரு வாலிபர் போன்ற நினைவைத்தான் அவர் எழுத்துக்கள் ஏற்படுத்துகின்றன

  எனினும் எனக்கு அவருடைய நாவல்களை வாசிப்பதற்கான வயது கடந்து விட்டது. இதையே ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுஜாதாவின் நாவல்களை பற்றி யாராவது படிக்க வைத்திருந்தால் அனைத்தையும் வாசித்திருந்திருப்பேன். நாட்கள் கடந்துவிட்டன. இப்போதைக்கு அவர் கட்டுரையே மிகச் சிறந்த புத்தகமாக என் வாசிப்புக்கு எடுத்துக் கொள்கிறேன்
இன்றைக்கு புளியமரத்தின் கதையைப் பற்றிய கட்டுரையை வாசிக்கப் போகிறேன்

நன்றி 
இரா. அருள் 

அன்புள்ள அருள்
இதைப் படிக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது. சுஜாதா ஒரு அற்புதமான உரையாடல்காரர். நீங்கள் குறிப்பிட்ட இளமை சாருவின் எழுத்திலும் ஓரளவு உண்டு. அது வாழ்க்கையை உற்சாகமாக எதிர்கொள்வதில், சுமைகள் இன்றி கொண்டாடுவதில் இருக்கிறது. அவர்களது எழுத்தில் இந்த முனைப்பு வெளிப்படுகிறது. எனக்கு சுஜாதாவின் எழுத்தைப் படிக்கையில் கண்ணாடிக் குடுவையில் ஒரு மீன் குஞ்சு நீந்துவதை பார்ப்பது போலிருக்கும். மொழியை புத்துணர்வுடன் வைத்திருப்பது எப்படி என சுஜாதாவிடம் இருந்து நாம் தாராளமாக கற்கலாம். அப்புறம், சற்றும் எதிர்பாராத கோணத்தில் இருந்து ஒரு விசயத்தை எதிர்கொள்வது, சில ஆழமான விசயங்களை, போகிற போக்கில் கடந்து போகும் பெண்ணின் துப்பட்டா போல், தொட்டுப் போவது, எதையும் குறைவாய் கச்சிதமாய் ஆனால் அழுத்தமாய் சொல்வது சுஜாதாவின் தனிச்சிறப்புகள். கட்டுரைகளில் சில விசயங்களை இன்னும் விரிவாய் அவர் விவாதித்திருக்கலாமே எனத் தோன்றும். ஆனால் அது அவர் இயல்பு அல்ல
அன்புடன்
ஆர். அபிலாஷ்


Comments